Skip to content
தங்கை, அத்தை வீடு சென்றதை எல்லாம் சாரல் பெரிதாக எடுக்கவில்லை. ஆனால், அதனால் தாய் தகப்பனிடையே பிரச்சினை என்றதும் தங்கைக்கு அழைத்தாள்.
“சும்மா டான்ஸ் போடாம வீட்ட போ கவினி. உன்ர விருப்பத்துக்கு என்ன செய்ய வெளிக்கிட்டாலும் அம்மா அப்பா விட்டிருக்கினம். நீயும் பொறுப்பாத் தான் நடந்திருக்கிற. ஆனா, இப்ப நீ செய்யிறது சரியில்லாத வேல. அம்மா பாவம். அப்பாவையும் ஒருக்கா நினைச்சுப் பார். இந்த வயசில கொழுவல்பட்டுக்கொண்டு நிக்கினம்.” என்று கெஞ்சலாகத் தொடங்கி, அதட்டலாகவே கதைத்துப் பார்த்தும் கவினி அசைந்து கொடுக்கவில்லையே!
“அவே கொழுவல் படுறதுக்கும் எனக்கும் தொடர்பில்லை. அங்க நான் இருந்தா விசர் பிடிச்சிரும். அது சொன்னா உனக்கு விளங்காது அக்கா. நீ சின்னதில இருந்து ஒரு அதட்டல், சுடு சொல்லு வாங்காமல் வளர்ந்தனி.உனக்கு விளங்கவே விளங்காது! நான் எப்பிடி வளர்ந்தன் எண்டு உனக்கு மறந்திராது எண்டு நினைக்கிறன்!” கடினக் குரலில் தன் நிலைப்பாட்டைச் சொல்லிவிட்டாள்.
“ஒரு ஒரு குடும்பங்களும் என்னமாதிரி வாழுகினம். இந்த வீட்டில எல்லாம் இருந்தும் ஒண்டும் இல்லாத நிலை. என்னவாவது செய்து துலை!” கோபத்தோடு கதைத்துவிட்டு வைத்த சாரல், அதன் பின் சகோதரி அழைத்தும் கதைக்கவில்லை.
இப்போது, அவளுக்கு நான்கு மாதமாம். பரமேஸ்வரி சொன்னதும் தமக்கையைப் பார்க்க வேண்டும் போலிருக்க வெளிக்கிட்டு வந்து விட்டாள்.
பாடசாலை விட்டு வெளியில் வந்த சாரல், கேட்டடியில் வந்து அசையாது நின்றாள். கல்யாண வரவேற்பில் கண்டபிறகு இன்றுதான் தங்கையைக் காண்கிறாள்.
பாதையின் இருபுறமும் வரும் வாகனங்களுக்கு கை காட்டியபடி வந்து கொண்டிருந்தவளைப் பார்த்தவள் கண்கள் கலங்கிப்போயின.
அவளில் உள்ள பாசத்தாலா? ஆம் என்றெல்லாம் சொல்ல மாட்டாள். எந்நேரமும் இவளுக்கும் தாய்க்கும் மல்லுக்கட்டு இருந்தாலும் அழகிய சிறு கூடாக அமைதியாக இருந்த வீடு அவளது. அதிர்ந்து கதையாத தந்தை, படபடவென்று கதைத்துப் பேசினாலும் தன்னில் பாசத்தை மட்டுமே பொழிந்த அன்னை. இன்று ?
தந்தை உம்மணாம் மூஞ்சி ஆகிவிட்டார். கவினி தன்பாடு. மதிவதனி இவளோடு வந்து நிற்பார்தான். இருந்தாலும் அவரின் நட்பு வட்டம் விரிந்திருந்தது. வெளிநாடுகளில் இருந்து நண்பிகள் வருவார்கள், ஊர் சுற்றுவார்கள்.
“எனக்கு என்ன பொறுப்பா இருக்கு? நான் ஆருக்கு வேணும் சொல்லு? வாழ்க்கைய என்ஜோய் பண்ணப் போறன். கண்டறியாத காதல், கல்யாணம் எல்லாம் எனக்குத் தந்தது போதும்!” என்று இவளிடம் சொல்லிவிட்டு, இரு கிழமைகளுக்குக் கேரளாவுக்குச் சுற்றுலா சென்றுள்ளார், மதிவதனி.
இதெல்லாம் உன்னைப் பாதிக்கவே இல்லையாடி’?’ என்று கேட்டு, கன்னத்தில் அறைய வேண்டும் போலிருந்தது.
அவளோ, “அக்கா!” என்று ஓடி வந்து கட்டிப்பிடித்திருந்தாள்.
“சந்தோசம் அக்கா, நல்ல சந்தோசம்! நேற்றுத்தான் அத்தை சொன்னவா.பொம்பளப்பிள்ளையா ஆம்பிளைப் பிள்ளையா? நாலு மாதங்கள் எண்டா அதெல்லாம் இப்பத் தெரியாது என்ன? அச்சோ! எனக்குச் சரியான சந்தோசம் நான் சித்தியாகப் போறன்.” சுற்றம் மறந்து குதூகலித்தவளிடம் கோபத்தைக் காட்ட முடியாது நின்றாள், சாரல்.
இந்தக் கவினி, இப்படி, மனம் விட்டுக் கதைப்பவள் அவளுக்குப் புதிது.
அருகில் வந்த ஆசிரியைகள், மாணவர்கள் கூட கவினியைத் தெரிந்து ஆர்வமும் மகிழ்வுமாக வந்து கதைத்தார்கள். புகைப்படங்களும் எடுத்துக்கொண்டார்கள்.
அவர்களைச் சமாளித்து வெளியில் வர, அழைத்துச் செல்ல சூரியன் வந்திருந்தான்.
தமக்கையைப் பார்த்தாள், கவினி. “வேற என்னக்கா, களைச்சுப் போய் நிக்கிற உன்னைப் பிடிச்சு வச்சுக்கொண்டு நிக்கிறன். போயிட்டு வா, நான் ரெண்டு நாள்களுக்கு இங்க தான் நிப்பன். நாளைக்கு வாறன்.”என்று விலகியவளை முறைத்தாள், சாரல்.
“இதென்ன கதை? எத்தனை மாதங்களுக்குப் பிறகு கண்டிருக்கிறம். விளையாடாமல் வீட்டுக்கு வா.” அதட்டினாள்.
“இல்லக்கா, நான் இங்க வழமையாத் தங்கிற இடத்தில தங்கலாம். பிரச்சினை இல்லை.உன்னப் பாத்தது சந்தோசம். கவனமா இரு!” என்றுவிட்டு வெளிக்கிட, கோபம் கொண்டாள் தமக்கை.
“இப்ப அடிதான் வாங்குவ. நாங்க ஆருமே உனக்கு வேணாமோ? இப்பிடியே இருந்தா உனக்கு எண்டு ஒரு மனுசர் இல்லாமல் போயிருவினம். பேசாமல் வா எண்டுறன்.” பிடித்திழுத்தும் அசையாது நின்றாள், கவினி.
“இங்க பார் கவினி, இந்த ராங்கிதான் உனக்கு எதிரி! அம்மா உன்னில் கோவிக்கிறதில பிழையே இல்லை.” அதட்டிக்கொண்டே இழுத்துச் சென்றாள். சூரியன் வேறு பார்த்துக்கொண்டிருக்க ஒன்றுமே செய்யவியலாது தமக்கையின் பிடியில் இழுப்பட்டாள், கவினி.
காரில் பின்னால் இருவரும் ஏறிக்கொண்டார். இவர்கள் வீடு இருப்பது மொரட்டுவ ஆரம்பத்தில் .
கவினியோடு சில வார்த்தைகள் கதைத்துவிட்டுக் காரைக் உயிர்ப்பித்த சூரியன், காதில் ஏர்பொர்ட்டை வைத்து யாருக்கோ அழைத்துக் கதைப்படி காரைச் செலுத்தினான். சகோதரிகள் இருவரும் பொதுவாகக் கதைத்தபடி இருந்தார்கள்.
எத்தனை மாதங்கள்? ‘உன்னில எனக்கு அப்பிடியெல்லாம் ஒரு எண்ணமும் இல்லை’ என்று கவினி சொன்னதும் சேந்தன் அமைதியாக இருக்கவில்லை. இந்த ஒரு வருடத்துள் எத்தனை வகைகளில் சீண்டியுள்ளான்! உதடுகளில் முறுவல் நெளிந்தது. அசைந்து கொடுக்கிறாள் இல்லையே! “இரும்பி” முணுமுணுத்துக் கொண்டான்.
“உண்மைதான்!” பதில் சொன்னான், சூரியன்.
அவள் உருவை வீடியோக்களில் பார்க்கிறான் தான், என்றாலும் இப்போது பார்ப்பது!
“சூரியன் ஃ போன வடிவா வையும் ப்ளீஸ்! கொஞ்சம் தள்ளி இருந்திட்டா.” என்ற சேந்தன் குரலில், முறுவலோடு கைபேசியை அசைத்து வைத்தான், சூரியன். இன்று, சகோதரியைப் பார்க்க இவள் வருகிறாள் என்று சொன்னது வாணன். ஒருவருமே அறியாது, கவினியைச் சேந்தனோடு சேர்க்க கை கோர்த்திருந்தார்கள், சூரியனும் வாணனும் கூடவே இனிதனும்.
error: Alert: Content selection is disabled!!