“பெரிய நடிகையடியப்பா நீர்! இந்தக் கண் மூக்கு வாய் எண்டு என்ன கதை கதைக்கிது?”
“சேந்தன்! ஆக்கள் வருகினம் விடுங்க. முதல் அடி வாங்குவீங்க!” திமிறிக்கொண்டே அதட்டி உருட்டி எந்தப் பிரயோசனம் இருக்கவில்லை.
“வந்தா வரட்டும்…ரோட்டில போற ஆராயுமா பிடிச்சு இழுத்துக் கட்டிப்பிடிச்சன். அங்க பாரும் அவையளை, நாப்பத்துக்கும் மேல இருக்கும் கிஸ் அடிச்சுக்கொண்டு வருகினம்.” என்றவன், அந்த ஒரு நிமிடம், தான் ரசித்த பாவனைகளை வழங்கிய கண் மூக்கு வாய்க்கு மென்மையாகப் பரிசுகளை வழங்கிவிட்டுத்தான் விடுவித்தான்.
“இனி உங்களோட வந்து வீடியோ எடுக்க மாட்டன்.” பொய்க்கோபத்தோடு முறுக்கிக்கொண்டாள், கவினி.
“பாப்பமே!” கண்ணடித்துச் சொன்னபடி, கரம் கோர்த்துக் கொண்டான், அவன். அப்படியே சுற்றத்தை ரசித்தபடி நடந்துவிட்டு, இருள் கவியும் போதுதான் காருக்குத் திரும்பியிருந்தார்கள்.
ஏறியமர்ந்த வேகத்தில் ஷோட்ஸ் போஸ்ட் பண்ணிவிட்டே நேராக அமர்ந்தாள், கவினி.
“இண்டைக்கு சூப்பர் மார்க்கெட் போகோணும் எல்லா?” என்ற சேந்தனை முறுவலோடு பார்த்தாள். இப்படியான தொடர் கரிசனை அவளுக்குப் புதிது. அதுவே, அவன் மீதான அன்பை ஆழமாக ஊன்றச் செய்வதாக இருந்தது.
“என்ன பார்வை? ம்ம்… புதுசாப் பாக்கிறது போல!” காரோடிக்கொண்டே தோளோடு அணைத்து விடுவித்தான்.
“இண்டு ஷொப்பிங் செய்யிற நாள் எல்லா?” ஏற்கனவே கலைந்து பறந்த தலையைக் கலைத்துவிட்டான். அவள் கரமும் அதே வேலையைச் செய்தது.
“டேய் நோகுது! காரோடிக்கொண்டிருக்கேக்க என்ன சேட்டை?” பிடரி மயிரைப் பிடித்திழுத்தவளை பொய்யாக முறைக்க, “ஆர் நானோ தொடங்கினன்.” அவளும் முறைத்தாள்.
“அச்சாப்பிள்ள, கையை எடும், இல்லையோ காரை நிப்பாட்டிப்போட்டு…”அவன் முடிக்கமுதல் நல்லபிள்ளையாக நேராக அமர்ந்து கொண்டவள், “நாளைக்கு வேலை முடியவிட்டு வரேக்க வாங்கலாம் சேந்தன். இண்டு பஞ்சியா இருக்கு.” அவன் தோளில் சாயச் சென்ற தலையை பின்புறமாக இருக்கையில் சாய்த்துக்கொண்டாள்.
“நாளைக்கு வாணனிட பிறந்தநாள் எல்லா? வெளில சாப்பிடப் போவம் எண்டு சொன்னீர்.”
“ஐயோ ஓம்…”
கதைத்துக்கொண்டு வந்து, அவர்கள் வீட்டுக்கு அருகிலிருக்கும் ஷொப்பிங் காம்ப்ளக்ஸ் பார்க்கிங்கில் காரை நிறுத்தியிருந்தான், சேந்தன்.
‘பெனி’ குற்றியொன்றைப் போட்டு வண்டிலை எடுத்துக்கொண்டு உள்ளிட்டார்கள். கவினி கையிலிருந்த வண்டிலைத் தான் வாங்கி உருட்டிக்கொண்டு வர, தேவையானவற்றை எடுத்து வைத்துக்கொண்டு வந்தாள்,அவள்.
“இந்தச் சனி மத்தியானம் வாணனும் வருவான், ஆட்டிறைச்சி சமைப்பமா சேந்தன். மத்தியானம் உங்களுக்கு வரச் சிரமம் எண்டா இரவுக்கு எண்டாலும் சரிதான்.” அவள் சொல்ல, “மத்தியானம் வரலாம்.” என்றான் அவன்.
“ஆர் ஜெ அய்யாட மகள் மருமகனையும் கூப்பிடுவமே?” என்றவனுக்கு முறைப்புப் பதிலாகக் கிடைத்தது.
“எல்லாம் என்ர ஆளை சர்ப்ரைஸ் பண்ணச் செய்யிறதுகள் . மனநிறைவான அந்த தருணத்தை உணர்ந்து கொண்டாட வேணும். இப்பிடி முறைக்கக் கூடாது ஓகே!” என்றான் அவன் கிண்டலாக.
“அதுக்காக? அவையள் ரெண்டு பேரும் அண்டைக்கு என்ன ஆக்ட்டிங் போட்டிச்சினம் தெரியுமா?”என்றதுக்குச் சிரித்தான், அவன்.
“சின்ன வயதில இருந்து ஒண்டாப் படிச்ச என்ர ஃப்ரெண்ட்ஸ் அவே. எல்லாம் அய்யாட ட்ரெயினிங்! ” பெருமையாகச் சொன்னான்.
“மாதம் மாதம் வாடகை எண்டு கழிச்ச காசு அப்பிடியே பாங்குக்கு திரும்பி வரோணும் சொல்லிட்டன்.”முறைப்போடு சொன்னாள், அவள்.
“என்ர எல்லாம் உம்மடையும் தான், நீரே எடுத்துக்கொள்ளும்.”என்றவன், “ மூண்டு வருசத்துக்கு முதல் புக் பண்ணின ஃபிளாட் அது. என்ர உழைப்பில எங்களுக்கு எண்டு வாங்கின முதல் சொத்து. உம்மட நல்ல நேரம் கைக்கு வந்திச்சு. சரி, முதல் முதல் வரேக்க புது வீட்டோட வரவேற்பம் எண்டு எல்லாம் செய்தனான். நேர வந்து நானே வரவேற்று அங்க இருக்கச் சொல்லியிருக்க, என்ன செய்திருப்பீர் யோசிச்சுப்பாரும். அதான் அவையளைக் கூப்பிட வேண்டியதாச்சு.” என்று சொல்லிக்கொண்டே. ஆட்டிறைச்சியைப் பார்த்து எடுத்து வைத்தான்.
அப்போதுதான் அப்பெண்ணின் பார்வையில் பட்டான் அவன். அது மட்டுமா? “இந்தப் பக்கமாக வாங்க.” வலு உரிமையாக அவன் கைபிடித்துச் செல்பவளும் பட்டாள். பட்டென்று பார்த்தால் இளம் சோடி என்றுதான் எவரும் எண்ணுவார்கள்.
அப்பெண்ணின் முகத்தில் ஒரு சாதியான சிரிப்பு. எப்போது கதைத்தாலும் ஒழுங்கு, நேர் சீர் அது இதுவென்று கதைக்கும் நிவேதாவை ஒரு வழி பண்ண எப்போதடா சந்தர்ப்பம் வாய்க்கும் என்று காத்திருந்தவருக்கு, லட்டுப் போல், இன்றே அவ்வாய்ப்பு கிடைத்துவிட்டதில் அவ்வளவு மகிழ்வு.
அருகில் காய்கறி எடுத்துக்கொண்டிருக்கும் சினேகிதியைப் பார்த்தார், ஜெயா. இப்போதுதான் மகனுக்கு கலியாணம் ஏதாவது சரிவந்ததா என்று கேட்டிருந்தார். பார்க்கிறோம், சாதகம் பொருந்தினா மகனுக்குப் பிடிக்குதில்லை. மகனுக்குப் பிடிச்சா, சாதகம் பொருத்தம் இல்லை என்று கதை விட்டிருந்தார்.
எது என்றாலும் வெட்டொன்று துண்டு ரெண்டு என்று சொல்லும் நிவிக்கு, மகன் பற்றிச் சொல்ல என்ன வெட்கம்? ஜெயாவுக்குள் வம்பி சிலிர்த்துக்கொண்டாள். இதுவரை தான் கேள்விப்பட்டதை எப்படிக் கேட்பது என்று தவியாத் தவித்துக்கொண்டு நின்றவர் ஆச்சே.
“நிவி,அதில போறது உம்மட மகனும் மதிவதனிட மகளும் எல்லா? தமிழ் முரசு டிவியில வேலை செய்யிற பிள்ளை எல்லா? என்ன ரெண்டு பேரும் இவ்வளவு ஒட்டிக்கொண்டு போகினம். சேந்தன் ஸ்பொன்சர் செய்து கூப்பிட்டுட்டாரா?”மூச்சுவிடாது கேள்விகளைக் கேட்டார்.
நிவேதாவோ அதிர்ந்து போனார்.எட்டிப் பார்த்தார்.அங்கே, கவினியின் கூந்தலைப் பிடித்து இழுத்துச் சீண்டிக்கொண்டிருந்தான், அவர் மகன்.
அவருக்குப் பெருத்த அவமாகினமாகப் போயிற்று. அருகில் நின்ற ஜெயாவின் முகம் பார்க்கவே முடியவில்லை. ஒரு கணத்தில், அவருக்கு என்றிருந்த மரியாதையை தூசென ஊதிவிட்டு விட்டார்களே!
சேந்தன், தாய்க்கு எதிராக ஒன்றைச் செய்யக் கூடியவன் இல்லை. அப்பிடி இருந்தால் இவளைக் கல்யாணமே செய்திருப்பான். இவரின் விருப்பம் வேண்டும் என்று நிற்பானா?
இப்படித் தினமும் அவனைக் கூட்டிக்கொண்டு திரிவதும் வேலை வாங்குவதும் இவள் கவினியின் வேலை. பெற்ற தாயே அவளைப் பற்றிச் சொல்லவில்லையா? மனம் குமுறியது. கவினியின் கழுத்தைப் பிடித்துத் திருகிவிடும் அளவுக்குக் கோபம் கொண்டார், நிவேதா.
இது போதாதென்று எரியும் நெருப்பில் பெற்றோல் விசிறியடித்தார்,ஜெயா.
“அண்டைக்கு ஒருத்தி கதைக்கேக்க இவையள் லிவ் இன் ல இருக்கினமோ எண்டு கேட்டவா? நான் தான், நிவி அப்பிடியெல்லாம் பிள்ள வளக்கிற ஆள் இல்ல எண்டானான். இப்ப என்னடி?” அளவுக்கு அதிகமாக வியந்து கேட்க, நிவேதாவுக்கோ, நெருப்பில் நிற்கும் நிலை.
“போவம் வாரும்!” விடுவிடுவென்று பணம் செலுத்துமிடம் நோக்கி நகர்ந்தார்.