கரையுடைக்கும் கணமொன்றில் – 29 (3)

 

“ஒண்டும் யோசியாதேயும் நிவேதா. இப்பத்தைய பிள்ளைகளத் தெரியாதா?” என்று, ஒட்டுமொத்த இளம் சமுதாயத்தையும் உதவாக்கரையாக உருவகப்படுத்திச் சமாதானம் சொல்ல முயன்றவரிடம்  விடைபெறும் அளவுக்குக் கூட பொறுமை இருக்கவில்லை. விடுவிடுவென்று நகர்ந்துவிட்டார்.

மனம் கொதிக்க கொதிக்க வீடு வந்த வேகத்தில் அழைத்தது, மதிவதனிக்கு. 

மகளுக்குப் பெறுமாதம் என்று சாரல் வீட்டில் வந்து நின்றார் மதிவதனி. நிவேதா எடுக்கவும் மகிழ்ந்து போனார். 

“ஹலோ நிவி, பிழையே செய்யாத என்னில உள்ள கோபம் போக இத்தின காலம் எடுத்திருக்கு! ம்ம்”  என்றபடி அழைப்பை ஏற்றவர், அவர் சொன்ன செய்தியில் அவமானத்தில் முகம் கன்றி நின்றிருந்தார்.

மனத்தில் எரியும் நெருப்பை கைப்பேசி வாயிலாகக்  கடத்திக் கொண்டிருந்தார், நிவேதா.

“இங்க பார் நிவி, திரும்ப திரும்ப என்னோட தனகிக் கொண்டு வராத! முதல், நானே அவளத் தலைமுழுகிட்டன். அது உனக்கும் தெரியும். அதை விட நீ உன்ர மகனிட்டக்  கேள்வி கேக்கலாமே! அதைவிட்டுட்டு, பல்லில்லாத பபாவ அவள் கடத்திக்கொண்டு போய் வச்சிருக்கிறது போல  இங்க எடுத்துக்  கத்துற! இனி, இது சம்பந்தமா  என்னட்டக் கதைக்காத சரியோ!” வாய்க்கு வந்ததைக் கொட்டிவிட்டு, கோப மூச்சு வாங்க கைப்பேசியை வைத்துவிட்டே, தன்னைச் சுற்றி எல்லோரும் நிற்பதைக் கண்டார், மதிவதனி.

“நான் அப்பவே சொன்னன், உன்ர தங்கச்சியால பரிசிகேடுதான் மிஞ்சும் எண்டு. சேந்தனோட லிவ் இன் ல   இருக்கிறாளாம் எண்டு நிவேதா எடுத்து என்னோட கத்துறாள். இதெல்லாம் எனக்குத் தேவையா? அந்தச் சனியனைப் பெத்த கையோட கழுத்த நெரிச்சுக்  கொண்டிருக்கோணும்.” உச்சபட்ச கோபத்தில் கதைத்தவர் குரலுக்கு மேலாக சூரியன் குரல் வெளிவந்திருந்தது. 

“அவே விரும்பினம் , கலியாணம் செய்ய நிவி மாமிட சம்மதம் கிடைக்கும் வரைக்கும்  பொறுத்துக்கொண்டு இருக்கினம். இன்னும் ஏதாவது தெரியோணும் எண்டால் சேந்தனுக்கு எடுத்துத் தரவோ?”எரிச்சலாகக் கேட்டவன், மதிவதனியைப் பார்த்த பார்வையில் வெறுப்பு அப்பட்டமாகத் தெரிந்தது.

“உங்கட நிவி மாமி சொன்னதத்தான் நான் சொல்லுறன். இதே குரலில நிவேதாவுக்கு எடுத்துக் கதையும் பாப்பம் தம்பி.” என்றிருந்தார், மதிவதனி. 

மகனை அமைதிப்படுத்திவிட்டு முன்னால் வந்தார்,விமலா.

 “சாரல என்ர மகனுக்குச் செய்தனாங்க தானே? கவினியச் சேந்தனுக்குச் செய்யிறதில என்ன இருக்கு? இண்டைக்கு இவ்வளவு பிரச்சினை வர நீ தான் காரணம்.  பெற்ற மகளப்  பற்றி இல்லாதது பொல்லாதது சொல்லி எல்லாரையும் அவளப்  பிழையாய்ப்  பாக்க வச்சது நீதான்!”

தீயாக முறைத்தார், மதிவதனி. மனத்துள் பொங்கும் கோபத்தை வார்த்தையாக்க எவ்வளவு நேரமெடுக்கும். செல்ல மகளைக் கட்டிக் குடுத்திருக்கே! வாயை அழுந்த மூடிக்கொண்டு நின்றார். 

“இப்பக்  கூட பெத்த பிள்ளய நீ நம்பேல்ல எல்லா? சேந்தன் மட்டும் இல்ல, இயல், ரவி அண்ணா எல்லாரும் கவினி தங்கியிருக்கிற வீட்ட போயிட்டு வாறவே.” என்றவர், கூர்பார்வையோடு தொடர்ந்தார்.

“நாளைக்குக்  கவினிட உருவத்தில  என்ர பேத்தி பிறந்தாலும் நீ இப்பிடித்தான் வினை விதைப்பியா வதனி?” 

நிதானமாகக் கேட்டுவிட, சாரல் அதிர்ந்து போனாள். விசுக்கென்று தாயைப் பார்த்தாள். 

“மாமி சொல்லுறது சரிதானே அம்மா? என்ன எண்டாலும்  கவினியப் பற்றி இந்தளவுக்கு நீங்க கேவலமா நினைக்கிறது, கதைக்கிறது… எனக்கு உண்மையா உங்களில வெறுப்புத்தான் வருது. உங்களுக்கு உங்கட நினைப்பும் நீங்க நடக்கிற முறைகளும் அரியண்டமா இல்லையாம்மா? அவள் பாவம். ஒண்டா இருக்கேக்க எனக்கு விளங்கேல்ல, அதையும் விட, நானும் என்ர அலுவல்களுமா இருந்திட்டன்.   உங்களிட்ட திட்டும் குட்டும் வாங்கியே வளர்ந்திட்டாள் . இப்ப எவ்வளவு உழைக்கிறாள். எவ்வளவு சனம் பாராட்டினம். ஆனா, உங்களிட்ட இருந்து மட்டும் விடிவு இல்ல. நிவி அன்ரி  இந்தளவு அவள வெறுக்க நீங்கதான் காரணம்!” செல்ல மகள் சாரலின் வெறுப்பான பார்வையும் கொதிப்பான பேச்சும் மதிவதனி நெஞ்சத்தை அதிரச் செய்து விட்டது.

“என்ர நிலையில நீங்க இருந்தாத் தெரியும். அவள் ஒரு வினைச்சி! எல்லாரையும் எனக்கு எதிராத் திருப்பிட்டாள்.  அந்தக் கிழவி போலவே! இதுக்கும் மேல இங்க எனக்கு என்ன வேல?” தன் உடமைகளை பைக்குள் அடைந்த வேகத்தில் வீட்டினர் மறிக்க மறிக்கப்  புறப்பட்டுவிட்டார்.  

இலண்டனிலோ…

ரவியும் நிவேதாவும் எதிரெதிரே அமர்ந்திருந்தார்கள்.

 கோவமும் அழுகையுமாக அமர்ந்திருந்த  மனைவியைக் கண்டிப்போடு பார்த்தார், ரவி. கண்டிப்பு என்ன, மனைவி நடந்து கொள்ளும் விதத்தில் மிகுந்த கோபத்தில் இருக்கிறார். அதை, மீண்டும் மீண்டும் வெளிப்டையாகக் காட்டப்போக, இன்னுமே கவினி மீதான ஆத்திரமும் எரிச்சலும் தான் அதிகரிக்கும். அதுவே, அவருள் நிதானத்தைக் கொண்டு வந்திருந்தது. 

“சேந்தன் அந்தப் பிள்ளய விரும்பிறார் எண்டதில இருந்து இதப்பற்றி நிறையவே கதைச்சாச்சு நிவி. இனியும் உங்களுக்கு நான் எடுத்துச்சொல்லி விளங்க வைக்கோணும் எண்டு இல்ல. ஆராவது  இப்பிடி ஒரு பிரச்சினைய உங்கட பார்வைக்குக் கொண்டு வந்திருக்க, பக்கம் பக்கமா அறிவுரை சொல்லியிருப்பீங்க. ஓம் தானே?”என்றதும் உண்மை சுருக்கென்று தைத்ததில், வெடுக்கென்று தலையைத் திருப்பினார், நிவேதா.

“நான் ஆசையாசையாப் பாத்த ஆதினி  வேணாம். கவினியச் செய்யிறதில துண்டா விருப்பம் இல்ல எண்டு ஆரம்பத்திலயே முடிவாச் சொன்னப் பிறகும் கருத்திலயே எடுக்கேல்ல. இந்தா, கட்டின புருசன் கணக்கில முன்னாலும் பின்னாலும் திரிஞ்சு ஊருக்கே தங்கட உறவச் சொல்லிக்கொண்டு இருக்கிறார். இதில இருந்தே, எனக்கும் என்ர விருப்பத்துக்கு, சொல்லுக்கும்  இந்த வீட்டில ஒரு சதத்துக்கு மரியாதை இல்ல எண்டுறது தெரியேல்லையா?  இவ்வளவுக்கும் பிறகு கலியாணத்துக்கு மட்டும் என்ர சம்மதம் வேணும் எண்டா! ஆருக்குக்  காதில பூ சுத்துறியல்? உங்களுக்கு விருப்பம் எண்டா சந்தோசமா கலியாணத்தச் செய்யுங்கவன்!” ஆத்திரத்தோடு சொல்லத் தொடங்கிய நிவேதாவுக்கு வேதனையில் தொண்டை அடைத்திட்டு. 

மனைவியின் முகத்தை ஆழ்ந்து பார்த்தார், ரவி.

 “தூங்கிறவனைத் தட்டி, உலுப்பி எழுப்பலாம் நிவி. தூங்கிறது போல நடிக்கிறவனை எழுப்பிறது வலு சிரமம். ம்ம்ம்… ஆனா, காலம் முழுதுக்கும் தூங்கிக்கொண்டே இருக்கேலாது எல்லா?” என்றபடி எழுந்துவிட்டார்.

“இன்னுமொண்டு,  எங்கட கையில தாய் தகப்பன் எண்ட பிடி இருக்கு, அதோட நீங்க என்னதான் சொன்னாலும் எங்கட பிள்ளைகள் எங்கட விருப்பத்துக்கு மதிப்பும் குடுக்கினம் எண்டதுக்காக நாங்களும் அளவுக்கு மிஞ்சிப் போகக்கூடாது. ஏனெண்டா, அவே பிழையா நடந்து கெட்டுச் சீரழியேல்ல என்ன? உங்களுக்கு விருப்பம் இல்ல எண்ட ஒண்டுக்காகத்  தனக்குப் பிடிச்ச பிள்ளய விடோணும் எண்டு நினைக்கிறது, வறட்டுப் பிடிவாதம். காரணமே இல்லாத அடம்  எண்டு உங்களுக்கு விளங்கோணும்  நிவி!” உள்ளடக்கிய கோபத்தோடு சொன்னவர், “தயவு செய்து இனியும் நீங்க ஒண்டும் சொல்ல வேணாம். சொன்னது எல்லாம் போதும்!” கதைக்க முயன்ற மனைவிக்கு இடம் கொடாது தொடர்ந்தார். 

“எங்கட பிள்ளைகள் எப்பிடிப் பழகினம் எண்டு எங்களுக்குத் தெரியும். ஊரார் கற்பனைக்கு எல்லாம் நாங்க கண்ணக் கசக்கத் தேவேல்ல. ஆனாலும், இந்த நிலையை உருவாக்கினதும் நீங்கதான். ஊர் வாய மூடோணும் எண்டா என்ன செய்யோணும் எண்டும் உங்களுக்குத் தெரியும். பிறகென்ன? பிடிவாதத்த விட்டுட்டு நல்ல முடிவா எடுங்க. அதான் நமக்கு மரியாதை!”அடங்க மறுத்த சினம் அவர் குரலில் தெரிந்தது.

“பிள்ளைகளிட வாழ்க்கை நிவி. முழு மனமா மகிழ்ச்சியா அவேக்குச் செய்ய வேண்டியதைச்  செய்து வைப்பமே! பிறகிருந்து கவலைப்பட்டுப் பிரயோசனம் இல்ல.” என்றவர்,அப்பால் சென்றுவிட்டார்.

error: Alert: Content selection is disabled!!