கரையுடைக்கும் கணமொன்றில் – 30 (3)
“அம்மா ஒருக்கா நில்லுங்க!”தோளோடு அணைத்துப் பிடித்து நிறுத்தியவனை முறைப்பாகப் பார்த்தார், நிவேதா. இந்த அன்பான சேந்தனைப் பார்த்துப் பல நாட்களாகிற்று. அதுவே விழிகளைக் கலங்கடித்திட்டு. மனத்தில் கோபம் இருக்கிறதே. அதுவே, கலக்கத்தைக் காட்டவே விரும்பவில்லை. பெரும் பிரயத்தனம் செய்து தன்னுள் அடக்க முனைந்தார்.
“தாங்க்ஸ் அம்மா! எனக்குச் சரியான சந்தோசம். நான் உங்கள வருத்திற மாதிரிக் கதைச்சிருந்தாலோ நடந்திருந்தாலோ உண்மையாவே சொறி அம்மா!” கட்டியணைத்து விடுவித்தான், சேந்தன்.
அவன் சொன்னது கேளாத பாவனையில் நின்றவர், ஒரு நக்கல் பார்வை பார்த்தார்.
“கவினியோட கதைக்க நம்பர் வாங்கினன் எண்டோன்ன, இந்த அரக்கி நுள்ளிக் கிள்ளிப் போட்டாலும் எண்டு இவ்வளவு வேகமாப் பாக்க வந்திருக்கிறீங்க!” என்றவரை என்ன செய்வது!
“ஏனம்மா, அதும் அரக்கி அது இதெண்டு என்ன கதையிது?” என்றவனுக்கு, தான் அப்படியெதுவுமே நினைக்கவில்லை என்று மட்டும் சொல்ல முடியவில்லை.
“நீங்களா அதையும் இதையும் கற்பனை பண்ணிக்கொண்டு.” சமாளிப்பாகச் சொன்னவன், “வாங்கவன் கவினிட்டப் போயிட்டு வருவம்.” தாயின் கரம் பற்றி நகர முயன்றான்.
“கற்பனையோ உண்மையோ நான் நினைக்கிறதுகள் தானே இங்க நடக்குது! விடுங்க, எனக்கு நிறைய வேலைகள் இருக்கு.” மகன் தொடர்ந்து கதைக்க அனுமதிக்காது விறுவிறுவென்று நடந்தார், நிவேதா.
சேந்தனுக்கு, கண்ணிமைப்பொழுதில் அவர் சரியாக மாட்டார் என்று தெரியும். காலம் தானே எல்லாவற்றுக்கும் மருந்து என்று நினைத்தவன், ஒரு பெருமூச்சோடு காரில் ஏறினான்.
நிவேதா சென்றபின், வீட்டினுள் இருந்த அழுத்தம் தாங்கவில்லை. தொலைக்காட்சியை உயிர்ப்பித்தாள்,கவினி. திரைப்படப் பாடல்கள் ஒலிக்கும் சேனலை வைத்துவிட்டு அப்படியே அசையாது அமர்ந்துவிட்டாள்.
பார்வை, அங்கு தொங்கிக் கொண்டிருந்த தங்கள் புகைப்படத்தில். நிவேதா, திடுமென்று வந்து கதைத்துச் சென்றிருக்கிறார். ஏன் என்ற கேள்வி வேறு குடைந்த வண்ணம் இருந்தது. சேந்தனோடு கதைக்க வேண்டும் போலிருந்தது. மாலையில் வேலை முடிந்தே வரட்டும் என்று அமைதியாக இருக்க முயன்றாள்.
அந்நேரம் வீட்டு அழைப்புமணி ஒலித்தது. மீண்டும் நிவேதா தானோ என்ற எண்ணத்தோடு சென்று கதவைத் திறந்தாள்.
நிச்சயம் சேந்தனை எதிர்பார்க்கவில்லை. அதை அவள் முகம் பிரதிபலித்தது.
கலங்கிக் கிடந்த விழிகளைப் பார்த்தபடி அவளை விலக்கி உள்ளே வந்து கதவைச் சாத்தியவனை இறுகக்கட்டிப்பிடித்திருந்தாள்,கவினி.
“அம்மா என்ன சொன்னவா கவினி?” என்றவனுக்குப் பதில் சொல்லவில்லை.அவன் நெஞ்சில் முகத்தை அழுத்தினாள். கண்ணீரைச் சுரக்கவிடாதிருக்க பெரும் பிரயத்தனம் செய்தாள்.
“ஆதினிக்குத் துரோகம் செய்ததாக நீர் நினைக்கேல்லையா?” என்று, நிவேதா கேட்டது மனதாழம் சென்று தைத்திருந்தது, அப்போதுதான் அவளுக்குப் புரிந்தது.
சேந்தனுள் பதற்றம். காட்டிக்கொள்ளவில்லை. கல்யாணம் பற்றித் தாய் கதைக்கவில்லை என்றது மட்டும் தெளிவாகத் தெரிந்திருந்தது.
அப்படியே அவளை அழைத்துச் சென்று அமர்ந்து கொள்ள நெருக்கியடித்து அமர்ந்தவள் முகத்தை அழுந்தத் துடைத்தபடி சிரிக்க முயன்றாள்.
“அம்மா என்ன சொன்னவா?”
“பச்! பெரிசா ஒண்ணும் இல்ல.”
“ஓ! அதுதான் என்னைக் கண்டோன்னா அழுதீங்களோ!”
“நான் எங்க அழுதன்?” அவன் தோளில் சாய்ந்தவள் முகம் நிமிர்த்திப் பார்த்தான்.
“ஏதாவது ஏசினாவோ?”
“ஐயோ! உண்மையாவே இல்ல சேந்தன்.” என்றவள், அவர் கேட்டதைச் சொன்னாள். தன் பதிலையும்.
“ஓ!” என்றவனுக்கு, ஆதினியைத் தான் மறுத்தது தாயை இந்தளவுக்குத் தாக்கியிருப்பது அப்போதுதான் முழுதாக விளங்கியது. தந்தை இதைச் சொல்கையில் அவன் நம்பவில்லை. இந்த விடயத்தில் அவன் என்ன செய்யவியலும். தம் மகிழ்வான வாழ்வு அவர் மனத்தாங்கலுக்கு ஒத்தடமாக அமையும். நிச்சயம்.
கவினியை முறுவலோடு பார்த்தான். “உண்மையாவே நான் தானே உமக்குப் பின்னால கலைச்சு கலைச்சுப் பிடிச்சனான். அம்மா கேக்கேக்க சொல்ல வேண்டியதுதானே?” சீண்டினான்.
“ஐயோ நான் அந்த அர்த்தத்தில சொல்லேல்ல!” என்றவளை வளைத்துப் பிடித்துக் கைவளைக்குள் கொண்டு வந்தவன், “அம்மா கதைச்சதுகளப் பெரிசா எடாதேயும் கவினி, ஏனெண்டா அவா கலியாணத்துக்கு ஓகே எண்டிட்டா. எப்ப வசதி என்று எங்களக் கதைச்சிட்டுச் சொல்லச் சொன்னவாவாம் தெரியுமா? அப்பாட்ட இதச் சொல்லிட்டுதான் உம்மட நம்பர் வாங்கி இருக்கிறா!” என்று அவன் சொன்ன அச்செய்தியில் அதிர்வோடு அமர்ந்திருந்தாள் கவினி. இனிய அதிர்வு அது!
அவள் கண்கள் மெல்ல மெல்ல நிறைய, போட்டியாக கலங்கிப் போயின, அவன் விழிகள்.
தொலைக்காட்சியில் புதியதொரு பாடல் ஆரம்பமாகியது.
குருமுகில்களை சிறு முகைகளில் யார் தூவினார்
மழைக் கொண்டு கவிதை தீட்டினார்
இளம் பிறையினை இதழிடையினில் யார் சூட்டினார்
சிரித்திடும் சிலையை காட்டினார்
அடுத்துருண்ட நிமிடங்கள் பல அவர்கள் கதைத்தார்கள், ஆனால், வார்த்தைகள் உதிரவில்லை.சத்தமில்லாது, பார்வைகளும் செய்கைகளும் பேசிக்கொண்ட மொழியின் அழகைத் துளித்துளியாக இருவரும் இரசித்தார்கள்.
நீண்டு கிடந்த குடும்ப வாழ்வு இருகரம் நீட்டி வரவேற்றுக் கொண்டிருக்க, அச்சூழலுக்குத் தன்னால் இயன்றளவு உதவியது தொலைக்காட்சி!
உடையால் மூடி வைத்தும்
இமைகள் சாத்தி வைத்தும்
அழகால் என்னைக் கொல்கிறாய்
அருவிக் கால்கள் கொண்டு
ஓடை இடையென்றாகி
கடலாய் நெஞ்சம் கொள்கிறாய்
கடலில் மீனாக நானாக ஆணையிடு
அலைகள் மீதேறி உன் மார்பில் நீந்தவிடு
பேராழம் கண்டுக்கொள்ள ஏழு கோடி
ஜென்மம் வேண்டுமே
முற்றும்