கரையுடைக்கும் கணமொன்றில் – 20 (1)

காலி வீதியின் வாகன நெரிசலில் ஊர்ந்து, ஒருவாறு தமையன் வீடிருக்கும் மொரட்டுவ வந்து சேர்ந்திருந்தான், சூரியன். மேலும் ஐந்து நிமிடம் காரோடினால் அவர்கள் வீடு வரும். அப்படியே புறப்படத் தயாராகியவனை, “ உள்ள போய்க் கொஞ்ச நேரம் இருந்திட்டுப் போகலாமே சூரியன்!” கெஞ்சலோடு சொன்னான்,சேந்தன்.

“வாங்கப் போறார் ஒராள்!” வெருட்டலாகச் சொன்ன சூரியன்,  சாரல் என்னவென்பதாகப் பார்க்க, கைப்பேசியைக் காட்டினான். அதே கையோடு சகோதரிகளிடம் விடைபெற்றுக்கொண்டவன், “வீட்ட வந்திட்டுப் போங்க கவினி.” நட்போடு அழைத்தான்.

 ஒன்றோடு இரண்டு வார்த்தைகள் சேர்த்துக் கதைக்கவே யோசிப்பவன் ஆச்சே! உள்ளே எழுந்த வியப்பை மறைத்துவிட்டு முறுவலித்தாள், கவினி. பதில் சொல்ல வரவில்லை. 

“கூட்டிக்கொண்டு வாங்கோவன் அண்ணி.” மீண்டும் அவன் சொல்ல, “அடுத்த முறை வரேக்க வாறன் சூரியன் அண்ணா.” தமக்கையை முந்திக்கொண்டு பதிலிறுத்திருந்தாள்,கவனி. 

“அப்பிடியெல்லாம் சாட்டுச் சொல்லேலாது. பின்னேரம் அண்ணா வரவிட்டு எல்லாருமா வரோணும் சொல்லிட்டன். நான் அம்மாட்டச் சொல்லுறன், டின்னர் எங்கட வீட்டில சரியோ!” என்றுவிட்டுச்  செல்பவன் புதிதாகப் பிரச்சினையைக்  கிளப்பி விடப்போறானோ என்ற தவிப்போடு தமக்கையைப் பார்த்தாள், கவினி.

“நீ தான் ஒதுங்கி ஒதுக்கிப் போற. உன்ன இங்க ஆரும் வர வேணாம் எண்டவையா சொல்லு? கவினியோட கதைச்சீரா, எப்பிடி இருக்கிறா எண்டு ஆதவன் ஒரே கேக்கிறவர்.  பிடிவாதத்தை விட்டுப் போட்டு வீட்ட போயிரு கவினி. நான் அம்மா அப்பாவக் கதைக்கப் பண்ணுறன்.” அதட்டியபடி , சகோதரியை  உள்ளே அழைத்துச் சென்றாள், சாரல். கவினி பதில் சொல்லவில்லை. 

காரிலோ, “கிட்டத்தட்ட முக்கால் மணி நேரம். தேங்க்ஸ் சூரியன்!” என்றான், சேந்தன்.

“உங்கட ஆள் கொழும்பு வாறா அதும் அண்ணியப் பாக்க ஸ்கூல்க்கு வருவா எண்டெல்லாம் துப்புச் சொன்ன வாணனனுக்கும் இனிதனுக்கும்  தேங்க்ஸ் சொல்லுங்க சேந்தன்.” என்று, அவர்கள் வீடுவரை கதைத்துக்கொண்டு வந்துவிட்டு  அழைப்பைத் துண்டித்தான், சூரியன்.

சேந்தனோ, கைப்பேசியையே பார்த்தபடி இருந்தான்.  அச் சிறுபொழுதில், கவினியின் சிறு சிறு அசைவுகளையும் பாவனைகளையும் தன்னுள் சேமித்துக் கொண்டுவிட்டான். 

‘இங்க ஒருத்தன விசரனாக்கிப் போட்டு ஆள் வலு கலாதியாத்தான் இருக்கிறா!’ தன்னுள் சொல்லிக்கொண்டவன், ‘எத்தனைக்கு என்னோட பாராமுகம் காட்டுறீர் எண்டு பாக்கிறன்.’ மனத்துள் அழுத்தமாக அமர்ந்திருந்தவளைச் சவால் விட்டுச் சீண்டினான்.

அவனுள், சாரல் ஆதவன் திருமண வரவேற்பு நடந்து கொண்டிருக்கும் உணர்வு. அவளோடு கழித்த பொழுது இப்பொழும் அவனைப் புத்தம் புதிதாக உணர வைக்கிறதே! இத்தனைக்கும் அவன் மனத்தில் உள்ள நேசத்துக்கு மறுப்பைச் சொன்னவள். 

குறுகிய காலத்தில் அவள் எப்படி அவனில் தாக்கம் ஏற்படுத்தினாளோ,  அதேபோல், அவனும் அவளைப் பாதித்திருக்கிறான். அதை ஏற்க மறுப்பவளில் சிறிதாகவும் மனச்சுணக்கம் வரவில்லை. காரணம் தான் தெரியுமே!

சேந்தன், எப்போதுமே நேர்மறையான சிந்தனைகளை விரும்புபவன். அன்றாட வாழ்வு அவனுக்குச் சிரமங்கள் என்று பெரிதாக அறிமுகம் செய்யவில்லை.பெற்றோர் உற்றோர் அன்புக்கும் அரவணைப்புக்கும் குறைவிருக்கவில்லை. வசதி வாய்ப்புகளும் அப்படியே! இருந்தபோதும் என்ன விடயமென்றாலும் தன் உச்சபட்ச உழைப்பையும் முயற்சியையும் போடும் பழக்கம் சிறுவயதிலிருந்தே அவனுள் உண்டு. அது சிறிய விடயமாக இருந்தாலுமே அப்படித்தான். அப்படிப்பட்டவன் தன்  வாழ்க்கை குறித்த விடயத்தில் கோட்டை விட்டு விடுவானா என்ன? 

புத்துணர்வோடு வேலைக்குப் புறப்பட்டவன் காருக்குள் தன்னைத் திணித்துக்கொண்டான்.

நினைவுகள் அதன் பாட்டில் ஊர்வலம் போயின, உன் அருகிலும் வர மாட்டேன் என்று விலகிச் செல்லும் கவினியின் கரத்தை இறுகப் பற்றிக்கொண்டேதான்.

அன்று, மிகுந்த மனச்சுணக்கத்தோடு தான் இலண்டன் வந்திருந்தான். அது கவினியிலோ அவள் மறுப்பிலோ ஏற்பட்டதில்லை. தாயில். கவினி விடயத்தில் அவர் நடந்துகொண்ட விதத்தை எந்த வகையில் பார்த்தாலும் நியாயப்படுத்த முடியவில்லை. தன்னையும் தன் நேசத்தையும் விளங்க வைக்க முயன்றான். முயன்று கொண்டே இருக்கிறான். என் வாழ்க்கைக்குக் கவினிதான் என்று வெளிப்படையாகவே சொல்லியும் விட்டான். 

முயலுக்கு மூன்று கால் என்று நின்றால்? 

சேந்தனின் தகப்பனுக்கு மகன் மனம் விளங்கியது. அதையும் விட இதில் தாம் தலையிட  மகன் என்ன சிறுவனா? அவனுக்கு எது நல்லது கெட்டது என்று பகுத்தறியும் தகுதியுண்டே! மனைவியோடு வாதாடிவிட்டு, “தாய் தகப்பன் பிடிக்கிற வீண் பிடிவாதம் பிள்ளைகளிட வாழ்க்கையைப் பாதிக்காமல் இருக்கும் வரை சரிதான்.” என்றுமிருந்தார். 

திருமணம் ஆனதிலிருந்து தனக்கு ஈடாகவே உழைப்பைப் போட்டு, குடும்பத்தைத் திறமையாகக் கொண்டு நடத்தும் மனைவியில் அவருக்கு மிகுந்த மரியாதையுண்டு. அதுவே, “அம்மா மனம் மாறிரும் தம்பி. அவவிட ஃபிரெண்டிண்ட  மகள் தானே. அதுக்குள்ள அவசரப்பட்டு ஏதாவது செய்திடாதீங்க!” என்றிருந்தார்.

இயல் கேட்கவே வேண்டாம்.  தமையன் பக்கம் தான். கவினியை அவ்வளவு பிடிக்குமே! அதற்கும் மேல் கவினியின் உயிர் நண்பனைப் பிடித்திருந்தது. ஏற்கனவே, நேரில் சந்திக்க முன்னரே, காந்தக் குரலாலும் பாவனைகளாலும் கவர்ந்திருந்தவன், வாணன். நேரில் சந்தித்த குறுகிய காலத்தில் அவள் உள்ளத்தில் நுழைந்திருந்தான். அதை வெளியில் சொல்லத்தான் சமயம் அமையவில்லை. இழுபறியில் உள்ள தமையன் அலுவல் முதல் முடியட்டும் என்ற எண்ணத்தில் இருக்கிறாள்.

இப்படியிருக்கையில் சேந்தன், வாணன், சூரியன் மற்றும் இனிதன் நால்வரும் நல்ல நண்பர்கள் ஆகியிருந்தார்கள். சேந்தனுக்கும் கவினிக்குமான பாலமாகவும்  மாறியிருந்தார்கள். பாவம் கவினி, இது எதுவுமே தெரியாது தன் ஒவ்வொரு அசைவையும் ஒருவன் தொடர்கிறான் என்று உணராது நடமாடுகிறாள். 

ஆரம்பத்தில் கவினியை இனி எவ்வழியில் அணுகுவது என்ற யோசனை இருந்தது. அந்நேரம் அவன் பொழுதுகள் கவினியின்  சேனலில் கழிந்தது.  அதுவே அவளை நெருங்க, அதுவும் சுவாரசியமாக  நெருங்க ஒரு வழியைக் காட்டிவிட்டிருந்தது. அந்த வழி, அவள் மறுப்பின்  சுணக்கத்துக்கு இதமாக,மருந்திடுவதாக இருந்தது. 

இதற்கெல்லாம் உன் பதில் என்னவாக இருக்கும் என்ற ஒரு சவாலோடு களத்தில் இருங்கியிருந்தான், சேந்தன்.

‘இமைகளிலே கனவுகளை விதைத்தேனே

இரகசியமாய் நீர் ஊற்றி வளர்த்தேனே 

இங்கு வெறும் காற்றிலே நான் விரல் நீட்டினேன்

உன் கையோடு கை சேரத்தான்

உன் உறவும்  இல்லை என் நிழலும் இல்லை

இனி என் காதல் தொலைதூரம் தான்

நான் சாம்பல் ஆனாலும் என் காதல் வாழுமே

அந்த சாம்பல் மீதும் உனக்காக சில பூக்கள் பூக்குமே…

விழியிலே என் விழியிலே கனவுகள் கலைந்ததே

உயிரிலே நினைவுகள் தளும்புதே’

அவள் எப்போதோ வெளியிட்டிருந்த குட்டி வீடியோ கிளிப்பிங் அவன் முதல் தெரிவானது.

சேந்தன் என்ற கூகிள் கணக்கில் பெயரோடு தன் புகைப்படமும் பதிவேற்றிவிட்டே கருத்திட்டான்.

பாடல் வரிகளுக்குப் பதிலாகப் பாட்டுப் பாட ஆவல்தான். அது அவனுக்கு வராத தொழில். விசப் பரீட்சை ஏனாம்?  

குட்டி இதயத்தோடு ஆரம்பித்திருந்தான். 

வெண்ணிலவை  பூவாய் வைப்பேனே

வானவில்லை குடையாய் தைப்பேனே 

உனக்காக எதும் செய்வேன் 

நீ  எனக்கென்ன செய்வாயோ   

குட்டி இதயத்தோடு முடித்திருக்க, கீழே அவளைத் தொடர்பவர்கள் கலகலக்க, கருத்துகள் அள்ளிக்கொண்டு போனது.

அப்படியொரு பயணம் முடியவிட்டுத்தான் இன்று  தமக்கையைக் காண கொழும்புக்கு  வந்திருக்கிறாள்.

அவளைப்பற்றி எண்ணியபடியே வேலையிடத்துக்கு வந்திருந்தவன், காரை நிறுத்திவிட்டு இறங்கவும்,  அதிர்ந்த கைப்பேசித் திரை, ‘இலங்கையின் அபூர்வ அதிசியம்/ நக்கிள்ஸ் மலைப்பகுதியில் பயணிப்போமா?’ கவினி பூங்குன்றன் சேனலில் வீடியோ வெளியாகியதாகக் காட்டியது. 

 

error: Alert: Content selection is disabled!!