கரையுடைக்கும் கணமொன்றில் – 20 (2)

‘யாரடா நீ? அக்கா தங்கை அம்மா என்று வீட்டில பொம்பளைகள் இல்லையா?’ எனக் கோபப்பட்டார்கள்.

 ‘நாங்கள்  மூண்டு வருசமா இங்கனேக்க தான் தல சுத்துறம். ஒரு கடைக்கண் பார்வையைக் காணோம். சரி, கமெண்ட்ஸ்க்கு ஒரு லைக், அது கூட இராது. நீங்க வேற’ என்று சலித்தார்கள். 

‘எங்கட சிஸ்டருக்கு நாங்க இருக்கிறம். நீ ஆரப்பா புதுசா சேந்தன் வேந்தன் எண்டு கொண்டு ?’ என்று பாசமழை பொழிந்தார்கள். 

இப்படியே இன்னும் நிறைய நிறைய  வகைகளில் கருத்திடல்கள் நீண்டு கொண்டு போயின.

இதையெல்லாம்  பார்த்த கவினி உண்மையில் அதிர்ந்தாள். இப்படியொரு வேலையை சேந்தனிடமிருந்து எதிர்பார்க்கவே இல்லை. 

 “இந்தாள் என்ன மென்டலா வாணன்? சரியான அலுக்கோசு போல இருக்கு. செய்து வச்சிருக்கிற வேலையைப் பாரும். வாற விசருக்கு…” என்று தொடங்க, அவனோ நக்கல் பார்வையோடு நின்றான். காரணம், பொதுவாழ்வு என்று வந்தபின்னர், தேவையற்றது என்ற கருத்துகளை எல்லாம் கணக்கில் எடுக்காது கடந்துவிடுபவர்கள் அவர்கள். அப்படியிருக்க, இதில் ஏன் இந்தளவு அதிர்வும் தாக்கமும்.

கூர்மையாகப் பார்த்தபடி கேட்டிருந்தான்.

 “பின்ன, ஆளைத் தெரியும் எனக்கு. சேட்டை விடுறாரோ?” கோபம் கொண்டாள். 

வாணன் ஒரு சாதியாகச் சிரிக்க, “இதையெல்லாம் ஒரு விசயமா எடுக்க நானென்ன வேலைவெட்டி இல்லாமலா இருக்கிறன். அந்தாள் லண்டனில் வேலையில்லாமல் இருக்கிறார் போல!” என்று விட்டுப் போனாள். இருந்தாலும் சேந்தன் சத்தமேயில்லாது அவளுள் அதிர்வை ஏற்படுத்திவிட்டிருந்தான். 

முற்றுப்புள்ளி வைத்துவிட்டு அடுத்த வேலை பார்க்க முனைந்தவளைத்  தன் நினைவில் இருத்திக்கொள்ளும் படி செய்தான், செய்து கொண்டிருக்கிறான்.

மாதத்துக்கு இரண்டு என்று கமெண்ட்ஸ் போடுறாரா என்ன என்று, அவளை யோசிக்க வைக்கும் அளவில் அவன் செயல்கள் இருந்தன. 

கண்களை வருடும் தேனிசையில்

என் காலம் கவலை மறந்திருப்பேன்

இன்னிசை மட்டும் இல்லையென்றால் நான்

என்றோ என்றோ இறந்திருப்பேன்

எவனோ ஒருவன் வாசிக்கிறான்

இருட்டில் இருந்து நான் யாசிக்கிறேன் 

கிட்டத்தட்ட ஒரு வருடத்துக்கு முன்னரான ‘ஷோர்ட்’ ஒன்றுக்குக் கருத்திட்டிருந்தான், சேந்தன்.

‘இன்னிசையாய் வந்த என்னை அடையாளம் தெரியவில்லையா கவினி பூங்குன்றன்?’ என்றெழுதி, கண்ணீர் வழிந்தோடும் ஸ்மைலிகளை இரு வரிசைகளில் தட்டி விட்டிருந்தான்.    

இப்படியே, சிறிதாக அவளுள் முளைவிட்டு, மூச்சுக்கு ஏங்கி, சாவை நோக்கிச் சென்றுகொண்டிருந்த நேசத்துக்கு நல்ல தண்ணீராகப் பார்த்து பார்த்துத் தெளித்து தெளித்து, ஆரோக்கியமாக வளரச் செய்வதில் குறியாக இருந்தவன், இவ்வளவு செய்தும் அமைதியாக இருக்கிறாளே என்று விசராகிப் போனான்தான்.

அப்படியிருக்கையில் அவன் வட்ஸ்அப்புக்கு செய்தி ஒன்றை அனுப்பியிருந்தாள், கவினி.

“இஞ்ச பாருங்க, விசர்த்தனமான  வேலைகளப்  பாக்கிறதுக்கு அங்க நிறைய சேனல் இருக்குச் சரியா.  நான் ஆளில்லை.  என்ர சேனலில இனி உங்கட கமெண்ட்ஸ் நான் பாக்கக்  கூடாது. இல்லையோ,ஸ்கிரீன் ஷொட்  எடுத்து  உங்கட அம்மாக்கு அனுப்புவன். கட்டாயம் செய்வன்.” என்றிருக்க, வாய்விட்டே சிரித்துவிட்டான், இவன். 

“என்ன அண்ணா ஃபோனைப் பாத்து இப்பிடிச் சிரிக்கிறீங்க?” அருகில் வந்தமர்ந்தாள், இயல்.

 சற்றே தள்ளியமர்ந்திருந்த நிவேதாவின் பார்வை மகனில் பதிந்தது. இலங்கை போய் வந்ததிலிருந்து கதை பேச்சு இல்லை. தேவைக்கு, அறியாத மனுசரோடு கதைக்கும் பாவனையில் ஓரிரு வார்த்தைகள் மட்டும் தான். 

“ஆரோ ஒருத்திக்காக என்னையே தூக்கி ஏறியிறான், உங்கட மகன்.” என்று, கணவரோடு சண்டை பிடிப்பதைவிட வேறெதுவும் செய்யவியலாது மறுகிக் கொண்டிருப்பவருக்கு, எதுவுமே நடவாத பாவனையில் அவன் இருப்பது வேறு கிலி கொடுத்தது. 

‘ஸ்பொன்சர் செய்து பெட்டையைக் கூப்பிட்டுட்டா! அதைவிட அவமானம் வேற என்ன? முதல், அவள் என்னை மதிப்பாளா?’ என்ற கவலை ஒருபுறம் நெரித்தெடுத்து.

 ‘பெரிய ரோசக்காரி போல கதைச்சவள் மட்டும் இதுக்குத் தலையாட்டோணும்.’ என்று எண்ணுபவருக்கு, தலையாட்ட மாட்டாள் என்றொரு நம்பிக்கையும் உண்டு.  மகனுக்குக் கல்யாணம் பேசினார். அவனிடம் மூக்குடைபட்டதுதான் மிச்சம். 

இப்பிடியிருக்கையில், மகன் சொன்ன பதில்  விருட்டென்று எழ வைத்திருந்தது. 

“அதுவா? ஹா…ஹா…கவினிதான் …” என்று ஆரம்பித்தவன் தாயின் எரி பார்வையில், “வாட்?” ஒற்றைப் புருவம் உயரக் கேட்டு வைத்தான்.

 “கடைசிவரை  நடவாத விசயங்களில நேரத்தையும்  மனத்தையும் செலுத்திக்கொண்டிருந்து அலட்டாமல் ஆமான வேலை இருந்தாப்  பாக்கச் சொல்லு இயல்.” எரிந்து விழுந்தபடி  உள்ளே சென்றுவிட்டார், நிவேதா. கவினி தொடர்பான பேச்சுவார்த்தையை வளர்க்க விரும்பவில்லை, அவர். தாய் மறையும் வரைப் பார்த்திருந்தவன் நிதானமாக எழுந்தான்.

“அண்ணா சும்மா இருங்க. கொஞ்ச நாள்கள் போகட்டும். முதல் கவினி சம்மதம் சொல்லட்டும்.” அடிக்குரலில் எச்சரித்தாள், இயல்.

“இல்ல, இப்படியே விட்டா மாதத்துக்கு ரெண்டு பொம்பளைகள் பாத்துக்கொண்டு இந்த அம்மா திரிவா.” என்றபடி சென்று தாய் முன்னால் நின்றான்.

“அப்ப எனக்குக்  கல்யாணம் செய்து வைக்க மாட்டன்  எண்டுறீங்க?”கூர்மையாகக் கேட்டவனை என்ன செய்வது? கோபத்தோடு பார்த்தவர் விழிகள் வேறு கலங்கிவிட்டன.

“நான் என்ன சொன்னனான், நீ என்ன கதை கதைக்கிற? இப்பவரை எத்தினை அருமையான பொம்பளைகள் பாத்திட்டன், ஆதினி உட்பட. ஓமெண்டு இருக்க இத்தறிக்குக் கலியாணம் முடிஞ்சிருக்கும். இப்ப ஓமெண்டு சொல்லு ஒரு கிழமைக்கக் கலியாணம் செய்து வைக்கிறன். ”அதட்டலில் ஆரம்பித்தவர் கெஞ்சலில் முடித்திருந்தார் .

“பொம்பளைதான்  பாத்துச் சொல்லிட்டனே அம்மா.” கூர்பார்வையோடு போட்டிபோட்டது அவன் அழுத்தமான குரல். 

 “என்ன அப்பிடிப் பாக்கிறீங்க? கவினிதான். ஒருக்காலும் அதில மாற்றம் வராது.  இல்லையோ உங்கட மகன்  இப்பிடித்தான் தனியா சிரிச்சுக்கொண்டு காலம் தள்ளப் போறான்!”  நிறுத்தி நிதானித்துச் சொல்லிவிட்டுச் சென்றான், அவன்.

“உங்களப் பெத்து இந்தளவுக்கு வளத்துவிட எனக்கு டூஸ் காட்டுறியல் என்ன? கலியாணம் செய்யாமலே இரு! அவள் இங்க வரப்படாது!” கத்தியிருந்தார், நிவேதா.

அதையே அடிக்கடி உருப்போட்ட படி அவர் இருக்க இருக்க, இவனுக்கு, அவளைக் கெதியாக இங்கு கொண்டு வந்துவிடவேண்டும் என்ற ராங்கி.

இதுவெதுவும் தெரியாத கவினியோ, ‘நீ என்னத்தையாவது செய்து துலை’ என்று , ஒரு கட்டத்தில் அமைதியாகிவிட்டாள். சேந்தன் இடும் கருத்திடலை வாசித்துவிட்டு இவள் காதுப்படச் சொல்லும் வாணனுக்கு முதுகு வெடிக்கும் படி அடி போடுவாள். அப்போதும் ஒரு வார்த்தை கதைப்பதில்லை. அவன் கருத்துகளை வாசிப்பதும் இல்லை. 

பிரயோசனம் இல்லாத  விடயங்களை மனத்துள் போட்டுக் குழப்ப அவள் தயாராக இல்லை. அவன் கலைக்க கலைக்க,  தன்பால் இழுக்க  எண்ணிய உள்ளத்தையும் நினைவுகளையும் முன்னைவிடவும் வேலையில் ஈடுபத்தினாள். அதுவே, தனது சேனலுக்குப் புதியதொரு நிகழ்ச்சியை உருவாக்க வைத்திருந்தது.

‘கவினியோடு ஊர் சுற்றிப் பார்க்கலாமா?’

 இலங்கையிலுள்ள இயற்கையோடு பயணப்படத் தொடங்கினாள். வசீகரக் குரலோடு இதயம் வருடும் இயற்கைக் காட்சிகள் அவளைத் தொடர்பவர்கள் எண்ணிக்கையை அதிகரித்து. 

error: Alert: Content selection is disabled!!