ஹொட்டஹெனாவில் தான் கவினி தங்கியிருக்கிறாள். அவளோடு வேலை செய்பவளின் அன்ரி வீடுதான். இவளோடு நல்ல பழக்கம்.
தம்மோடு தங்கிக்கொள்ளும்படிக் கூறினாள்,சாரல்.
“பின்னேரம் அத்தார் வரவிட்டு விமலா அன்ரி வீட்டுக்கும் போயிட்டு வந்திரலாம். சூரியன் வாங்க எண்டு சொன்ன பிறகும் போகாட்டிச் சரியில்ல.” என்றுமிருந்தாள். கவினி பதில் சொல்லவில்லை.
“ உனக்குச் சாப்பாடு எடுக்கிறன்.” சமையலறைக்குள் நுழைந்தாள். மூன்று படுக்கையறைகளோடு இருந்த வீடு சுத்தமாக இருந்தது.
“வீட்ட நல்ல வடிவா வச்சிருக்கிறீங்க அக்கா.” என்றவளுக்கு, “அதெல்லாம் ஆதவன்ட வேல. அங்க வீட்டில நீ செய்யிறது போல, இங்க அவர்.” சிரிப்போடு சொன்னாள்.
“ஆதவன் வேல நாள்களில கன்டினில சாப்பிடுறவர். இரவில வெளில போவம், இல்லையோ விமலா ஆன்ரி வீட்டில சாப்பிடுறனாங்க. நான் வீட்டில சமைக்கிறது சரியான குறைவு. சமைக்கிற நேரம் கொஞ்சம் கூடவா செய்து ரெண்டு மூண்டு நாள்களுக்குச் சமாளிச்சிருவன்.” என்றபடி, சோறும் மீன் குழம்பும் கத்தரிக்காய்ப் பிரட்டலுமாகப் போட்டுக் கொண்டுவந்து கொடுத்தாள்.
வாங்கி அமைதியாகச் சாப்பிட்டாள். தானும் கொஞ்சமாகப் போட்டுக் கொண்டு வந்த சாரல், சாப்பிட்டாளோ இல்லையோ மனத்தில் இருந்தவற்றைக் கொட்டித் தீர்த்தாள். இவளால் ஒரு கட்டத்தில் கேட்டுக்கொண்டிருக்க முடியவில்லை, தமக்கையோடு வாதாடவோ, தர்க்கம் செய்யவோ விரும்பவில்லை. எழுந்துவிட்டாள்.
“நிறைய அலுவல்கள் இருக்கு அக்கா. நாளைக்கு ஏலும் எண்டா வாறன். கவனமா இருங்கோ!” சகோதரி மறிக்க மறிக்கக் கிளம்பிவிட்டாள்.
விறுவிறுவென்று வந்து பேருந்துத் தரிப்பிடத்தில் நின்றவளுக்குக் காத்து நின்று குளிரூட்டப்பட்டப் பேருந்தில் ஏறும் பொறுமையிருக்கவில்லை. வந்து நின்ற அரசப் பேருந்தில் ஏறியவளுக்கு, அதனுள் இருந்த நெரிசல் கூட உறைக்கவில்லை. அந்தளவுக்கு மனம் கனத்திருந்தது. இறுகிக் கிடந்தது. தமக்கை கதைத்த ஒரு ஒரு சொல்லும் அச்செனப் பதிந்துவிட்டிருந்தது. மீண்டும் மீண்டும் அதிலேயே நின்று உழன்றது உள்ளம்.
திடீரென்று மதிவனியின் போக்கே மாறிவிட்டதுதான். அதுவும் அவர் செல்ல மகள் சாரல் மனக்குறையோடு, கோபத்தோடு கதைக்கும் வகையில். பெருமூச்செறிந்தாள். அருகில் நின்றவன் பார்வை அவளில். சற்றே நெருங்கி நின்றுகொண்டான். அதை இவள் உணரவில்லை.
தாயின் போக்கு மாறுவதற்கு, தந்தை தாயிடையே பேச்சு வார்த்தையற்ற பிணக்கேற்பட பிள்ளையார் சுழியிட்டது இவளாமே! காகம் இருக்கப் பனம்பழம் விழுந்த கதை இது தானோ! கோப முறுவல் பூக்க, அவளையே பார்த்தபடி நின்ற அவன் இன்னுமே நெருங்கினான். இப்போது பார்வை அவள் கைப்பையில். ஆள் எதிலோ உழன்று கொண்டிருக்கிறாள். நாம், நம் கைவரிசையைக் காட்டலாம் என்ற எண்ணம் போலும்.
வீட்டிலிருந்து இவள் பரமேஸ்வரி வீடு செல்ல, பூங்குன்றன் சண்டையிட்டதைக் காரணமாக வைத்து, மதிவதனி அவரோடு கதைப்பதையே நிறுத்தியிருந்தார். அது இவளுக்கும் தெரியும். அதை இவள் பெரிதாக எடுக்கவில்லை. தாயும் தகப்பனும் எப்போதாவது இருந்திட்டு இப்படி முறைத்துக் கொள்வதையும் இரு நாட்களில் ஒன்றுமேயில்லை என்றளவில் கதைத்துச் சிரிப்பதையும் கண்டு வளர்ந்தவள் அதைக் கருத்தில் கொள்ளவில்லை.
அது இப்போவரைத் தொடர்வது சற்றுமே எதிர்பாராதது. அதையும் விட, வீட்டில் தாய் சமைக்கும் உணவைக் கூட தகப்பன் உண்பதில்லை என்பதில் அதிர்ச்சிதான் அடைந்தாள். அப்பப்போ அத்தை வீட்டில் உண்பதைக் கண்டிருக்கிறாள். அதையெல்லாம் இவள் பெரிதாக எண்ணவில்லை.
“நீ எதைத்தான் பெரிசா எடுத்திருக்கிற? எப்ப நாங்க சொல்லுறதக் காது குடுத்துக் கேட்டிருக்கிற? அப்பிடி இருந்திருந்தா, உனக்கும் அம்மாவுக்கும் இடையில் இந்தளவுக்கு இடைவெளி வந்திருக்குமா சொல்லு. அம்மாவுக்கு அப்பம்மாவப் பிடிக்காது, அவவுக்கும் அம்மாவக் கண்ணிலும் காட்டக் கூடாது எண்டு தெரிஞ்சே அவவோட ஒட்டிக்கொண்டு திரிஞ்சனி எல்லா? எப்பவும் உன்னைப்பற்றி மட்டும் தான் நீ நினைக்கிறது. இப்ப அம்மா அப்பா கதைச்சுக் கொள்ளுறது இல்ல. அம்மாவோட நிவி அன்ரி கதைக்கிறதே இல்ல. அம்மா, விமலா அன்ரியோட பெரிசாக் கதை இல்ல. எனக்கு எப்பிடி இருக்கும் எண்டு நினைச்சுப் பார். உனக்கென்ன, ஒரு ஒரு நாளுக்கு ஒரு ஒரு இடமாத் திரிஞ்சி சந்தோசமா இருக்கிற!” படபடவென்று கதைத்த சாரல் கண்ணீர் விட்டாள்.
தாய்க்கும் விமலாவுக்கும் இடையிலான சினேகிதம் தானே அவளை ஆதவனோடு சேர்த்ததே. அப்படியிருக்க, அவர்களுள் கதை பேச்சு அற்ற நிலை வந்தால்? தன்னிலை? உண்மையில் பயந்தாள்.
“உங்கட அம்மாவுக்கு இப்ப இப்ப புது ஃப்ரெண்ட்ஸ் சாரல் . அதுவும் வெளிநாட்டுக் கிளிக். உள்ளூரில இருக்கிற எங்களக் கண்ணிலும் தெரியுதில்ல.” என்று, விமலா சொல்கையில் எப்படி எதிர்வினையாற்றுவது எனத் தெரியாது அந்தரப்பட்டுப் போவாளே!
தமக்கை சொல்வது போல், தான், பெரும் சுயநலம் பிடித்தவளோ! கண்கள் கலங்க சிமிட்டிச் சமாளித்த கவினி, அப்போதுதான் பிளேட்டால் கைப்பையில் கீறு போட்டவனைக் கண்டாள்.
“ஏய்!” முழங்கையால் இடித்த வேகத்தில் விலகி நின்றாள். அது எங்கே? இடம் இருந்தால் அல்லவா? அவனோ நல்லவன் வேடத்தில் சண்டைக்கே வந்துவிட்டான். சிங்களம் தெரிந்ததில் இவளும் ஏசி விட, அருகில் நின்ற பெரியவர் ஒருவர் “நீ அந்தப் பிள்ளய நெருங்கி நெருங்கிப் போனத நானும் கண்டனான்.” என்றதும் கத்திக்கொண்டே குதித்து இறங்கி விட்டான்.