கரையுடைக்கும் கணமொன்றில் – 22 (1)

யாழ்ப்பாண நகரத்திலிருந்து பத்துப் பதினோரு நிமிட காரோட்டத் தூரத்தில் அமைந்துள்ளது, அரியாலை. கடந்த ஒன்பது வருடங்களாக அவ்வூரின் முக்கிய அடையாளமாகவுள்ள, ‘கல்விச் சோலை’ வார இறுதிகளில் எப்போதுமிருக்கும் கலகலப்போடு காணப்பட்டது.

சர்ரென்று வந்து ஸ்கூட்டியை நிறுத்திவிட்டு இறங்கினாள், கவினி. மழை பெய்யப்போகும் அசுமாத்தம் தெரிந்தது. ஒரு சாதியாகப் புழுங்கியது. பெரிய இரும்புக் கதவுகளை நோக்கி நடந்தாள். பெயிண்ட் அடித்திருந்தார்கள் போலும், வாசமடித்தது. கொழுக்கியைத் தட்டி ஒரு பக்கக் கதவை  ஸ்கூட்டி நுழையும் அளவிற்குத்  திறந்துவிட்டாள். 

இரும்புக் கதவின் சத்தம் பிள்ளைகள் பார்வையை இவள் நோக்கித் திருப்பிவிட்டிருந்தது.  சந்தோசமாகக் கை காட்டினார்கள். பதிலுக்குக் கையசைத்தவள் ஸ்கூட்டியில் ஏறி உள்ளே வந்தாள். கேட்டை மூடும்  தேவையிருக்கவில்லை.  “வணக்கம் அக்கோய்!”  என்றபடி ஓடி வந்த சிறுவனொருவன் கதவை  மூடிவிட்டு, பதில் வணக்கத்தை வாங்கிக்கொண்டே ஓடினான்.

நடைபாதையின் இருபுறமும், எட்டுக்கோட்டில் சிலர் கெந்திக் கொண்டிருந்தார்கள். 

ஓவென்ற குதூகலத்தோடு பந்தை ஏறிய, அடுக்கியிருந்த பேணிகள் சிதறிச் சென்று விழுந்தன. ஆம், ‘ஐஸ் போல்’(Ball)  விளையாடிக்கொண்டிருந்தார்கள்.

கிளித்தட்டு ஒருபுறம். 

கால் பந்தை வைத்துத் தட்டிக்கொண்டு சிலர் என்று, அச் சுற்றமே சுறுசுறுப்பாக இருந்தது. 

அதுமட்டுமா?  

ஆங்காங்கே ஓங்கிச் சடைத்திருந்த மாமர நிழலில் போடப்பட்டிருந்த மரக்கதிரைகளும் நிறைந்திருந்தன. அமைதியாக அமர்ந்திருந்த மாணவர்களின் பார்வையோ, தமக்கு நடுவில் இருந்த கரம் பலகையில். தூவியிருந்த பவுடரில் வழுக்கிச் சென்ற சிவப்புக்காய்  ஓட்டைக்குள் விழ, சன்னமான “ஓ” ஓசையெழுந்தது. 

அதுபோலவேதான் செஸ் விளையாட்டும் போய்க்கொண்டிருந்தது. மிக அமைதியாக விளையாட்டில் ஆழ்ந்திருந்தார்கள்.

தாயம்,  ஏணியும் பாம்பும் கூட, நிழல் நிலத்தில் அமர்ந்திருந்த சிறு சிறு குழுக்களின் பொழுதைப் பிடித்து வைத்திருந்தன.

ஏழு வயதிலிருந்து பத்தொன்பது வயது வரையான மாணவ மாணவிகளின் மகிழ்வான சுவாசத்தால் நிரம்பிக் கிடந்தது, ‘கல்விச்சோலை.’

பூங்குன்றன், தன் நெருங்கிய நண்பர்கள் ஏழுவரோடு இணைந்து முதன் முதலில் இங்கு கல்விச்சோலையை அமைத்தார். திறமை இருந்தும் சற்றேனும் தட்டிக்கொடுக்க வசதி வாய்ப்பற்ற மாணவர்களுக்கு இங்கு முற்றிலும் இலவசம். வசதியுள்ளோருக்குக் கட்டணம் உண்டு. 

இன்றோ, யாழ் இந்துக் கல்லுரியின் பழைய மாணவர்கள் நூற்றுக்கு மேலானோர் இதில் இணைந்துள்ளார்கள்.  அதுவே கல்விச்சோலை, பளையில் ஒன்றும் வடமராட்சியில்  ஒன்றுமாக வளர உதவியுள்ளது. 

வாத்திகளின் குரல் கசிந்து வந்ததை உள்வாங்கியபடி, சுற்றி பார்த்தபடி நடந்த கவினியின் கால்கள் தனியாக அமைக்கப்பட்டிருந்த ‘அலுவலகம்’ என்ற குடிலை நோக்கிச் சென்றன.

இவள் உள்ளிட அங்கிருந்து வெளியில் வந்தாள், ஆராதனா. இவள், இனிதனின் அண்ணியின் இளைய சகோதரி. அதுமட்டுமின்றி இனிதனின் வருங்காலத் துணையாகப் போகிறவளும் கூட. 

“வணக்கம் கவினி, எப்பிடிச் சுகம்? நக்கிள்ஸ் மலைக்கெல்லாம் போயிருக்கிறீர்.  அடுத்த முறை அந்தப் பக்கம் போனா என்னையும் கூட்டிக்கொண்டு போகோணும் சரியா?” என்றவளை, கவினி பார்த்த பார்வையில் கிண்டல் இருந்தது.

 “அங்க எல்லாம் என்னோட வாறத விட…” என்றவள் பார்வை உள்ளே தகப்பனிடம் படிந்து வந்தது.

 “என்ர மச்சானோட போனாத்தான் சரியா வரும்.” அவளுக்கு மட்டும் கேட்கும் குரலில் சீண்டலாகச் சொல்ல, “எனக்கு வகுப்புக்கு நேரம் போயிற்று” ஓடிவிட்டாள், ஆராதனா. 

சிரித்தபடி ஆராதனாவைப் பார்த்து நின்ற மகளில்தான் பூங்குன்றன் பார்வை. கல்விச்சோலைக்குள் வந்துவிட்டால் அவர் நினைவில் மாணவ மாணவிகள் மட்டுமே நிற்பார்கள். அண்மைய நாட்களில் அது முடியாதிருந்தது. தன்னை, தன்  வாழ்வை, நேசித்துக் கல்யாணம் செய்த மனைவியை, ஆசையாகப் பெற்று வளர்த்த மகள்களை என்று, அவர் எண்ணங்கள் என்னவோ அவர் வீட்டையே சுற்றி வருகிறது. மனதை ஒருநிலைப்படுத்த மிகவுமே சிரமப்பட்டுக்கொண்டிருக்கிறார், மனிதர்.

“வாம்மா, பயணம் எல்லாம் சுகமாப் போச்சா? அக்கா எப்பிடி இருக்கிறா? தன்னோட நிக்கச் சொல்லேல்லையா?” என்றவருக்குப் பதில் சொன்னபடி அங்கிருந்த கதிரையை இழுத்து அமர்ந்து கொண்டாள்,கவினி. 

“தேத்தண்ணி கோப்பி…” தகப்பன் உபசரிக்க, “ஒண்ணும் வேணாம் பா.” முறுவலோடு மறுத்துவிட்டு, அங்கிருந்த லெமன் பஃப் பிஸ்கட்டில் ஒன்றை எடுத்துக் கடித்தாள்.

“காலம சாப்பிட்டியா?”

“ம்ம்… அத்தை அப்பம்  சுட்டுத் தந்தவா. இந்தாங்க உங்களுக்கு மத்தியானச் சாப்பாடு தந்து விட்டவா.” ஹொட் பாக்கை எடுத்து மேசையில் வைத்தவள் பார்வை தகப்பனை ஆராய்ந்தது.

சொக்கு நன்றாகவே ஒட்டியிருந்தது.  விழிகளில் சோர்வு. சற்றே கூன் விழுந்திருந்தது. எப்போதுமே நிமிர்வும் நேர்த்தியுமாக இருப்பவர் தோற்றத்தில் அசட்டை அப்பலுகின்றித்  தெரிந்தது.

“இந்த அக்காவுக்கு வேற வேலையே இல்ல. நான் இங்க பாத்துக்கொள்ளுவன் எண்டா கேக்கிறதே இல்ல.” என்றபடி, ஹொட் பாக்கை  எடுத்து அருகிலிருந்த மேசையில் வைத்தவர், மகள் பார்வையுணர்ந்து திரும்பினார்.

“என்னம்மா அப்பிடிப் பாக்கிற?” உதட்டோரம் நெளிந்த சிறு சிரிப்போடு வினவியவரை, கோபமாகப் பார்த்தாள், கவினி.

 

error: Alert: Content selection is disabled!!