Skip to content
மனத்தில் உள்ளதை எல்லாம் கொட்டி அவரோடு சண்டைபோடும் எண்ணத்தோடு வந்தவளுக்கு இப்போது முடியாதிருந்தது.
அவளுக்குத் தகப்பன் என்றால் அந்தளவுக்குப் பிடிக்கும். அவருமே, இதுவரைக்கும் அவளை அதட்டிக் கூட கதைத்தறியார். அதுவே அவரில் உள்ள மனச்சுணக்கத்தைத் தள்ளிவிடப் பார்த்தது.
“பச்! ஒண்ணும் இல்ல பா. எனக்கு லண்டனுக்கு போக வந்திருக்கு. வாணனுக்கும்தான். ஒரு வருசம் எண்டு சொல்லீனம், அங்க போய் இன்னொரு வருசத்துக்குக் கூட்டலாம்.”
“ஓ! சந்தோசமான விசயம் தானேம்மா!” என்றவர், பயண விபரம், தங்குமிடம் அது இதுவென்று அனைத்து விபரங்களையும் கேட்டறிந்து கொண்டார்.
அவளோ திடுமென்று, “அப்பா கேக்கிறன் எண்டு குறை நினைக்கக் கூடாது.” என்றுவிட்டு நிதானித்தாள்.
“குறை நினைக்கிறதா? என்ர மகளுக்கு என்னட்ட என்ன கேட்கோணும் எண்டாலும் கேட்கலாம். இப்பிடித் தயங்கத் தேவையில்ல.” எழுந்துவந்து பாசமாக மகள் தலையை வருடிக்கொண்டு சொன்னவர், கவினியின் விழிகளைக் கலக்கடித்தார்.
“நீங்க இன்னும் அம்மாவோட கதைக்கிறதில்லையா?” தகப்பன் முகம் பார்த்துக் கேட்டாள், அவள்.
பூங்குன்றன் முகம் இறுகியது. மீண்டும் சென்று அமர்ந்து கொண்டார். அங்கிருந்த பேனையை எடுத்து அப்படியும் இப்படியும் கோடிழுத்தார். உள்ளே பிரண்டெழுந்த உணர்வுகளை மகளுக்குக் காட்ட விரும்பவில்லை. நாடித் தசைகள் இறுகின. தன்னைக் கட்டுப்படுத்த முனைந்தவர் நிதானமாக மகளைப் பார்த்தார். சிறுமுறுவல் கூட வந்திருந்தது.
“இந்தக் கேள்வியை ஆரோ கேட்டால் வேற. ஆனா…நீ…எங்கட மகளே கேட்கிற நிலைமையில இருக்கு எங்களிண்ட உறவு!” சொன்னவர் குரலில் ஏகத்துக்கும் கசப்பு.
என்ன பதில் சொல்வாள்? கலங்கிவிட்ட விழிகளை மறைத்துவிட, பின்னால் திரும்பிப் பார்த்தாள். சிறிது நேரம் தகப்பனைப் பார்க்கவில்லை.
“உன்ன வருத்தோணும் எண்டு இதச் சொல்லேல்லம்மா. வீட்டில இருந்தா உனக்கு நிம்மதி இல்ல எண்டுதான் நீ அக்கா வீட்ட போனனீ. ஆனா, அந்த நிலைக்கு உன்னக் கொண்டு வந்து விட்டதில, இந்த அப்பாட பங்கும் இருக்கு எல்லா? அதுக்குத் தண்டனையா தான் இண்டைய என்ர நிலைய நான் பாக்கிறன்.” கசப்போடு இறுகிய குரலில் சொன்னவர் முகமும் பாறை போலிருந்தது.
“உங்கட அம்மாக்கு என்னட்டக் கதைக்கிற அளவுக்கெல்லாம் நேரமில்லையம்மா. மற்றும்படி என்னதான் கதைக்கிறது சொல்லு? அதை விடு!” அசட்டையாகச் சொல்லி முற்றுப்புள்ளியிட முனைந்தார்.
“அம்மா சமைச்சா சாப்பிடுறதும் இல்லையாமே. அக்கா தான் சொன்னவா. இதுக்கெல்லாம் நான் தான் காரணம் எண்டும் சொன்னவா. இங்க பாருங்க அப்பா, நான் அத்த வீட்டுக்குப் போனது என்ர நிம்மதிக்காக மட்டுமில்ல, உங்கள் ரெண்டு பேரிட நிம்மதிக்காகவும் தான். அக்கா வீட்டில இருந்தா அம்மாட கவனம் அவவில இருக்கும். இப்பக் காணுற நேரம் எல்லாம் என்னில எரிஞ்சு விழுவா. இடையில வந்து நீங்க ஏதாவது சொல்வீங்க. வீண் பிரச்சனைகள்தான் வரும். அதத் தவிர்க்க நினைச்சன் அப்பா.” என்றவள் தகப்பனைத் தீர்க்கமாகப் பார்த்தாள்.
“அந்த வீட்டில என்ர நிலை என்ன எண்டுறது உங்களுக்கு நல்லாவே தெரியும். நான் பிறந்ததில இருந்தே அதுதான் நடப்பு. பிறகெதுக்குப் புதுசா நீங்க இந்தளவுக்கு அம்மாவோட கதைவழிபடப் போவான்? அதுதான் அம்மாவுக்கு ஏறுறது. ” அவள் கேட்ட தொனியிலும் பார்வையிலும் சுருக்கென்று தைத்த மனத்தோடு பார்த்தார், பூங்குன்றன்.
“அதான் நான் விட்ட பெரிய பிழை பிள்ள. நீ சொல்ல வாறது போல இனித்திருத்தேலாதுதான்.” என்றவர் பார்வை அங்கிங்கென்று அலைந்தது. சொல்வதை நிறுத்தவில்லை.
“விரும்பித்தான் செய்தனாங்க. ஆனா …அந்த விருப்பம், அன்பு எல்லாம் எப்பவோ செத்துப்போயிற்று. அது எனக்கு இப்பதான் தெரிஞ்சிது.” கசந்த முறுவலோடு சொன்னார்.
“ என்னில கொஞ்சம் சரி விருப்பம் இருந்திருந்தா என்ர அம்மா, வயசு போன மனுசியோட சாகிறவரை ஏட்டிக்குப்போட்டியா மல்லுக்கு நிண்டிருக்க ஏலாது. சரி, உன்ர அம்மா விசயத்தில மனிசியும் அழும்பு பண்ணிக்கொண்டுதான் இருந்தவா. அவாவும் இலேசுப்பட்டவா இல்ல. ஆனா நீ? சாடை இருக்கு எண்ட ஒண்டுக்காக இப்பவரை ஒதுக்கி வச்சிருக்கிறா. எனக்குப் பிள்ளைகளில உள்ள விருப்பம் தெரிஞ்சும் வேணும் எண்டு எனக்கு முன்னாலயே தாக்குறவா எல்லா? அதும் இப்ப இப்ப கூடிட்டு. வெளி ஆக்களுக்கு முன்னால வச்சும். அதெல்லாம் அன்பும் பாசமும் உள்ளவேயாள செய்யேலாது கவினி. உண்மையாலுமே மனம் விட்டுப் போயிற்று!” என்றவர், அங்கிருந்த தண்ணீர் போத்தலை எடுத்துக் கடகடவென்று அருந்தினார்.
“பச்! இதெல்லாம் கதைச்சுப் பிரயோசனம் இல்லயப்பா. இந்த வயசில நீங்க ஆளுக்கு ஒரு பக்கம் நிக்கிறது வடிவாவா இருக்கு? அம்மாவோட எடுத்துக் கதையுங்க. லண்டன் போகிற வரைக்கும் வீட்டில வந்திருக்கிறன்.” என்றாள், கவினி.
“கதைச்சுப் பிரயோசனம் இல்லம்மா. விடு! உண்மையா எனக்கு மனம் விட்டுட்டு. அவா சினேகிதிகளோட பொழுது போக்கிறதில மகிழ்ச்சியா இருந்தாச் செய்யட்டுமன். எனக்கு இந்தக் கல்விச்சோலை போதும். இனி, இதான் என்ர வாழ்க்கை. ஒரே ஒரு ஆசை மட்டும் இருக்கு.” என்றுவிட்டு மகளைப் பார்த்தார்.
“இப்ப நீ ஏன் கண் கலங்கிறயம்மா? உனக்கு ஒரு நல்ல இடத்தில கலியாணம் செய்து வைக்கோணும் எண்ட ஆசை மட்டும் தான் இருக்கு. லண்டன் போயிட்டு வந்து அதுக்கு ஓமெண்டால் போதும்.” என்றவர் பார்வை அங்கு கிடந்த பத்திரிகையில் . அவர் விழிகள் குத்திட்டு நின்ற இடத்தில் இவள் பார்வை பதிந்தது.
முன்னாள் நெதர்லாந்து பிரதம மந்திரியாம். ஏழு வருடங்கள் ஆட்சியில் இருந்தாராம். இப்போது, தனது 92 வது வயதில் மனைவியோடு சேர்ந்து இறப்பைத் தனதாக்கி இருக்கிறாராம். வாழ்ந்தது போதுமென்று தீர்மானித்து இருவரும் ஒரே நேரத்தில் ஊசி போட்டு(Morphine) மரணித்துள்ளார்கள் என்று, அவர்கள் புகைப்படத்தோடு செய்தி இருந்தது.
மகளைப் பார்த்தார், பூங்குன்றன்.
“பேசிச் செய்யிறதோ விரும்பிச் செய்யிறதோ,இப்பிடி வாழக் குடுத்து வைக்கோணும்மா. அந்தக் குடுப்பினை எனக்கு இல்ல. அம்மாவ எதிர்த்துக் கல்யாணம் செய்தன். அந்த வருத்தமும் குறையும் மறையாமல் அம்மா போய்ச் சேர்ந்திட்டா. நான் நல்ல மகனாக இருக்கேல்ல. அதுபோல வதனிக்கு, எப்பவுமே தனக்காக என்ர அம்மாட்ட கதைக்கிறது இல்லை எண்டுற பெரிய குறை இருக்கு. நான் செய்த மிச்ச எல்லாத்தையும் அடிச்சுத் தள்ள அதே போதுமா இருந்திருக்கு. இல்லாட்டி, அவவிட வாயில உன்னைக் கட்டி நான் கண்டது ஒண்டுமில்ல எண்டு வந்திராது. எல்லாத்துக்கும் மேல, என்ர குஞ்சுக்கு நான் நல்ல அப்பாவாவும் இருக்கேல்ல!” என்றவரால் உருண்டு தெறித்த கண்ணீரை மகளிடம் மறைக்க முடியவில்லை.
“இரு வாறன்.” விருட்டென்று எழுந்து வெளியில் சென்றுவிட்டார், பூங்குன்றன்.
இதயம் கனக்க அசையாது அமர்ந்திருந்தாள், கவினி.
error: Alert: Content selection is disabled!!