Skip to content
“அந்தக் கிழவியும் நீயும் தான் என்ர வாழ்க்க இப்பிடியாகக் காரணம். இப்ப வந்து உன்ர அப்பாவுக்காக வக்காலத்து வாங்கிற! முதல், உனக்கு என்ன துணிவு இருக்கோணும். இங்க பார், எனக்கு என்ர மகள் இருக்கிறாள். அவள் மட்டும் போதும். இப்பிடியெல்லாம் வந்து கதைக்கிறதுக்கு உனக்கு அருகதையே இல்லை. உம்மணாம் மூஞ்சியா இருக்கிற உன்ர கொப்பாக்கு என்ர அருமை தெரியேல்ல. தெரிய வைக்காட்டி நான் வாழுறதில அர்த்தம் இல்லை. தனியாக் கிடந்து அழுந்தட்டும்!”
ஆக்ரோசமாகச் சொன்ன தாயோடு என்ன கதைப்பதென்று தெரியாது முழித்தாள், கவினி. வெடுக்கென்று பதில் சொல்ல முடியும். அது அவள் தகப்பனையும் பாதிக்குதே! மௌனியாகிவிட்டாள்.
பெற்ற மகளேயென்றாலும் நெருக்கமோ அன்பான பிணைப்போ இல்லாதவளால் என்னதான் செய்யவியலும்? தாயும் தந்தையும் பிணக்குகள் இல்லாமல் ஒன்றாக வாழ வேண்டும் என்ற ஆசை நிராசையாவிடக் கூடாதென்ற வேண்டுதலோடு நகர முயன்றாள்.
“ஆனா ஒண்டு… நீ எல்லாம் நல்லா இருக்கவே மாட்ட!” வெறுப்பும் கோபமுமாகச் சொல்லி நிறுத்தியிருந்தார், மதிவதனி.
தாய் முகத்தைப் பார்த்தாள்,கவினி. அவளின் கன்றிச் சிறுத்த முகமும் கோபப் பார்வையும் தன்னை எதுவுமே செய்யாது என்றவகையில் அசட்டையாகப் பார்த்துக் கதைத்தார், மதிவதனி.
“அங்க லண்டன் போறன் எண்டு என்ர சினேகிதி வீட்ட போறது, சேந்தனோட வழியிறது எண்டெல்லாம் வச்சிக்கொள்ள மாட்ட எண்டு நினைக்கிறன். ” துச்சப் பார்வையோடு சொன்னார்.
அவளே அவனை மறந்தாலும், தவிர்க்க நினைத்து ஒதுக்கினாலும் அவனும் இவர்களும் விடுகிறார்கள் இல்லையே!
‘அதைச் சொல்ல நீங்கள் ஆர்? போனதும் சேந்தனைச் சந்திப்பன். அதுதான் முதல் வேலை!’ தாய் முகத்துக்கு நேரே சொல்ல வேண்டும் போலிருந்தது.
கட்டுப்படுத்திக்கொண்டு விருட்டென்று நகர்ந்துவிட்டாள். பின்னால் கலைத்து வந்தது மதிவதனியின் ஏச்சும் பேச்சும். புதிதா என்ன?
வீட்டின் பின்புறம் சென்றவள், தமக்கைக்கு அழைத்தாள். தகப்பன் கதைத்ததைச் சொன்னவள், தாயோடு கதைத்தையும் அவர் பதிலையும் சொன்னாள்.
“இதுக்கு மேல நான் என்ன செய்யிறது அக்கா, தயவு செய்து நீங்களே அவவோட கதையுங்கோ! நான் இதில செய்ய ஒண்ணும் இல்ல!” என்ற வேகத்தில் அழைப்பைத் துண்டித்திருந்தாள்.
சாரலும் திருப்பி அழைக்கவில்லை. தாய்க்கு அழைத்துக் கதைக்கிறாள் என்பது தாயின் பேச்சிலிருந்து புரிந்தது. பூங்குன்றனைத் திருமணம் செய்ததால் எப்படி எப்படியெல்லாம் தன் வாழ்க்கை பாழானது என்று பட்டியல் இட்டுக்கொண்டிருந்தார்,மதிவதனி. வயதும் அனுபவமும் கூட, சிலர் வாழ்வை மேம்படுத்த உதவுவதில்லை.
நீண்ட பெருமூச்சோடு நகர்ந்தவள், அதன் பின்னர் மினக்கடாது இலண்டன் செல்லும் அலுவல்களைப் பார்த்தாள்.
அடுத்த இரண்டாவது மாதம், மார்கழி மாத முடிவில், கடுங்குளிரிலும் பனியிலும் மூழ்கியிருந்த ‘ஹீத்ரு’ விமான நிலையத்தில் வந்திறங்கினார்கள்,வாணனும் இவளும் .
வரவேற்க ஆள் வரும் என்றிருந்தார், ஆர் ஜே ஐயா. அதற்காக, அவர் மகள் சாம்பவியும் மருமகன் யாதவும் வந்து நின்றது இவர்களுக்கு ஆச்சர்யம் தான்.
இருவருமே இலண்டனில் பிறந்து வளர்ந்தவர்கள். நன்றாகத் தமிழ் கதைத்தார்கள். இன்முகமாக வரவேற்றார்கள். அதுவே, புது இடத்தில் மகிழ்வான தொடக்கமாக இருந்தது.
முதலில், வாணன் தங்குமிடம் செல்லலாம் என்றார்கள். இடையிடை இவர்களோடும் கதை கொடுத்துக்கொண்டே வந்தவர்கள் நெருக்கமாக இருந்த அடுக்குமாடிக் குடியிருப்புப் பகுதியொன்றுக்குள் நுழைந்தார்கள். சோகைபடிந்த தோற்றத்திலிருந்த சுற்றத்தைப் பார்வையிட்டபடி இறங்கினார்கள், இருவரும்.
“இங்க இருந்து ஒரு அரை மணித்தியாலத்தில கலையகம் வந்திரலாம். பாதுகாப்பான பகுதிதான்.” சொல்லிக்கொண்டே, மின்தூக்கியில் நான்காம் மாடிக்கு அழைத்துச்சென்றார்கள்.
சிறு வீடுதான். மூன்று அறைகளில் ஆறு பேர். வாணன் தங்கவிருக்கும் அறையில் இருப்பவன் இவர்கள் சென்றபோது வேலைக்குச் சென்றிருந்தான். இரு கழிப்பறைகள், சற்றேனும் நிம்மதி தந்தது. குட்டியாக நீளவாக்கில் ஒரு சமையலறை. பார்த்ததும் சுத்தமாக இருப்பது போலிருந்தாலும் தண்ணீர்த் தொட்டி, பாவித்த பாத்திரங்களால் நிரம்பிப் போயிருந்தது. குப்பை போடும் வாளி வாயை மூட முடியாது பரிதாபமாகப் பார்த்தது.
“வாடகைக்கு அறைகள் எடுக்கிறது எண்டுறது குதிரைக் கொம்புக் கதை வாணன் . இது உங்களுக்கு…இங்க பிடிச்சிருக்குத்தானே?” வாணன் முகபாவனையைக் கவனித்த சாம்பவி கேட்டுவிட்டாள்.
வாணன் தடுமாறிப்போனான்.யாருமில்லாத தனிக்கட்டை அவன். பெரிதாக வசதிவாய்ப்புகள் இல்லாவிட்டாலும் சொந்த வீட்டில் பிறந்து வளர்ந்தவன். வெளிநாடு என்றதும் ஊரில் இருந்ததை விடவும் அதிகமாகத்தான் எண்ணியிருந்தான். அதுதான் இயற்கையும். வெளிநாட்டிலிருந்து ஊருக்கு வருபவர்கள் வாய்மொழி, வேறுவகையில் ஒருக்காலும் சிந்திக்க விடவும் இல்லை. வந்ததும் வராததுமாக நிதர்சனம் விளங்கியது. என்ன செய்யவியலும் .
வேலைக்கு என்று வந்த இடத்தில் எதுவென்றாலும் சமாளிப்போம். சமாதானம் செய்துகொள்வதைத் தவிர தற்சமயம் வேறு வழியில்லை.
“உங்களுக்கு ஆட்சேபனை ஒண்டும் இல்லையே?” அவன் யோசனையைப் பார்த்த யாதவும் வினவினான்.
“இல்ல, ஒண்ணும் பிரச்சின இல்ல.” என்றிருந்தான், வாணன்.
“நீங்க தனியாச் சமைக்கலாம். இல்லையோ வெளில சாப்பிடலாம். எது எண்டாலும் உங்கட விருப்பம்.” சொல்லி முடிக்கவில்லை, “நான் இங்க இருக்கும் மட்டுக்கும் சாப்பாடு கவினியம்மாட பொறுப்பு. வேலைக்கு வரேக்க சாப்பாட்டோட வருவன் எண்டு சத்தியம் செய்திருக்கிறா! விடியவுக்கும் இரவுக்கும் வெளில பாத்துக்கொள்ளலாம்.” பகிடிபோல் சொன்னாலும் விமானம் ஏற முதலே இதைச் சொல்லி விட்டான். அவளும் பொய் முறைப்போடு சரியென்றிருந்தாள்.
“அதும் நல்ல ஐடியா தான்” என்றவர்கள், “பேந்தென்ன? அப்ப வெளிக்கிடுவம் .”வாணனிடம் விடைபெற்றுக்கொண்டார்கள்.
அடுத்த முக்கால் மணி நேரத்தில் கவினி தங்கவுள்ள இடத்துக்கு வந்துவிட்டார்கள். இடையில் கலையகத்தையும் காட்டிவிட்டே வந்திருந்தார்கள்.
error: Alert: Content selection is disabled!!