நெஞ்சோரம் துஞ்சும் நினைவுகளே 2.2

அவனும் பிடிவாதமாக அவளைத் திருப்பவில்லை. அவன் நினைத்திருந்தால் அதைச் செய்திருக்கலாம். நினைக்க மறந்துபோனான். அப்படியே அவளைப் பிரிந்தும் போனான்.

இதற்குள் வவுனியா நூலகம் வந்திருந்தது. அதன் முன்னே இருக்கும் பூங்காவில்தான் சந்திப்பதாக ஏற்பாடு. நெஞ்சில் பெரும் படபடப்பு. ஸ்கூட்டியை அவளால் அதற்குமேல் செலுத்த முடியவில்லை. சற்று நேரத்தில் அவனைப் பார்த்துவிடப் போகிறோம் என்கிற நினைப்பே நெஞ்சைப் போட்டு அழுத்தியது.

முடியுமா அவளால்? யாரோ ஒருவனாக அவனைக் காண அவளால் இயலுமா? எந்த உணர்வுகளையும் காட்டாமல், முக்கியமாய் அவன் முன்னே அழுதுவிடாமல், அவனைச் சாதாரணமாக எதிர்கொள்ள இயலுமா? அவள் மொத்தமாக உடையும் இடமல்லவா அவன்.

வீட்டினர் சொன்னதைக் கேட்டிருக்க வேண்டுமோ? பேசாமல் அண்ணாவோடு அனுப்பியிருக்கலாமோ?

நூலகத்தின் வாசலிலேயே ஸ்கூட்டியை நிறுத்தி, மகளோடு நடந்தே உள்ளே சென்றாள்.

“இஞ்சையாம்மா அப்பா இருக்கிறார்?” ஆர்வமாக விழிகளை விரித்து வினவினாள் மிளிர்.

அவளால் வாய் திறந்து பதில் சொல்ல இயலவில்லை. பார்க்கிங்கில் ஸ்கூட்டியை நிறுத்திவிட்டுத் திரும்புகையிலேயே ஓட்டமும் நடையுமாக அவர்களை நோக்கி வந்துகொண்டிருந்தான் அவன்.

மிளிரின் தந்தை. அவளின் முன்னாள் கணவன். இளங்கோவன். அவன் முகத்தில் அவளை எதிர்பாராத அதிர்ச்சி அப்பட்டமாகத் தெரிந்தது.

மகளைக் காண ஓடி வந்தவன் அவளைக் கண்டதும் எப்படி வினையாற்றுவது என்று தெரியாது கொஞ்சம் தடுமாறினான். அவன் நடை ஒரு கணம் நின்று பின் பழையபடியானது

இந்தச் சந்திப்பை அவன் எதிர்பார்க்கவில்லையோ? அல்லது விரும்பவில்லையோ? வேண்டாம் என்று அவன் தூக்கி எறிந்த குப்பை அல்லவா அவள். வெறுத்து ஒதுக்கிய ஒன்றைத் திரும்பிப் பார்த்துவிடவே கூடாது நினைப்பது மனித இயல்புதானே. அப்படிப் பார்க்க நேர்ந்துவிட்டால் முகம் மாறுவதும் நிகழ்வதுதானே.

இலேசாக முகம் கன்றியது. கூடவே விழிகளும் கலங்கின. வந்திருக்க வேண்டாமோ என்று திரும்பவும் நினைத்தாள்.

நிரந்தரமாகப் பிரிந்தாயிற்று. அவன் யாரோவாகவும் அவள் யாரோவாகவும் மாறியாயிற்று. பிறகு எதற்கு இதெல்லாம்? அவனைப் பார்த்து என்ன செய்யப் போகிறாள்? இல்லை அவனோடு பேசி என்ன காணப் போகிறாள்?

கிடைத்த அத்தனை சந்தர்ப்பங்களையும் நழுவ விட்டுவிட்டு இனிப் பிரயோசனமே இல்லை என்கிற நிலையில் அவனைப் பார்க்க வந்திருக்கிறாள். அவளுக்கு அவளை நினைக்கக் கசப்பான முறுவல் ஒன்று கூட வந்தது.

எவ்வளவு பெரிய பைத்தியக்காரி அவள்?

“அப்பா எல்லாம்மா?” அவள் கரத்தைப் பற்றி இலேசாக இழுத்து வினவினாள் மிளிர். அவள் விழிகள் ஆனந்தத்திலும் ஆர்ப்பரிப்பிலும் மின்னின.

“ஓம் செல்லம்.” என்பதற்குள்ளேயே இவள் இதழ்கள் நடுங்கின. அவளுக்கு அவன் என்றும் அப்பாதான். ஆனால் இவளுக்கு? யாருமே இல்லை. யாராயுமே இல்லை! யாரோ ஒருவன். உயிராக வாழ்ந்த ஒருவனை யாரோ ஒருவனாகப் பார்ப்பதைப் போல் ஒரு கொடுமை இவ்வுலகில் உண்டா என்ன?

வெறுத்து ஒதுக்கியவனாக இருந்திருந்தால் இலகுவாக இருந்திருக்குமோ என்னவோ!

அவன் நெருங்க நெருங்க என்ன முயன்றும் முடியாமல் அவள் விழிகள் நிறைந்து தழும்பிவிட்டன.

பெரியவர்கள் இருவருக்கும் என்ன பேசுவது, இந்தச் சந்திப்பை எப்படி எடுத்துக்கொள்வது என்று தெரியாத நிலை. சின்னவளுக்கும் தந்தை மீது கொள்ளை கொள்ளையாகப் பாசமிருந்தாலும் நினைவு தெரிந்து முதன்முறை பார்க்க வந்திருக்கிறாள். சின்ன தயக்கமும் கூச்சமுமாக அன்னையைப் பார்த்தாள்.

அவளைக் கவனிக்கும் நிலையில் பெரியவள் இல்லை. இதற்குள் அவன் அவர்களை நெருங்கியிருந்தான்.

“நீ… நீ வருவாய் எண்டு எதிர்பாக்கேல்ல.” அவனும் கொஞ்சம் தடுமாறினான்.

அவளும்தானே எதையும் எதிர்பார்க்கவில்லை. அன்றும் சரி இன்றும் சரி! சட்டென்று திரளப் பார்த்த கண்ணீரை உள்ளுக்குள் இழுத்துக்கொண்டு அவனைப் பார்த்து முறுவலிக்க முயன்றாள்.

முடிய வேண்டுமே. மனத்துக்கு நெருக்கமானவர்களிடம் நடிக்க முடியாதாமே!

அவன் முகத்தில் முதிர்ச்சி தெரிந்தது. அணிந்திருந்த தரமான உடைகளாலும் தெளிவாக இருந்த முகத்தாலும் நான் நன்றாக வாழ்ந்துகொண்டிருக்கிறேன் என்று சொல்லிக்கொண்டிருந்தான்.

ஒரு காலத்தில் சிரிப்பை மறந்து, பேச்சை மறந்து, முகம் இறுகி, தாடியும் கலைந்த தலையும், உறக்கம் கெட்ட விழிகளுமாக இருந்தவன் கண் முன்னே வந்து போனான். அதற்குமேல் அவன் முன்னே உடையாமல் நிற்க முடியும் என்கிற நம்பிக்கையே இல்லை.

“மிளிர விடத்தான் வந்தனான். வாறன் போயிற்று.” அவனைப் பாராமல் முணுமுணுத்தவள் மகளை அவன் புறமாக நகர்த்திவிட முயல, மகள் பற்றியிருந்த அவள் கரத்தை விடவில்லை. மாறாக இன்னும் அழுத்திப் பிடித்து, “அம்மா!” என்றாள் தயக்கமும் தடுமாற்றமுமாக.

அப்போதுதான் அவளுக்கும் தகப்பனிடம் இருக்கும் தடுமாற்றத்தைக் கவனித்தாள். செய்வதறியாது தவிப்புடன் அவள் அவனைப் பார்க்க, அவன் முகத்திலும் அடி வாங்கிய உணர்வு.

“அப்பா செல்லம். மறந்திட்டீங்களா?” அவள் முன்னே அவளின் உயரத்துக்கு மண்டியிட்டு, கையோடு வாங்கி வந்த பொம்மையை அவள் கையில் கொடுத்தான்.

அவள் அதைத் தன் மார்புடன் அணைத்துக்கொள்ள, அவளைத் தன் மார்புடன் அணைத்துக்கொண்டான் இளங்கோவன். “என்ர செல்லத்துக்கு இண்டைக்குப் பிறந்தநாள் எல்லா?” உடைந்து கரகரத்த குரலில் வினவினான்.

அவன் மகளும் ஆம் என்று தலையை அசைத்தாள்.

“எப்பவும் எந்தக் குறையும் இல்லாம, சந்தோசமா இருக்கோணும் குஞ்சு!” என்று வாரியணைத்து உச்சி முகர்ந்தவனின் விழிகள் கலங்கிப் போயின. நடப்பதற்குச் சாத்தியமே இல்லாத வாழ்த்தாயிற்றே!

“நீயும் கொஞ்ச நேரம் வா, அவா என்னோட சேர்ந்த பிறகு போ.” என்றான் வாணியிடம்.

போகாதே, புறப்பட்டுவிடு என்று அறிவு சொன்னாலும் அவளுக்கு மறுக்கத் தெம்பில்லை. மிளிரும் தகப்பனின் கைகளில் இருந்தாலும் அன்னையும் வருகிறாளா என்று இவளைத்தான் பார்த்தாள்.

வேறு வழியில்லாமல் அவர்கள் இருவரையும் முன்னால் விட்டுப் பின்னால் நடந்தாள் வாணி.

error: Alert: Content selection is disabled!!