ரோசி கஜனின் இயற்கை -10 (2)

    

  “OMG!” விழிவிரித்துப் பார்த்தபடி நின்றுவிட்டாள், அஜி. முன்னே தெரியத் தொடங்கிய குதிரை லாட வடிவிலான கனேடிய நீர்விழ்ச்சியின் அழகில் சொக்கி நின்றவளிடம், “இதிலயே இப்பிடி நின்றாச் சரியா அஜி சித்தி? அங்க கிட்டப் போனீங்களோ அப்படியே நின்றிருவீங்க, இழுத்தெடுக்க வேண்டி வரும்.” என்றாள் கவி.

  “அதான் சித்தி, எத்தின தரம் வந்தாலும் அலுக்காது. ஆங் பார்த்து.” சந்தோசப்பரபரப்பில் அங்கு இங்கு பாராது நடந்த அஜியின் கையைப் பற்றியபடி நடந்தாள், இலக்கியா.

   பாதையைக் கடந்து சென்று ஃபோல்ஸை பார்த்தபடி சிறிதுநேரம் நின்றுவிட்டு, இடப்புறமாக நடந்து சென்று அமெரிக்கன் ஃபோல்ஸ் மற்றும் பிரைடல் வேல் ஃபோல்ஸ்  இரண்டையும் பார்த்துவிட்டு, “வாங்க இப்பிடியே நடந்தால் அங்க ‘ஹோர்ஸ் ஷு ஃபோல்ஸ்’ கிட்ட நிண்டு பார்க்கலாம்.”  என்ற ரதி வலப்புறமாக நகர, கும்பல் கும்பலாகப் போவதும் வருவதுமாக இருந்த சனத்திரளில் கலந்து அங்கிருந்த நடைபாதையில் நடக்கத் தொடங்கினர்.

   இதோடு மூன்றாவது தடவையாக இங்கு வருகிறாள், இலக்கியா. என்றாலும் சளைக்கவில்லை; அலுக்கவுமில்லை. தமக்கையோடும் சித்திமாருடனும் புகைப்படங்களுக்கு நின்றவள் தானும் சிலதுகளை எடுத்துக்கொண்டாள். அதுவரை மனதுள் ஆட்சி செய்த மந்தநிலை அகன்றிருந்ததில் தளர்ந்திருந்த உடலில் புத்துணர்ச்சி பூத்திருந்தது. 

  ‘இவ்விடத்தில் என்னையன்றி வேறெதிலும் சிந்தயைச் செலுத்த விடேன்’ பிடிவாதமாக நின்றாள், இயற்கை அன்னை. அவளின் வித்தையை இரசிக்கவே ஆயிரம் கண்கள் வேண்டுமென்றிருக்கையில் வேறெதையும் யோசிப்பதெப்படி?

  சற்றே முன்னால் அவர்கள் செல்வதைப்  பார்த்தபடி அப்படியே சாய்ந்திருந்து, அமெரிக்கா பக்கமிருந்து வந்துகொண்டிருந்த படகையும் சேர்த்து செல்ஃபி எடுக்க முனைகையில், சற்றும் எதிர்பாராத விதத்தில் அவள் தோளோடு கைபோட்டு அவள் தலையோடு தலையுரச கிளிக் என்று புகைப்படமெடுத்தது வேந்தனேதான்.

 கண்ணிமைப்பொழுதுதான், திடுமென்று அவன் செய்துவிட்ட செயலில்  அதிர்ந்து நின்றாளவள்; அவன் செய்கைக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் எண்ணம் கூட வரவில்லை; சலனம் தொலைத்து நின்றவளை அவனோ சீண்டலாகப் பார்த்தான். இன்னமும் நெருங்கித் தான் நின்றிருந்தான்.

  “நீ எப்பிடிடா என்னோட இப்பிடி நிண்டு ஃபோட்டோ எடுக்கலாம் எண்டெல்லாம் நீர் கேட்கவே கூடாது இலக்கியா.” நீட்டி முழங்கினான்.

 “ஏனெண்டா…நீர் தான் முதல் முதல் என்னையும் கேட்காம  ஃபோட்டோ எடுத்து அதையும் அக்காக்கு அனுப்புறன் எண்டிட்டு உம்மட நம்பருக்கே அனுப்பிட்டு…” முடிக்காது கண்களால் நகைத்தவனை, இப்போது முறைத்தாளவள். 

   விசுக்கென்று தள்ளி நின்றவள் பார்வை முன்னே செல்லும் உறவுகளில். அவர்கள் தம் சுவாரசியத்தில் இவன் கூத்தைக் காணவில்லை. இல்லையோ!

   “உங்களுக்கு என்ன விசரே! இங்க பாருங்க இதெல்லாம் என்னட்ட வேணாம்.”  விரல் நீட்டி எச்சரிக்க, அந்த விரலைப் பொத்திப் பிடித்துக் கையை கீழே இறக்கி விட்டவன், “விசர் தான்…கொஞ்ச நாளா!” கண்ணடித்தான். மறுகணமே, முகத்தில் பதற்றத்தை பூசிக்கொண்டு நின்றவளை ஆதரவோடு பார்த்தான்.

    “அவே உம்மப் பார்க்கேல்ல. பார்த்தாலும் தான் என்ன சொல்லும்?” மீண்டும்  கண்களால் நகைப்பு.

  “அவையள் நல்லா முன்னுக்குப் போய்ட்டினம், வாரும் நடந்து கொண்டே கதைப்பம்.” அவள் கரத்தைப் பற்றிக்கொண்டு நடக்கத்  தொடங்க, பட்டென்று உதறிக்கொண்டவளுக்கு  நடுக்கமெடுத்தது.

  அந்தக் கோடையிலும் அச்சுற்றமெங்கும் உடலை ஊடுருவிக் குத்தும் சிலிர்ப்போடியதென்றாலும், மனதுள் மின்னலாகப் பரவிய பயமே அதிகம் நடுங்கச் செய்தது.

    ‘அப்பாவும் இல்லாமல் வெளிக்கிட்ட பயணம்! எத்தனை நாள் கனவிது? இதில என்னால  பிரச்சனை  வரப்போகுது.  எங்க இருந்து வந்தவன் இவன்?  ஐயோ கடவுளே!’  அசுர கதியில் மனம் குழற, கண்கள் கலங்க, “இங்க பாருங்க… நீங்க  ஆர் எவரெண்டு தெரியாது. ஏன் உங்கட பெயர் கூடத் தெரியாது எனக்கு.  தயவு செஞ்சு என்ன விட்டிருங்க. உண்மையாவே உங்கட வேலையா எங்களோட வந்திருந்தா அத மட்டும் பாருங்க சரியா? அதோட  அந்த ஃபோட்டோவ டெலிட் செய்யேல்லையோ … நான்… கட்டாயம் நாதன் சித்தப்பாட்டச் சொல்லுவன்.” குரல் நடுங்க நடுங்க படபடவென்று கொட்டினாள்.

  அவன் புருவம் உயர்ந்திறங்கியது. விழிகள் நகைப்பில் சுருங்கி அவளுள் கொதிப்பை அதிகரித்தது. 

  “இப்ப உமக்கு என்ர பெயரும் பிறப்பு வளர்ப்பு சொந்தபந்தம் எண்டு  தெரியாததுதான்  பிரச்சனையா? அதைத் தெரிஞ்சிட்டா எல்லாம் ஓகே தானே?” சீண்டலாக ஆரம்பித்து, அவள் முகத்தில் கோபத்தைக் கொண்டு வந்தான். பட்டென்று எதையோ சொல்லமுயன்றவளுக்கு இடம் கொடுக்கவும் இல்லை. 

“அத நேரடியாக் கேட்க வேண்டியதுதானே? அதைவிட்டுட்டு சித்தப்பாட்டச் சொல்லுறன் எண்ட மிரட்டல் எல்லாம் வேணாம் ஓகேவா! என்னை ஆர் எண்டு கண்டதும் அண்டைக்கு போட்டில வந்தவர் இவர்தான் எண்டு சொல்லி இருக்கலாமே ஏன் சொல்லேல்ல? பிறகு, இப்ப சொல்லுறது எண்டா…சொல்லும், அந்த நேரம் பார்ப்பம்.” உனக்கு நான் ஒன்றும் சளைத்தவனல்ல என்ற மாதிரி படபடவென்று சொன்னவன், “நானும் நீரும் சேர்ந்தெடுத்த முதல் ஃபோட்டோ இது. அழிக்க மாட்டன். நீர் மட்டும் என்ர ஃபோட்டோவ வச்சிருக்கலாம் நான் வச்சிருக்க கூடாதா?” 

 நீட்டி முழங்கியவனை என்ன செய்தாலும் தகும்!  

மனதுள் மூண்டுவிட்ட எரிச்சலோடு வெடுக்கென்று பதில் சொல்லமுனைய, “உம்மட அக்கா வாறா!” என்றபடி மெல்ல நகர்ந்து நீர் வீழ்ச்சியைப் பார்க்கும் வண்ணம் திரும்பி நின்றுகொண்டானவன்.   

அதிர்ந்து நின்றாள், இலக்கியா. கவி மட்டும் சற்றே நெருங்கிவந்து இவள் விழிகளைப் பார்த்தாலே போச்சு! நிச்சயம் மாட்டுப்படுவாள். அப்படியே வேந்தன் கால்களிரண்டையும் மேலே தூக்கி டமாலென்று நீர்வீழ்ச்சியில் தள்ளிவிடும் ஆவேசம் இவளுக்கு! 

“இலக்கி அங்க நிண்டு என்னடி செய்யிற? கெதியா வாவன்.” தள்ளி நின்றபடியே அழைத்தாள், கவி. அதற்கு மேலும் நிற்க முடியாது விடுவிடுவென்று நடந்தாள், இவள்.

  “கெதியா வாம்மா, அங்க மட்டும் நடந்திட்டுத்  திருப்பிப் போகவேணுமல்லா.” ரதியும் இவளுக்காக நின்றார்.

   “ஃபோட்டோஸ்  எடுத்துக்கொண்டு நிண்டன் சித்தி…நடவுங்க.” கைபேசியில் எடுத்த புகைப்படங்களைத் தட்டும் பாவனையில் அவர்களின் முகத்தைப் பார்க்காது தவிர்த்து விட்டாள். 

   ‘ராஸ்கல்! இடியட்!’ கோபத்தோடு முணுமுணுத்தபடி நடந்தவள் சட்டென்று திரும்பினாள். அவனைக் காணவில்லை.

  ‘போய்ட்டான்.’ நிம்மதியாக உணர்ந்தாள். கவி வாறாள் என்று அவன் சொன்ன கணம் மனதுள் அவள் அதிர்ந்த அதிர்வு அவளுக்குத் தானே தெரியும். மிகப்புதியதான கள்ளத்தனம். அவளால், அவள் செய்கையை ஏற்கவும் முடியவில்லை. அதேநேரம், அவனை  அப்படியே ஒரேயடியாக வெட்டும் வகையும் தெரியவில்லை; வெட்டுமளவுக்கு போவேனா என்று வீம்புக்கு நிற்கும் உள்ளத்தை என்ன செய்வது? 

  ‘இல்ல இனிமேல்பட்டு அவன் பக்கம் பாக்கிறது இல்ல; இது சரிவராது.’ அவள் நினைத்து முடிக்கவில்லை, ‘டோய்! நான் இங்கதான் நிக்கிறன், தேடாதேயும்!  போயிட்டு வரேக்க உமக்கு விருப்பமான வைட் சொக்லேட் ஐஸ் வாங்கித் தாறன் சரியா? கெதியா போயிட்டு வாங்க.” வாட்சப்பில் குறுஞ்செய்தி.

‘காருக்க நாங்க கதைச்சது எல்லாம் கேட்டுட்டே வந்திருக்கிறான்’ மனம் சீற பின்னால் திரும்ப எத்தனித்தவள், “ஆரடி ஃபோனில? அம்மா ஆக்கள் ஆருமா?” மெசேஜ் வந்துவிழுந்த சத்தத்தில் கவி கேள்வி கேட்டதும் அந்த எண்ணத்தைக் கைவிட்டுவிட்டாள்.

   “இல்லக்கா. அது…ஃபிரெண்ட்…சுலக்ஷி…நயாகரா ஃபோட்டோஸ் அனுப்பினன், அதுக்குப்  பதில்.” பட்டென்று சொல்லிவிட்டவள், மீண்டும் திருப்பிப் பார்த்தாள்.  

   ‘விறுவிறுவென்று போய் அவன்ர கன்னத்தில ரெண்டு இழுத்தால் என்ன?’ வெகுண்டது மனம்.

    அந்தக்கோபத்தோடு, சேர்ந்துவிட்ட பதற்றமுமாகத் திரும்பி வருகையில் அப்போதுதான் பார்க்கும் பாவனையில் எதிர்கொண்டவன் இவள் புறமும் பார்க்கவில்லை. 

“என்ன எல்லாம் வடிவாப்  பார்த்தீங்களா?” ரதியிடம் தான் கேட்டான்.

 

error: Alert: Content selection is disabled!!