ரோசி கஜனின் ‘இயற்கை’ 1(2)

ஒரே தெருவில் கவினுடைய மூன்று பெரியப்பாமார் வசிக்கிறார்கள்.  ஒரு பெரியப்பா வீட்டில் கவினுடைய அப்பம்மாவும் இருக்கிறார்.

   “அப்பம்மா வீட்டில தான் அப்பாவும் நிக்கிறார். வாங்க கூட்டிக்கொண்டு போய் விடுறன்.” மகனைக் கொஞ்சியபடி தூக்க, அவனோ, திமிறி இறங்கி அப்படியே நிலத்தில் படுத்துவிட்டான்.

    “அம்மா கவினும் வாறான், கார்ல போவம்.”  கையையும் காலையும் உதைக்க, “இந்தப் பிடிவாதம் தான் வேணாம் எண்டு சொல்லியிருக்கிறன், கெதியா எழும்பலாம்.” அஜி அதட்டல் போட,  ஓடிவந்து தூக்கிவிட்டாள், இலக்கியா.

   “நீ வாடா செல்லம் அக்கா கூட்டிக்கொண்டு போறன்.” அழைத்து வந்திருந்தாள். 

    “அந்த ஆன்ட்டி மட்டும் பிடிக்கேல்லையோ சரி!” இப்படி, கதைத்தபடியே வந்து டிம் ஹொட்டனில் நீண்டிருந்த வரிசையில் தன்னையும் இணைத்துக்கொண்டாள், இலக்கியா. 

   “கவின், அம்மாட்ட வாங்க, அக்கா வாங்கிக்கொண்டு வருவா.”    தள்ளி நின்ற அஜி அழைக்க, அவனோ, ‘மாட்டன்’ என்று, பலமாக தலையாட்டியபடி தமக்கையின் கரத்தைக் கெட்டியாகப் பற்றிக்கொண்டு நின்றான்.

    “சித்தி உங்களுக்கும் எனக்கும் ஐஸ் கஃபே வாங்கிறன்.” என்று சொல்லி, மினி டோனட் என்னென்ன சுவைகளில் விருப்பமென்று கவினிடம் கேட்டுக்கொண்டே நகர்ந்தவள்,  யாரோ தன்னைப் பார்ப்பது போலுணர்ந்து பக்கவாட்டில் திரும்பிப் பார்த்தாள்.

   அங்கே, அவளுக்கருகில் போய்க்கொண்டிருந்த வரிசையில் ஒருவன் நின்றிருந்தான், இவளையே பார்த்தபடிதான். இவள் பார்த்ததும், வெகு  நிதானமாகப் பார்வையை விலக்கிவிட்டான். 

 இலக்கியாவின் நெற்றி சுருங்கியது. ‘அறிஞ்சவன் தெரிஞ்சவனோ!’ சிலவினாடிகள் யோசனையும் ஓடியது, அவன் பார்வை யோசிக்க வைத்தது. மீண்டும் பார்க்க, அவனோ, மறுபுறம் நின்ற இன்னொருவனோடு கதைத்துக்கொண்டு நின்றான். அதன் பிறகு அதைப்பற்றி யோசிக்கச் சந்தர்ப்பமில்லாது, சொல்லியிருந்தவை வரவே வாங்கிக்கொண்டு நகர்ந்தார்கள்.

  குடுகுடுவென்று நடந்த கவினுக்கு ஈடு கொடுத்து வெளியில் வந்து, சற்றுத் தள்ளியிருந்த இருக்கையிலமர்ந்து, கவின் சாப்பிடும் வரை கதைத்துக் கொண்டிருந்தார்கள். அதிகநேரம் அவர்களைக் காத்திருக்கவிடவில்லை, அவன். அவர்கள் கஃபே குடிக்க முதலே சாப்பிட்டு விட்டான். 

   “வீட்டில செய்து குடுக்கிற சாப்பாடுகள் எண்டா உள்ள போக எவ்வளவு திண்டாட்டமா இருக்கும்! இப்பப் பார், ஒரே முச்சில முடிச்சிட்டார்.” என்றபடி, மகன் வாயில் ஒட்டியிருந்த சொக்லேட்டைத்  துடைத்துவிட்ட அஜி, கைப்பையிலிருந்த தண்ணீர்ப் போத்தலையெடுத்துக் கொடுக்க, இரண்டு மிடறு விழுங்கியவன், “வாங்க போவம்…மூவிங் ஸ்டெப்ல போவம்!” காரியத்தில் கண்ணாகத் துள்ளியிறங்கினான்.

   “இங்க பாரும் கவின், போறது சரி, சொல்லுறது கேட்க வேணும். இல்லையோ வீட்ட கூட்டிக்கொண்டு போயிருவன். இனிமேல் எங்கயும் கூட்டிக்கொண்டு வரவும் மாட்டன். விளங்குதோ!” பொய்க் கோபத்தோடு அதட்டினாள், இலக்கியா. சிறுவன் முகம் சுருங்கிப் போயிற்று! மறுநொடியே, பற்றியிருந்த அவள் கையை உதறி விடுவித்துக்கொண்டு தாயின் கரத்தைப் பற்றினான், முறைப்போடு!

   “பாருங்கவன்  சித்தி, பெரிய மனுசனுக்குக் கோபம் எல்லாம் வருது!” என்றபடி, அவனைக் கட்டிப்பிடித்துத் தூக்கி கன்னத்தில் அழுந்தக் கொஞ்சினாள்.

   “அக்காண்ட செல்லமெல்லா! ஒண்டு சொன்னோன்ன இப்பிடிக் கோவிக்கிறதே! ம்ம்…அப்ப  ஓடின வேகத்தில படியில் விழுந்திருந்தா உங்கட அப்பா அக்காக்கு நல்ல அடி தந்திருப்பார் தெரியுமா?”  அழுவது போலச்  சொல்ல,  தமக்கையின் கன்னத்தில்   பிஞ்சுக் கரமிரண்டையும் வைத்து அழுத்தினான், கவின்.

 “கவின் அச்சாப்பிள்ள!” கிசுகிசுப்பாக, விழிகளில் நகைப்போடு சொல்லவும் செய்தான். 

   “டேய் கள்ளன்! சித்தி, இவன் இப்பிடியே எல்லாரையும் மயக்கப் போறான் பாருங்க!” என்றபடி அவனைக் கொஞ்சிவிட்டு இறக்கிவிடும் தருணத்தில், அவர்களைக் கடந்து சென்றான், அவன், சற்றுமுன் டிம்ஹொட்டனில் கண்டவன் தான். இவர்களைப்  பார்த்தபடியே நண்பனோடு கதைத்துக்கொண்டு சென்றவனை இலக்கியா கவனிக்கவில்லை. நல்ல சனநடமாட்டமும் தான். யாரும் யாரையும் கவனித்துக் கொண்டிருக்கவில்லை. அவரவருக்கு அவரவர் வேலை. 

   “அங்க எல்லாம் இப்பிடி நம்மட சனத்தக் காணேலாது. இருக்கீனம் தான்,  இப்பிடி இல்ல. இங்க ஊர் போலவே இருக்கு!” வியந்தபடி,  “அம்மாவோட வாங்க கவின்.” மகன் கரத்தைப் பற்ற முயன்றாள், அஜி. அவனோ, பிடிவாதமாக தமக்கையின் கரத்தைத் பிடித்துக்கொண்டு நடந்தான்.

   “வாங்க சித்தி, முதல் டொமிக்குப்  போயிட்டு வருவம். அங்க அந்த போர்டில எந்த ஃபிளோரில டொமி இருக்கு எண்டு பார்ப்பம்.” என்றபடி, சற்றுத் தள்ளியிருந்த அக்கடைத்தொகுதியின் வரைபடம் நோக்கி நடந்தாள், இலக்கியா.

    அதை நெருங்கிப் பார்க்க முடியாதவாறு சிலர் வளைத்துக்கொண்டு நிற்க, பின்னால் நின்றே பார்த்தவளின் பிடியிலிருந்து தன் கரத்தை விடுவிக்க முனைந்தான் சிறுவன்.

  “சித்தி, இவனப் பிடியுங்கோ, நான் பார்த்திட்டு வாறன்.” சொல்லிவிட்டு எட்டிப்பார்த்தவள், “நாம மேல போக வேணும் சித்தி. அங்க g7 ல டொமி இருக்கு.” சொல்லிக்கொண்டே, “வாங்க போவம்.” அருகில் அஜி நிற்கிறாளென்று நினைத்துக் கையைப் பிடித்திழுக்க…

   “அய்யோ! அய்யய்யோ!” பட்டென்று கரத்தை விலக்கிவிட்டாலும்  அவள் முகம் எக்கச்சக்கமாகக் கோணியிருந்தது. நாக்கைக் கடித்தபடி மூக்கும் முழியும் சுருங்கிக் கிடக்கத் தவிப்போடு, “சொறி சொறி…நான் சித்தி எண்டு… சொறி” என்றுவிட்டு ஓட்டமாக நகர்ந்தவளை, உதடுகளில் வந்தொட்டிய மென்முறுவலோடு பார்த்திருந்தான் அவன், வேந்தன்.

  “கவின் இனி அம்மாட்ட நல்லா வாங்குவ சொல்லீட்டன்.” மகனோடு மல்லுக்கட்டிக்கொண்டு நின்ற அஜியின் அருகில் வந்த இலக்கியா, “வாங்க சித்தி போவம், டொமி மேல இருக்கு.” என்றவளின் மொத்தப் பதற்றமும் சிறுவனில் பாய்ந்தது.

  “டேய் கவின், இனிமேல் அக்கா எங்கயும் உன்னக் கூட்டிக்கொண்டு வரமாட்டன்.” கை நீட்டி எச்சரித்தாள்.

   அவனோ, “மூவிங் ஸ்டெப்ல போகப் போறன்.” இராகம் இழுத்தான்.

   “சரி சரி போவம் வா!”  அவனை அஜியிடமிருந்து விலக்கித்  தான் பிடித்துக்கொண்டே, “வாங்க சித்தி…” முன்னால் நடந்தவள் தப்பித் தவறியும் கடைத்தொகுதி வரைபடமிருந்த இடத்தைப் பார்க்கவேயில்லை. இருந்தபோதும், மனத்திலிருந்த சிறு தவிப்போ பதற்றமோ என்னவோ ஒன்று பாரேன் என்றுதான் சொல்லிற்று! ஆனாலும் அவள் திரும்பவில்லை. மனம் மட்டும் ‘ஆரவன்?(யாரிவன்)’ என்றதில் நின்றது.

   முதல் எப்போதும் எங்குமே சந்தித்த நினைவும் இல்லையே! கொஞ்சம் முதல் டிம்ஹொட்டனில் தான் கண்டாள். ‘அதென்ன பார்வை பார்த்துக்கொண்டு நின்றவன்? நான் பார்த்தோன்ன, பார்க்காத பாவனையில திரும்பீட்டான். ஒருவேள, கவின் செய்த கூத்தில ஒரு ஆர்வத்திலயும் பார்த்திருக்கலாம் தான். போனவே வந்தவே எல்லாம் சிரிச்சிட்டுப் போகேல்லையா? அப்பிடி!

  சரி, அப்பிடியே  எடுத்தாலும் அந்த ஃப்ளோர் மேப் அடியில அவ்வளவு கிட்ட (பக்கத்தில) வந்து நிக்கப் போய்த் தானே சித்தி எண்டு நினைச்சுக் கையப் பிடிச்சன்? பிறகும் ‘சொறி’ எண்டு சொல்லுறன் அவன் கண்ணால சிரிக்கிறான்.’ இந்த எண்ணமோட,  ‘உண்மையாவே  அவன்ட கண்களில சிரிப்பு இருந்ததா?’ அருகில் கண்ட அவன் விழிகளை மனதுள் கொண்டுவந்து நிறுத்தி ஆராய முயன்றவளை என்ன செய்வதாம்? 

 ‘ஷொப்பிங் செய்ய வந்த,  பல்லாயிரக் கணக்கில மக்கள் பிழங்கிற ஒரு இடத்தில, ஒருத்தன ஒண்டுக்கு நாலு தடவைகள் கண்டிட்டா…இப்பிடியா அவனப் பற்றி நினைச்சுக் கொண்டிருக்கிறது?’ தலையை உலுக்கிக்கொண்டாள், இலக்கியா.

   “இலக்கிக்கா முதல் மூவிங் ஸ்டெப்…ப்ளீஸ் அக்கா!”  படிகளின் பக்கம் இழுத்த சகோதரனின் இழுவையில் சென்று, மேலும் கீழுமாக நான்கு தடவைகள் ஊர்வலம் போய்வந்ததில் அப்புதியவன் பற்றிய நினைவும் நகர்ந்து போயிருந்தது. தன் குறும்புத்தனத்தாலும் துடியாட்டத்தாலும் நகர்ந்து செல்ல வைத்திருந்தான், கவின்.

error: Alert: Content selection is disabled!!