ரோசி கஜனின் இயற்கை – 26 – 2

“ஓமோம், அதுக்குள்ள…” சொல்லிக்கொண்டே அந்தச் சரிவில் சற்றே இறங்கி ஒரு பாறையில் இருந்தபடி, “இப்படியே இன்னும் ஒரு நாலைந்து தட்டி விடுங்கோ அண்ணா!” அவன் தொடக்க, அடுத்து கவி, இலக்கியா, ராஜியின் பிள்ளைகள், அஜி மாறன் சோடி என்று எல்லோரும் அப்படியும் எடுத்துக்கொள்ள, கவின் தானும் என்று அழவே தொடங்கியிருந்தான்.

“டோய்! அப்படியே உருண்டு கீழ போனா பிறகு கதை சரி!” வெருட்டினான், ஆரூரன்.

“சரி சரி ஒரு செல்ஃபி எடுத்திட்டு போவம் வாங்க.  கவின, அந்தப் பாறையில நிக்க வைக்கிறன் சரியா? அப்ப எல்லாரையும் விட கவின் தான் உயரம்!” தூக்கிச் சென்று ‘எஸ்ட்ஸ் பார்க்’ கல்லுக்கு முன்னால் உயரமான கல்லில் அவனை இருத்திப் பிடித்துக்கொண்டான், வேந்தன். மற்றவர்களும் நிற்க, ஆரூரன் செல்ஃபியை கிளிக்கிக் கொண்டான். எடுத்துமுடிய, கவினைத்   தூக்கிக்கொண்டு நகர்ந்தவன் அப்போதுதான்  அருகில் நின்றுவிட்டு விலகி நடந்த இலக்கியாவைக் கண்டான்.  உதடுகளில் முறுவலொட்டிக்கொண்டது. மனம் சட்டென்று இலேசாக வாகனத்தை எடுத்தவன் ‘எஸ்டஸ் பார்க்’ நோக்கிச் செலுத்தினான்.

“இப்ப நாம போகப் போறதும் ‘ரொக்கி மவுன்டன்’ல ஒரு பகுதிதான் என்ன?” சந்தேகம் கேட்டாள் அஜி.

“இல்ல, ரொக்கி…” வேந்தனிடமிருந்தே முதல் வார்த்தை வந்து விழுந்தது. அவனைத் தொடரவிடாது, “எக்ஸ்பர்ட் சொல்லத் தொடங்கிட்டார், எல்லாரும் கவனமாக் கேளுங்கோ!” தாழ்ந்த குரலில் விழிகள் குறும்போடு நகைக்கச் சொல்லியே விட்டாள், இலக்கியா.

“நீ என்னட்ட இனி வாங்கத்தான் போறாய் மா.” அருகிலிருந்த நாதன். என்றாலுமே அவருக்குமே சட்டென்று முறுவல் அரும்பிற்று. அவருக்கு என்றில்லை அனைவர் முகத்திலும் சிரிப்பு. ரிவர் வியூ மிரர் புண்ணியத்தால் அதைப் பார்த்த வேந்தன் பக்கவாட்டில் திரும்பி இலக்கியாவைப் பார்த்தவன் ஒற்றை விரலால் கவனம் காட்டினான். அதை எல்லோருமே அவதானித்தார்கள். இலக்கியாவினுள் மெல்லிதாக தடுமாற்றமும் அவஸ்தையும்.

“அதுதான் தம்பி, இப்பத்தைய பிள்ளைகளுக்கு எல்லாத்துக்கும் பகிடி சேட்டை. நீங்க பெரிசா எடுக்காதீங்க!” சமாளிப்பாகச் சொன்னார் நாதன்.

“ஏனெண்டா அண்ணா இலக்கிக்கா ஒரு சின்னபிள்ள.” ஆரூரன் முடித்துவிட்டு, ஹா..ஹா…பெரிதாகச் சிரித்து இலக்கியாவின் முறைப்பை வாங்கிக் கட்டிக்கொண்டான்.

“அவள் எப்பவும் அப்பிடித்தான் தம்பி, கலகலப்பு. அதும் நீங்க எங்கட வீட்டு ஆள் போல பழக பிள்ளைகளுக்குச் சும்மா தெரியாதா, குறையா எடுகாதீங்க.” என்றுவிட்டு, “சரி நீங்க சொல்லவந்ததைச் சொல்லுங்கோ!” என்றார், சுகுணா.

“அதான், இவையள் கூகிள பார்த்துச் சொல்லுறத வேந்தன் சும்மாவே சொல்லுறார் எண்ட எரிச்சல்  எல்லாருக்கும்.” அஜியும் அவன் பக்கம் சேர, “சித்தி வேணாம்.” என்ற கவி, “சந்தடி சாக்கில நாதன் சித்தப்பா வேந்தனக் கிழவன் ஆக்கிட்டார்.” கேலியாகச் சொல்லி நாதனின் முறைப்பை, தான் வாங்கிக்கொண்டாள். 

“சுத்தி சுத்தி தம்பிய பகிடி பண்ணியே பொழுது போகுது இவைக்கு!” என்ற ஆருரனின் தாய், “இவையிட கதய விட்டுட்டு நீங்க சொல்ல வந்ததைச் சொல்லுங்கோ.” என்றதும் முறுவலோடு சொல்லத்தொடங்கினான், அவன்.

“ரொக்கி மவுன்டன் ஐஞ்சு பார்வையாளர் மையங்களா இருக்கு. ஒண்டு நஷனல் ஹிஸ்டோரிக் லாண்ட்மார்க், ‘பீவர் மேடோஸ் பார்வையார் மையப்பகுதி’ (Beaver Meadows Visitor Center); அடுத்தது  தேசிய வனப்பகுதிகள்  வடக்கு மற்றும் கிழக்கில, ‘ரோசவெல்ட் தேசிய வனப்பகுதி’(Roosevelt National Forest); வடக்கு மற்றும் மேற்கில, ‘ரவ்ட் தேசிய வனப்பகுதி’ (Routt National Forest); மேற்கு மற்றும் தெற்கில, ‘அரபஹோ தேசியவனப்பகுதி’ (Arapaho National Forest ); நேரே தெற்கில, ‘இந்தியன் பீக்ஸ் வனப்பகுதி’ (Indian Peaks Wilderness) என்றிருக்கு.”

“இதை நாங்களும் கூகிளில பார்த்திட்டம்.” அடக்கப்பட்ட முறுவலோடு சொன்னாள் இலக்கியா.

அவன் கன்னம் அசைந்ததில் முறுவலிக்கிறான் என்றறிந்து கொண்டாள். தொடர்ந்தான் அவன்.  

“இப்ப நாம போற ‘எஸ்டஸ் பார்க்’ ரொக்கி மவுன்ட்டன் நஷனல் பார்க் மேற்கு  வாசலுக்குப் பக்கத்தில இருக்கு.” என்றவன், “யுனி ல படிக்கேக்க ஃப்ரெண்ட்சோட வந்து  ஒரு கிழமை தங்கியிருந்தம். அப்ப ஐஞ்சு மையங்களுக்கும் போனம். அதோட பட்டன் ரொக் டாமுக்கும் போனம்.” என்றவன், 

“மலைகள், லேக்குகள், இங்க நிலவுற ஒவ்வொரு காலநிலைக்கும் ஏற்ப வாழுற காட்டு விலங்குகள் எண்டு மட்டுமில்ல பசிய காடுகள், காட்டு மலர்களோடு சேர்த்து, பாலைவனத் தாவரங்கள், அற்புதமான பூக்கள் எண்டு  மலைகள் தொடங்கி தன்ரா (Tundra) வரை எல்லாமே உள்ள இடம் இது!” அவன் சொன்ன விதமே எவ்வளவு இரசித்திருகிறான் என்று தெரிந்தது.

“அப்ப நாங்களும் இன்னொருக்கா வரவேணும், எல்லா இடமும் போக வேணும்.” என்றான், ஆரூரன்.

“அதுக்கென்ன, இளம்பிள்ளைகள், உங்களுக்கு காலநேரமா இல்ல? வருங்காலத்தில உங்கட மனிசி பிள்ளைகளோட வாங்கோவன்.” சுகுணா சொல்ல, “பெரியம்மா, அதுக்கு ஏன் மனிசியும் பிள்ளைகளும்! இந்தா வேந்தன் அண்ணா ஃப்ரெண்ட்சோட வரேல்லையா? அப்பிடி நாங்களும் வாறதுதான்.” ஆரூரன் சொல்ல, “சித்தி உங்கட மகன் பெரிசா அடிபோடுறான் கவனம்.” ரதியிடம் சொன்னாள்  கவி.

“ஓமோம் விளங்குது. ஃப்ரெண்ட்சோட வெளிக்கிடுவார் வெளிக்கிடுவார்.” ரதி சொன்னவிதமே, ‘அதுக்கெல்லாம் உன்ன ஆரு விடுறதாம்?’ என்றதில், தாயை முறைத்தான்,  ஆரூரன்.

கலகலத்துக்கொண்டே வந்ததில் விரைவில் ‘எஸ்ட்ஸ் பார்க்’ வந்தடைந்தவர்கள், “இப்பிடியே ஒரு சுத்துச் சுத்திப் பார்த்திட்டுப் பார்க் பண்ணுவமே!” வேந்தன் சொன்னதை ஆமோதித்தார்கள்.

“ஏன்  பட்டன் ரொக் டாமில நடந்து களைச்சிட்டிங்க போல! எங்களுக்கு இங்கயும் நடக்க விட்டா நடப்பம் சரியோ!” இலக்கியாவின் குரலுக்குத் திரும்பாது நகைத்தான். இன்று முழுநாளும் சீண்டிக் கொண்டேதானே இருக்கிறாள்.

“நல்லா நடந்திச்சீனம் தம்பி, எல்லாம் வாய்தான்.” சுகுணா சொல்ல, “அம்மா! என்ன நீங்க? எங்களுக்கு ஒரு பிரச்சனையும் இல்ல உங்களுக்குத் தான் நடக்கக் கஷ்டம் சரியோ!” இடையிட்டாள், கவி.

“சரி சரி, எல்லாரும் சூரிகள், நாங்கதான் வயசுபோன சனங்கள். காரிலயே பார்ப்பம்.” நாதன் சொன்ன விதமே கடியாக இருக்க, “அப்பா!” முறைத்தான் ஆரூரன்.

“எங்களைத்தானே கிழடுகள் என்றன்.” 

“ஏற்றுக்கொண்டாச் சரிதான்.” மீண்டும் கவி.

இப்படிக் கலகலத்தாலும் எல்லார் பார்வையும் வெளிப்புறத்தில் தான். ஒவ்வொரு இடமும் வெவ்வேறு விதமான தோற்றத்தில் வசிகரித்து நின்றால் பார்வைகள் அங்குதானே போகும்!

‘தாம்சன் நதி’ இனிய சலசலப்பில் ஓடிக்கொண்டிருந்தது. இருகரைகளையும் நிறைத்திருந்த சிறிதும் பெரிதுமான  வழுவழுப்பாறைகள் நதிக்கு மிகப்பொருத்தமான ஆரம்போன்று அழகு கொடுத்தன. நதிக்கரையோரமுள்ள விடுமுறை விடுதிகள் நிறைந்து வழிந்தன. பெரியோர் இளையோர் சிறியோர் என்ற வயது வேறுபாடின்றி  ஆர்ப்பரித்தவர்களால் அவ்விடமே பூரித்துக் கிடந்தது.

அப்படியே சிறிது தூரம் சென்றுவிட்டுத் திரும்பி வந்தவர்கள் காரை நிறுத்திவிட்டு கடைத்தெருநோக்கி நடந்தார்கள்.

“இப்பவே மூண்டு தாண்டிட்டு.” என்றாள் அஜி.

“சித்திக்கு இருட்டிட்டா வேந்தன் ஒழுங்கா கார் ஓட்டுவாரா எண்ட சந்தேகம்.” இடையிட்டது இலக்கியாவின் கேலிக்குரல்.

“உம்ம!” முறைத்தாள், அஜி. 

திரும்பிப் பார்த்தான் வேந்தன். முறைப்பது போலிருந்தாலும் அவள் மீது பார்வை படும் போதெல்லாம் அவன் விழிகள் அவளில் தங்கி நிற்கவே பெரிதும் விரும்பின, அடம் பிடித்தன. 

“அப்ப ஒண்டு செய்வம், திரும்பிப் போகேக்க இலக்கியாவே கார் ஓடட்டும்.” என்று சொல்லிவிட்டான்.

“நோ நோ, வேணாம்.” இளையவர்கள் கூவினார்கள். 

“தாயே! நான் இங்கயே எங்கயும் நிண்டுட்டுக் கனடா போறன்.” அஜி.

“ஹா..ஹா…” கவி பெரிதாகச் சிரிக்க, இலக்கியாவின் முகம் சிவந்து போயிற்று.

“ஹலோ! நான் என்ன ஓடமாட்டன் எண்டு நினைக்கிறீங்களோ? சரி, போகேக்க நானே ஓடுறன்.” படபடத்தாள்.

“சும்மா இரு இலக்கி!” சுகுணா.

“ஓகே ஓகே, நீங்க ஓடுவீங்க தான், நான் சும்மா சொன்னன்.” கடிக்குரலில் இழுத்தவன், “இந்த இடத்தில நிண்டு ஃபோட்டோ எடுக்கேல்லையா?” கதையை மாற்றிவிட்டான்.

சிறு நீர்த்தடாகத்தோடு பெரிய பாறைகள் கொண்ட கற்குன்றொன்று, உச்சியில் கழுகொன்று பறந்துகொண்டிருக்க அமைத்திருந்தார்கள். புகைப்படமெடுக்க அருமையான இடம்தான். அதன் பிறகு சிறு பொழுது, கழுகைத் தொட்டுவிடும்படி ஏறி நின்று புகைப்படங்களை எடுப்பதில் கழிந்தது. மறக்காது எல்லோரும் நின்றொரு செல்ஃபியும்தான்.

மக்கள் அதிக நடமாட்டமாக இருந்த தெருக்களில்  இருபுறமும் கடைகளும்  நிறைந்தே இருந்தன. நீட்டுக்கும் ஒரு ஒரு கடைகளுள்ளும் புகுந்து புகுந்து சுற்றத்தையும் பார்த்தபடி நடக்கத் தொடங்கினார்கள்.

“அப்ப ஒரு ஐஸ் குடிப்பமே!” ஆரூரன் கேட்க, “சரி அப்ப வாங்குங்க!” பாதையோரமாக மரநிழலில் போடப்பட்டிருந்த கல்லிருக்கையில் அமர்ந்துவிட்டார், நாதன். அவரைத் தொடர்ந்து பெரியவர்கள் அமர, கவி தலைமையில் இளையவர்கள் ஐஸ் வாங்கவென்று உள்ளே சென்றார்கள்.

error: Alert: Content selection is disabled!!