ரோசி கஜனின் இயற்கை – 27 -3

‘ச்சே இலக்கியா இலக்கியா இலக்கியா!’ படபடவென்று தன்னையே தான் கடிந்துகொண்டாள்.

’இவர் அப்பிடி வந்து உரிமையோட கதைக்கப்போய்  நானும் லூசி வேல பார்த்திட்டனே’ மனதில் திண்டாடிவிட்டாள். அடுத்த நொடியே, ‘அது என்னையும் அறியாமல் பிடிச்சது. அதில ஆர் நிண்டாலும் பிடிச்சுத்தானே இருப்பன். இப்ப இதுக்கு ஏன் பெரிசா நாடகம் போட்டு விசயத்தப் பெரிசாக்க வேணும்?’ மனம் முணுமுணுத்தது.

 மறுகணம், “செக்! உடம்பெல்லாம் ஏறினது போலக் கிடக்கு! அதுக்க உங்களுக்குச் சிரிப்போ! தாங்கோ நானே கழுவிறன்.” அவன் கரத்திலிருந்த மற்றைய போத்தலைப் பிடிங்கி எடுத்தவள், “அவ்வளவு பேருக்கும் நடுவில நிண்டுகொண்டு பார்க்கிற பார்வையை! ஆளுக்கு துணிவு கூடிட்டு தம்பி இது நல்லதுக்கில்ல.’ தொடர்ந்து  முணுமுணுத்தபடி, போட்டிருந்த முக்கால் பான்ட்டை முழங்காலுக்குச் சுருட்டி விட்டுவிட்டு மீண்டும் நன்றாகக் கழுவினாள்.

“ஓடி வார வேகத்தில காலில கிடந்த செருப்பு எங்கயோ பறந்திருச்சே!” சுற்றி விழிகளைச் சுழற்றியவள், “அம்மோய்… அந்தா உங்களுக்குப் பின்னால கிடக்கு அச்சாப்பிள்ள போல இப்பிடி எடுத்துப் போட்டு விடுங்கோ!” கேட்கவும் செய்தாள்.

வேந்தனின் பார்வை அவள் முகத்தில் தான், உதடுகளில் உறைந்த முறுவலோடு! எவ்வளவு அழகாகச் சமாளித்தாள்! வாய்விட்டுச் சிரிக்க வேண்டும் போலிருந்தது, உண்மையில்  திண்டாடிப்போனான் தான்.  அவனைக் காப்பாற்றும் விதமாக அழைத்தார், அவன் அன்னை.

“அம்மா தான், கதைச்சிட்டு வாறன்.” நகர்ந்துவிட்டான். 

“அக்கா! செருப்பு…” ஒன்று ஒன்றாகத் தூக்கி அவளருகில் போட்ட கவின், ஓடிப்போய் தள்ளியே நின்றுகொண்டான். பூச்சியைப் பார்த்து பயந்துவிட்டான்.

என்னவோ ஏதோவென்று பயந்த பெரியவர்களும் முறைப்போடுதான் நின்றுகொண்டிருந்தார்கள்.

“ஓ கடவுளே! இப்ப என்ன நடந்திட்டு எண்டு முறைக்கிறீங்க? எல்லாரும் தானே ஓடி வந்தம். முதல் இறங்கினதால நாங்க மாட்டினம் இல்லையோ மற்றவை.” சமாளித்தாள், இலக்கியா.

“என்னதான் சொல்லு, இறங்கியும் இறங்காமல் இப்பிடி தலைதெறிக்க ஓடிவர இப்ப என்ன அவசரம்?”

“ஓம், நீயும் ஆருரனும் ஓடினதாலதான் சின்னப்பிள்ளைகளும் ஓடிவந்தவை பிள்ள, எத்தின தரம் சொல்லியாச்சு. அப்பா உங்கள நம்பியல்லா விட்டவர்?”

“அம்மா …இப்பத்தானே ஒண்டும் நடக்கேல்லயே!” 

“அதைத்தான் சொல்லுறம், ஒண்டு கிடக்க ஒண்டு ஆகியிருந்தா? வேற ஏதாவது விசப்பூச்சியா இருந்திருக்க!” கடிந்து கொண்டார், நாதன். 

“சித்தப்பா! இப்பிடி இருக்கும் எண்டு நான் என்ன சாத்திரமா பார்த்தன்? எல்லாம் தனக்குத் தெரியும் எண்டு அடிச்சு விளாசிற கூகிள் இதையும் முதலே  சொல்லியிருக்கலாமே!” என்ற வேகத்தில், “இன்னொருக்கா வடிவாக் கழுவ வேணும். கழுவிட்டு ஓடிவாறன்.”  காரை நோக்கி ஓட,  “பாருங்க, தான் அந்தரப்பட்டு வந்திட்டு என்ன சொல்லிப்போட்டுப் போறாள் எண்டு! முதல், ஒருக்கா கதைக்கிறது வேற, எந்தநேரமும் கூகிள் கூகிள் எண்டு என்ன இதம்மா! இவள்ட சேட்டைக்கு அளவில்லாமல் போகுது.”  முறைப்போடு முணுமுணுத்தாள், கவி.

“அவள் பகிடிக்கம்மா.” என்ற சுகுணா, “போனவள்  என்ன செய்யிறாள் எண்டு பார்த்திட்டு வாறன்.” நகர்ந்தார்.

“நல்ல பகிடிதான்.” புறுபுறுத்தாள், கவி.

“இன்னும் மிச்சம் இருக்கிற நாட்கள் கவனமாப்  போய் இந்தப் பிரயாணத்த முடிக்க வேணும். அதுக்குப் பிறகு அண்ணா வந்திருவார். அவராச்சு நீங்களாச்சு!” நாதன் சொல்ல, “சரி சரி விடுங்க, வேணுமெண்டா செய்தவை? இல்லையே! அவள் சொல்லுறதும் சரிதானே, பிள்ளைகள் ஆசையா ஓடி வந்தவே இதுவும் கருப்பு மணல் போலத்தான் இருக்கு.” சமாதானம் செய்தான், மாறன்.

“ இப்பிடி இருக்கும் எண்டு எங்கயோ பார்த்ததா தம்பி சொல்லி வாய் மூடேல்ல,  இங்க சொல்லுவம் எண்டா இறங்கிட்டினம்.” என்றார் நாதன். 

“சரி விடுங்க, வாங்க இப்பிடியே கரையால நடப்பம். பார்த்துத் தண்ணிக்க இறங்கலாம்.” மாறன் கவினோடு நடக்க, கொஞ்சத் தூரம் போய்விட்டு “அம்மாவையள பார்த்திட்டு வாறன்.” திரும்பிவிட்டாள் கவி.

மேலும் இரு தண்ணீர் போத்தல்களை முடித்து ஒருவாறு கால்களைக் கழுவியிருந்தாள், இலக்கியா. சும்மாவும் இல்லை, சோப்புப்போட்டு அவள் கழுவிய விதத்தைப் பார்த்து அடக்கமுடியாத சிரிப்போடு தாயோடு கதைத்துக்கொண்டிருந்தான் வேந்தன்.

“என்னம்மா இலக்கி இதெல்லாம்? உன்ன விட சின்னவளப் பார், ஒரு போத்தலில கழுவிப்போட்டு அங்க ஓடித் திரியிறாள்.” என்றபடி வந்தார் சுகுணா. 

“மா! சும்மா ஆரும் காலைக் கழுவிவினமோ! அவள விட எனக்குத்தான் நிறைய ஏறிச்சு. அவள் எனக்குப் பின்னால வந்து ஒரு கால்தான் வச்சாள் எண்டு நினைக்கிறன், நான் கத்தினதும் பின்னுக்குப் போயிட்டாள்.” 

அப்போதும் பூச்சி ஊர்ந்த நினைவில் அருவருப்பில் முகம் கோணியது. அப்போதுதான் வேந்தன் தன்னைப் பார்த்து நகைத்தபடி நிற்பதையும் உணர்ந்தாளவள்.

“இவருக்கு….இருக்கு இண்டைக்கு!” முணுமுணுப்போடு, வெளியில் எடுத்திருந்த டொயிலட் பையை உள்ளே வைத்துவிட்டு, “மா நீங்க நடக்கேல்லையோ?” கேட்டபடி, மீண்டும் வேந்தனை நோக்க, அவனிடமிருந்து கைபேசியை வாங்கிக் கொண்டிருந்தாள், கவி. 

“இவள் எங்க இங்க நிக்கிறாள்?”

“தண்ணி ஏதாவது எடுக்க வந்தாவோ! வேந்தனிட அம்மாவோட கதைக்க வாங்கிறா போல!” என்றபடி, ஒருபோத்தல் நீரைக் கையில் எடுத்துகொண்டு,  “காரை லொக் பண்ணலாம்.” வேந்தனுக்குக் கேட்கும் வகையில் சத்தமாகச் சொல்லிவிட்டு,  “வாங்க அக்காவையும் கூட்டிக்கொண்டு போவம். சித்தப்பா ஆக்கள் அப்பிடியே நடக்கினம் போல!” தாயோடு சேர்ந்து நடந்தவள் மனதில் வேந்தனின் அன்னையோடு கதைத்துவிடும் ஆர்வமும் இருந்தது.

 இவர்கள் நெருங்க, ஒற்றைப் புருவம் உயர்த்திக் கிண்டல் பார்வை பார்த்தவன் சீண்டிவிட, “பெரிசா எல்லாம் தனக்குத்தான் தெரியும் எண்டு அலட்டுற உங்களுக்கு இந்த இடத்தில இப்பிடி இருக்குமெண்டு தெரியாதா என்ன? வேணுமெண்டு எங்கள இப்பிடிச்  சரியில்லாத  இடமாப் பார்த்து இறக்கி விட்டிருக்கிறீங்க என்ன? யாழ் ட்ரவல்சில சொல்லி வேலைய விட்டுத் தூக்கப் போறன் பாருங்க!” படபடவென்று சொன்னபடி  சென்றாலும், அவள் கண்களில் இருந்த சீண்டல் அவனைத் தாக்கி, குறும்பாகவே பதில் சொல்லிவிடும் முனைப்பை ஏற்படுத்தியது.

அதனிடையில், மிகுந்த கலகலப்போடு அவன் தாயோடு கதைத்துக்கொண்டு நின்ற கவிக்குத்தான் தங்கையின் வார்த்தைகள் நாரசரமாக இருந்தன. ஏனோ தங்கையின் செய்கை மிகவுமே எரிச்சல் கொள்ள வைத்தது. அதோடு, வேந்தனின் தாய் வேற, “என்ன நடந்திட்டம்மா? அது ஆர்? உங்களிண்ட தங்கச்சியோ! வேந்தனுக்கோ சொல்லுறா?” என்று வேறு கேட்டாரா? கவிக்குள் எரிச்சல் முளைவிட்டு வளரத் தொடங்கியே விட்டது.

“அது ஒண்ணும் இல்ல ஆன்ட்டி, தங்கச்சிதான், பகிடிக்கு. நீங்க வேந்தனோட கதையுங்கோ, நாம பிறகு கதைப்பம் என்ன.” என்றுவிட்டு, அவன் கையில் கைபேசியைத் திணித்துவிட்டு ஓரெட்டில் தங்கையருகில் சென்றிருந்தவள், “உனக்கு என்ன விசராடி?!” சொல்லிக்கொண்டே பட்டென்று ஒரு குத்து. அதுவும் இலக்கியாவின் தோள்ப்பட்டையில்.

“அக்கா!” விண்ணென்று இறங்கிய வலியில் கண்ணீர் திரண்டு முத்தென உருள, கண்ணிமைப்பொழுதில் கன்றிப்போன முகத்தோடு,  தோள் பட்டையைப் பிடித்தபடி வேந்தனைத்தான் பார்த்தாள், இலக்கியா.

கவியின் கோபத்தின் காரணம் புரியாது அவனுமே திகைத்துப் போனான்.

“ஏய் கவி இது என்ன பழக்கம், சின்னப்பிள்ளைகள் போல?” சுகுணா கண்டிக்கவும், “அம்மா நான் இரவுக்கு எடுக்கிறன்.” தாயிடம் சொல்லிவிட்டு  கைபேசியை வைக்க முனைய, “பிரச்சின ஒண்டுமில்லையேய்யா?” கதைத்தவற்றைக் கேட்டவர் வினவ, “இல்ல இல்ல, இனி வெளிக்கிடவும் வேணும்மா, இரவு எடுக்கிறன்.” என்று வைத்துவிட்டு, என்ன செய்வதென்று தெரியாது நின்றானவன்.

error: Alert: Content selection is disabled!!