10 – 3

கயல், அவள் நெஞ்சோடு அணைந்திருக்கும் லாதி அவர்கள் பின்னால் தம்மைப் பார்த்தபடி குனிந்து நிற்கும் பிரணவ்… மூவரும் ஒரே சட்டத்தில் அவ்வளவு கன கச்சிதமாக பொருந்தியிருந்தார்கள். ‘பிரணவ், கயல் குடும்ப வாழ்க்கையில் இணைந்து அவர்களின் குழந்தையோடு …’ பூபாலன் மனவோட்டம் இப்படிச் சென்றாலும் மூச்சும் விடவில்லை. ஏனென்றால், கயல் முகத்தில் சிடுசிடுப்பு வந்திருந்தது. காயுவை முறைத்தவள் அதே முறைப்போடு விசுக்கென்று திருப்பி பிரணவைப் பார்த்தாள். மறுநொடியே சற்றே விலகிக் கொண்டான் அவன். 

“மச்சான் நான் போயிட்டு வாறன் டா. இதுக்க ஒரே அனல் அடிக்குது. வீணா நின்று வெந்து போவான் ஏன் சொல்லு?” பயந்தவன் போல் சொன்னவன் பார்வையோ  கயலில்.  அவன் சொன்ன விதத்தில் அவள் உதடுகளில் மென்முறுவல் வந்து போயிற்று. ஆரம்பத்தில் இருந்த அவன் மீதான எண்ணம் மாறித்தான் இருக்கு. பண்பான மனிதன் என்றதில் துளியும் சந்தேகம் இல்லை. அதையும் தாண்டி வேறு எதையும்  அவளால் இப்போது யோசிக்க முடியவில்லை.

“அண்ணா எல்லாம் வெல்லலாம், ஒண்டுக்கும் யோசியாதீங்க!” விடாது சொன்னாள் காயு. 

“இப்ப மட்டும் என்னால அங்க வர ஏலுமா இருக்க வேணும், நீர் துலஞ்சீர்!” காயுவிடம் அவள் சீறிக்கொண்டு இருக்கையிலே விடைபெற்றுக் கொண்டான், பிரணவ்.

அடுத்தடுத்த நாட்களில், எல்லாமே ஒரு இயந்திர கதியில் நடந்து கொண்டிருந்தாலும் சின்னவன் தவிர மற்றவர்கள் மனதில் நிம்மதி தொலைத்தே மணித்துளிகளைக் நெட்டித் தள்ளினார்கள். வர வர காயுவின் உடல்நிலை முடியாது போய்க்கொண்டிருந்தது. அவளது ஒவ்வொரு இரவுகளும்  தொடர் இருமலிலும்  விட்டு விட்டு வரும் குளிர் காய்ச்சலிலும் கடந்து போயின. பகலில், சற்றே தன்னை மறந்து துயில்பவளால் மனதில் ஏற்படும் பயத்தையும் பதற்றத்தையும் தவிர்க்கவே முடியவில்லை. 

மனைவியைக் குழந்தை போல் பார்த்துக்கொண்டான், பூபாலன். பெரும்பான்மை நேரங்களில் அவளிருந்த அறை வாயிலில் தான் இருந்தான். கயல், லாதியும் பெரும்பாலும் கைபேசியில் அவளையே கவனித்தபடி தான் பொழுதைத் தள்ளினார்கள்.

அமெரிக்கா என்னதான் அபிவிருத்தியடைந்த முதலாம் நிலை நாடென்றாலும், அங்கும் அனைத்துக் குடிமக்களுக்கும் சமனான மருத்துவ வசதியென்பது இன்னமும் கனவே! ஐரோப்பிய நாடுகள் சிலவற்றில் சாத்தியமான இது அமெரிக்காவில் சாத்தியமற்றுப் போனது, இலண்டனைப்  போலவே!  பணம் உள்ளவர்கள் மருத்துவக் காப்புறுதி செய்திருப்பார்கள். சில தொழில்களில் தொழிலார்கள் மருத்துவக் காப்புறுதி இருந்தது. அதைத் தவிர்த்து, ஏழ்மையில் உள்ளோர், வேலையற்றோர் உடனடி மருத்துவசதி போதியளவு கிடைக்கப் பெறாது திண்டாடத்தான் வேண்டியிருந்தது. அதுவும் இந்தக் கொள்ளை நோய் பரவும் காலத்தில் வளர்ந்து வரும், வளர்ச்சி குறைந்த நாடுகள் போலவே இங்கும் மக்கள் போதிய மருத்துவ உதவி தேவையான போது கிடைக்கப் பெறாது திண்டாடிப் போயினர். அதுவே இறப்பு அதிகரிக்க முக்கிய காரணமாகவும் இருந்திட்டு.

பூபாலன் குடும்பத்துக்கு மருத்துவக் காப்புறுதி உண்டு. நல்ல மருத்துவனையில் சிறப்பான சிகிச்சையளிக்க முடிந்தளவு பணவசதியும் இருந்தாலும், “மூச்சுத் திணறல் எண்டு வந்தால் மட்டுமே மருத்துவமனைக்கு  அழைப்போம், மற்றும் படி இங்க வந்து ஒரு பயனும் இல்லை; வீட்டில் இருப்பதே பாதுகாப்பு!” என்று மருத்துவர்கள் சொன்னதை ஏற்கத்தான் வேண்டியிருந்தது.

பரசிட்டமோல், கை வைத்தியங்கள், பத்திய உணவுகள் என்பனவற்றுக்கு,  பூபாலனில் வந்து ஒட்டிக்கொண்டிருந்த போது சொல் கேட்ட, அடிபணிந்த கொரோனா, காயு விடயத்தில் பலத்த எதிர்ப்பில் இறங்கி விட்டிருந்தது. அதன் பயன், இந்த சில நாட்களில் ஆளே மாறிப் போயிருந்தாள், காயு. 

“அம்மா அம்மா…” எந்நேரமும்  கைபேசியில் தாயைப் பார்த்துக் கலங்கும் லாதியைத் தேற்றுவதே பெரும் பாடகிப் போனது, கயலுக்கு. உள்ளமும்  உடலும் சோர்ந்து அவள் மனதிலும் பயம் வந்துவிட்டிருந்தது. தனக்கும் கொரோனா வந்துவிட்டால் இந்தக் குழந்தைகள் பாடு!

வேலையில்  ஒரு கிழமை விடுமுறை எடுத்துக்கொண்டாள். பேஸ்மென்டில்  இருக்கும் நேரத்தைக் குறைத்துக் கொண்டாள். பெரும்பான்மை நேரம் அவர்களின் வீட்டில் பின்னாலிருந்த தோட்டத்தில் கழித்தார்கள். நிழல் குடையை வைத்து, தாம் மூவரும் இருக்கும் படி வசதிகள் செய்து கொண்டாள்; ஆதித்தை ப்ராமில் கிடத்திவிட்டு, லாதியின் வயதுக்கு இறங்கி ஓடிப்பிடித்து விளையாடினாள்; பந்து விளையாடினாள்; பூமரங்களுக்குத் தண்ணீர் விடுகிறோம் என்று இருவரும் ஒருவர் ஒருவரில்  நீரைச் சீறவிட்டு தெப்பலாக நனைந்து நின்றார்கள். 

லாதிக்கு விருப்பமானவற்றை அவளையும் சேர்த்துக்கொண்டே சமைத்தாள், கயல்.   இப்படி, சற்றே  கவனத்தைத் திசை திருப்ப முயன்று வெற்றியும் கண்டாள். பழையபடி துள்ளலும் கூச்சலுமாக ஆகிவிட்டாள், சிறுமி. கைகால்களை அடித்து எம்பி உன்னித் தானும் மகிழ்வை வெளிப்படுத்தினான், ஆதித். இதையெல்லாம் பார்த்திருந்த பூபாலன், மனதில் குழந்தைகள் பால் இருந்த கவலையை விலக்கிவிட்டான்.

அவர்களின் சந்தோசக் கூச்சல் காயுவின் செவிகளையும் எட்டவே செய்தது. பூபாலனிடம் சொல்லி இருக்கை ஒன்றை யன்னலோரமாகப் போட்டுவிட்டு கொஞ்ச நேரம் எழுந்து நின்று அவர்களைப் பார்ப்பதும் அமர்வதுமாக இருந்து பார்த்தாள். கண்களில் வழிந்த கண்ணீர் குழந்தைகளின் அருகாமைக்கு ஏங்கும் அவள் உணர்வைச் சொல்லி நின்றது. அதை உணர்ந்தும் எதுவும் செய்ய முடியா நிலையில் இறுகி நின்றான் பூபாலன்.

“காயு …”

“ம்ம்…”  என்றவள் மெல்ல வந்து கட்டிலில் அமர்ந்து கொண்டாள். யன்னலடியில் சிறு பொழுது நின்றதே மிக மிகக் களைப்பாக இருந்தது. மூச்சு வேறு இழுத்தது.   

“சின்னப்பிள்ளை போல என்ன இது? இன்னும் நாலைஞ்சு நாட்கள் சுகம் வந்திரும் டி. கண்டதையும்  யோசியாமல் ரிலாக்ஸ்சா இரு என்ன?” அவள் கண்ணீரைத் துடைத்து விட்டான்.

error: Alert: Content selection is disabled!!