“இனிமேல் பட்டு சும்மா சும்மா கண்ணீர் விட்டியோ அடிதான் வாங்குவ சொல்லிட்டன்.” அவன் சொன்ன பரிவான ஆறுதல் வார்த்தைகளோ, அன்பான கண்டிப்போ அவள் கருத்தில் பதியவேயில்லை. பிராமில் கிடந்து கால்களை ஆட்டி, கையை வீசி இடுப்புக் கீழே எம்பி எம்பி கிடந்த அவள் பெற்ற செல்வன் தான் மனம் முழுவதும்.
“எனக்குத் தம்பியத் தூக்க வேணும் போலக் கிடக்கப்பா! பச்சக் குழந்தை அவன். அப்பவும் கயலும் அம்மாவும் எவ்வளவு சொல்லவும் கேட்காம பால எடுத்து வச்சுக் குடுக்க வெளிக்கிட்டன் பாருங்க. இப்பப் பார்த்தீங்களா?” அப்படியே அவன் நெஞ்சில் சாய்ந்து அழுத்தவளை என்ன சொல்லித் தேற்ற முடியும்? வார்த்தைகளைத் தேடி நின்றான் அவன்.
“விசரி இப்ப என்ன நடந்திட்டு?”
“இல்லப்பா… அவன் பிறந்ததில இருந்து….” தொடரவிடாது பிடித்திழுத்த இருமல்களுக்கிடையில் சொல்ல நினைத்தைச் சொல்லிவிடும் முனைப்போடு தொடர்ந்தாள்.
“அம்மாவும் கயலும் தான்… மாறி மாறி…பார்த்துக் கொள்ளினம். நான்… பால் குடுக்கமட்டும்… தான் தூக்குறது!” குற்ற உணர்வு தொனிக்கச் சொன்னவளை கோபத்தோடு பார்த்தான், பூபாலன்.
“இப்ப என்னத்துக்கு நீ தேவையில்லாமல் அலட்டுற. கூடக் கதைக்கத்தான் இருமுது காயு. கொஞ்ச நேரம் பேசாம இரு! இன்னும் எண்ணிக் கொஞ்ச நாள், பிறகு உன்ர பிள்ளைகள நீ தானே பாத்துக் கொள்ளப் போற? கைக்கவே வச்சிரன், ஆர் வேணாம் எண்டது?” அதட்டுவது போல் ஆரம்பித்துச் சிறுமிக்குச் சொல்வது போல் எடுத்தியப்பினான்.
“அதுக்கும் பத்தாட்டி எனக்கு மூண்டு பிள்ளைகள் எண்டு சாதகத்தில் கிடக்கிறதா அம்மா ஒருமுறை சொன்னதா நினைவு. கவலையே படாத, அடுத்த பிள்ளைக்குப் பிறந்த அன்றிலிருந்து நீயே எல்லாம் செய்து பாரன்.” பகிடியாகச் சொல்லித் தேற்ற முயன்றான்.
“உங்களை…” சோர்ந்திருந்த கரத்தால் நெஞ்சில் இடித்தாள். இருந்தாலும் சோர்ந்து வதங்கிக் கிடந்த முகத்தில் கீற்றாக முறுவல். ஆசையாகப் பார்த்தான் அவன். கொரோனா என்று அறிந்த கணத்தில் இருந்து இந்த முகத்தில் பயமும் வேதனையும் மட்டும்தான் கண்டிருந்தான்.
அவன் பார்வை உணர்ந்து, “இங்க நான் இழுத்துக்கொண்டு கிடக்கிறன். உங்களுக்கு…” முறைக்க முயன்றாலும் முடியவில்லை. நேசம் மின்னிய அவள் விழிகளில் கண்ணீர் திரண்டது.
“எனக்கு எனக்கு…உண்மையாவே சரியாப் பயமா இருக்கப்பா!” அவனை இறுகக் கட்டிக்கொண்டவளை நெஞ்சில் வந்தொட்டிக்கொண்ட நடுக்கத்தோடு கட்டிக்க கொண்டான், அவன். அவன் தொண்டை இறுகியது. அவளை இறுக்கிப் பிடித்த கரங்கள் நடுங்கின.
“காயு!” அவள் உச்சியில் தலைசாய்த்தவனுக்கு ஓவென்று பெரிய சத்தமாக கத்த வேண்டும் போன்றதொரு உணர்வு வேகமாக எழுந்து படாத பாடு படுத்திற்று. கட்டுப்படுத்தப் போராடினான், அவன்.
“உனக்கு நான் இருக்கிறன் டி. உனக்கு ஒண்ணுமே வராது. நீ வீணா பயந்து வருத்தத்தைக் கூட்டாத குஞ்சு!”
எதுவுமே கதைக்கவில்லை அவள். அவன் இறுகிய அணைப்பில் அடங்கியிருந்தவள், சட்டென்று நினைவுந்தவளாக விலத்தினாள்.
“நீங்க இப்படி… கிட்ட கிட்ட வராதிங்கப்பா! என்னதான் மாஸ்க் கிளவுஸ் போட்டிருந்தாலும் என்னத்துக்கு? போங்கோ, உடுப்புகளைத் தோய்க்கப் போட்டுட்டுக் குளியுங்கோ!” என்றதும், “உன்ன, நீ இப்படி அழுது குளறாமல் இருந்தா நான் ஏன்டி வரப்போறன்?பிறகு என்னைச் சொல்லு என்ன! அப்பவே நான் சொன்ன நேரம் கேட்டிருக்க இது எல்லாம் தேவையே இல்ல.” தொடங்கிவிட்டு, “விடு, நடந்தது நடந்திட்டு, எல்லாம் சுகம் வந்திரும்.” என்றவன், அவள் தொடர்ந்து இருமவும் சுடுநீர் கொஞ்சமாகக் குடிக்கக் குடுத்துச் சாய்ந்தவாறு அமர உதவி செய்தான்.
காயுவுக்குக் கொரோனா வந்து பத்து நாட்கள் கடந்திருந்தன.
அன்று, மாலை ஆறு மணி கடந்திருக்க, மடியில் சின்னவனை அமர வைத்து, “அம்மாக்கு ஒரு வாய் ஆஆ…அம்மா ஆஆ.” என்று, ஐபாட் திரையில் தெரிந்த காயுவுக்குக் கொடுப்பது போல் கொண்டு போவதும் குழந்தைக்குக் கொடுப்பதுமாக இருந்தாள், கயல்விழி.
பொக்கை வாயால் உணவை வாங்கிக் கொண்ட குழந்தையோ, திரையில் தெரிந்த தாயைப் பார்த்து விழிகள் சுருங்கச் சிரித்தான்; கைகால்களை ஆட்டி அப்படியே எம்பி சாப்பாட்டு வாயைக் கயல் கன்னத்தில் தேய்த்தான்; அவள் பின்னலைப் பிடித்திழுத்து ஒரு வழி பண்ணிக் கொண்டிருந்தான்.
கயலோடு ஒட்டிக் கொண்டு அமர்ந்திருந்தாள், லாதி.”அம்மா நானும் ஸ்வீட்டியும் செய்த ஸ்வீட் கொக்கோனட் பான் கேக்!” தாய்க்குக் காட்டியபடி உண்டு கொண்டிருந்தாள்.
“என்ர செல்லம் கெட்டிக்காரி! ஸ்வீட்டிக்குக் கரைச்சல் குடுக்றேல்ல என்ன?” என்ற காயுவுக்கு இருமல் சற்றே குறைந்தது போலிருந்தாலும் இழுப்பு இருப்பது தெளிவாகவே தெரிந்தது.
“ம்ம்…” என்றபடி கயலோடு அணைந்து கொண்டாள், லாதி. “இன்னும் ஃபோர் டேய்ஸ் மா, நாங்க மேல வந்திருவமே!” ஆசையும் ஏக்கமும் கண்களில் அப்பட்டமாகத் தெரியச் சொல்லவும் செய்தாள்.
காயுவின் விழிகள் நிறைந்திட்டு.
“பான் கேக் ருசியா இருக்கோ?” பேச்சை மாற்றும் தேவை கருதி இடைபுகுந்தாள், கயல்விழி.
“ஓம்…ஓம்” கையில் இருந்த பான் கேக்கில் சிறு துண்டை தன் சின்னக் கையால் அவளுக்கு ஊட்டிவிட்டாள்.
“குட்டிம்மா சாப்பிடுங்கோ, நான் பிறகு சாப்பிடுறன்.”
அப்போதுதான் காயுவின் அறையின் உள்ளே வந்தான், பூபாலன். “இவ்வளவு வேலைகளுக்கு இடையில இடியப்பம் எல்லாம் அவிக்க வேணுமா கயல்?” மனைவிக்கு இரவுணவைத் தட்டிலிட்டு எடுத்து வந்திருந்தான்.
“இடியப்பம் மட்டும் தான் நான் அவிச்சனான். பத்தியக்கறி, இறைச்சிக்கறி, குழல் புட்டு எண்டு நிறைய பிரணவ்ட அம்மா குடுத்து விட்டிருந்தவா.”
“ஓஓ மருமகளுக்கு….” காயு ஆரம்பிக்க, “கரைச்சல் ஏன் எண்டு இப்பவே குடுத்து விடுறா போல!” நமுட்டுச் சிரிப்போடு சொன்னான், பூபாலன்.
“உங்கள…ரெண்டு பேரும் தேவையில்லாமல் அலட்டாதிங்க. அங்க வர மாட்டன் எண்ட துணிவு தானே?” கணவன் மனைவி இருவரையும் முறைத்தாள், கயல். என்றாலும் அந்த முறைப்பில் முன்னிருக்கும் அளவுக்குக் காரம் இல்லை. அந்தளவுக்கு இந்தக் கொஞ்ச நாட்களில் நட்போடு நெருங்கியிருந்தான், பிரணவ்.
“அம்மா நீங்களும் சாப்பிடுங்க!” இடைபுகுந்தாள் லாதி.
“எனக்குப் பசியில்லை. மண்ணச் சாப்பிடுறது போல இருக்கும். ஒரு ருசியும் தெரியுதில்ல. வேணாம் பா!
மீன் பத்தியக் கறியோடு போட்டிருந்த இடியப்பத்தைப் பார்க்க அவளுக்கு வயிற்றைப் பிரட்டியது.
“கொஞ்சமாச் சாப்பிடு காயு. விளையாடாத. பார் எப்பிடி மெலிஞ்சு போன! கொரோனா வந்தா சில சனம் பசி பசி எண்டுத்துகள். சிலர் இப்பிடி. என்ன கொடுமையான நோயோ!” அரட்டியபடி தட்டைக் கொடுக்கக் கொறித்தாள், அவள்.
இருந்தாலும், கணவன் மனைவி பார்வை பிள்ளைகளிலும் அவர்களைச் சொந்தப்பிள்ளைகள் போல பராமரிக்கும் கயலிலும். அதன் பின்னர் சிறிது நேரம் இருந்துவிட்டு, “நான் கொஞ்சம் இப்பிடியே சாயப்போறன்.” சோர்ந்து துவண்ட குரலில் சொன்னாள், காயு. பிள்ளைகளுக்கு “பை” சொல்லி, பறக்கும் முத்தங்களை அள்ளி அள்ளிக் கொடுத்து இணைப்பைத் துண்டித்தனர்.
கயலுக்கோ, வழமைபோலவே அடுத்தடுத்து தொலைபேசி அழைப்புகள். தங்கை, அம்மம்மா, பூபாலன் தாய், மற்றும் காயுவின் தாய் என்று வரிசையாகக் கதைத்தபடி பிள்ளைகளைப் படுக்கைக்குத் தயார்ப்படுத்தினாள். குழந்தைகள் உறங்கிய பின்னர் முகத்தில் அறைந்த தனிமையில் எப்போதும் போலவே தடுமாறி நின்றாள், கயல்விழி. மனம் தளர்வோடு, சஞ்சலத்தில் இருக்கையில் சின்ன விசயமே பூதாகரமாகத் தெரியும், உணர வைக்கும். இவளும் அந்நிலையில்தான் நின்றாள்.
‘பூபாலன் போலவே சுகமாகிரும்’ என்று மனதில் இருந்த உறுதியான நம்பிக்கையில் ஆட்டம் உண்டாகியிருந்தது. காயுவின் தோற்றமும் தளர்வும் தொடர் இருமல் குறைந்தது என்று பார்த்தால் சர் சர் என்ற சத்தத்தோடு வெளிவரும் இழுப்பும் மனதைப் பிசையச் செய்திட்டு.
இரவு விளக்கின் ஒளியில் குளித்துக் கிடக்கின்ற, உறங்கும் குழந்தைகளைப் பார்த்தபடி நின்றவள், ஆழமாக மூச்சை இழுத்து விட்டுக்கொண்டாள். அசதியாகவிருந்த உடலோ உறக்கத்தை நாட மாட்டேன் என்றது. இருந்தபோதும், வருந்தி அழைக்கும் எண்ணத்தில், குழந்தைகளின் கட்டிலோடு சோபாவை இழுத்துப் போட்டுவிட்டுச் சுருண்டு விட்டாள். சிந்தையில் வெறுமை, உள்ளத்தில் பதற்றமும் படபடப்பும்; அவற்றின் பிடியில் அகப்பட்டுவிட்ட விழிகளோ மேலே பிளேட்டில் ஒட்டி நின்றன.
அப்படியே கிடந்தவள், எத்தனைக்கு உறங்கினாளோ அறியாள், காலையில் எப்போதும் போலவே எழுந்துவிட்டாள்.
சத்தம் போடாது காலைக்கடன்களை முடித்த வேகத்தில், தேநீர் தயாரித்தாள். வழமைபோலவே பூபாலனுக்கும் காயுவுக்கும் சுடுநீர்ப்போத்தலில் ஊற்றியெடுத்தவள், “குடுத்திட்டு வந்து நாம குடிப்பம்.” முணுமுணுப்போடு மேலே ஏறினாள்.
வழமையாகவே என்ன கொடுப்பது என்றாலும் பேஸ்மென்டிலிருந்து வீட்டுக்குள் நுழைகின்ற கதவடியில் வைத்து விடுவாள். பூபாலன் எடுப்பான். அதன்படி, கதவைத் திறந்து கொண்டே, “பூபாலன் அண்ணா டீ வைக்கிறன்.” குரல் கொடுத்துக்கொண்டே சுடுநீர்ப் போத்தலை வைத்துவிட்டு நிமிர்ந்தவள் பார்வை, வரவேற்பறையில் தெரிந்த காட்சியில் உறைந்து நின்றது. மறுகணம், இமைதட்டிவிட்டு உற்றுப் பார்த்தன, விழிகள். அடுத்த நொடியே, ‘என்ன நடந்திட்டு?’ இதயம் கண்டபடி அடிக்க வார்த்தை புரளாது பதறி நின்றாள், அவள்.