35 – 1

“சமைச்சது எல்லாம் கிடந்து ஆறுது!  இந்தப் பிள்ள இன்னும் என்ன செய்யிறா? நான் சாப்பிடப் போறன் போங்க.” என்றபடி, கதிரையை இழுத்துப் போட்டு அமர்ந்தார் சரசு.

“நீங்க சாப்பிடுங்கோ சித்தி!” பூபாலன்.

“எல்லாரும் வீட்டில நிண்டா  ஒண்டாச் சாப்பிடுவம் எண்டு சொன்னதே கயல் தான். அதான் பாத்துக்கொண்டு இருந்தன்.” என்றவர், “நீங்களும் வாங்கவன். சுட சுட சமைச்சி  ஆறவிட்டு மைக்ரோ ஓவனுக்கு வச்சுச்   சூடு பண்ணியா சாப்பிட வேணும்?” 

“அவாவும் வந்திரட்டும் சித்தி, இண்டைக்கு மட்டும் தானே!” தொலைக்காட்சியைப் போட்டுக்கொண்டு அமர்ந்தவன் முகபாவனையைப் பார்க்க நினைத்தார் சரசு. தெரியவில்லை.

‘ரெண்டு பேரும் பிடிகொடாயினமாமே!’ அலுத்தபடி ஆட்டிறைச்சிப்  புரியாணியைச் சுவைக்க ஆரம்பித்தார், அவர்.

“சும்மா சொல்லப்படாது பூபாலன்,  புரியாணி அந்தமாரி இருக்கு!”  அவரின் பாராட்டை முகம் திருப்பாதே ஏற்றுக்கொண்டவன் பார்வை, தொலைகாட்சியில் இருந்தாலும் அடிக்கடி கயலின் அறை வாயிலுக்குச் சென்று வந்திட்டு.  

லாதி உணவு மேசையில் அமர்ந்து வரைந்து கொண்டிருந்தாள் என்றால், சின்னவன் கயலின் அறை வாயிலில் அமர்ந்திருந்து பசில் செய்து கொண்டிருந்தான்.

“குஞ்சுகள் நீங்க சாப்பிடுங்க, வாங்க.” எத்தனையோ தடவைகள் சொல்லியும், ஸ்வீட்டியும் வரட்டும், சூட்டியோட என்று விட்டார்களே! 

பொறுமையை இழுத்துப் பிடித்துக் கொண்டு அமர்ந்திருந்தான், பூபாலன். அவளோ வந்தபாடில்லை. 

“பச்!” எழுந்து சென்றவன், “சாப்பிட வருவீர் தானே கயல்? பிள்ளைகள் பாத்துக்கொண்டு இருக்கினம்.” குளியலறைக் கதவில் தட்டினான்.

சற்று நேரம் சத்தமே இல்லை. “கயல்…” மீண்டும் தட்டினான்.

“அப்பவே லாதிட்டச்  சொன்னனே… நீங்க சாப்பிடுங்க!” 

“உம்ம…விளையாடுறீரா? நீரும் வரட்டும் எண்டு அவே பாத்துக்கொண்டிருக்கினம், நீர் சொன்னதையே சொல்லிக்கொண்டு இருக்கிறீர். சரி,  ஆறுதலா வந்து என்னவும் செய்யும்; எனக்கு வெளில கொஞ்சம் வேலை இருக்குப் போகப் போறன்.” விருட்டென்று திரும்பியவன், “இல்ல இல்ல, சாப்பிடாமல் போக வேணாம்;  இந்தா அஞ்சே நிமிசம் வந்திருறன்.” என்று வந்த அவசரக் குரலை வாங்கிக்கொண்டு வந்து, “ஸ்வீட்டி வந்திருவா வாங்கோ!” மகனை தூக்கிக்கொண்டு போய் கதிரையில் அமர்த்தினான்.

“லாதி, ட்ரோயிங் கொப்பியைக்  கொண்டு போய் வச்சிட்டு வாங்க, பிறகு கீறலாம்.” என்றுவிட்டு அவர்களுக்குப் பரிமாறி வைத்தான். 

அவசரம் அவசரமாக வந்திருந்தாள், கயல்விழி. உச்சியில் மேடாகியிருந்த துவாய்க்குள், அவள் சிகை பிடிபட்டுக் கிடந்திட்டு.  

“ஈரத்தோட உடுப்பப் போட்டியாம்மா?” சரசு.

“பிரச்சினை இல்ல ஆன்ட்டி, கொஞ்சத்தில காஞ்சிரும்.” தன்  தட்டில்  பரிமாற  எடுக்க முதல் பூபாலன் எடுத்துப் பரிமாறினான்.

“நீங்க இருந்து சாப்பிடுங்க, நான் போடுறன்.” எழுந்தவள், பூபாலனைப்  பார்க்கவில்லை. அவனை என்றில்லை யாரையுமே பார்க்கவில்லை.

“பரவாயில்ல நானே போட்டுத் தாறனே! இனி எந்தக் காலத்தில எங்கட வீட்டுச் சாப்பாடு சாப்பிடப் போறீரோ!” அவன் குரலில் நக்கல்.

அப்போதும் அவள் அவனைப் பார்க்கவில்லை. வழமை போல் அமைதியாக உண்ணும் பிள்ளைகள் இருவரையுமே பார்த்தாள். விழிகள் நிறைந்திட்டு. அதை அங்கு காட்டப் பிடிக்காது விருட்டென்று எழுந்து தன்னறை நோக்கிப் போகையில், ஃ“போன் அடிச்சுக் கேக்கிது, பாத்திட்டு வாறன், சாப்பிடுங்கோ!” ஓட்டமாய்ச் சென்று புகுந்து கொண்டாள்.

பரிமாறிய உணவை அவள் அமர்ந்திருந்த இடத்தில் வைத்தவன் சரசுவைப் பார்த்தான்.

“விடும் தம்பி, அவா பிறகு வந்து சாப்பிடட்டும், நீங்க சாப்பிடுங்க.” என்றார் அவர். பிள்ளைகளை விட்டுச் செல்ல முடியாது அவள் தவிப்பதை புரிந்து கொள்ள முடிந்தது. 

“அப்படி எல்லாம் விடேலாது!” விறுவிறுவென்று சென்றவன் ஒருக்களித்துச் சாத்தியிருந்த கதவைத் திறந்தான்.

மடியில் கவிழ்ந்து முகத்தை மூடிக்கொண்டு கட்டிலில் அமர்ந்திருந்தாள், அவள்.

“இதுதான் ஃபோன் கதைக்கிற வடிவோ!” 

திடுமென்று அவன் குரல் கேட்க நிமிர்ந்தவள், “எனக்கு எனக்கு… பிள்ளைகளிட்ட எப்பிடிச் சொல்லுறது எண்டு தெரியேல்ல!” கண்ணீரோடு சொல்ல, சட்டென்று பதிலிருக்க முடியவில்லை அவனால்.

உதடுகளை இறுக மூடி கரமிரண்டையும் பொத்தித் தன்னைத்தான் நிலைப்படுத்திக் கொண்டவனுக்கு, அக்கணம், அவளில் இருந்த கோவமும் எரிச்சலும்  மாயமாகியிருந்தது.

“முதல் கண்ணைத் துடைச்சிட்டு வந்து சாப்பிடும், எனக்கு வயிறு எரியுது கயல்.” 

“நீங்க சாப்பிடுங்கோ எனக்கு இப்ப ஒண்ணும்  வேணாம்!” சொல்லி முடிக்கவில்லை, “அப்பா தம்பி இறங்கிட்டான், எல்லா இடமும் சோற சிதறிக்  கொட்டிக்கொண்டு வாறான்.” குரல் கொடுத்தாள், லாதி.

“அவன் உம்மட்டத்தான் வாறான்.” திரும்பிச் சென்ற பூபாலன் பின்னால் கண்களைத் துடைத்துக்கொண்டு வந்த கயல், “டோய் இது என்ன வேல ம்ம்?” பூபாலனை  முந்தி நடந்து சின்னவனைத் தூக்கிக் கொண்டாள். 

“சூட்டிட்ட…  வந்…தனான்.” வாயருகில் ஒட்டிக்கொண்ட சோற்றை நாவால் தட்டி உள்ள எடுக்க முனைந்தபடி சொன்னான், ஆதித்.

அப்படியே அணைத்துக் கொஞ்சியபடி மீண்டும் அமர்த்திவிட்டு அமர்ந்தவள், “நீங்களும் சாப்பிடுங்கவன்.” என்றதும் முறைத்தான் பூபாலன்.

“மினக்கட்டுச் சமைச்சுப்போட்டு அதுக்குத்தான் இவ்வளவு நேரமா பாத்துக்கொண்டு இருந்தம்!” அவளைக் கடித்துக்கொண்டே தனக்கும் போட்டுக் கொண்டு அமர்ந்தான். 

“நான் வடிவா சாப்பிட்டுட்டன்.” சரசு எழுந்து செல்ல, நால்வரும் மட்டுமாக அமர்ந்திருந்து உணவுண்ட அத்தருணத்தை வெகுவாக அனுபவித்துத் தன்னுள் பத்திரப்படுத்திக் கொண்டாள், கயல்.

கலகலவென்று உண்டு  முடித்த பின்னர், “நான் எல்லாம் எடுத்து வைக்கிறன்  விடுங்கோ!” என்று, தானே எல்லாவற்றையும் ஒதுக்கிவிட்டு, பிள்ளைகளுக்கு ஆப்பிளை வெட்டிக்  கொண்டு வந்து கொடுத்துவிட்டு அமர்ந்தவள், “லாதிம்மா, நான் நாளைக்குப் பின்னேரம் பயணம் போகப் போறனே!” பட்டென்று ஆரம்பித்தாள். பிள்ளைகளோடு அமர்ந்திருந்த பூபாலனும் கொஞ்சம்  தள்ளியமர்ந்திருந்த சரசுவும் பார்வையாளர்களாகியிருந்தார்கள்.

“பயணம் எண்டா?” லாதி. 

“நானும் நானும் வரப் போறன்.” தகப்பன் மடியிலிருந்து இறங்கி குடுகுடுவென்று வந்து அவள் மடியில் ஏறியமர்ந்துவிட்டான்,  ஆதித். 

“அப்ப நானும் ஸ்வீட்டி!” தகப்பன் மடியில் இருந்தபடியே கெஞ்சலாகச் சொன்னாள், லாதி. 

கலங்கிய விழிகளை அனுமதிக்காது உறுதியாக இருக்கப்  பெரும் பாடுபட்டாள்,  கயல்விழி.

error: Alert: Content selection is disabled!!