இணைபிரியா நிலை பெறவே 3 – 2

இதுதான் அவள். அவளின் அந்த அன்புக்குத் தான் சரியான மரியாதை செய்யவில்லை என்று ஆரபிக்குத் தெரியும். ஆனால், அவளுக்கு எல்லாவற்றிலிருந்தும் வெளிவரவேண்டியிருந்தது. அதனால்தான் சகாயன் தொடர்பான அத்தனையில் இருந்தும் விலகியிருந்தாள். இதையெல்லாம் சொல்ல முடியாமல் அமைதி காத்தபடி சின்னவளுக்கு உணவூட்டி முடித்தாள்.

“நீங்களும் அப்பிடியே சாப்பிடலாமே பிள்ளைகள். நேரமாச்சே.” வெளியே தோட்டத்தில் வைத்துப் பிருந்தகனுக்கு விளையாட்டுக் காட்டியபடியே உணவைக் கொடுத்துவிட்டு வந்த கலைமகள் சொன்னார்.

“பொறுங்கம்மா. இன்னும் பத்து நிமிசத்தில உங்கட பேத்தி நித்திரைக்கு அழுவா. அவாவை நித்திரையாக்கிப்போட்டு நிம்மதியாச் சாப்பிடுறம்.” என்றவள் சின்னவள், ஆரபி சகிதம் மேலே தன் அறைக்குப் மாடியேறினாள்.

“நான் மாமாட்ட போறன்.” என்றபடி இவர்களை முந்திக்கொண்டு படிகளில் தாவி ஏறினான் பிருந்தகன்.

அந்த மாமா என்கிற சொல்லுக்கே இவளுக்கு நெஞ்சு படபடத்தது. அவன் பார்வையில் படாமல் வினோதினியின் அறைக்குள் நுழைந்த பிறகே கொஞ்சமேனும் ஆசுவாசமானாள்.

“எங்கயடி அண்ணா?” வினோதினியின் கணவனைப் பற்றி விசாரித்தாள்.

“அவர் கொழும்புக்குப் போய்ட்டார். நாளைக்குத்தான் வருவார்.” என்றவள் சின்னவளை வாங்கக் கைகளை நீட்டினாள்.

அவள் ஆரபியிடமிருந்து வரமாட்டேன் என்றாள்.

“பாத்தியாடி நான் பெத்ததுக்கு இருக்கிற தடிப்பை. அவள் பிறந்ததுக்கு நீ பாக்கவே வரேல்ல. ஆனா அவள் உன்னைக் கண்டதும் என்னட்ட வரமாட்டாளாம்.”

வினோ என்னவோ சும்மா விளையாட்டுக்குத்தான் சொன்னாள். அதில் இருந்த உண்மை ஆரபியை நன்றாகவே சுட்டுவிட்டதில் சட்டென்று முகம் சிவந்து கன்றிப்போனது அவளுக்கு.

“ஏய் சொறியடி!” என்றாள் உடைந்துவிட்ட குரலில்.

அப்போதுதான் தன் வார்த்தைகளை வினோதினியுமே உணர்ந்தாள். அதில், “ஏய் விடடி. நான் சும்மா சொன்னனான்.” என்று சமாளித்தாள்.

“நீ எந்தப் பக்கமடி படுப்பாய்.” என்று கேட்டு, அந்தப் பக்கம் சின்னவளைப் போட்டு, பக்கத்திலிருந்து தட்டிக் கொடுத்தாள் ஆரபி. சின்னவளோ எழுந்தமர்ந்து இவளோடு விளையாடிக்கொண்டிருந்தாள்.

“இப்பிடிச் செய்தாய் எண்டு வை, அவள்தான் உன்னை நித்திரையாக்குவாளே தவிர, நீ அவளை நித்திரையாக்க மாட்டாய். பக்கத்தில படுத்துத் தட்டிக்குடு. ஆள் நல்லா அணஞ்சுகொண்டு நித்திரையாகிடுவா.” என்றாள் வினோ.

கொஞ்சம் சங்கடமாக இருந்தாலும் கரையாகச் சரிந்து சின்னவளைத் தன்னுடன் சேர்த்தணைத்தபடி தட்டிக்கொடுத்தாள்.

வினோ சொன்னது போன்று நன்றாகவே அவளோடு ஒட்டிக்கொண்டு கிடந்தாள் குழந்தை. என்னவோ தாய்மை உணர்வு பெருக்கெடுக்க குழந்தையிலேயே கவனமானாள் ஆரபி.

அப்போதும் ‘சத்தம் போடாமல் இரு’ என்று அவள் சொன்னதைக் கேளாமல், தம்மோடு படித்த தோழிகள் அனைவரைப் பற்றியும் இரகசியக் குரலில் பேசிக்கொண்டே இருந்தாள் வினோ.

அந்தக் கதை முடிந்ததும் அதுவரையில் தான் வாங்கிய உடைகள், நகைகள் என்று அனைத்தையும் எடுத்துக் காட்டினாள். ஆரபிக்கு நண்பியின் வெள்ளை மனத்தில் உள்ளம் கனிந்துபோயிற்று. தான் அவளோடு கதைக்காமல் இருந்தது எவ்வளவு பெரிய தவறு என்று மீண்டும் மீண்டும் உணர்ந்தாள்.

அப்போது, “அம்மா!” என்று பிருந்தகன் ஓடி வர, பின்னால் சகாயன். அவனை எதிர்பாராத ஆரபி கொஞ்சம் திகைத்துத்தான் போனாள். அதுவும் அவன் முன்னே குழந்தையை அணைத்தபடி அவள் படுத்திருந்த காட்சி பதைப்பைத் தந்துவிட, வேகமாக எழுந்து அமர்ந்துகொண்டு தன் உடையைச் சீர் செய்தாள்.

சகாயனும் அவளை அப்படி ஒரு காட்சியில் பார்ப்போம் என்று எதிர்பார்க்கவில்லை. ஒரு கணம் அசைய முடியாமல் அப்படியே நின்றுவிட்டான். என்னவோ ஒரு பாதிப்பு மிக அதிகமாக அவனைத் தாக்கிற்று. எல்லாம் சரியாக நடந்திருந்தால் அவன் அறையில், அவன் குழந்தையோடு, அவளை இப்படி ஒரு காட்சியில் பார்த்திருப்பானாக இருக்கும்.

தடுக்கவோ தவிர்க்கவோ இயலாமல் ஆரபியையே பார்த்தான்.

“தம்பி கத்துறேல்ல. தங்கச்சி நித்திர!” என்று மகனை அதட்டுவதில் கவனமாக இருந்த வினோதினி இவர்களைக் கவனிக்கத் தவறினாள்.

“அம்மா, மாமா மார்க்கெட்டுக்கு போறாராம். நானும் போகப் போறன்.”

அது மீன் மார்க்கெட். மீன் பிடிக் கப்பல்கள் கரையொதுங்குகையில் உடன் மீன்களை, அவற்றை அவர்கள் கொண்டு வந்து கொட்டுவதை எல்லாம் வேடிக்கை பார்ப்பது சின்னவனுக்கு மிகவுமே பிடிக்கும்.

“அவனுக்கு உடுப்பை மாத்திவிடு.” என்றுவிட்டுக் கீழே இறங்கிப் போனான் சகாயன்.

தமையன் சொன்னதுபோல் மகனுக்கு உடையை மாற்றிவிட்டாள் வினோதினி. சின்னவளும் நித்திரையாகிவிட்டதில் அவளுக்குச் சுற்றவரத் தலையணைகளை அடுக்கி வைத்துவிட்டு, “வாடி நாங்களும் போய்ச் சாப்பிடுவம்.” என்று ஆரபியையும் அழைத்துக்கொண்டு இறங்கினாள்.

அவன் தன்னை அப்படி ஒரு காட்சியில் பார்த்த பாதிப்பிலேயே இருந்த ஆரபி, அமைதியாகவே இறங்கி வந்தாள்.

அங்கே அவனும் சாப்பிட அமர்ந்திருந்தான். அவள் கால்கள் இலேசாகத் தயங்கின. ஆனால், கலைமகளும் இருக்கையில் எதையும் காட்டிக்கொள்ள முடியாது. கையைக் கழுவிக்கொண்டு வந்து அவனுக்கு எதிர்ப்பக்கம் அமர்ந்தாள்.

“நீங்க சாப்பிட்டீங்களா அன்ட்ரி?” அவர்களுக்குப் பரிமாறிய கலைமகளிடம் வினவினாள் ஆரபி.

“ஓமாச்சி. மருந்து மாத்திரை போடுறதால நேரா நேரத்துக்குச் சாப்பிட்டுடுவன். கருவாட்டுக் கறி உங்களுக்குப் பிடிக்கும் எல்லா.” என்றபடி கருவாட்டுத் துண்டுகள் இரண்டை மேலதிகமாக அவள் தட்டில் போட்டார்.

அவனும் அங்கே இருக்கிறான் என்பதில் அவளுக்கு உணவு உள்ளே இறங்குவேனா என்றது. அதைவிட இதை அவன் வாங்கி வந்ததன் பின்னால் அவளுக்குப் பிடிக்கும் என்பதுதான் காரணமோ என்கிற கேள்வியும் அந்தக் கருவாட்டுக் குழம்பை ரசித்து உண்ண விடவில்லை.

ஆனாலும் சமாளித்துச் சாப்பிட்டாள். எப்போதும்போல் சாப்பிடுவதற்கு வாயை அசைத்ததைக் காட்டிலும் பேசுவதற்கு அதிகமாகப் பயன்படுத்தினாள் வினோ.

“ஆனந்தனுக்கே கலியாணம் எண்டேக்க உங்களுக்குப் பாக்கேல்லையாம்மா?” என்று விசாரித்தார் கலைமகள்.

சட்டென்று நிமிர்ந்து சகாயனைப் பார்த்துவிடப் பார்த்தாள் ஆரபி. ஆயினும் வெகுவாகத் தன்னைக் கட்டுப்படுத்திக்கொண்டு, “இந்த வருசம் எனக்குத்தான் முடிக்க இருந்தவே அன்ட்ரி. அண்ணி வீட்டு ஆக்களுக்கு அவே லவ் எண்டு தெரிஞ்சபிறகு தள்ளிப்போட விருப்பம் இல்லை. அதால எனக்கு அடுத்த வருசம் செய்யலாம் எண்டு அப்பா சொன்னவர்.” என்றாள்.

“அதுவும் சரிதான். நாலு கதை நாலு விதமா வர முதல் செய்ய வேண்டியதைச் சரியா செய்திட்டா எல்லாருக்கும் நிம்மதி.” என்றவர், “உங்களுக்கு என்ன மாதிரி விருப்பம்? அப்பா எப்பிடியான பெடியன் தேடுறாராம்?” என்று தொடர்ந்து விசாரித்தார்.

“எப்பிடி எண்டெல்லாம் பெருசா எந்த ஐடியாவும் இல்லை அன்ட்ரி. ஆனா என்னை மதிக்கிற, நல்ல மாதிரி நடத்திற ஒருத்தரா இருந்தா போதும்.” என்றவளுக்கு அவனைப் பாராமலேயே சகாயனின் முகம் மாறுவது மிக நன்றாகவே தெரிந்தது.

அதற்குமேல் அவளால் சாப்பிட முடியவில்லை. தட்டோடு எழுந்து சென்றாள். தட்டைக் கழுவாதே, அப்படியே வை என்று கலைமகளும் வினோதினியும் சொன்னதைக் கேளாமல் தட்டைக் கழுவினாள். அவள் பின்னால் வந்து தன் தட்டையும் வைத்தான் சகாயன்.

ஒரு கணம் திக் என்று இருந்தாலும் அவனுடையதைக் கழுவாமல் வேகமாகக் கையைக் கழுவிக்கொண்டு அவள் விலக முயல, அதற்கு முதல் அவள் இடுப்பை ஒற்றைக் கையாலேயே வளைத்துத் தூக்கி, அந்தப் பக்கமாக அவளை வைத்துவிட்டுக் கையைக் கழுவினான் அவன். அதிர்ந்துபோய் அப்படியே நின்றுவிட்டாள் ஆரபி.

error: Alert: Content selection is disabled!!