Skip to content
“இலக்கியா!” மீண்டும் நெருங்கி நின்று கொண்டான்.
“இலக்கியா இல்ல, இலக்கியா அக்கா சொல்லோணும் சரியா?” அவன் முகத்தைத் தன் பிஞ்சுக் கைகளால் பிடித்து வைத்துச் சத்தமாகவே சொன்னது கவின். அதைக் கேட்ட இலக்கியாவின் முகத்தில் முறுவல். மறுநொடி, வேந்தனைச் சீண்ட வாயெடுத்தவள் வார்த்தைகளை விழுங்கிக் கொண்டு சற்றே விலகி நின்று கொண்டாள்.
“என்ன மூணு பேரும் தனியா நிண்டு செய்யிறீங்க?” கவி வர, ஆரூரனும் சேர்ந்து வந்தான். நெருக்கியடித்து இலக்கியாவை நல்லாவே விலத்தி விட்டு வேந்தன் அருகாமையைப் பிடித்து விட்டார்கள்.
“நீங்க இதுதான் முதல் முறையா?” கவி கேட்க, “நான் இதோட நாலைந்து தடவைகள் வந்திட்டன். நீங்க இதுதான் முதல் முறையா?” தெரிந்தாலும் வேறென்ன செய்வது? கேட்டு வைத்தான், வேந்தன்.
“ஓம் அண்ணா.” என்ற ஆரூரன், “இதில வடிவாத் தெரியுது, அது ‘கவர்னர்ஸ் ஐலண்ட்’ என்ன அண்ணா?” நெருங்கி வரும் சிறு தீவினைக் காட்டிக் கேட்டான்.
“ஓமடா” பதில் சொன்ன கவி, “நாங்க வர வேணும் வர வேணும் எண்டு பிளான் போட்டு எல்லாரும் வளர்ந்த பிறகு போவம் எண்டு இருந்ததில பிந்திட்டு.” என்றவள், “அடுத்த முறை வந்தா ‘லிபர்ட்டி ஐலண்ட்’ மியூசியம் போக வேணும்.” என்றாள்.
“அதோட இப்பிடி நுள்ளான்களை எல்லாம் கூட்டிக் கொண்டு வரவும் கூடாது.” நெளிந்து வளைந்து வேந்தனை ஒரு வழி பண்ணிய கவின் வயிற்றில் குத்தினாள்.
“இலக்கியா அக்கா!” அவன் பெரிதாகக் கத்தி, “என்ன கவின்?” என்றபடி தகப்பனையும் வரவழைத்துவிட்டான்.
“அவனை இறக்கி விடுங்க வேந்தன். இல்லாட்டி அப்பாட்ட வாங்க .” மாறன் கைநீட்ட, வேந்தனின் கழுத்தைக் கட்டிக் கொண்டே, “மாட்டன்” ஒரே பதிலாகச் சொல்லி விட்டான், கவின்.
“இருக்கட்டும் பிரச்சினையில்ல.” வேந்தன்.
படகு நியூயோர்க் மென்ஹாட்டன் துறைமுகத்தின் நடுப் பகுதியில் அமைந்துள்ள லிபர்ட்டி ஐலண்ட் நோக்கி நகர்ந்தது.
“பிரான்ஸ் மக்களால ஐக்கிய அமெரிக்காக்குப் பரிசாக் குடுத்த சிலைதான் இது. 1886 ல இங்க நிறுவினவேயாம்.” ஆரூரனுக்குப் பதிலாகத் தகவல் சொன்னான், வேந்தன்.
“இத கூகிளில தட்டி நாங்களும் பாப்பமே!” இலக்கியாவின் குரல் அவனை மட்டுமல்ல கவி, ஆரூரனையும் அவள் புறம் திருப்பியது.
“ஏண்டி? எப்பப் பார்த்தாலும் வேந்தனோட சீறுர?” அடிக்குரலில் கேட்டாள், கவி.
“நாங்க ஏன் சீறுரம். நாங்க இப்ப தான் வாறமாம், தான் இங்கயே தான் பிறந்து வளர்ந்தவராம். எங்களுக்கு ஒண்ணும் தெரியாதெண்ட கணக்கில எல்லா சொல்லுறார்.”
“அடியேய்! ” கவி தங்கையின் கரத்தில் நுள்ளி விட்டு, “அது…அவள் சும்மா பகிடிக்கு!” வேந்தனிடம் சமாளிப்பாகச் சொல்ல, “விளங்குது விடுங்க. சின்னப்பிள்ள, நான் பெரிசா எடுக்கேல்ல!” விழிகளால் எக்கச் சக்கமாக நகைத்தான், வேந்தன்.
ஆரூரன் வாய் விட்டே சிரித்தான். “இலக்கிக்கா பேசாமல் இராமல் வாங்கிக் கொண்டே இருக்கிற!” கடித்தவன் “அங்க பாருங்க கிட்ட வந்திட்டம்.” நெருங்கி வரும் சுதந்திரச் சிலைக்குக் கவனத்தைக் கொண்டு சென்றான்.
எதிர்ப்புறம் தெரிந்த நியூயோர்க் நகரமும் மிக அருகில் தெரிந்த சுதந்திர தேவியின் சிலையும் நீல வானமும் அதி அற்புதமான உணர்வைத் தந்தென்றால் மிகையேயில்லை. கதை பேச்சு மறந்து அனைவரும் அச்சூழலை இரசித்தார்கள். புகைப்படங்களை எடுத்துக் கொண்டார்கள்.
மெல்ல அவ்விடம் கடந்து நகர்ந்த படகு அருகிலிருந்த ‘எல்லிஸ் ஐலண்ட்’ வழியாக ஹட்சன் நதியில் பயணப்பட்டு நியூ ஜெர்சி, கோல்கேட் மணிக்கூண்டு வரை சென்றுவிட்டுத் திரும்பியது.
படகிலிருந்து இறங்கி மீண்டும் அதே பஸ்சில் சென்றிறங்கவும் இவர்கள் வந்த டூர் பஸ் ஒன்று வரவும் சரியாக இருந்தது. ஏறியவர்கள், எம் அண்ட் எம் வேர்ல்ட் ஸ்டொப்பில் வந்து இறங்கிக்கொண்டார்கள்.
“இதுக்கு மேல என்னாலும் முடியாது பசி பசி…” கவி ஆரம்பிக்க, இளையவர்கள் சேர்ந்து கொண்டார்.
“சைனீஸ் ஓகேயா?” கேட்டபடி கைபேசியைத் தட்டியபடி முன்னால் நடந்தான் வேந்தன். நாதனும் மாறனுமே சேர்ந்து கொண்டார்கள்.
“பசிக்கிற பசிக்கு எதுவெண்டாலும் எங்களுக்குச் சரிதான்.” கவி சொல்ல, “எனக்கும் ஒரு நாளும் இல்லாமல் இண்டைக்கு பே பசி!” விசமம் கலந்த இலக்கியாவின் குரலில் வேந்தனின் தலை திரும்பியிருந்தது.
“நல்ல அலைச்சல் தானே பிள்ளைகள்… இந்தா சாப்பிடத் தான் போறம் நடவுங்க.” மகள் எங்க வாறாள் என்றறியா சுகுணா இப்படிச் சொல்ல, “அது இல்லம்மா, காலம சாப்பிட்ட சாப்பாடு எந்த மூலைக்குக் காணும் சொல்லுங்க! நாம வெளில வந்து வாங்கிச் சாப்பிட்டிருந்தா வயிறு நிறையச் சாப்பிட்டிருக்கலாம்.”
நாதன் நின்றுவிட்டார். “என்னம்மா இலக்கி இது?” கண்டிப்போடு தான்.
“ஐயோப்பா! அது சின்னப் பிள்ள விளையாட்டாக் கதைக்கிறது, வேந்தன் ணா ஒண்ணும் நினைக்க மாட்டார். நான் சொல்லுறது சரி தானே வேந்தன் ணா?” ஆரூரன் வேந்தனை வம்புக்கிழுத்துச் சரி பண்ண முயன்றாலும் இலக்கியா அப்படிச் சொன்னதை யாருமே இரசிக்க இல்லை.
எதையாவது சொல்லித் தன்னை வம்பிழுக்கிறாள் என்றதையுணர்ந்த வேந்தன் முகத்தில் மலர்வு தான்.
“பகிடி சேட்டைக்கும் அளவிருக்கு இலக்கி.” சுகுணாவுக்கு கொஞ்சமும் பிடிக்கவில்லை. கவி, ஆரூரன் கூட அவனோடு பகிடியாகக் கதைத்தார்கள் தான். அது பகிடியென்றதே அவர்கள் உடல் மொழி! இவளோ, வேண்டாதவனோடு கதைக்கும் பாவனையில் வெடுக் வெடுக்கென்றல்லவா கதைக்கிறாள்!
“ஆன்ட்டி நான் உண்மையாவே ஒண்ணும் நினைக்கேல்ல விடுங்க. நாளைக்குக் காலம ஸ்பெஷல் சாப்பாட்டுக்கு ஓடர் குடுத்திரலாம்.” சொன்னவன் பார்வை நகைப்பில் சுருங்கிக் கிடந்த இலக்கியின் விழிகளோடு மோதி, “உனக்குச் செய்யிறன் இரு!” சீண்டி விட்டே நகர்ந்தது.
ஹாய் ஹாய் ஹாய் ஹாய் ஹாய் ஹாய் மக்களே ,
பயணங்களோடு உணவுகளுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு தானே? பயணங்களின் போது அந்த அந்த இடத்துக்கே உரிய உணவுகளை சுவைக்க வேண்டும் என்று என் மகன்கள் பெரிதும் விரும்புவார்கள். எனக்கு உணவு என்று வருகையில் பெரிதாக இது வேண்டும் அது வேண்டும் என்று இல்லை. அசைவ உணவுகளில் மட்டும் ஆடு கோழி மீன் முட்டையோடு நின்றுவிடுவேன் . மற்றும்படி எல்லாபவற்றையும் சுவைத்துப் பார்த்துவிடுவேன். . நீங்கள் எப்படி? உங்கள் அனுபவங்களை எங்களோடு பகிர்ந்து கொள்ளுங்களேன்.
உங்கள் பயண அனுபவங்களை மீட்டதாகவும் இருக்கும் , அதோடு பயணங்களை மேற்கொள்வோருக்கு நீங்கள் சொல்லப் போகும் விடயங்கள் மிகுந்த பயன் அளிப்பதாகவும் இருக்கும்.
error: Alert: Content selection is disabled!!