Skip to content
வேந்தனின் கோபம் புரிந்தாலும், அப்படி யாராவது பரிசாகக் கிடைத்த ஒன்றை வேண்டுமென்றே, அதுவும் விரும்புகின்றவன் ஆசையாக வாங்கித் தந்ததை மற்றவர்களுக்குக் கொடுப்பார்களா என்று யோசிக்க வேணாமா என, அவனில் தான் கோபம் உண்டாயிற்று! தான் வாங்கிக் கொடுத்த டீ சேர்ட்டை மாற்றிவிட்டு வந்திடுவானோவென்ற பதற்றமும் இருந்தது தான், அப்படியொரு சிறுபிள்ளை வேலையை அவன் செய்யவில்லை.
“அப்ப தம்பி சாப்பிட்டுட்டு வரட்டும் நாம வாகனத்துக்கு போவமே” நாதன் நகர, “ஓம் அங்கிள் போங்கோ வாறன்.” என்றான், வேந்தன்.
“நீங்க அவசரப்பட வேணாம் தம்பி, இப்பத்தானே ஏழுமணி.” என்ற நாதனைத் தொடர்ந்தார்கள் மற்றவர்கள். கடைசியாகப் பின்தங்கி நின்ற இலக்கியா, ‘சொறி வேந்தன், நான் ஒண்ணும் வேணுமெண்டே அக்காட்ட குடுக்கேல்ல. கோவிக்க வேணாம்.’ குறுஞ்செய்தியைத் தட்டி விட்டிருந்தாள்.
அவன் கைபேசியை எடுத்தால் தானே! பார்வை மட்டும் முன்னால் மேசையிலிருந்து ஒலியெழுப்பிய கைபேசிக்குச் சென்றவேகத்தில் வெடுக்கென்று மறுபுறம் திரும்பியதைக் கண்டாள்.
“என்ன நிக்கிறயம்மா வா.” சுகுணா அழைத்த பின்னாலும் எப்படி நிற்க முடியும்? சென்றுவிட்டாள்.
பத்து நிமிடங்களுக்குப் பின், காஃபி கப்போடு மதியோடு கதைத்துக்கொண்டே வந்தான், வேந்தன்.
“கவனம் வேந்தன், தேவையெண்டா எப்பவும் இன்னொரு ட்ரைவர் ஏற்பாடு செய்யலாம் சரியா?” வாகனத்தை நெருங்கியிருந்தார்கள். மதி இப்படிச் சொன்னதும் நின்று முறைத்தான், வேந்தன்.
“பச்! சொன்னால் கேள் வேந்தன்.” மதி தொடங்க, “நீ இந்தக் கதய விடமாட்டியா?” அடிக்குரலில் வேந்தன் கடிந்துகொண்டது திறந்திருந்த யன்னல் வழியாக உள்ளிருந்தவர்களுக்குக் கேட்கவே செய்தது.
“சரி என்னவோ செய்! ஒவ்வொருநாளும் கோல் பண்ண மட்டும் மறக்காத! எனக்கும் வீட்டுக்கும்.” என்ற மதி அன்போடு அணைத்து விடுவிக்க, தலையாட்டியபடியே சாரதியாசனத்தில் ஏறிக்கொண்டான்.
முன்னிருக்கையில் இருந்த நாதன் இறங்கி, “தம்பி எங்கட வீட்டில் நிண்டதுபோல ரெண்டு நாளும் தங்கியிருந்தம். எல்லாத்துக்கும் மிகப்பெரிய நன்றி!” மதியின் கரங்களை பற்றிக்கொண்டு சொன்னார்.
“இதையே எத்தின தடவை சொல்வீங்க அங்கிள். உங்களை எல்லாம் சந்திச்சதில எனக்கும் நல்ல சந்தோசம்.” என்றானவன்.
“கனடா வந்தா கட்டாயம் வீட்ட வாங்கோ!” மதியிடம் விடைபெற்றுக்கொண்டார் நாதன். மாறனும் சுகுணாவும் அதையே சொல்லி நன்றியோடு விடைபெற்றுக் கொண்டார்கள்.
“கட்டாயம், வீட்டில எல்லாரையும் கூட்டிக்கொண்டே வருவன் அங்கிள்.” என்றவன், மின்னலாக யன்னலோரமிருந்த இலக்கியாவைப் பார்த்துவிட்டு வேந்தனைப் பார்த்துச் சிரித்து வைத்தான்.
அதுவரை அவர்களை பார்த்துக்கொண்டிருந்த இலக்கியா, சட்டென்று இயர்போனை மாட்டிக்கொண்டு கைபேசியில் குனிந்து கொண்டாள்.
‘அது ஒரு கொம்பேறி மூக்கன் எண்டா இந்தாள் வெளிக்கிட முதல் நம்மள மாட்டி விட்டுரும் போல!’ அவளுக்கு நெஞ்சிடித்தது.
ஒருவாறு வாகனம் புறப்பட்டுப் போக்குவரத்தில் கலந்தது.
“வோஷிங்டன் போக எப்பிடியும் நாலு நாலரை மணித்தியாலம் வேணும் என்ன தம்பி?” நாதன் கேட்க, “ஓம் அங்கிள் பன்னிரண்டுக்கு முதல் போயிரலாம்.” என்றவன், “அங்கயும் பஸ் டூர் தானே?” தொடர்ந்து கேட்டப்படி வாகனத்தைச் செலுத்தினான்.
“ஓம், ஆனா வைட் ஹவுஸ், பொட்டானிகல் கார்டின், ஏயர் அண்ட் ஸ்பேஸ் மியூசியம் மூண்டு இடமும் இறங்கிப் போய்ப் பார்க்க வேணும்.” பின்னாலிருந்த கவி.
“பொட்டானிகல் கார்டின், ஏயர் அண்ட் ஸ்பேஸ் மியூசியம் ரெண்டுக்கும் போறது எண்டா கஷ்டம் எண்டு நினைக்கிறன். ரெண்டுமே ஐஞ்சு ஐஞ்சரைக்குப் பூட்டிரும். அதைவிட நமக்கு நேரமும் இராது.” யோசனையோடு சொன்னான், வேந்தன்.
“அதெல்லாம் தெரியாது கட்டாயம் பார்க்கோணும் ணா!” என்ற ஆரூரன், “இலக்கியாக்கா! என்ன நீ பாட்டுக் கேட்டுக் கொண்டிருக்கிற? நீயும் தானே கட்டாயம் பார்க்க வேணும் எண்டனி!” கடைசி வரி இருக்கையில் பார்வை வெளியிலிருக்க அமர்ந்திருந்தவளை அழைத்தான்.
அவளுக்குக் கேட்டால் தானே?
திரும்பிப் பார்த்தார் சுகுணா. “காலம நல்ல சந்தோசமா வெளிக்கிட்ட பிள்ள, நீ போட்டிருந்த உடுப்பத் தா எண்டு வாங்கினயே அதுக்குப் பிறகு டல்லாகிட்டாள். இனி இந்தப் பழக்கத்த விடு கவி!” கவியைக் கடிந்து கொண்டது வேந்தன் காதுகளையும் உரசவே செய்தது. சட்டென்று ரியர் வியூ மிரரை நாடிய பார்வை அவளில் தரித்துத் திரும்பியது.
அதுவரை அவனுக்குச் சரியான கோபம், அவளைப் பார்க்கவேயில்லை. ‘சரி அப்பிடியே தமக்கை கேட்டாலும் குடுத்திருவாளோ’ இப்போதும் இப்படித்தான் எண்ணமோடியது. இருந்தாலும், அவள் அமர்ந்திருந்த விதம் மனதைத் தாக்கியது. முதல்நாள் சுறுசுறுவென்று துடிப்போடிருந்தவள் ஓய்ந்திருந்ததைப் பார்க்க முடியவில்லை. இதுவரை அவளனுப்பிய குறுஞ்செய்திகளையும் பார்க்கவில்லையே! ‘பார்த்திருக்கலாமோ!’ மனம் தடுமாறியது.
“உங்கள என்ன செய்யிறதம்மா? அவள் பேசாமல் பாட்டுக்கேட்டுக் கொண்டிருக்கிறாள், எங்க டல்லா இருக்கிறாள்? முதல் அது எனக்கும் அவளுக்கும் இடையில, நீங்க வர வேணாம் சரியோ! அவள் சந்தோசமாத்தான் தந்தவள்.” கவிக்கு, தாயில் கோபம். இப்படி எல்லோருக்கும் முன்னால் வைத்துக் கடிந்து கொண்டதை அவள் கொஞ்சமும் இரசிக்கவில்லை.
“இல்ல, நீ தரமாட்டியோ விடு எண்டு விசுக்கிக் கொண்டு போன பிறகுதான் தந்தவள்.” சுகுணா விடாது தொடர, “டி இலக்கி!” அவள் காதிலிருந்து இயர் ஃபோனை இழுத்து விட்டு முறைத்தாள், கவி.
“என்னக்கா?”
“இப்ப நீ என்ன டல்லா இருக்கிறியா?”
“ஐயோ! அப்பிடி ஆரு சொன்னது? நான் என்பாட்டில இருக்கிறன், நல்ல பாட்டு…” என்ற இலக்கியாவின் பார்வை நேரே முன்னால் பாய்ந்தது. அதே நேரம் வேந்தன் பார்வையும் அங்கிருக்க, கணங்கள் பார்வைகள் மோதிக்கொண்டன. இலக்கியா முறைப்போடு நிமிர்ந்தமர்ந்தாள்.
“வேற ஆரு, உன்ர அம்மா தான்! நான் இந்த உடுப்ப வாங்கிப் போட்டுட்டன் எண்டுதான் நீ டல்லாகிட்டயாம்.” கவி சொல்ல, மீண்டும் முன்னோக்கிப் பாய முயன்ற விழிகளை அடக்கிக்கொண்டாள், இலக்கியா. ஆனால், அவள் விழிகள் கலங்கிடவா என்றன; மூக்குக் கரித்துக்கொண்டு வந்தது.
தன்னையே பார்க்கும் தமக்கைக்குத் தன் கலக்கத்தில் சிறிதையும் காட்டப் விருப்பம் கொள்ளவில்லை, அவள். ஏனென்ற கேள்வி நிச்சயம் ஆழமாகவே வரும். இந்தப் பயணம் ஆரம்பித்ததிலிருந்து அவள் வழமையான கலகலப்புத் தொலைந்திருக்கிறாள் என்று ஒரு முறை கேள்வியெழுந்துவிட்டால் பிறகெப்படிச் சமாளிக்க முடியும்!
கைபேசியைசத் தட்டுவது போல் விழிகளைத் தாழ்த்தி, இயர்ஃபோனைச் சுருட்டி இரண்டையும் கைப்பைக்குள் வைத்துவிட்டு நிமிர்கையில் பெரிதளவில் சுதாகரித்துவிட்டாள்.
“அம்மா என்ன நீங்க? அப்பிடியெல்லாம் ஓண்ணுமில்ல. எப்பவும் போலத்தான் இருக்கிறன். அது எனக்கும் அக்காக்கும் இடையில, நீங்க ஆரும் வர வேணாம்.” என்று அவள் சொல்ல, அருகிலிருந்த தங்கையைக் கட்டிப் பிடித்தபடி தாயை முறைத்தாள் கவி, “இதையேதான் நானும் சொன்னன்.” என்றபடி.
“இது மட்டுமில்ல கவிக்கா, இன்னொரு செட்டும் இருக்கு, உங்களுக்குத்தான்.” என்ற இலக்கியின் பார்வை சிடுசிடுப்போடு முன்னால் பாய, வேந்தனோ நெருப்புப் பார்வையால் மோதினான்.
‘எவ்வளவு துணிவிருந்தா இப்பிடிச் சொல்லுவாள்!’ மனதில் எரிச்சல் மண்டியது. இது அவர்களுள் வழமை போல! தமக்கை கேட்டுத் தவிர்க்க முடியாது கொடுத்திருக்கிறாளென்று தன்னைத்தானே சற்றே சமாதானம் செய்ய முயல்கையில் இப்படிச் சொன்னால் என்னவென்று நினைப்பது?
அவன் ஆசையாசையாக வாங்கிக்கொடுத்த பொருளுக்குரிய மதிப்பு அவ்வளவே! அவனுக்கும். அதன்பின் அவனால் பின்புறம் நோக்க முடியவில்லை. மனதுள் அவமான உணர்வு புகைந்துகொண்டிருந்தது!
அப்பட்டமாகவே அவள் தன்னை அவமதித்ததாக உணர்ந்தவனுக்கு, போட்டிருந்த டீ சேர்ட் முள்ளாகக் குத்தியது. இருக்கையில் அப்படியும் இப்படியும் அசைந்தவன் முகம் சிடுசிடுப்பில்!
திரும்பிப் பார்த்தார் நாதன். ” சொல்ல வேணும் எண்டு நினைச்சனான் தம்பி, உங்கட ஃப்ரெண்ட் மதியும் திரும்ப திரும்ப இன்னொரு ட்ரைவர் ஒழுங்கு செய்யலாம் எண்டு சொன்னவர். அது தேவையில்லை எண்டு நினைச்சாலும் நீங்க இடையிடை எங்களிட்டையும் தரலாம். பெரிய பயணம், தெரியாத இடங்கள் ட்ரைவர் இருந்தால் நல்லது எண்ட அண்ணா தான், யாழ் ட்ராவல்ஸ் ல ட்ரைவரோட வாகனம் புக் பண்ணுற வசதி இருக்கவே அப்பிடியே புக் பண்ணினவர்..” என்று சொல்ல, “அப்பிடியெல்லாம் ஒண்டுமில்ல அங்கிள். அப்பிடியே எனக்கு முடியாத நேரம் தாறனே.” பட்டுக்கத்தரித்தாற் போல் இடைமறித்துச் சொன்னவனை மீண்டும் பார்த்தார் நாதன்.
“நீங்க ஓகே தானே தம்பி?” முடிச்சிட்டிருந்த நெற்றியும் முகமும் ஏதோ சரியில்லையே என்ற எண்ணத்தை ஏற்படுத்தியதில், கேட்டார். அப்படி அவர் வினவுகையில் தான் தன் தவறு புரிந்தது, வேந்தனுக்கு. மிகவும் மரியாதையும் அன்புமாக நடத்தும் பெரியவர்களிடம் தன் சொந்தப் பிரச்னைகளைக் காட்டுவானேன்! பட்டென்று இயல்பாகிவிட்டான்.
“நான் நல்லாத்தான் இருக்கிறன் அங்கிள், ஒண்டுமில்ல, வோஷிங்டன் போய்ச் சேர்ந்து ஆரூரன் சொன்ன மாதிரி பொட்டானிகல் கார்டினுக்கும் மியூசியத்தும் இண்டைக்கே போறது பற்றி யோசிச்சுக் கொண்டிருந்தன்.” அழகாகச் சமாளித்தான்.
“அதுதானே? எனக்கு மட்டும் இல்ல அண்ணா, எல்லாருக்கும் அதுதான் விருப்பம். இதுக்க, இவையல் ரெண்டு பேரும் உடுப்புக்குப் பிரச்சனப்பட்டுக்கொண்டு!” தமக்கைமாரை முறைத்தான் ஆரூரன்.
“டோய்! இங்க யாரும் பிரச்சனைப்படேல்ல சரியோ! நாம ஒவ்வொண்டையும் பிளான் பண்ணிட்டு வெளிக்கிட்டும், சிலர் கதைக்கிறதப் பார்க்க நமக்கு ஒண்டும் தெரியாது போலவும் எல்லாம் தனக்குத்தான் தெரியும் போலவும் கிடக்கு!” இலக்கியா சொன்னது சட்டென்று மற்றவர்களுக்கு விளங்கவில்லை.
அவள் தன்னைச் சீண்டுவது வேந்தனுக்குப் புரிந்தாலும் மனம்தான் சிறிதும் சமாதானம் கொள்ளவில்லை.
“நாம எல்லாருமே இண்டைக்கு அரைமணித்தியாலத்துக்கு முதலே ரெடி. லேட்டா வந்து ஆற அமர சாப்பிட்டுக் குடிச்சிட்டு வந்தது இவர். சோ …இண்டைக்கு இந்த மூண்டு இடத்திலும் இறங்கி வடிவாப் பார்க்க முடியாமல் போனால் அது இவரால் தான்.” படபடவென்று தொடர்ந்தாள், இலக்கியா.
திரும்பிப்பார்த்துக் கண்டிக்க முனைந்தார், நாதன். அதற்கிடையில், “லூசாடி நீ!” தங்கை கையில் பட்டென்று ஒன்று போட்டிருந்தாள், கவி.
“அதான்… என்ன கதை இது இலக்கி?” மாறனும், “பகிடி கதைக்கிறதுக்கும் அளவிருக்கு. ஆரோட எண்டும் இருக்கு.” சுகுணாவும் சேர்ந்துகொண்டார்கள்.
அதையெல்லாம் முறுவலோடு கேட்டுக்கொண்ட இலக்கியாவின் உள்ளமோ, தன்னை நோக்கிப் பாயும் அவன் பார்வைக்காக காத்துக்கிடந்தது. அந்தோ பரிதாபம், விருப்பமே இல்லையென்றாலும் என்ன செய்வதாம்? கல்லுப்போன்ற அவன் முகத்தையே பிரதிபலித்தது ரியர் வியூ மிரரர்!
‘சரிதான் போடா டோய்!’ மனதுள் சொல்லிக்கொண்டே, “அதில்ல சித்தப்பா, பாத்து ஓகேவா இருக்கிறீங்களா எண்டு கேட்கிற அளவுக்கு அவர் யோசிக்கிறாரே, அது தேவையில்லை எண்ட அக்கறையில சொன்னா என்னையே எல்லாரும் குற்றம் சொல்லுங்க!” நெளித்துவிட்டு, “நாம முதல் பஸ் டூர் ல போய் வைட் ஹவுஸ், அடுத்ததா பொட்டானிக்கல் கார்டன் ரெண்டிலும் இறங்கி நேரம் மினக்கடாமல் பார்ப்பம். பிறகு நேரமிருந்தா மியூசியம் போகலாம். இல்லையோ நாளைக்கு விடிய மியூசியம் பார்த்திட்டு அங்கால வெளிக்கிடலாம் தானே?” தீர்வும் சொன்னாள்.
அதே எண்ணம் தான் வேந்தன் மனதிலும். ஆனாலும், வாயே திறக்கவில்லை!
“ம்ம்… முதல் போய்ச் சேர்ந்திட்டு நேரத்தப் பார்த்துச் செய்வம் தம்பி. நாளைக்குத் திரும்பவும் வோஷிங்டனில் நிண்டு மினக்கடுறது பற்றி யோசிக்கவும் வேணும்.” தன் டயரியை விரித்து வைத்துக்கொண்டு சொன்னார், நாதன்.
“ஒண்டும் பிரச்சினையில்ல அங்கிள். பார்ப்பமே!” என்றவன் வாகனமோட்டுவதில் கவனமாகிட, மற்றவர்கள் வழமையான கலகலப்பில் இறங்கிவிட்டாலும் மெல்ல கைபேசியை எடுத்து ‘டோய்! இப்படி முகத்தை வச்சிருக்க வேணாம், பார்க்கச் சகிக்கேல்ல!’ என்று தட்டிவிட்டே கலகலப்பில் இணைந்தாள், இலக்கியா. அப்போதும், வெளிப்பார்வைக்கு கலகலப்பாக இருந்தாலும் மனதில் விட்டால் அழுத்திடுவாள் போன்றே இருந்தாள்.
error: Alert: Content selection is disabled!!