இணைபிரியா நிலை பெறவே 7 – 1

அத்தியாயம் 7

சகாயன் மிகுந்த கடுப்பில் இருந்தான். வினோதினி முழுச் சோம்பேறி. அகிரா வீட்டில் கிரியால் உண்டான பிரச்சனை உண்டு. ஆக, அவன் வினோதினிக்கு நெருக்கடி கொடுத்தால், அவள் ஆரபியை நெருக்குவாள். அதனாலேயே ஆரபி லைப்ரரி வேலைக்கு வருவாள் என்று திட்டம் போட்டுத்தான் காய் நகர்த்தினான். அதுபார்த்தால் மூன்று பெண்களுமாக வரப்போகிறார்களாம்.

தங்கையின் தலையில் நங்கு நங்கு என்று கொட்டினால் என்ன என்கிற அளவிற்கு அவனுக்கு ஆத்திரம். அதே நேரத்தில், “அவளோட உனக்கு என்ன அண்ணா பிரச்சினை? அவளும் சொல்லுறாள் இல்ல. நீயும் சொல்லுறாய் இல்ல. ஆனா, நாங்களும் வந்தாத்தான் அவள் வருவாளாம் எண்டு சொன்னவள். அவளோட ஏதும் பிழையா நடந்தனியா?” என்று வேறு வினோதினி கேட்டுவிட அவன் சினம் உச்சிக்குப் போயிற்று.

“அவளோட எனக்கு என்ன பிரச்சினை எண்டுறது அடுத்தது. அதுக்கு முதல் நீ சொல்லு, உன்ர அண்ணா அப்பிடியான ஒருத்தனா? இது வரைக்கும் அப்பிடி எத்தினை தரம் என்னைப் பற்றிப் பிழையா கேள்விப்பட்டிருக்கிறாய்?” என்றவனின் சீற்றத்தில் திகைத்தாள் வினோதினி.

முன்னரும் ஆரபியும் அவனும் பெரிதாகப் பேசிக்கொள்ள மாட்டார்கள். ஆனால், அவன் சொல்கிற வேலைகளைக் கச்சிதமாக ஆரபி செய்து கொடுப்பாள். சும்மா கேலி கிண்டலுக்கு அவனைப் பற்றிக் கதைத்தாலும் ஊருக்காக அவன் செய்கிற வேலைகள் குறித்து அவளுக்கு அவன் மீது மதிப்பும் மரியாதையும் உண்டு என்று வினோதினிக்கே தெரியும். அடிதடி, சண்டை சச்சரவு என்று அவன் இருப்பது மட்டும் அவளுக்குப் பிடிக்காது.

ஆனால் இப்போது, என்ன நடந்தது என்றே தெரியாமல் இருவரும் ஆளுக்கு ஒரு பக்கமாக முகத்தைத் திருப்பிக்கொண்டு திரிகிறார்கள் என்றுதான் கேட்டாள். அது தமையனை இந்த வகையில் பாதிக்கும் என்று நினைக்கவில்லை.

தன் தவறு புரிய, “என்னன்னா நீ? உன்னப் போய் அப்பிடி நினைப்பனா?” என்றபோது அவளுக்கு விழிகள் கலங்கிப்போயிற்று. என்ன இருந்தாலும் அவளின் தமையன் அவன். அவனைக் குறித்து அவளே சந்தேகமாகக் கேட்டது தவறுதானே.

“பரவாயில்ல. உன்ர நண்பிய வர வேண்டாம் எண்டு சொல்லிவிடு.” என்றுவிட்டுப் போய்விட்டான் அவன்.

ஆனால் வினோதினி இதைப் பற்றி ஆரபியிடம் மூச்சுக்கூட விடவில்லை. மூன்று பெண்களுமாக வேலையைத் தொடங்கினர். சகாயன் அந்தப் பக்கம் வரவேயில்லை. வினோதினிக்கு அது சிறு குற்றவுணர்ச்சி என்றால் ஆரபிக்குப் பெரும் நிம்மதியாயிற்று. உற்சாகமாகவே அனைத்து வேலைகளையும் எடுத்துப் போட்டுச் செய்தாள்.

முதல் இரண்டு நாள்கள் பேச்சும் சிரிப்பும் என்று மிக உற்சாகமாக வேலைகள் நடந்தன. போனமுறை ஒவ்வொரு பிரிவாகப் பிரித்து நேர்த்தியாக அவர்கள் அடுக்கி வைத்தது எல்லாம் எங்கென்று இல்லாமல் ராக்கைகளில் கலந்து கிடந்தன.

முதல் வேலையாக அவற்றை எல்லாம் பொருத்தமான பிரிவின் கீழ் கொண்டுவந்து கணக்கெடுத்தார்கள். பிறகு சேதமடைந்திருந்த புத்தகங்களைப் பசை கொண்டு ஒட்டி, தொடர்ந்து பாவிக்கக்கூடிய வகையில் சீர் செய்தார்கள்.

மூன்றாவது நாள் கிரியோடு வந்து நின்றான் சகாயன். ஆரபி மீதும் வினோதினி மீதும் கோபம் இருந்தாலும் விலகி நிற்க முடியவில்லை. இந்தச் சந்தர்ப்பத்தை விட்டால் வேறு வழியும் இல்லையே அவனுக்கு.

ஆரபிக்கு அவனைக் கண்டு முகம் மாறியது என்றால் கிரி நிற்குமிடத்தில் தானும் நிற்க அகிராவுக்கு மருந்துக்கும் மனமில்லை. வினோதினிக்கும் முகத்தில் இறுக்கத்தோடு வந்து நின்ற தமையனைக் கண்டு இன்னுமே குற்றவுணர்ச்சியாயிற்று.

இந்த இரண்டு நாள்களாக அவள் எவ்வளவு கெஞ்சியும் அவன் சமாதானமாகவில்லை. தன்னை எப்படி அப்படித் தன் தங்கையால் நினைக்க முடிந்தது என்கிற கோபம் அவனை விட்டு இன்னும் போகவில்லை என்று உணர்ந்துகொண்டு, முடிந்தவரை அவனுக்கு இதமாக நடக்க முயன்றுகொண்டிருந்தாள்.

பெண்கள் மூவரும் அந்த இடம் முழுவதும் புத்தகங்களைப் பரப்பி வைத்துக்கொண்டு தரையில் அமர்ந்திருந்துதான் வேலை பார்த்துக்கொண்டிருந்தார்கள். ஒற்றைப் பார்வையால் நடப்பதை அளந்துவிட்டு அவள் எழுதிக்கொண்டிருந்த கொப்பிக்காகக் கையை நீட்டினான் சகாயன்.

‘இவர் பெரிய கொம்பர். வாயத் திறந்து கேக்க மாட்டாராம்.’ உள்ளே புறுபுறுத்தபடி கொப்பியை அவனிடம் கொடுத்தாள் ஆரபி. அங்கிருந்த நாற்காலி ஒன்றை இழுத்துப் போட்டுக்கொண்டு அமர்ந்து கொப்பியைப் பிரித்தான் அவன்.

கண்களில் ஒற்றிக்கொள்ளலாம் போன்ற முத்து முத்தான எழுத்துகள். அதைவிட சிறு பிழை இல்லாது வெகு நேர்த்தியாக அவள் எழுதியிருந்ததைக் கண்டு ஒரு முறை விரல்களால் அந்தப் பக்கத்தையே வருடினான்.

அவன் அந்தக் கொப்பியில் ஆழ்ந்துவிட வினோதினி கிரியோடு பேச ஆரம்பித்தாள். அகிரா அங்கிருந்து உடனேயே புறப்பட விரும்பினாள்.

சகாயனின் தந்தை வந்து பேசி அவளை மேலே படிக்க விட்டிருந்தாலும் அவள் வீட்டில் அவள் மீது விழுந்த கரும்புள்ளி கரும்புள்ளியாகவே நிலைத்துப்போயிற்று. தவறு செய்யாமலேயே தான் சந்தேக வட்டத்துக்குள் இருக்கிறோம் என்பது ஒரு வகையில் வலித்தது என்றால், திரும்பவும் அப்படி ஒரு பேச்சு வருமானால் வீட்டினர் நிச்சயமாகத் திருமணம் செய்து வைத்துவிடுவார்கள் என்று அவளுக்குத் தெரியும்.
அது உண்மையா பொய்யா என்றெல்லாம் அவர்கள் ஆராய்ந்துகொண்டு இருக்கப்போவதில்லை.

அவள் முகம் மாறிவிட்டதைக் கண்ட ஆரபி, “உனக்கு என்னவோ அலுவல் இருக்கு எண்டு சொன்னனீ எல்லா. நீ வெளிக்கிடு.” என்றாள் அவளிடம். தன் நிலையைச் சொல்லாமலேயே புரிந்துகொண்டு நடந்த தோழியை நன்றியுடன் பார்த்துவிட்டு அவள் எழுந்துகொண்டாள்.

கிரிக்கு ஆத்திரத்திலும் அவமானத்திலும் முகம் கன்றிப்போயிற்று. நடந்த அத்தனை அவமானங்களுக்குப் பிறகும் அங்கு வைத்து அவளைக் கண்டு அவன் உள்ளம் தடுமாறிப்போனது உண்மை. இவள் இனி தனக்கு இல்லையா என்று ஏங்கிப்போனான்.

ஆனாலும் தன்னால் அவளுக்கும் அவள் வீட்டில் பிரச்சனை என்று தெரிந்ததிலிருந்து அவனும் ஒதுங்கித்தான் இருந்தான். ஆனால் இந்த ஆரபி, அவன் ஏதாவது செய்துவிடப்போகிறான் என்று புத்திசாலித்தனமாக நடப்பதாக எண்ணிக்கொண்டு பார்த்த வேலை அவனை எரிச்சலூட்டிற்று.

அதுவரை கொப்பியில் ஆழ்ந்திருந்த சகாயனும் அவள் சொன்னதைக் கேட்டு வேகமாக நிமிர்ந்து கிரியைப் பார்த்தான். ஒரு ஆணாகப் பெண்களின் முன்னே அவமானத்தில் சிறுத்து நிற்கும் நண்பனின் மனநிலையை உணர்ந்துகொண்ட சகாயன், ஆரபியைப் பார்வையால் எரித்தான்.

என்ன இது புதுப் பிரச்சனை என்று அவள் தடுமாற, திரும்பி அகிராவைப் பார்த்தான்.

“நான் போகோணும் அண்ணா.” என்றாள் அவள் தயக்கத்துடன். அவனுக்கும் அவள் சூழ்நிலை தெரியுமே. “சரி கவனமா போகோணும்.” என்று சொல்லி அனுப்பிவைத்தவனுக்கு கிரியை இங்கே கூட்டிக்கொண்டு வந்திருக்க வேண்டாமோ என்று இப்போது தோன்றிற்று.

ஆனால், அவனும்தான் புதுப் புத்தகங்கள் வாங்குவது தொடங்கி அத்தனையிலும் கூட இருந்தான். இங்கே மட்டும் வராதே என்று தவிர்த்தால் தானே அவனை ஒதுக்குவது போலாகும் என்றுதான் அழைத்துவந்தான்.

அதைவிட கிரியே இது சரி வராது என்கிற மனநிலைக்கு வந்துவிட்டது அவனுக்குத் தெரியும். அதுவே அனைத்தையும் முடிந்ததாக எண்ணி கடப்பதுதான் சரி என்று அவனை எண்ண வைத்திருந்தது.

அதைவிட அவர்கள் எல்லோரும் ஒரே ஊருக்குள் இருப்பவர்கள். ஒருவர் மற்றவரைப் பார்க்கும் சந்தர்ப்பங்களைத் தவிர்க்க முடியாது. ஆனால், முந்திரிக்கொட்டைத் தனமாக ஆரபி பார்த்த வேலை?

“அப்ப நானும் போகவா?” என்றாள் வினோதினி. மௌனமாக இங்கே நடந்தவற்றைப் பார்த்தவளுக்குக் கிரி, அகிரா பிரச்னையால்தான் இவர்கள் இருவரும் முட்டிக்கொண்டிருக்கிறார்கள் போலும் என்று தோன்றிற்று.

ஆனால் இதை எதிர்பாராத ஆரபி, எட்டி அவள் தொடையில் கிள்ளிவிட்டாள்.

“ஐயோ அம்மா என்னத்துக்கடி நுள்ளுறாய்(கிள்ளுதல்)?” தொடையைத் தேய்த்துவிட்டபடி சீறினாள் வினோதினி.

“இஞ்ச இவ்வளவு வேல இருக்கு. நீ போனா நான் தனியா எப்பிடி முடிக்கிறது?” என்னைத் தனியாக விட்டுவிட்டுப் போகாதே என்று சகாயன் முன் சொல்ல முடியாதே.

“ஏன், அண்ணா இருக்கிறான்தானே? அவனோட சேர்ந்து செய். போனமுறை நீயும் அண்ணாவும்தானே செய்தனீங்க!”

சகாயனின் முன்னேயே அவள் அப்படிச் சொல்லவும் என்ன சொல்வது என்று தெரியாது தடுமாறினாள் ஆரபி. இவள் இருப்பாள் என்று நம்பித்தானே அகிராவை அனுப்பினாள். ‘ப்ளீஸடி நில்லு!’ என்று கண்ணால் கெஞ்சியவளை மற்றவள் சட்டை செய்யவில்லை.

இதையெல்லாம் கவனித்த சகாயன், “உன்ர ஃபிரெண்ட்ட நாங்க என்ன கடிச்சுத் திண்டுடுவம் எண்டு பயப்பிடுறாளா?” என்று தங்கையிடம் பாய்ந்தான்.

“ஓம் போல அண்ணா. நீ நிக்கிற பக்கமே வரமாட்டன் எண்டு நிக்கிறாள் அவள். என்ன எண்டு கேளு!” என்று மாட்டி விட்டுவிட்டு ஓடியே இருந்தாள் வினோதினி.

அவளுக்குப் பிடிக்கவே பிடிக்காத வேலை இது. தெரியாமல் மாட்டிக்கொண்டு விழி பிதுங்கியவள் சந்தர்ப்பம் கிடைத்ததும் தப்பித்துக்கொண்டாள்.

ஆரபிக்கு மெல்லிய பதற்றம் தொற்றிக்கொண்டது. “நானும் போயிற்று நாளைக்கு வரட்டா?” என்றாள் மெல்ல.

“ஏன், அதே வேலைய இண்டைக்குப் பாத்தா பேய் பிசாசு ஏதும் பிடிச்சிடுமா உன்னை?”

அதற்குப் பதிலாகத்தான் அவன் வந்து நிற்கிறானே. இதைச் சொல்லவா முடியும்? பயத்தில் மிடறு விழுங்கினாள் அவள்.

error: Alert: Content selection is disabled!!