ரோசி கஜனின் இயற்கை – 27 – 2

“பிள்ள நீ அடங்க மாட்ட என்ன?” என்ற சுகுணாவுக்கு, “இப்ப நான் இல்லாததையா சொன்னன்.” என்றவள், “சரி சரி சொல்ல வந்ததச் சொல்லுங்கோ கேட்பம்.” கை கட்டி பின்னால் சாய்ந்து வசதியாக அமர்ந்து கொண்டாள். 

அவள் சேட்டைகளை உணர்ந்தவனுக்கு காரை ஓரம் கட்டி நிறுத்திவிட்டு …

 ஆசையோடு பயணப்படத் துணிந்தது, மனதின் எண்ணவோட்டம்! 

‘கல்யாணம் செய்த கையோட அவளோட இப்பிடி எல்லா இடமும் வரவேணும்.’ மீண்டும் மனதுள் தீர்மானம் செத்தவன் பார்வை மீண்டுமொரு முறை அவள் விழிகளைத் தொட்டு வந்தது.

அவள் பார்வை சுற்றத்தைக் கூட இரசிக்கவில்லை… ரிவர் வியூ மிரரில்! நெற்றியை மேலேற்றி இறக்கியவளை என்ன செய்வது!

“என்ன சத்தமே இல்ல? மறந்து போனிங்களோ? அப்பிடியே ஓரமா நிப்பாட்டிப்போட்டு  பார்த்திட்டுச் சொல்லுங்க.” விடாது தொடர்ந்தாள். 

“போதும் டி நிப்பாட்டு!” கவிதான். 

“ஹா…ஹா… பரவாயில்ல, நீங்களே ‘அன்டிலோப் ஐலன்ட்’ எண்டு கூகிள்ல தட்டி வாசியுங்கோவன், சும்மா கையைக் கட்டிக்கொண்டு இருக்காம.” வேந்தன் சொல்ல, “ஹலோ ஹலோ…காரை ஓரம் கட்டுங்க, நான் ஓடுறன் நீங்க கையைக் கட்டிக்கொண்டு இருந்து வாங்க.” வெடுக்கென்று சொன்னாள், இலக்கியா. 

“இலக்கியா…” நாதன்.

“பகிடி சித்தப்பா! அவருக்கு அந்தளவு விளப்பம் இல்லையா என்ன”” விழிகள் சுருங்க வாயடித்தாள். 

“நீங்க சொல்லுங்க வேந்தன் நாங்க கேட்கிறம், இவைக்கு வேற வேல இல்ல.” ஆருரனின் தாய் இடையிட்டார்.

“இதில பெரிசா என்ன சொல்லக் கிடக்குச் சித்தி? “ ‘ஃபாமிங்டன் பே’ க்கு நடுவால நாம போய்க்கொண்டு இருக்கிறம், அவ்வளவும் தான்.” என்ற இலக்கியா, “சரி சரி முறைக்காதீங்கப்பா! நானும் கூகிள் சொல்லறது போலவே சொல்லவோ!” என்ற வேகத்தில், “யூ எஸ் ஏ ட ஸ்டேஸ் ல ஒண்டு யூட்டா(Utah); அதிண்ட ஹோம் டவுன் தான் ‘சோல்ட் லேக் சிட்டி’. இப்ப சரியோ!” இராகம் இழுத்தாள்.

“அடிவாங்கப் போறா ஒராள்.” அஜி.

“கடவுளே! இதையே கூகிள் சொன்னா வாயைத் திறந்து கொண்டு கேட்பீங்க நான் சொன்னா நக்கல் நையாண்டி!”

“நீ இப்ப என்னட்ட வாங்குவ…அதென்ன கூகிள்?” சிடுசிடுத்தாள் கவி.

“பார்ரா! குடும்பமே நமக்கு எதிரா திரும்புது!” வியந்தவள் முகம் கனிந்தது கிடந்தது. அவன் மீது தன் குடும்பம் காட்டும் அன்பு அவள் மனதுக்கு அத்துணை இதமாகவிருந்தது.

“உப்புத்தண்ணி ஏரி! இப்ப இருக்கிறத விட முந்தி பெண்ணாம் பெரிசாம்!” இடையிட்ட ஆரூரன், “அன்டிலோப் ஐலன்ட் சோல்ட் லேக் சிட்டிட மேற்கில இருக்கு. இங்க உள்ள பத்துத் தீவுகளில ஒண்டு மட்டுமில்ல, பெரிய தீவும் இதான். அதோட வெள்ள மணல் ஏரிக்கரை இருக்கு. நிச்சலடிக்க எண்டே இங்க நிறையப்பேர் வருவினமாம். நடந்து, சைக்கிளில எண்டும்  சுற்றலாம். அதுமட்டுமில்லாமல் நிறைய தாவர விலங்கினங்கள் இந்த ஸ்டேட்ஸ் பார்க்கில இருக்கு. குறிப்பா, மறி மான் அதான் அன்டிலோப், மான், பொப் கட்ஸ் (bob cats), குதிரைகள், பைசன்ஸ்(bisons), எருமைகள், பருந்துகள் அதோட குதிரைப்பண்ணை எண்டு நிறைய இருக்கு.” மூச்சு விடாது ஒப்பித்தவன், “இதுக்குப் போய் பெரிய வாக்குவாதம் என்ன வேந்தன் அண்ணா?” கண்ணடித்து முறுவலித்தான்.

“அதான்…” முறுவலோடு சொன்னபடி காரை ஓரமாக நிறுத்தவும், “இங்க ஏன்?” பின்னாலிருந்து கேள்வியெழுந்தது.

“வேற என்னத்துக்கு நம்மட கமராக்கு வேலை வைக்கத்தான்.” ஆரூரன் சொன்ன விதத்தில் கலகலப்பு நகைப்போடு இறங்கி நடந்தார்கள், எல்லோரும்.

”சரி சரி, இப்ப இருந்து ஆரூரன் ‘கூகிள் டூ’ எண்டு அழைக்கப்படுவார்.” என்று சொன்ன படி இறங்கிய இலக்கியாவை அடிக்கக் கலைத்தான், ஆரூரன். அவளோ, ஓடிச் சென்று அங்கிருந்த  பைசன்ஸ் உருவச் சிலைக்குப் பின்னால் நின்றுகொண்டு, “ஆராவது ஒரு நல்ல உள்ளம் தனியா என்னை ஒரு கிளிக்!” வாயெல்லாம் பல்லாக நின்றபடி சொன்னவளை எல்லோரினதும் கமராக்கள் உள்வாங்கிக் கொண்டன. வேந்தன் மட்டும் சும்மா இருப்பானா என்ன!

அதன் பின்னர் எல்லோருமாக புகைப்படங்கள் எடுத்துக்கொண்டு ஸ்டேட்ஸ் பார்க்கினுள் நுழைந்தவர்கள், “முதல் காரில ஒரு ரவுண்ட் வருவம்.” வேந்தன் சொல்லவே, சம்மதித்து மெதுவாகவே சுற்றி வந்தார்கள்.

ஆரூரன் சொன்னபடி, இயற்கை வஞ்சகமேயின்றிப் பரந்து கிடந்தது. நீல வானும், ஆதவனின் அதித காதலால் பச்சைக்குப் போட்டியாக மஞ்சள் போர்த்தியிந்த மண்ணும், சற்றே தூரத்தே சுற்றிப் படர்ந்து கிடந்த மலைத்தொடர்களும், அவற்றைக் கொஞ்சிச் செல்லும் வெண்மேகத் திட்டுகளுமாக கண்ணுக்கு நல்ல விருந்து கிடைத்ததென்றால், மறுபுறமோ, விட்டுவீதியாகத் திரியும் மிருகங்கள் கருத்தினைக் கவர்ந்தன. 

கலகலப்போடு போட்டி போட்டுக்கொண்டு புகைப்படங்கள் வீடியோ எடுப்பதென்றிருந்தவர்கள், ஓரிடத்தில் காரை நிறுத்தவும் விறுவிறுவென்று இறங்கினார்கள். முன்னே பரந்து கிடந்த சோல்ட் லேக்கின் கரையைக் கண்டுவிட்டுச் சும்மா நிற்பார்களா என்ன?

இறங்கிய வேகத்தில் இளையவர்கள் ஒரே ஓட்டமாகச் செல்ல, அவர்களையெல்லாம் முந்திக்கொண்டு முதல் ஆளாகச் சென்றது, இலக்கியாதான். அவளோடு போட்டிக்கு ஓடிய ஆரூரன், கவின் அழவும் நின்று அவனையும் கூட்டிக்கொண்டு நடந்தான்.

வேந்தன் இறங்கி வருவதற்குள் பெரியவர்களும் ஏரிக்கரை நோக்கிச் சென்று கொண்டிருந்தார்கள். நாதன் மட்டும் இவனுக்காகக் காத்திருந்தார்.

“அங்க கரையில கருப்பு மணல் போல ஒருவகைப்பூச்சி இருக்கு அங்கிள், கடிக்காது எண்டு எங்கயோ வாசிச்சன்…எண்டாலும் பார்த்து இறங்கச் சொல்ல வேணும்.” அவன் சொல்லிக்கொண்டு நடக்கத் தொடங்கவே, குய்யோ முறையோ என்று கத்தத்  தொடங்கியிருந்தார்கள்.

“பச் சொன்னன்…” என்ற வேந்தன், திரும்பி ஓரெட்டில் காரை அடைந்து சில தண்ணிப் போத்தல்களையும் எடுத்துக்கொண்டு சென்றடைவதற்குள் இலக்கியாவும் ராஜியின் மகளும் துள்ளோ துள்ளென்று துள்ளி, கத்தி ஆர்பாட்டம் செய்து விட்டார்கள்.

 “பச்! கத்தாதேயும், அது ஒண்ணும் கடிக்காது, இந்தா கழுவும்!” முதலில் நின்ற இலக்கியாவிடம் தண்ணீர்போத்தலை நீட்ட, இடையிட்டு வாங்கிக்கொண்ட ஆரூரன், “ஆடாம நில்லடி! தண்ணியையே காணாத கணக்கில ஓடிவந்து பாஞ்சா இதுதான் நடக்கும்.” ராஜியின் மகள் கால்களில் தண்ணியை ஊற்றத் தொடங்கியிருந்தான்.

அவனுமல்லோ இறங்கியிருக்க வேண்டியவன்! ‘கவின்! என்ர செல்லக்குட்டி வாழ்க!’ மனதுள், தன்னைப் பின்தங்க வைத்த குட்டிச்சகோதரனை கட்டியணைத்துக் கொண்டான்.

 வேந்தனும் தாமதிக்கவில்லை. “துள்ளினா எப்பிடி? பேசாமல் நிண்டு கழுவும். இவ்வளவும் தான் வீரமோ!” 

அவள் படும் பாடு ஏற்படுத்திய நகைப்போடு தண்ணீரை ஊற்ற்றினான். சுழன்று சுழன்று கால்களில் நீரைத் தாங்கிக் கழுவியவள் ஒரு நொடி  தடுமாறிவிட்டாள். பட்டென்று  அவன் கரத்தைப் பற்றித் தன்னை நிலைப்படுத்திக்கொண்டவள், வெகு இயல்பாக, அவனைப் பிடித்தபடியே நின்று கழுவியவளுக்குச் சற்றே தாமதமாகவே தன் செய்கை உறைத்தது.

 மறுநொடியே பிடித்திருந்த பிடியை விட்டுவிட்டாள். மறந்தும் பார்வையை எங்கும் திருப்பவில்லை. அவனையும் பார்க்கவில்லை. 

error: Alert: Content selection is disabled!!