வீட்டில் வேறு திருமணம் செய்யச் சொல்லி வற்புறுத்திக்கொண்டிருந்தார்கள். இதில் அவளுக்கு அவளை மதிக்கும் ஒருவன் வேண்டுமாம். அவள் சொல்வதில் நியாயம் இல்லையா என்று அவன் மனமே அவனைக் கேள்வி கேட்காமல் இல்லை. அதற்கென்று அவளை விட்டுவிட முடியுமா என்ன?
என்ன செய்வது என்று யோசித்துக்கொண்டிருந்தான். இதற்குள் ஆனந்தனின் திருமண நாளும் அழகாய் விடிந்திருந்தது.
இதுவரையில் அவர்கள் சென்ற திருமண விழாக்களில் எல்லாம் அவர்கள் வாழ்க்கையில் ஏதோ ஒன்று முக்கியமாக நிகழ்ந்திருக்கின்றது. இன்று என்ன நடக்குமோ என்று நினைக்கவே ஆரபிக்கு நெஞ்சு நடுங்கிற்று. இந்த முறை அவன் பார்க்க வேண்டும் என்று பிரத்தியேகமாகத் தயாராகும் எண்ணம் அவளுக்கு இல்லை.
ஆனால், ஆனந்தன் அதற்கு விடவில்லை. அவனுடைய ஒற்றைத் தங்கை அவன் திருமணத்தில் சாதாரணமாக நிற்பதா? மிகுந்த வேலைப்பாடு கொண்ட பட்டுச் சேலை எடுத்துக்கொடுத்து, அவளை அலங்கரிப்பதற்கு என்று பிரத்தியேகமாக அழகுக்கலை நிபுணர் ஒருவரை நியமித்திருந்தான்.
உற்றாரும் உறவினரும் கூடி நிற்க, ராகினியின் கழுத்தில் பொன் தாலி பூட்டி, அவளைத் தன் சரிபாதியாக்கிக்கொண்டான் ஆனந்தன். சகாயன் தன் மொத்தக் குடும்பத்துடனும் வந்திருந்தான். முன்னிருக்கைகளில்தான் அமரவைக்கட்டிருந்தார்கள்.
தமையனின் திருமணம் என்பதாலோ என்னவோ தன்னை மறந்து முகம் முழுக்க நிறைந்த புன்னகையுடன் சிட்டுக் குருவியாக மேடை ஏறுவது இறங்குவதும் என்று ஓடியோடி அனைத்தையும் கவனித்துக்கொண்டு இருந்தவளிடமிருந்து பார்வையை அகற்றுவது அவனுக்கு மிகவும் சிரமமாக இருந்தது.
அன்று அவள் முன்னால் புகைத்ததன் பின்னால் அதை அவன் தொட்டுக்கூடப் பார்த்ததில்லை. கிரியுடன் கதைப்பதைக் கூட விட்டுவிட்டான். என்னவோ ஒரு வலி. கிரி மீது கோபம் என்பதை விடவும் அவனுக்கு அவன் மீதுதான் கோபம்.
கிரியைத் தங்களுக்குள் கொண்டு வராதே என்று அத்தனை முறை அவள் சொல்லியும், கொண்டுவர மாட்டேன் என்று அவளிடம் வாக்கும் கொடுத்துவிட்டுக் கடைசியில் என்ன செய்தான்?
நிலையிழந்து அவன் ஆற்றிய காரியத்திற்கு தண்டனையாகக் கடந்த இரண்டரை வருடங்களாகப் பேச வேண்டி வந்தாலோ, முக்கிய விடயங்கள் ஏதும் என்றாலோ மட்டுமே பேசுவான். அது தவிர்த்துப் பழைய நட்பின் பெயரில் முன்னர் போன்று ஒன்றாகச் சுற்றுவதில்லை.
ஆனால், ஆறு மாதங்களுக்கு முன்னர் கிரியின் அன்னை தவறியிருந்தார். அப்போது முற்றிலுமாக உடைந்திருந்த கிரியைத் தேற்றி, ஓரளவுக்கு வெளியில் கொண்டுவந்தது சகாயன்தான். இப்படி இருக்கையில்தான் அவளின் மீள்வரவு.
திருமண வீட்டில் எல்லோருக்கும் பிரமாதமான விருந்து படைக்கப்பட்டது. அன்று மாலையே வரவேற்பும் நடந்தது. அந்த வரவேற்புக்குத் தோதாக அசைகின்ற பொழுதுகளில் எல்லாம் இலேசாக இடை தெரியும் வண்ணம், உடல் முழுவதும் கற்கள் பதித்த, அடர் சிவப்பு நிற லெகங்காவில், குழல்களைச் சுருட்டிவிட்டு, மிக அழகான முக அலங்காரத்தோடு வந்து நின்றவளைக் கண்டு மார்பைத் தேய்த்துவிட்டான் சகாயன்.
அவன் கண்ணை மட்டுமல்ல கலைமகளின் கண்களையும் கவர்ந்தாள் ஆரபி. நவரத்தினம் வெளியே அலுவல்கள் இருக்கிறது என்றுவிட்டு விருந்து முடிந்ததுமே புறப்பட்டிருந்தார்.
அவளைக் கைப்பிடியோடே அழைத்துச் சென்று, “அண்ணா! ஆரபிக்குப் பாக்கிறீங்களாம் எண்டு சொன்னா ஆரபி. எனக்கும் இவருக்கும் வேற ஆசை இருக்கு. வேற ஆரையும் பாத்து முற்றாக்கிறதுக்கு முதல் எங்களுக்கு ஒரு வார்த்த சொல்லுங்கோ.” என்றதும் திகைத்துப்போய் வேகமாகச் சகாயனைத் திரும்பிப் பார்த்தாள் ஆரபி.
அங்கே குணால் கிரியுடன் நின்ற அவன் பார்வையும் இவளில்தான். பதறிப்போய் வேகமாகத் திரும்பி அன்னையைப் பார்த்தாள். சம்மதித்துவிடாதீர்கள் என்கிற பரிதவிப்பு அவள் விழிகளில்.
வினோதினியும் இதை எதிர்பார்க்கவில்லை. “என்னம்மா சொல்லுறீங்க? சொல்லுறதத் தெளிவா சொல்லுங்கோ.” என்று பரபரத்தாள்.
“இல்லை பிள்ளை. அகிரான்ர கலியாணத்தில வச்சே எனக்கு இந்த ஆசை வந்திட்டுது. உங்கட அப்பாட்ட சொன்னனான். நேரம் வரட்டும் எண்டு சொன்னவர். இப்ப எங்களுக்கு முழு விருப்பம். இதைப் பற்றி நாங்க இன்னும் தம்பியோட கூடக் கதைக்கேல்ல. மறுக்கமாட்டான் எண்டு நினைக்கிறன். எண்டாலும் நீங்க எல்லாரும் உங்களுக்க கதைச்சு, ஆரபியையும் கேட்டுப்போட்டு நல்ல முடிவா சொல்லுங்கோவன்.” என்று நல்ல விதமாகவே தங்கள் விருப்பத்தைத் தெரியப்படுத்தினார் கலைமகள்.
செந்தில்குமரனுக்கும் மங்கையற்கரசிக்கும் என்ன சொல்வது என்று தெரியாத நிலை. இப்படி ஒரு எண்ணத்தில் இருக்கிறார்களோ என்கிற எண்ணம் முதலே அவர்களுக்கு வந்திருந்ததுதான். என்றாலும் வெளிப்படையாக அவர் சொன்ன நேரம், ஒரு சந்தோசம் ஊற்றெடுத்த அதே சமயம் இது சரியா வருமா என்கிற யோசனையும்.
நவரத்தினம் தனக்கு அடுத்த அரசியல் வாரிசாக அவனை நிலைநிறுத்துவதில் மும்முரமாக இறங்கிவிட்டது அவர்கள் எல்லோருக்கும் தெரியும். அரசியலில் இருப்பவன் தம் மகளுக்குப் பொருந்தி வருவானா, நாளைக்குக் கெட்டதாக எதுவும் நடந்துவிட்டால் என்று பலதும் அப்போதே அவர்களுக்குள் ஓட ஆரம்பித்திருந்தது.
அதே நேரத்தில் மகள் விழிகளில் தெரியும் பரிதவிப்பு வேறு யோசிக்கச் சொன்னது.
“நீங்க கேட்டதே பெரிய சந்தோசம். இப்பதானே மகனின்ர கலியாணம் முடிஞ்சிருக்கு. ஆறுதலா ஒரு நாளைக்கு எல்லாரோடையும் கதைச்சுப்போட்டுச் சொல்லுறமே.” என்று நல்லபடியாகவே அதை முடித்தார்கள்.
தூர நின்றாலும் அன்று முழுக்கத் தன்னைத் திரும்பியும் பாராமல் நின்றவளின் அதிர்ந்த பார்வை சகாயனைக் குழப்பிற்று. என்னவோ என்று அவர்களையே கவனித்தான்.
ஆரபி குடும்பத்தினரிடம் விடைபெற்றுக்கொண்டு வந்த தன் குடும்பத்தை அவன் கேள்வியாகப் பார்க்க, “அண்ணா, உனக்கும் ஆருக்கும் அம்மா கலியாணம் பேசுறா.” என்று அவிழ்த்துவிட்டாள் வினோதினி.
சட்டென்று திரும்பி ஆரபியைத்தான் பார்த்தான் சகாயன். அவள் அங்கே கலங்கிச் சிவந்துவிட்ட முகத்துடன் அன்னையிடம் எதையோ மறுத்துப் பேசுவது புரிந்தது. எதையோ என்ன, அவனைத்தான் மறுக்கிறாள் என்று மிக நன்றாகவே புரிந்தது.
விடாத அவன் பார்வை அவளைச் சுட்டது போலும். தன்னை மீறித் திரும்பிப் பார்த்தாள். குணால், கிரியுடன் வந்து அவர்களிடம் தானும் விடைபெற்றான் சகாயன். செந்தில்குமரனும் மங்கையற்கரசியும் புதிதாகப் பார்ப்பதுபோல் அவனைப் பார்த்தனர்.
அழகான, அளவான முறுவலில் அதையெல்லாம் எதிர்கொண்டு புறப்பட்டவன் ஒரு முறை அவள் பார்வையைக் கவ்விட்டே விலகிச் சென்றான்.

