இணைபிரியா நிலை பெறவே 20 – 1

நவரத்தினம், கலைமகள் மட்டுமில்லை, வினோதினி கூட இதைக் கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை. அதே நேரத்தில் நம்பாமல் இருக்கவும் முடியவில்லை. அதுவும் வினோதினிக்கு யோசிக்க யோசிக்கப் பல விடயங்கள் பிடிபட்டன.

தமையன் திருமணத்திற்கு மறுத்துக்கொண்டே இருப்பதும், கடந்த மூன்று வருடங்களும் ஆரபி ஊருக்கே வராமல் இருந்ததும், முற்று முழுதாகத் தன்னோடான தொடர்பை அவள் அறுத்துக்கொண்டதும், தமையனுக்கும் அவளுக்குமிடையிலான புதிர் நிறைந்த அந்த உறவு என்று எல்லாவற்றையும் யோசிக்கையில் ஆத்திரமும் அழுகையும் பொங்கிக்கொண்டு வந்தன.

எவ்வளவு பெரிய விடயம். அதை விட எத்தனை வருடங்கள்? அவள் மூச்சே விடவில்லையே! ஆனால் இவர்கள் உயிர் நண்பிகள். வேகமாகக் கைப்பேசியை எடுத்து ஆரபிக்கு அழைக்கப்போனாள். அதற்கு விடாமல் அவளை அதட்டி அடக்கினார் கலைமகள்.

அவருக்கும் ஒரு வகையான ஏமாற்றமும் கோபமும்தான். இத்தனை வருடங்களில் ஒருமுறை கூட இருவருமே ஒரு வார்த்தை கூட இதைப் பற்றிப் பேசவில்லையே என்று மனம் கொதிக்கக் காத்திருக்க, வந்தான் சகாயன்.

தந்தை வீட்டில் இருப்பதும், அங்கு நிலவிய கனமான அமைதியும் என்னவோ சரியில்லை என்று சொல்லிற்று. “என்னம்மா?” என்றான் ஒன்றும் புரியாமல்.

“என்னவோ? என்ன மனுசன் அண்ணா நீ? ஆரபியும் நீயும் விரும்பி இருக்கிறீங்க. ஆனாலும் ஒரு வார்த்தை சொல்லேல்ல என்ன?” என்றதும் அதிர்வுடன் அங்கிருந்த கிரியைத்தான் வேகமாகத் திரும்பிப் பார்த்தான் சகாயன்.

“அங்க என்ன தம்பி பார்வை? அவன் சொல்லாட்டி இப்பவும் எங்களுக்கு ஒண்டும் தெரிஞ்சிருக்காது. இதில அந்தப் பிள்ளை உன்னை அப்பிடிப் பாக்கேல்லை எண்டு சொல்லிவிட்டிருக்கறா. என்னய்யா இதெல்லாம்?” ஆற்றாமையும் ஆதங்கமுமாகக் கேட்டார் கலைமகள்.

சகாயனின் முகம் மாறிப்போனது. அதைக் கவனித்த நவரத்தினம் மனைவியை அடக்கிவிட்டு, “இனி என்ன செய்றதா இருக்கிறீங்க தம்பி?” என்று அவனிடமே கேட்டார்.

ஒன்றுமே சொல்லாமல் நின்றான் அவன். அவனும் அடுத்து என்ன செய்வது என்கிற யோசனையில்தான் இருந்தான்.

“அப்பா கேக்கிறார் எல்லா தம்பி. சொல்லன். இல்ல, நாங்க போய் அங்க கதைக்கவா?” என்றதும் உடனே மறுத்தான் அவன்.

“முதல் நான் ஒருக்கா அவளோட கதைக்கோணும் அம்மா.”

“வேணாம் தம்பி. நீங்க ரெண்டு பேரும் கதைச்சுப் பிடுங்குப்பட்டது எல்லாம் போதும். நாங்க பேசிக் கட்டி வைக்கிறம். பிறகு இருந்து ஆறுதலா கதைங்கோ.” கலைமகளுக்கு அவர்கள் இருவர் மீதும் நம்பிக்கை இல்லை.

தாம் இருவரும் புகைத்த விடயத்தைப் பற்றிச் சொல்லாதுபோனாலும் நடந்தவற்றை முடிந்தளவில் அப்படியேதான் சொல்லியிருந்தான் கிரி. அவர்கள் இருவரும் சேர்ந்திருந்தால் கூட அவனை எதுவும் பெரிதாகத் தாக்கியிராது.

அவர்கள் பிரிந்து நிற்பதும், தன்னை ஒரு வார்த்தை கூடச் சொல்லாமல் அனைத்தையும் தனக்குள் போட்டுக்கொண்டு நடமாடும் சகாயனும், அன்னையை இழந்துவிட்டு நிற்கும் தன் நிலையும் சேர்ந்து அவனை நிம்மதியாக இருக்க விடவில்லை.

எல்லாவற்றையும் விட அவனுக்குப் பெண் பார்க்க ஆரம்பித்திருந்தார் அவன் தந்தை. எப்படியும் சகாயன் திருமணம் செய்துகொள்ளாமல் தான் திருமண வாழ்வினுள் போவதில்லை என்கிற முடிவில்தான் இருக்கிறான். என்றாலும் ஆரபி வீட்டினர் மூலமும் மறுத்துவிட்ட பிறகு பேசாமல் இருக்க கூடாது என்றுதான் வந்து சொல்லியிருந்தான்.

என்னதான் எதையும் மறக்காமல் சொன்னாலும் ஒரு நிகழ்வின் பாதிப்பு, வாய் மொழியில் சொல்கையில் முழுமையாக யாரிடமும் வந்து சேரப்போவதில்லை. அதில், இந்தக் காலத்துப் பிள்ளைகள் ஒழுங்கான புரிதல் இல்லாமல் அடிபட்டுப் பிரிந்து நிற்கிறார்கள் என்கிற அளவிலேயே கலைமகளும் நவரத்தினமும் எடுத்துக்கொண்டார்கள். அதில்தான் கலைமகள் அப்படிச் சொன்னார்.

சகாயன் அதற்கு உடன்பட மறுத்தான். “இல்லை அம்மா. நான் முதல் அவளோட கதைக்கிறன். அதுக்குப் பிறகு என்ன செய்றது எண்டு பாப்பம். அது வரைக்கும் இதப் பற்றி அவளின்ர வீட்டில ஆரும் கதைக்க வேண்டாம். வினோ நீயும்தான்.” என்றதும் படக்கென்று முகத்தைத் திருப்பி மறுப்பைத் தெரிவித்தாள் அவள்.

“வினோ!”

“வினோக்கு என்ன? உனக்கும் அவளுக்குமிடைல என்ன எண்டாலும் நடந்திருக்கட்டும் அண்ணா. நான் அவளின்ர ஃபிரெண்ட். உன்னோட பிடிச்ச சண்டைக்காக என்னோட கதைக்காம இருந்திருக்கிறாளே. அப்பவும் என்ன ஏது எண்டு குடையாம அவளோட பழகி இருக்கிறன் எண்டா நான் எவ்வளவு பெரிய லூசு எண்டு பார்!” என்று கோபத்தில் படபடக்கும்போதே விழிகள் கலங்கிக் குரல் உடைந்துபோயிற்று அவளுக்கு.

“அதுக்கு இப்பிடித்தான் கண்ணைக் கசக்குவியா? பிறகு குணால் வந்து என்னோட சண்டை பிடிக்கப் போறார்.” என்று அவளை ஒற்றைக் கையால் அணைத்து அவன் ஆறுதல் சொல்ல வந்தான் தமையன்.

அவனைப் பிடித்துத் தள்ளிவிட்டாள் ஆரபி. “நீயும் ஒண்டும் ஒழுங்கில்ல போ! நீயும் சேந்துதானே எல்லாத்தையும் மறைச்சனி!” என்று முகம் காட்டினாள்.

“மறைக்க நினைக்கேல்ல வினோ. படிப்பு முடியட்டும் எண்டு நினைச்சம். அதுக்கிடையில எல்லாம் மாறிப்போச்சு.” என்ற தமையனை இப்போது கவலையோடு நோக்கினாள் அவள்.

அவளால் தன் தமையனின் நேசம் தோற்றுப்போனதை, அல்லது விரிசல் கண்டு நிற்பதை ஏற்றுக்கொள்ள இயலவில்லை. அவள் உள்ளம் அவனுக்காகத் துடித்தது. “உண்மையிலேயே ஆர்ல அண்ணா பிழை?” என்றாள் கலங்கிய குரலில்.

ஒரு கணம் அமைதியாக நின்றுவிட்டு, “என்னிலதான்.” என்று இவன் சொல்லி முடிக்க முதலே, “என்னில.” என்று சொன்னான் கிரி.

அவனை முறைத்தாள் வினோ. “உங்கட அவசரக் குடுக்கைத் தனத்தால அவே ரெண்டு பேரையும் பிரிச்சு விட்டுட்டீங்க என்ன? இல்ல, உங்களுக்கு ஆருவ பிடிக்காததால வேணுமெண்டு செஞ்சீங்களோ?” என்றதும் கிரியின் முகம் அப்படியே மாறிப்போயிற்று.

“வினோ, என்ன கதை இது?” என்று அதட்டினான் தமையன்.

“என்னை ஏன் அதட்டுறீங்க? லவ்வர்ஸுக்க நடுவுக்க இன்னொருத்தர் வரக் கூடாதுதானே அண்ணா? என்ன எண்டாலும் நீயும் அவளும்தானே கதைச்சுத் தீர்க்கோணும். இவர் எதுக்கு எல்லாத்துக்கையும் மூக்கை நீட்டிக்கொண்டு வந்தவராம்.” என்றதும் கிரியின் முகம் கறுத்துப் போயிற்று.

“வினோ விடு!”

“அப்பிடி எப்பிடி…” என்றவளை, “வினோ!” என்றவனின் அதட்டல் அவள் வாயை அடைத்தது.

ஒரு கணம் அமைதியாக இருந்துவிட்டு, “எனக்கு அராபியப் பிடிக்காதுதான். இப்பவும்… என்னவோ தெரியா… காரணமே இல்லாம மனதில வெறுப்புப் படிஞ்சிட்டுது. ஆரம்பம் இவன் அவளை லவ் பண்ணுறான் எண்டு தெரிஞ்ச நேரம் பிடிக்கவே இல்ல. ஆனா அதுக்காக இவே ரெண்டு பேரையும் பிரிக்க நினைக்கேல்ல வினோ. சத்தியமா!” என்று கன்றிப்போன முகத்துடன் சொன்னவனைக் கண்டு கலைமகளுக்கே பாவமாகப் போயிற்று.

சமீபத்தில் அன்னையை வேறு இழந்துவிட்டு நிற்கிறவனாயிற்றே.

“நடந்துகளை விட்டுப்போட்டு இனி என்ன செய்றது எண்டு பாருங்கோ தம்பி.” என்றார் நவரத்தினம்.

அடுத்து அவளோடு ஒருமுறை பேச வேண்டும். அதை எப்படி நிகழ்த்துவது என்கிற யோசனை அவனுக்குள்.

“உன்னை உண்மையாவே மறந்திட்டாளோ அண்ணா? அண்டைக்கு அம்மா கேட்டதுக்குத் தன்னை மதிக்கிற ஒருத்தனா இருந்தா காணும் எண்டு சொன்னவள். இப்ப உன்ன அப்பிடிப் பாக்கேல்லை எண்டு சொல்லி இருக்கிறாள்.” என்றபோது அவன் முகம் கறுத்துப் போயிற்று.

error: Alert: Content selection is disabled!!