அவளையே பார்த்தார் தயாநிதி. முற்று முழுதாக அவரின் சாடை அவள். ஆனால், அடி நெஞ்சிலிருந்து அவரை வெறுக்கும் அவள். அவர் விழிகளில் பாசத்தின் கசிவு. கூடவே குற்றவுணர்வின் தடுமாற்றமும்.
இதையெல்லாம் வெளிப்படையாகக் காட்டிவிட முடியாது. வெட்டிக்கொண்டு போய்விடுவாள். நெஞ்சில் நிறைய விடயங்கள் முட்டி மோதின. அவளிடம் பலவற்றைச் சொல்ல ஆசைப்பட்டார்.
ஒன்று அவள் அந்தளவுக்கெல்லாம் அவருக்கு இடம் தரமாட்டாள். அவராலும் நேரமொதுக்கி அவளிடம் பேச முடியாது. அதற்குச் சந்தர்ப்ப சூழ்நிலைகள் அமைவதில்லை. அப்படியே அமைந்தாலும் தயக்கமும், கோபப்பட்டு ஏதாவது சொல்லிவிடுவாளோ என்கிற பயமும் அவரைப் பிடித்துப் பின்னால் இழுத்துவிடும்.
“உன்னோட நிறையக் கதைக்க ஆசையா இருக்கும் கேதா. ஆனா…” என்றவர் பேச்சை நிறுத்திவிட்டு, “இப்பிடி நான் தள்ளி இருக்கிறதுதான் உனக்கு நல்லமோ எண்டு நினைச்சுப்போட்டுத்தான் தள்ளியே இருந்திடுவன்.” என்று சொன்னார்.
அவள் ஒன்றும் பறையவில்லை. பாறைபோல் முகத்தை வைத்துக்கொண்டு நின்றிருந்தாள். ஒரு நெடிய மூச்சை இழுத்துவிட்டுவிட்டு, “குளிச்சு உடுப்பை மாத்திக்கொண்டு கீழ வா, சாப்பிடலாம்.” என்று சொல்லிவிட்டு அங்கிருந்து வெளியேறினார்.
போகும் அவரையே பார்த்தாள். அவர் மீது கழுத்துவரை வெறுப்பு மண்டியிருக்கும் அதே நேரத்தில் ஒரு வலியும் பரவாமல் இல்லை. நிறையக் கதைக்க ஆசையாம். கசப்புடன் எண்ணிக்கொண்டாள். அவளுக்கு? ஒரு தந்தை என்கிறவரின் இடம் அவள் வாழ்க்கையில் முழுக்க முழுக்க வெற்றிடமாயிற்றே.
என்னதான் அந்த மனிதர் மீதான ஏதோ ஒன்று அவள் உள்ளத்தைப் பிசைந்தாலும் ஒவ்வாத இடத்தில் நிற்போது போன்ற உணர்வை அவளால் விரட்ட முடியவில்லை.
ஒரேயொரு நாள். நாளை இரவு திரும்பவும் கொழும்புக்குப் புறப்பட்டுவிடுவாள். மனத்தை ஒரு வழியாக அமைதிப்படுத்திக்கொண்டு சென்று குளித்துவிட்டு வந்தாள்.
அதற்காகவே காத்திருந்தது போன்று இளையவன் ஒருவன் வந்து கதவைத் தட்டி அவளை உணவுண்ண அழைத்துச் சென்றான்.
உணவு முடிந்ததும், “இதெல்லாம் உனக்கு எடுத்தது.” என்று பெரிய ஒரு தட்டைக் கொண்டுவந்தார் சோபனா.
அதில் மிக அழகான பட்டுச் சேலை ஒன்று, கண்ணைப் பறிக்கும் நிறத்தில் அற்புதமான அழகில் லெஹெங்கா செட் ஒன்று, அவற்றுக்குப் பொருத்தமான கைப்பைகள், காலணிகள் என்று பல இருந்தன. அவற்றோடு பொலிவான தங்க நகைகள் நிறைய.
இவையெல்லாம் எந்த வழியில் வந்திருக்கும் என்று நினைத்த மாத்திரத்தில் அவள் முகம் கடுத்துப்போயிற்று. “எனக்குத் தேவையானதுகள நான் கொண்டுவந்திருக்கிறன்.” என்று முணுமுணுத்துவிட்டு மேலேறி வந்துவிட்டாள் கேதகி.
அங்கிருந்த எல்லோர் முகமும் மாறிப்போயிற்று. “இதுக்கு இவாவக் கூப்பிடாமயே இருந்திருக்கலாம்.” பட்டென்று சொன்னாள் பிறந்தநாள் பெண்.
வேகமாகத் தயாநிதியிடம் பார்வை சென்று வர, “அவா உன்ர அக்கா. அப்பிடி எல்லாம் கதைக்கிறேல்ல!” என்று மகளை அதட்டி உள்ளே இழுத்துச் சென்றார் சோபனா.
“நாளைக்காவது நல்லமாதிரி நிக்கச் சொல்லுங்கோ அத்தான். இப்பிடி முகத்தை முழம் நீளத்துக்கு நீட்டுறதுக்கு என்னத்துக்கு இஞ்ச வருவான்?” என்று சிடுசிடுத்துவிட்டுப் போனாள் மாலினி.
யார் பேச்சுக்கும் எதுவும் சொல்லவில்லை தயாநிதி. மனம் மட்டும் மக்களுக்காய்க் கவலை கொண்டது. அன்னை இல்லை. தனியாகவே இருக்கிறாள். இந்தப் பிறந்தநாளைச் சாட்டாக வைத்து அழைத்துவந்து இங்கிருப்பவர்களோடு ஒட்ட வைத்துவிடலாமா என்கிற நப்பாசையில்தான் வலுக்கட்டாயமாக அவளை வரவழைத்தார்.
இப்போது பார்க்கையில் அசைந்துகொடுப்பாள் என்கிற நம்பிக்கை மருந்துக்கும் இல்லை. நேரமானது. எல்லோரும் தமக்கென்று கொடுக்கப்பட்ட அறைகளுக்குள் உறங்கச் சென்றனர்.
இரவு சரியாகப் பன்னிரண்டு மணி. வீட்டின் அழைப்புமணி அடித்தது. மகள் பற்றிய சிந்தனையில் உழன்றுகொண்டிருந்த தயாநிதிதான் திரும்ப திரும்பக் கேட்ட அழைப்புமணியில் எழுந்து வந்து பார்த்தார்.
‘சப்ரைஸ்’ என்று ஆங்கிலத்தில் எழுதப்பட்ட அட்டையை ஏந்திக்கொண்டு ஒரு கும்பலே மாறுவேடத்தில் நின்றிருந்தது. ஒருவனின் கையில் பெரிய கேக். இன்னொருவனின் கையில் பெரிய பரிசுப் பெட்டி. வெளிநாட்டில் இருக்கும் உறவினரில் யாரோதான் மகளுக்காக இந்த வேலை பார்த்திருக்கிறார்கள் என்கிற எண்ணம் தந்த சிரிப்புடன் கதவைத் திறந்தார்.
திறந்த கணமே அவர் கழுத்தைச் சீவிக்கொண்டு போனது ஒரு பெரிய வாள். அந்த இடத்திலேயே வேரறுந்த மரமாக விழுந்தார் தயாநிதி.
அவர் பின்னால் வந்த சோபனா திகைத்துப்போனார். கிட்டத்தட்டப் பத்துப் பதினோரு பேர் இருக்கலாம். அணை உடைத்த வெள்ளம் போன்று வீடு முழுக்கத் திசைக்கொன்றாகப் புகுந்தார்கள். யாருக்கும் எதையும் யோசிக்கவோ, நடப்பதை ஊகித்துத் தம்மைப் தற்காத்துக்கொள்ளவோ நேரமே அமையவில்லை.
என்ன நடக்கிறது என்று உணர முதலே வெட்டி வீசப்பட்டனர்.
கொடூரமாகக் கத்தியால் குத்தப்பட்டார்கள். வளர்ந்தவர்கள், குழந்தைகள் என்று எந்தப் பாகுபாடும் கிடையாது. செய்த கொடூரங்கள் காணாது என்று கேக் வடிவிலும், பரிசுப் பெட்டி வடிவிலும் கொண்டுவந்த ஒயில் கலந்த பெட்ரோலை ஊற்றி வீட்டையே கொளுத்திவிட்டு அந்தக் கும்பல் தப்பியோடியது.

