அதை இறக்க முடியாது என்று சொல்லித்தான் பேரம் பேசிக்கொண்டிருந்தார் தயாநிதி. அதற்காக அவர் என்னவோ செய்யப்போய் கடைசியில் முதலுக்கே மோசமாக முடிந்திருக்கிறது.
இப்போது கப்பலில் இருப்பதை இறக்குவது மாத்திரமல்ல இனி அந்த வேலைக்கு யாரைப் பிடிப்பார்? எல்லாவற்றையும் யோசிக்க யோசிக்க தலை வெடிக்கும் போலிருந்தது.
“சத்யா!” பெரிய மகனை எண்ணி அவர் மனம் அழுதது. சத்தியநாதன் இறந்து ஏழு வருடங்கள் கடந்தும் அவரால் அவன் இழப்பிலிருந்து வெளிவரவே முடியவில்லை. சிங்கம்போல் இருந்தான். அசிங்கமாகக் கொன்றுவிட்டானே.
அவர் யோசித்தது சில கணங்களுக்குத்தான். அவரின் குறுக்குப் புத்தி சிலபல கணக்குகளை மிக மிக வேகமாகப் போட்டது. அதன் காரணமாய் அந்த முகத்தில் பழிவெறியின் பளபளப்பு மின்னிற்று.
*****
யாழ்ப்பாணத்தில் ஒரு ஒதுக்குப்புறமான இடத்தில் அமைந்திருந்தது அந்த வீடு. சுற்றவர மதிகளால் சூழப்பட்டு, முற்று முழுதான பாதுகாப்பில் இருந்த வீட்டின் முற்றத்தில், மூவர் புழுதி பறக்கும் அளவுக்கு ஒருவர் மற்றவரை மிருகத்தனமாகத் தாக்கிக்கொண்டிருந்தனர்.
அதுவும் மலைமாமிசம் போன்று இருந்த ஒருவனை மற்ற இருவரும் எப்படியாவது வீழ்த்திவிட வேண்டும் என்கிற வெறியுடன் முழுமூச்சுடன் போராடிக்கொண்டிருந்தனர்.
அவன் அசரவேண்டுமே. அவர்கள் இருவரையும் அன்றே கொன்று குவித்துவிடுகிறவன் போன்று வெறியுடன் திருப்பித் தாக்கினான். கடைசியில் மற்ற இருவரும் விட்டுவிடும்படி கெஞ்சியபிறகே விட்டான்.
அப்போதும் வெறி அடங்கவில்லை. குளிப்பதற்காகக் கிணற்றடியை நோக்கி நடந்துகொண்டிருந்தவன் ஒரே பாய்ச்சலில் திரும்பி வந்து அங்கிருந்த ஒருவனைத் தலைக்கு மேலே தூக்கித் திரும்பவும் மண்ணில் வீசிவிட்டுப் போனான்.
அது சண்டையில்லை. தினவெடுத்துத் திமிரும் அவன் தேகத்திற்கான தேகசாந்தி. உடற்பயிற்சி. தன் மூர்க்கத்தையும் முரட்டுத்தனத்தையும் எங்காவது கொட்டித் தீர்த்தால் மட்டுமே நிதானத்தில் இருப்பான். அவன் வாசுசேனன்.
குளித்துவிட்டு இடையில் கட்டிய துண்டுடன் வந்து அவர்கள் மூவருக்கும் சேர்த்து அவனே சமைத்தான். மூவரும் போட்டுக்கொண்டு சாப்பிட்டார்கள்.
பெரும்பான்மைப் பொழுதுகளில் அவன் ஆடை கறுப்பு நிற ஆர்ம் கட் பெனியனும், ஒரு முரட்டு ஜீனுமாக இருக்கும். சேர்ட்டை அணிந்ததை விடவும் ஒரு பக்கத் தோளில் தொங்கவிட்டுக்கொண்டு திரிந்ததுதான் அதிகம்.
தலையில் முடி என்கிற ஒன்று இருந்ததற்கான எந்த அடையாளங்களும் இல்லை. முற்றுமுழுதான மொட்டை. வலப்பக்க நெற்றியிலிருந்து பிடரி வரைக்கும் வளைவும் நெளிவுமான நீண்ட அடையாளம், என்றோ ஒரு நாள் அவன் மண்டைப் பகுதி பெரும் சேதத்திற்கு உள்ளாகியிருக்கிறது என்று சொல்லிற்று.
கறுப்புத் துணி ஒன்றினால் தலையைச் சுற்றிக் கட்டிக்கொண்டான். மது மாது என்று எந்தப் பழக்கங்களும் இல்லாதவன். சிகார் மட்டும் இழுப்பான். கண்களில் ஒருவிதமான சாம்பலும் சிவப்பும் நிரந்தரமாகப் படிந்துகிடந்து அவனைப் பயங்கரமானவனாகக் காட்டும்.
முனை நெருப்பில் கொதிக்கும் நீண்ட சிகார் ஒன்றை உதட்டில் பொருத்தியபடி வந்தான். மற்ற இருவரும் ஓடிப்போய் காரை எடுத்தார்கள். பின் பக்கம் ஏறி அவன் அமர்ந்ததும் கார் புறப்பட்டது.
நேராக அவன் வந்தது சிவநாதசுப்ரமணியன் வீட்டுக்கு. அவர் வீட்டு வாசலில் இறங்கி நின்றுதான் அவ்வளவு நேரமாகத் தோளில் கிடந்த சேர்ட்டை எடுத்து அணிந்துகொண்டான். அதுவும் கீழே இரண்டு பட்டன்கள் மாத்திரமே போட்டுக்கொண்டான்.
அவனை வரச் சொன்னது அவர்தான். இதற்குள் அவர் போதை ஓரளவிற்கு மட்டுப்பட்டிருந்தது. இவன் காரைக் கண்டதும் முகமெல்லாம் மலர்ந்துபோயிற்று. “வாசு! வாடா வாடா!” என்று வாய் நிறைய வாசலுக்கே வந்து வரவேற்றார்.
அவனை மார்போடு சேர்த்தணைத்து முதுகில் தட்டிக்கொடுத்தார். “பிள்ளை இல்லாதவனுக்குப் பிள்ளையா இருக்கிறவன் நீதான்டா!” என்றார் வாய் கூசாமல்.
சத்தியவேந்தனுக்கு உள்ளே பற்றிக்கொண்டு வந்தது. அவனுடைய எடுபிடி அவனை இரக்கமாகப் பார்த்தான். அவன் முறைத்த முறைப்பில் படக்கென்று பார்வையை அகற்றிக்கொண்டான் எடுபிடி.
புடைத்து நின்ற வாசுசேனனின் இருபக்கப் புஜங்களையும் பெருமிதமாக அழுத்திக்கொடுத்தபடி, “எப்பிடி இருக்கிறாய்?” என்று விசாரித்தார் சிவநாதசுப்ரமணியம்.
“எனக்கென்ன?” என்றான் அவன் சுருக்கமாக.
தேவையற்று எதைப் பேசுவதையும் அவன் விரும்புவதில்லை என்று அவருக்குத் தெரியும். மனைவியை அழைத்து அவனைத் தடல்புடலாகக் கவனித்தார். விருந்து பரிமாறப்பட்டது. வஞ்சனையே இல்லாது இன்னொரு முறையும் வெளுத்துவாங்கினான்.
“பிறகு?” விருந்து முடிந்து வீடாவை வாய்க்குள் அதக்கிக்கொண்டு வினவினான்.
“நியூஸ் கேள்விப்பட்டியா?”
நீயே சொல் என்பதுபோல் அவரையே பார்த்தான்.
“தயாநிதி குடும்பத்தை ஆரோ இரவோட இரவா போய் எரிச்சிருக்கிறாங்கள்.” இனியாவது அவனாக ஏதாவது சொல்வானா என்று பார்த்தார். அவன் அசைய வேண்டுமே!
“என்ர பிஸ்னஸ்க்கு அவன்தான் பெரிய உதவியா இருந்தவன். அதான் என்ன செய்றது எண்டு யோசிக்கிறன்.” என்றுவிட்டு உன்னால் முடியுமா என்று கேட்காமல் அந்த வினாவைத் தன் விழிகளில் தாங்கி அவனைப் பார்த்தார்.
அவன் அவரை வென்ற எத்தனாயிற்றே. நீயே சொல்லிமுடி என்றுதான் இப்போதும் அமர்ந்திருந்தான்.
நடப்பதையெல்லாம் பார்த்திருந்த வேந்தனுக்குப் பற்றிக்கொண்டு வந்தது. தயாநிதியை மொத்தமாக போட்டுத்தள்ளிவிட்டு அவன் பார்த்த வேலையைத் தான் பார்க்கலாம் என்று அவன் திட்டம் போட்டுத்தான் அனைத்தையும் செய்தான். அது பார்த்தால் நடக்காது போலவே.
“அண்ணா என்னன்னா ஐயா கதைக்கிறதப் பார்த்தா நீங்க நினைக்கிறது நடக்காது போலயே.” என்று கிசுகிசுத்தான் அவன் எடுபிடி.
“இவனையும் போட்டா என்னண்ணா?” என்றவனின் கேள்வியில் விழுக்கென்று திரும்பி அவனைப் பார்த்தான் வேந்தன். அவன் தலையில் ஓடும் வெட்டுக்காயத்தின் அந்த அடையாளத்தைப் பார்க்கிற ஒவ்வொரு முறையும் இவன் நெஞ்சு சில்லிட்டுப்போகும். அப்படியிருக்க அவனை அவர்கள் போட்டுத்தள்ளுவதா?
இங்கே சிவநாதசுப்ரமணியனும் வாசுசேனனை விடுவதாக இல்லை. “தயாநிதிக்கு என்ன நடந்தது, இதுக்குப் பின்னால் ஆர் இருக்கினம் எண்டு யோசிக்கிறன். எனக்கு என்னவோ அந்த எல்லாளன் காரணமோ எண்டு இருக்கு.” என்றுவிட்டு அவனைப் பார்த்தார்.
“அவன் இப்ப திருகோணமலைலதானே இருக்கிறான்.” என்றான் கேள்வியாக.
“அவனுக்கு டிரான்ஸ்பர் கொடுத்ததே நான்தான். அதுக்காக இஞ்ச வராம இருப்பானா, இல்லை அவன் நினைச்சா இதச் செய்யேலாது எண்டு நினைக்கிறியா? மலை மாதிரி இருந்த என்ர மகனையே போட்டுத் தள்ளிப்போட்டு முழுசா நிக்கிறான்.” என்றவருக்கு அவனைக் கண்டதுண்டமாக வெட்டிப்போடும் வெறி.
“இப்ப நான் என்ன செய்யோணும்?”
“அவனைக் கொல்லோணும். அதுக்கு முதல் அவனைச் சுத்தி இருக்கிற ஒவ்வொருத்தரையும் வேரோட அறுக்கோணும். அவன்ரயும் அந்தக் காண்டீபன்ர வம்சம் எதுவுமே மிஞ்சக் கூடாது!” கொலைவெறி கண்களில் மின்ன வார்த்தைகளைக் கடித்துத் துப்பினார் மனிதர்.
“எத முதல் செய்யோணும் எண்டு யோசிச்சிட்டுச் சொல்லுங்க.” என்றுவிட்டு எழுந்து புறப்பட்டான் அவன்.
போகிற போக்கில் வேந்தனின் அருகில் நின்றிருந்த எடுபிடியின் கன்னத்தைத் தட்டிய வாசுசேனனின் கை, கழுத்தையும் இலேசாக உரசிப்போனதுபோல்தான் இருந்தது. ஆனால், அவன் குரல்வளைப் பகுதியிலிருந்து இலேசாக வெளிவர ஆரம்பித்த குருதி, நொடியில் குபுகுபு என்று பொங்கி வழிய ஆரம்பித்தது.
சிவநாதசுப்ரமணியனும் வேந்தனும் திகைத்துப்போய் நின்றுவிட்டனர். அவர்கள் என்ன நடந்தது என்று ஊகித்து உணர்வதற்குள் நின்றிருந்தவன் சுருண்டு விழுந்திருந்தான்.

