கரையுடைக்கும் கணமொன்றில் – 21 (2)

 

பெரிய வெட்டுத்தான். புதிய கைப்பை வாங்க வேண்டும். நெஞ்சோடு சேர்த்து அணைத்துப் பிடித்தவளுக்கு மீண்டும் தாயின் நினைவு வந்தது. சில வருடங்களுக்கு முதல் இந்தக் கைப்பையை அவர்தான் இவளுக்கு என்று வாங்கிக் கொடுத்திருந்தார். அவளுக்கு நினைவு தெரிந்து தாய் வாங்கிக் கொடுத்தே ஒரே ஒரு பொருள் இதுதான்.

மற்றும்படி, “உனக்குத்தான் வாங்கித்தர கனக்கப் பேர் இருக்கினமே!” என்றதுதான் அவர் வாயிலிருந்து வந்திருக்கிறது. கிடைத்த இடமொன்றில் அமர்ந்துகொண்டாள். பேருந்து இப்போதுதான் பம்பலப்பிட்டி வந்திருந்தது.  மீண்டும் தமக்கை கதைத்தவற்றை எண்ணியதுள்ளம்.

“இனிச் சரி, இந்த ஐம்பத்து மூண்டு வயதுக்குப் பிறகு சரி நான் எனக்காக வாழப் போறன்.” என்றிருந்தாராம், மதிவதனி.  பார்த்த ஆசிரியர் தொழிலை விட்டு, காதல் மண்ணாங்கட்டி என்று கல்யாணம் செய்து, இரண்டு பிள்ளைகளைப்  பெற்று வளர்த்து ஊழியம் செய்து கண்ட மிச்சம் கெட்ட பெயர் மட்டுமே என்றாராம்.

 இனி என் விருப்புக்கு இருந்தே கெட்ட பெயர் வாங்குகிறேன் என்று ராங்கியாகச் சொல்லியிருக்கிறார். 

புதுக்குழுச் சினேகிதிகள் அங்கிங்கு சுற்றுலா செல்ல ஆயத்தம் செய்கையில் எல்லாம் மதிவதனியும் சேர்ந்து கொள்கிறாராம் .

அப்படித்தான் இப்போ பத்து நாட்களுக்கு தென்னிந்தியச்  சுற்றுலா போயிருக்கிறார். கடந்த ஒருவரிடத்தில் மலேசியா, பாலி, தாய்லாந்து என்று சென்று இப்போது இந்தியா.

ஒரு தடவை என்றால் பரவாயில்லை, இதெல்லாம் சரிப்பட்டு வராதென்று பூங்குன்றன் சொல்லியிருக்கிறார்.  

“என்ர முகம் பாத்துக் கதைக்கேளாத அளவுக்கு வந்த பிறகு வேறென்ன கிடக்கு? நான் என்ன செய்யோணும் செய்யக்கூடாது எண்டு நீங்க சொல்ல வர வேணாம் சரியோ. நீங்க ஒண்ணும் காசு தரத்  தேவையில்ல. என்னட்ட இருக்கிறவரை செலவழிப்பன். இல்லையோ நகைகளை விற்றுச்  செலவழிப்பன். அதும் இல்லையோ உங்களை டிவோர்ஸ் எடுப்பன்.” என்று சொல்லி பூங்குன்றனை அதிர வைத்திருக்கிறார். 

“சொத்தில எனக்கும் பங்கு இருக்கு. நினைவில வச்சிருந்தா , நானும் என்ர  பாட்டில இருந்திருவன்.” வெருட்டி, பூங்குன்றன் அறைந்து பெரிய சண்டை எல்லாம் நடந்திருக்க, அது எதுவுமே தெரியாது பக்கத்து வீட்டில் இருந்திருக்கிறாள், இவள்.

“பரிசிகேடு கவினி, யாழ்ப்பாணம் போன கையோட வீட்ட போயிரு! நீயே அங்க இங்க எண்டு ஊர் சுத்திட்டு  வீட்டில நிக்கிறதே குறைவு. பிறகென்ன? கடைசியில அப்பா அம்மா பிரிவுக்குக்  காரணமாகிராத! என்ர நிம்மதியைக் கெடுத்த பாவமும் உனக்கு வேணாம். அவ்வளவும் தான் சொல்லுவன்.” என்று தமக்கை சொன்னதை நினைத்தவள் விழிகள் நிறைந்துவிட்டன.

 அந்நேரம்  கைப்பேசி அருட்டியது. எண்ணங்களின் குதறலில் இருந்து மீண்டவள், “சொல்லு வாணன்”  கதைக்க ஆரம்பித்தாள்.

“உண்மையாவா? நான் இன்னும் மெயில் பாக்கேல்ல. அப்ப நாளைக்கு நீ இங்க வாறியா? சரி.” என்று வைத்தவள் அவ்வளவு நேரமாக மனத்திலிருந்த உணர்வுகளில் இருந்து விடுபட்ட உணர்வு. வீட்டைவிட்டுத் தூரமாகச் சென்று விட வேண்டும் என்ற அவள் எண்ணம் ஈடேறப் போகிறதே!

இவர்கள் வேலை செய்யும் தமிழ்முரசில் இருந்து, ஒரு வருடத்துக்கு லண்டன்  பிரிவில் பணிபுரியும் வாய்ப்பு வாணனனுக்கும் இவளுக்கும் வழங்கப்பட்டிருக்கிறது. 

“கொஞ்ச நாளைக்கு இவேட்ட இருந்து ஒதுங்கி இருந்தால் தான் சரி” எண்ணியபடி அம்மின்னஞ்சலைப் பார்க்க முனைகையில்தான் அந்த நோட்டிபிகேசன் கண்ணில் பட்டது. 

‘ஓ கடவுளே!’ தலையில் அடித்துக்கொள்ள வேண்டும் போலிருந்தது.

இலங்கையின் மிக அழகான மலைத்தொடர்களுள் ஒன்றும்  மத்திய இலங்கையின் அற்புதமான இயற்கை அதிசயமானதுமான ‘ தும்பர கந்துவெட்டிய’ என்றழைக்கப்படும்  நக்கிள்ஸ் மலைத்தொடரின் காணொளி ஒன்றினைப் போட்டிருந்தாள். இன்றுதான், அதுவும் சற்று முன்னரே வெளியாகியிருக்கும். அதில் சேந்தன் கருத்திட்டிருக்கிறான். 

அவன் என்ன எழுதி இருந்தாலும் பார்ப்பதில்லை என்ற உறுதியை மீறி விரல்கள் செயல்பட்டிருந்தன. 

‘உன் கை பிடித்தபடி

 இரவு பகல் பாராது

 இந்த மலைத்தொடர்களில் 

சுற்றிவர ஆசை

 சம்மதிப்பாயா தோழி?’ என்று போட்டிருந்தான்.  

இங்கு இருக்கையிலேயே இந்த மாதிரி திரும்ப திரும்ப தன்னிருப்பை உணர்த்தித் தொலைக்கிறான். ‘ இதில லண்டக்குப் போய் அவனைச் சந்திக்கிற சந்தர்ப்பம் வந்தால்?’ நினைக்கையிலேயே மிகுந்த களைப்பாக இருந்தது. 

error: Alert: Content selection is disabled!!