கரையுடைக்கும் கணமொன்றில் – 23 (2)

 

வாணனின் தங்குமிடத்தைப் பார்த்தவளுள் யார் யாரோடு தங்க வேண்டி வருமோ என்ற எண்ணம். சற்றே மிரட்சியாகவும் இருந்தது. எதுவென்றாலும் பார்ப்போம் என்ற துணிவு இருந்தாலும் நண்பனை விட்டு விலகி வருகையில், வெளியில் உறைத்த குளிரும் அறியாத சுற்றமும் சற்றே மூச்சு முட்ட வைத்ததே உண்மை. 

கார், பெரிய பெரிய வீடுகளிருந்த பாதையால் வழுக்கிக் கொண்டு சென்றது. பனிக்கால சோர்வு போர்த்தியிருந்தாலும் அந்தச் சுற்றத்துக்கு அதுவும் தனியழகு கொடுத்தது. 

சிலநிமிடங்களில் உயரே எழுந்து நின்ற மூன்று அடுக்குமாடித் தொடர்கள் அருகருகே  தெரிந்தன. புதிய கட்டிடங்கள்தான். அதன் வாயிலருகில் காரை நிறுத்தி இறங்கினான், யாதவன். ஓடிச் சென்று அங்கிருந்து சிறு பெட்டியைத் திறந்து எண்களை அழுத்த, இரு கம்பிக் கதவுகளும் அகலத் திறந்து கொண்டன.

“வீட்டு கீ இந்தாங்கோ!” ஒற்றைச் சாவியோடு லண்டன் பிரிஜ் கீ டக். அவளிடம் நீட்டிக்கொண்டே , “இந்த கேட் கோட் இதில இருக்கு கவினி. இதில… ” என்றபடி கொடுக்க வாங்கிக்  கொண்டாள். அந்தக் ‘கீ டக்’ இல் தொங்கிய சிறு குமிழில் மெல்லிய அழுத்தம் கொடுக்க, வாய் திறந்து, தன்னுள் அடங்கியிருந்த மூன்று இலக்கத்தைக் காட்டிட்டு. 

 காரை உள்ளே செலுத்தி அதற்குரிய இடத்தில் நிறுத்த மூவரும் இறங்கினார்கள்.

 ட்ரங்கில்  இருந்த அவளது இரு பயணப்பைகளையும் வெளியில் எடுத்து வைத்தான், யாதவ்.

பெரிதின் மீது சிறிதை வைத்து உருட்ட முனைந்தாள், கவினி. 

“இல்ல வையுங்க, நான் எடுத்துக்கொண்டு வாறன்.” என்ற யாதவ், அவள் மறுப்பைக் கருத்தில் கொள்ளவில்லை. ஹாண்ட் லக்கேஜை எடுக்க முனைய அதற்கும் விடவில்லை. 

“வாங்கோ!” அன்பாகக் கைப்பற்றி அழைத்துச் சென்றாள், சாம்பவி. 

மீண்டும் மின் தூக்கிக்குள் நுழைந்தார்கள்.   எட்டை அழுத்தினாள், சாம்பவி. “எட்டாம் மாடியா?” இவள் வாய் உதிர்க்க விழிகள் விரிந்தன.

“ம்ம்… பால்கனியில நல்ல வியூ!” சாம்பவிதான். 

அடுத்த ஒரு நிமிடம் முடிய முன்னர் மின்தூக்கியால்  வெளிப்பட்டு நீண்டிருந்த கொரிடோரால் நடந்து கடைசியில் இருந்த வீட்டு வாயிலின் முன்னால் நின்றார்கள்.

“நீரே ஓபன் செய்யும்.” சாம்பவி முறுவலோடு சொன்னாள். 

விமானநிலையத்தில் வந்திறங்கியதில் இருந்து, அவளை, அவர்கள் நடத்தும் விதம் மிகவுமே விசேசமாக உணர வைக்கிறதே! மிகுந்த சந்தோசமாக உணர்ந்தவளுக்கு, வாணனுக்கும்  இங்கேயே இடம் கிடைத்திருந்திருக்கலாம் என்று நினையாதிருக்க முடியவில்லை. 

மனம் தன் பாட்டில் நினைவுகளோடு பயணப்பட, வலக்கை கதவைத் திறந்தது. உள்ளே பார்த்தவளுக்கு உண்மையில் திகைப்புத்தான். இந்த வீட்டிலா தங்கப் போகிறாள்? சந்தேகத்தோடு திரும்பி அவர்கள் இருவரையும் பார்த்தால் முறுவலோடு அவளைப் பார்த்து நின்றார்கள்.

“பிடிச்சிருக்கா கவினி?” என்று, நெடுநாள் பழகிய  தோரணையில் கேட்டாள், சாம்பவி. 

பிடிக்காமல்! சட்டென்று வார்த்தைகள் வரவில்லை. ஆம் என்று தலையாட்டினாள். விழிகள் சுழன்றன.

 புத்தம் புது வீடு. சொகுசு இருக்கைகள், சாப்பாட்டு மேசை, தொலைக்காட்சியோடு சேர்ந்த ஹோல் செட். எல்லாமே புதிதோ! அங்கங்கே இண்டோர் பிளாண்ட்ஸ். அதிலும் அந்தூரியமும் ஒக்கிட்டும் நிறைந்த மலர்களோடு! 

விழிகளில் இரசனை ஏறினாலும் நான் வாங்கிற சம்பளத்துக்கு இங்க தங்கினால் எப்படி? ஒருவேளை தற்காலிகமாகத்  தங்க வைக்கப் போகிறார்களோ என்ற கேள்வி எழுந்தது. 

“நான் மட்டும்  தனியவா இங்க இருக்கப் போறன்?”

“ஓம், ஒரு பெட் ரூம் தான். வாங்க பாப்பம்.” என்று அழைத்துச் சென்றாள், சாம்பவி.

 இரட்டைக்கட்டில் அருகில் குட்டியாக கபேர்ட் ஒன்று,அதன் மீது இரவு விளக்கு. அருகில் மணிக்கூடும். கால்மாட்டில் ஒரு பக்கமாகச் சிறு மேசை கதிரை அதன் மீது மேசை விளக்கு. ஒற்றைக் கம்பியில் வளைந்த பூ ஒன்று. மறு ஓரத்தில் நல்ல வடிவான கண்ணாடி மேசை. ஒரு பக்கச் சுவரோடு குளோசெட் , அட்டாச் பாத்ரூம் என்று நட்சத்திர விடுதி அறை போலிருந்தது ஒன்று ஒன்றும்.  சமையலறையும்  அப்படித்தான்.

“இப்போதைக்கு எனக்குத் தெரிஞ்ச மட்டில  சமையலுக்குத் தேவையான எல்லாம் வாங்கி வச்சிருக்கிறன். நீங்க தான் நல்லாச் சமைப்பீங்களே! ஒரு நாளைக்கு எங்களுக்குச் சமைச்சுத் தரோணும்.” என்ற சாம்பவியைக் கேள்வியாகப் பார்த்தாள், இவள். 

“நான் நல்லாச் சமைப்பன் எண்டு உங்களுக்கு எப்பிடித் தெரியும்?”

“இப்பக்  கொஞ்சத்துக்கு முதல் வாணன் சொல்லேலையா? நல்லாச் சமைக்காத பிள்ளையிட்டச்  சாப்பாடு கேட்பினமா என்ன?” பதில் சொன்னது, பின்னால் அமைதியாக நின்றிருந்த , யாதவ்.

முறுவலோடு, “கட்டாயமா ஒருநாளைக்குச் சாப்பிட வாங்கோ!” என்றாள், கவினி.

இங்க இருந்து இருபத்தியஞ்சு நிமிசத்தில கலையகம் வந்திரலாம் கவினி. பக்கத்தில சூப்பர்மார்கட் இருக்கு. இன்னும் என்ன தேவையெண்டாலும் எங்களுக்கு எடுங்க. இங்க இருந்து அரை மணித்தியால தூரத்தில்தான் எங்கட வீடு. ஒரு நாளைக்கு வாணனும் நீங்களும் வீட்டுக்கு வாங்கோவன்! ”என்று, கலகலப்பாகக் கதைத்துவிட்டு  அவர்கள் விடைபெற்றார்கள்.

இருநாட்களின் பின்னர்தான் வேலையில் இணைய வேண்டும். வந்த களைப்புக்குக்  குளித்தவள் வாணனோடு எடுத்துக் கதைத்தாள். இவள் எடுக்க முன் பூங்குன்றன் அழைத்திருந்தார். சிறிது நேரம் கதைத்தவள், பின் பேசாமல் படுக்கையில் விழுந்தவள்தான்,  தூங்கிவிட்டாள்.

 

error: Alert: Content selection is disabled!!