Skip to content
“அப்பா ஏன், இல்ல ஏன் எண்டு கேக்கிறேன்?” எரிச்சலோடு கேட்டவன், ‘காருக்குள்ள ஏத்தப்பட்ட பாட்டுக்கு இந்த அப்பாவ’ மனத்துள், தகப்பனுக்கு நல்ல மண்டகப்படி விழுந்தது..
“பச்! இன்னும் இருபத்தியஞ்சு நிமிசங்கள் போல இருக்கு எல்லா? நீங்க இப்பிடி வாங்கோம்மா. ஏறுங்க!” முன் கதவைத் திறந்து பிடித்த படி சொன்னவர் மறுப்பு என்ற ஒன்றை அவள் சிந்திக்கவும் விடவில்லை.
“ஒண்ணுக்கும் யோசிக்கக் கூடாது.இதெல்லாம் பிரச்சினைகளே இல்லம்மா!” அவள் தலையைப் பரிவாக தடவிவிட்டு , “உங்கட அப்பா போலவே என்னையும் நினைச்சுக்க கொள்ளுங்க. நான் உங்கட சேந்தனுக்கு மட்டும் அப்பா இல்லச் சரியா? பிறகு சந்திப்பம் என்ன? அங்க பாருங்க, உங்கட ஆள் என்ன முறைக்கிறார்.” பரிவும் அன்புமாக அவளோடு கதைத்தவர், சேந்தன் உன்னுடையவன் என்று அழுத்தமாகவே உணர்த்தியிருந்தார். உன் மறுப்பை, மனத்தில் விருப்பம் இல்லை என்றதையெல்லாம் நான் நம்பவில்லை என்றும் தான். மகனுக்குப் பயந்தவர் போல் பாவனை செய்து, கதவைச் சாத்திவிட்டு, குனிந்து டா டா காட்டி காரை எடுக்கும் படி சைகையும் செய்தார்.
முறைப்போடு சர்ரென்று காரை ஓட்டத் தொடங்கினான், சேந்தன். தவறியும் அருகில் இருந்தவளைப் பார்க்கவில்லை. கவினியும்தான், பக்கவாட்டில் திரும்பிய தலையை நேராக்கக் கூட இல்லை. அடுத்த அரைமணித்தியாலத்தில் அவர்கள் கலையகம் உள்ள இடத்தில் காரை நிறுத்தியிருந்தான்.
அதுவரையிருந்த அழுத்தம் அவளைப் பட்டென்று இறங்க விடவில்லை. ‘தம்’ பிடித்து நிறுத்தி வைத்திருந்த கண்ணீர் சர்ரென்று வடிய, அவனுக்குக் காட்டாது துடைத்துவிட முனைந்தாள். அவன் அவளைத்தான் பார்த்திருந்தான்.
“கவினி!” ஆழ்ந்த குரலில் அழைத்தான்.
திரும்பிப் பார்த்தாள். அவளையே பார்த்திருந்தவன் கரமிரண்டையும் அவள் நோக்கி நீட்டியிருந்தான். அழும் குழந்தையைப் பெற்றோர் ஆறுதல் படுத்தும் பாவனை! அக்கணம் மிக மிக நெருக்கமானவனாகத் தெரிந்தான், அவன். அதை, அவனுக்குக் காட்டாது மறைக்க வேண்டுமே!
கவினியின் உள்ளம், முற்று முழுதாகத் தளர்ந்திட்டு. அவள் மனத்தின் மீது அவனுக்கு எத்தனை நம்பிக்கை! அதை ஏற்று மகிழ, அனுபவிக்க, இந்த அன்புக் கதகதப்பில் இளைப்பாற அவளுக்குக் கொடுத்து வைக்கவில்லையா? ஏன்? கேவல் ஒன்று வெளிப்பட முடியாது தொண்டைக்குழிக்குள் நின்று படாத பாடு பட்டுட்டு.
“எனக்குத் தெரியும் கவினி. உம்மட வாய் சொல்லுற பொய்க்கும் மனத்துக்கும் தொடர்பே இல்லை எண்டு எனக்கு நல்லாவே தெரியும். சோ! இனி ஒருக்காலும் அப்பாட்டச் சொன்னது போல கதையாதேயும் ப்ளீஸ்!”என்றவன் கண்கள் கலங்கி இருந்தன.
“வர மாட்டீரா?” என்றவன், கரங்கள் இறங்கிவிட்டன.
“வீட்டாக்களிட விருப்பம் இல்லாமல் செய்தா நாளைக்கு நம்மட பிள்ளைகளுக்கும் உம்மட நிலை வந்திட்டாலும் எண்ட பயம் தானே உமக்கு. அப்பாட ‘மருமகள்’ எண்ட வார்த்தை உமக்கு ஒண்டையுமே உணர்த்தேல்லையா கவினி? என்ர வைஃப் இவா எண்டு எனக்கு உணர்த்தினது. எப்ப உம்மப் பற்றிச் சொன்னனோ அப்ப இருந்து அப்பாட வாய் மருமகள் எண்ட வார்த்தையைத்தான் பாவிக்கிறது. விருப்பம் இல்லாமலா சொல்லும்? அம்மாட கத வேற. ஒண்டு உமக்கு நல்லா விளங்கோணும், அவா உம்மட அம்மாவோ அப்பம்மாவோ இல்ல. அதைவிட முக்கியமானது நான் உங்கட அப்பா இல்ல!” கூர்மையாகச் சொன்னவன் பார்வையை எதிர்கொண்டாள், கவினி. முறைத்தாள்.
“ப்ளீஸ்! இதுக்க அப்பா அம்மா பற்றிக் கதைக்க வேணாம்.”
“அதெப்பிடி நீர் சொல்லேலும்? இது எங்களிட வாழ்க்கைப் பிரச்சினை. அவையளை வச்சு எல்லா நீர் பின்னால கால் வைக்கிறீர்? ம்ம்…”
“பாருங்க நீங்களே பிரச்சினை எண்டுறீங்க. பிறகு என்னத்துக்கு இதெல்லாம்? ப்ளீஸ் விட்டிருங்க.” என்றவளுக்கு, ஒரு சிரிப்பைப் பதிலாகக் கொடுத்தான், சேந்தன்.
“நீர் என்னை மறந்து வேற ஒருத்தரைக் கட்டிருவீரா கவினி?” சவாலாகக் கேட்டவனை நல்ல முறைப்போடு பார்த்தாள். யாழ்ப்பாணத்தில் சந்தித்த கவினி பூங்குன்றன் அவள் பாவனையில் தெரிந்தாள். சிறு சிரிப்போடு அவளையே பார்த்திருந்தான், அவன். பதிலுக்காகக் காத்திருக்கிறானாம். அவன் பாவனையில் மிகுந்த எரிச்சலாகிப் போனாள், கவினி.
“நான் என்ன சொல்லிக்கொண்டு இருக்கிறன் எண்டு விளங்கேல்லையா சேந்தன்? எனக்கு உங்களில பிரத்தியேகமா எந்த விருப்பமும் இல்லை. அதுதான் உண்மை. அப்படியிருக்க ஆரையும் கட்டுறதில எனக்கு என்ன வரப்போகுது? கட்டாயம் கட்டுவன். கலியாணத்துக்கு உங்களுக்குக் கட்டாயம் சொல்லுவன். வரோணும் சரியா? இப்ப நேரம் ஆகிற்று, போயிட்டு வாறன். தாங்க்ஸ்!” என்ற வேகத்தில் இறங்கி, திரும்பியும் பாராது விறுவிறுவென்று நடந்தாள்.
“டோய்! முகத்த ஒருக்காக் காட்டிட்டுப் போறது. சரி சரி அழாமல் போம் என்ன? நீர் சொன்னது எல்லாம் என்ர மற்றக் காதால வெளில போயிட்டு! கலியாண மாப்பிள்ளை நான் வராமல் எப்பிடி உம்மட கலியாணம் நடக்கும்?” இறங்கி நின்று சத்தமாகச் சொன்னான், சேந்தன்.
அவள் திரும்பவில்லை, உள்ளே நுழைந்த வேகத்தில் மின் தூக்கியில் அழுத்திவிட்டுக் காத்திருந்தாள். உடலில் ஓடிய நடுக்கம் வெகு சோர்வைக் கொடுத்திருந்தது. வேலை செய்யும் மனநிலை சுத்தமாக இல்லை. பேசாமல் வீட்ட போய்விடலாம் என்றால், இதுக்காகவா இவ்வளவு சிரமப்பட்டு வந்தாய் என்றது உள்ளம்.
மின்தூக்கி ஐந்தாம் மாடியில் நின்றுவிட்டுக் கீழே வந்துகொண்டிருந்தது. அந்நேரம், பார்த்து அருகில் வந்து நின்றவள் விழிகளை விரித்தாள்.
“ஹேய்ய்ய்ய் கவினி… கவினி பூங்குன்றன்! சேந்தன் ட பியான்ஸே தானே?” அவள் கரத்தைப் பற்றிக் குலுக்கிக்கொண்டு கேட்டாள், ஒரு வெள்ளைக்காரி. இவளோ, பே முழி முழித்தாள் . அதுவும் சேந்தனின் பியான்ஸே என்று சொன்னால்?
ஹ்ம்ம் என்ற கணைப்பும் “குட் மோர்னிங் கிளாரா!” என்றதுமாக வந்து கவினியருகில் நின்றான், சேந்தன். இவன் இப்ப என்னத்துக்கு என்னோட வாறான்? கேட்கவில்லை, முறைப்பாடு பார்த்தாள்,கவினி. அவனுக்கோ சிரிப்பு. அடக்கிக்கொண்டு நின்றான்.
“சேந்தன், உன் கவினி எப்ப இங்க வந்தவர்? சொல்ல இல்லையே!” கிளாராவுக்கு அவள் பிரச்சினை.
“கவினி, இவள் கிளாரா. என்னோட வேலை செய்யிறாள்.” கடமை தவறாதவனாக அறிமுகம் செய்து வைத்தான், சேந்தன்.
“ என்ன மேன் நீ? ஃப்ரெண்ட் என்று கூட சொல்ல மாட்டியோ?” ஒரு சாதியாக கேட்டாள், கிளாரா. முறுவலோட, “ இவள் என்ர ஃபிரெண்ட்.”என்றபடி, வந்து நின்ற மின்தூக்கியில் நுழைய அவளையும் இழுத்துக்கொண்டே நுழைந்தாள், கிளாரா.
“உனக்கு ஒன்று சொல்லட்டா கவினி. நான் இவனை டேட்டுக்கு கேட்க, இவன் உன் ஃபோட்டோ காட்டினான். ம்ம்… நீ குடுத்து வச்சனியப்பா!” ஏக்கப் பெருமூச்சோடு சொல்ல, “சும்மா இரு கிளாரா!”என்று அவள் தலையில் தட்டிவிட்டு, “நாலாம் மாடியில தான் நாங்க வேலை செய்யிர பாங்க் இருக்கு கவினி. பின்னேரம் வெயிட் பண்ணும், கூட்டிக்கொண்டு போய்விடுறன்.” நாலாவது மாடியில் வாயில் திறந்த மின்தூக்கியில் இருந்து வெளியேறினான்.
கட்டியணைத்து, “இங்கதானே இருக்கப் போறம், அடிக்கடிச் சந்திக்கலாம்.” என்று விடைபெற்ற கிளாரா, மின்தூக்கியின் வாயிலை மூடவிடாது சேந்தனை அழைத்தாள்.
“என்ன நீ சேந்தன்? கவினிக்கு ஒரு ஹக் குடுத்திட்டு வரலாமே!” கண்ணடித்தபடி சொன்னவள், “உண்மையாவே உன்ர பியான்ஸே தானே? இல்லாட்டி என்னைத் தவிர்க்க இவவைக் காட்டிச் சொன்னியோ?” சந்தேகமாகக் கேட்டாள். இருவரும் கண்ணோடு கண்பார்த்துக் கதைத்ததையே காணவில்லை. பிறகு எப்படி நம்புவது?
“முதல் இங்கால வா! லிஃப்ட் போகட்டும்.” முறைத்தபடி சொன்னவன், மூடிகொண்டிருந்த மின்தூக்கியின் கதவால் தெரிந்தவளையும் முறைத்தான்.
“அவளோட சின்னச் சண்டை. இப்பப் போய் ஹக் குடுத்தால் கோவத்தில இந்த லிஃப்ட் கதவுக்க தலையை வச்சு நெரிச்சிருவாள்!” சேந்தன் சத்தமாகச் சொல்வது கவினி காதில் விழுந்தது.
error: Alert: Content selection is disabled!!