ஆட்டநாயகன் 4.1

எல்லாளன்! Senior Superintendent of Police(SSP). அவன் நெஞ்சை நிமிர்த்தி நிற்கும் நிலையே எதிரில் நிற்கிறவர்களைக் கலங்கடித்துவிடும். அச்சமே அவனிடம் அச்சம் கொள்ளும் ஆளுமையும் அசையா நெஞ்சமும் கொண்டவன். 

 

கடந்த ஒன்பது வருடங்களுக்கும் மேலாக இதே பதவியைத்தான் வகிக்கிறான். அதிகார வர்க்கமும், அரசியல் வர்க்கமும் அவனுக்குப் பதவி உயர்வைக் கொடுத்துவிடக் கூடாது என்பதில் அத்தனை பிடிவாதமாக இருக்கிறார்கள். 

 

இப்போதே கண்ணுக்குள் விரலை விட்டு ஆட்டுகிறவன் இன்னுமின்னும் உயர் பதவிகளைக் கொடுத்தால் இன்னும் என்ன செய்வானோ என்கிற பயமே இதற்கெல்லாம் காரணம். 

 

இதுவரையில் அவன் முடித்து வைக்காத வழக்கு என்று ஒன்று உண்டு என்றால் அது சத்தியநாதன் வழக்கு மட்டுமே. உயிருள்ள வரை அவன் அதை முடித்துவைக்கப்போவதும் இல்லை. அவனுக்குப் பிறகு பலர் அந்த வழக்கைக் கையில் எடுத்துவிட்டார்கள். பலன் என்னவோ பூச்சியம்தான். 

 

அந்தக் கோபத்திலும் சிவநாதசுப்ரமணியன் அதிகாரத்திற்கு வந்ததுமாகச் சேர்ந்து அவனைக் குறைந்தது இரண்டு வருடங்களுக்கு ஒரு இடம் என்று மாற்றிக்கொண்டே இருக்கிறது. 

 

அதைக் குறித்தெல்லாம் அவன் கலங்கியதில்லை. இது அவனைப் போன்று வளைந்து கொடுக்காதவர்களுக்கு எப்போதுமே நடப்பதுதான். இன்னும் சொல்லப்போனால் இவர்களின் இந்தக் கெடுபிடிகள்தான் முடிந்தால் என்னை வளைத்துப் பாருங்கள் என்று இன்னுமே அவனை உரம் கொள்ள வைப்பவை. 

 

அன்றும் ஏஎஸ்பி அருந்தவராஜா அவனை அழைத்தார். “நீயும் திருந்த மாட்டாய். அவங்களும் மாற மாட்டாங்கள்!” என்றபடி அவன் முன்னே ஒரு கவரை தூக்கிப் போட்டார்.  

 

காவல்துறையின் இலச்சினையுடன் கூடிய அந்தக் கடிதம் என்னவாக இருக்கும் என்று அதைத் திறந்து பாராமலேயே எல்லாளனுக்குப் புரிந்துபோயிற்று. “இந்த முறை எந்த இடம் சேர்?” என்றான் அதை எடுத்துப் பிரித்தபடி. 

 

“நீ சந்தோசப்படுற இடம்தான்.” 

 

“இருக்காதே!” என்றபடி அதன் மீது பார்வையை ஓட்டியவனுக்கு மிகுந்த வியப்பு. அதுவும் நொடி நேரம்தான். “இதுல வேற என்னவோ இருக்கு சேர்.” என்றான் உடனேயே. 

 

“அடேய்! எதையும் லேசா எடுக்கவே மாட்டியா!” என்று அதட்டினார் அவர். அவனுக்கு உயர் திகாரிதான். ஆனால், அவருக்குப்  பிள்ளைகள் இல்லை. அவரின் பாசமிகு பெறாமகள் ஆதினி. பாதி நாள்கள் அவள் கையால்தான் அவருக்கு உணவே. 

 

“நீயும் ஆதுவும் போறது கவலைதான் எண்டாலும் ஊரோட இருக்க பிள்ளைக்கும் ஆசையா இருக்குமே எண்டுதான் நினைச்சன். ஆனா நீ அதையும் சந்தேகப்படுறாய்.”

 

“இல்லை சேர். யாழ்ப்பாணம் போறதுல சந்தோசம்தான். எனக்கு அந்த சந்தோசம் கிடைச்சிடக் கூடாது எண்டுதான் சத்தியநாதன் வழக்கை நான் சரியா ஹாண்டில் பண்ணேல்ல எண்டு டிரான்ஸபர் தந்தவே. அப்ப இருந்து யாழ்ப்பாணம் மாத்தவே இல்ல. கடைசிவரைக்கும் மாத்தாயினம் எண்டு நினைச்சனான். அப்பிடியிருக்க இப்ப மாத்தியிருக்கிறது…” என்று அப்போதும் யோசனையுடன் இழுத்தான்.  

 

“அப்பிடி என்ன பிரச்சினை வர இருக்கு எண்டு நினைக்கிறாய்?” அவருக்கும் ஊகம் இருந்தது. ஆனாலும் வினவினார். 

 

“சிவநாதசுப்ரமணியன்.” என்றான் அவன் சுருக்கமாக. “ஒரு கிழமைக்கு முதல் வீடே எரிஞ்சு மொத்தக் குடும்பமும் செத்த கேஸ் ஒண்டு கேள்விப்பட்டமே, அது அவரின்ர சொந்தம். சொந்தம் மட்டும் இல்ல தொழில் பாட்னரும்.”

 

“அதுக்கும் உன்னை அங்க கூப்பிடுறதுக்கும் என்ன சம்மந்தம்?”

 

“தெரியேல்ல. ஆனா என்னவோ இருக்கு.”

 

“என்ன வந்தாலும் என்னடா? நீ அசைஞ்சு குடுக்கிற ஆளா? பேசாம போய்ப் பெட்டியக் கட்டு. என்ர மகளை வேலை வாங்கினியோ என்னட்ட நல்லா வாங்கிக் காட்டுவாய்!” என்று விரல் நீட்டி மிரட்டினார். 

 

“ஆர்? அவள் வேலை செய்வாளா? அவளுக்கு வாயடிக்கவே நேரம் காணாது.” மனைவியை எண்ணி மலர்ந்த முறுவலுடன் சொல்லிக்கொண்டே எழுந்தான். 

 

அப்படி என்ன மாய மந்திரத்தைப் போடுவாளோ தெரியாது. அவனைச் சுற்றியிருக்கும் காவல்துறையிலிருந்து சட்டத்துறை வரை அத்தனையும் அவளுக்கு அடிமை சேவகம் செய்கிறவர்கள். 

 

அவனோடு வாசல் வரை வந்தவர், “பின்னேரம் வருவன். அங்க வச்சுச் சொல்லேலாது. அதால இஞ்சயே சொல்லுறன். இது தானா வந்த டிரான்ஸபர் இல்ல. நானா விசாரிச்சவரை சிவநாதசுப்ரமணியன் பின்னால இருக்கிற மாதிரித்தான் இருக்கு. அதால ஆதுவும் பிள்ளைகளும் கவனம். நீ, நீ மட்டுமே இல்ல. இத எப்பவும் நல்லா நினைவில் வச்சு, எதச் செய்றதா இருந்தாலும் செய்!” என்று சொல்லி அவனை அனுப்பிவைத்தார். 

 

அவன் மாற்றலாகிப் போவது அவருக்குப் பெரும் இழப்புத்தான். எதையாவது இலேசாக அவன் காதில் போட்டாலே போதும். அடி வேர் வரை சென்று அனைத்தையும் துப்புத்  துலக்கிக்கொண்டு வந்துவிடுவான். 

 

ஆனால் ஆதினி சந்தோசப்படுவாள் என்பதே அவருக்குப் போதுமாயிற்று. சின்னவர்களையும் பார்க்கும் ஆர்வம் உண்டாக சின்ன புன்னகையுடையேயே தன் வேலைகளைப் பார்க்கப்  போனார். 

 

*****

 

ஆதினி இன்று முப்பதுகளில் நடைபயிலும் அழகி. ஐந்து வயதைத் தொடப்போகும் தீபன், இரண்டரை வயது தீபனா என்று இரு குழந்தைகளின் அன்னை. முக்கியமாய் எல்லாளனின் சிலுக்கு. 

 

காண்டீபனின் வழக்கு முடிகிறவரைக்கும்தான் வேறு வழக்குகளையும் கையாண்டுகொண்டிருந்தாள். வைரவனை விடவேயில்லை. கிட்டத்தட்ட மூன்று வருடங்களுக்கும் மேலாக அந்த வழக்கு நடந்தது. ஆனாலும் ஓய்ந்து போகாமல் அவனுக்கு ஆயுள்தண்டனை வாங்கிக்கொடுத்துவிட்டே விட்டாள். 

 

அன்றிலிருந்து இன்று வரையிலும் குற்றவியல் வழக்கறிஞராக பயிற்சி செய்கிறாளே தவிர எந்த வழக்குகளையும் எடுப்பதில்லை. 

 

அவள் விருப்பம் கற்பித்தல்தான். அவளின் அன்னைக்கு ஒப்பானவன் காட்டிய வழி. அவன் பாதையில் பயணிப்பதில் அவனே கூட வருவதுபோலொரு எண்ணம். 

 

அதற்கென்று முழுநேர பேராசிரியையும் இல்லை அவள். அதுவும் எல்லாளனைப் போன்ற ஒருவனைக் கணவனாகப் பெற்ற அவளால் எங்கும் நிலைத்து வேலை பார்க்க முடியாதே. அவனோடு ஊர் ஊராகப் பயணிக்கிறபோது பிள்ளைகளைப்  பார்க்க அவளுக்கு யாரும் இல்லை. அவர்களும் சின்னவர்கள் என்பதால் அவர்கள் வசதி பார்த்து, சிறப்புப் பேராசிரியையாக சட்டத்துறை இருக்கும் பல்கலைகளில் அவ்வப்போது சென்று வகுப்பு எடுத்துவிட்டு வருவாள். 

 

அது அவள் ஆத்மார்த்தமாகச் செய்யும் ஒன்று என்பதால் எல்லாளனுக்கும் மகிழ்ச்சியே. 

 

error: Alert: Content selection is disabled!!