யாழ்ப்பாணம் வந்து அடுத்த நாளே காண்டீபனின் வீட்டுக்குக் குடும்பமாகப் புறப்பட்டான் எல்லாளன். வீட்டிலிருந்து புறப்படுகையிலேயே ஆதினியின் உள்ளம் கலங்கித்தவிக்க ஆரம்பித்திருந்தது. மிதிலாவின் அன்னை இடைப்பட்ட காலத்தில் இறைபதம் எய்தியிருந்தார். இப்போது இருப்பது மிதிலா, ஏழு வயது அதிரன், சம்மந்தன் மூவரும் மட்டுமே.
காண்டீபனைப் பற்றி, அவன் இப்போது உயிரோடு இல்லை என்பது வரை இவர்களின் இரு குழந்தைகளுக்கும் தெரியும். அவன் தன் இன்னொரு தமையன் என்று சொல்லித்தான் வளர்த்தாள் ஆதினி.
காண்டீபன் மாமா வீட்டுக்குப் போகப்போகிறோம் என்றதுமே, “அப்புச்சாமிட்ட போன காண்டீபன் மாமா வீட்டுக்கா?” என்றுதான் தீபனா கேட்டிருந்தாள்.
தன் அன்னைக்குக் காண்டீபன் மாமாவை மிகவும் பிடிக்கும் என்று தெரிந்திருந்த தீபன், அப்போதிலிருந்தே அவளுக்கு ஆதரவு போன்று அவளுடனேயேதான் சுற்றிக்கொண்டிருந்தான். அவனின் அந்தச் செய்கை கூட ஆதினிக்குக் காண்டீபனைத்தான் நினைவூட்டியது. பல்கலை நாள்களில் அவளைத் தேடிக்கொண்டு தினமும் வருவானே.
காண்டீபனின் வீட்டு வாசலில் வந்து நின்ற ஆதினியால் தன்னைக் கட்டுக்குள் வைத்துக்கொள்ள முடியாமலேயே போயிற்று. இதே வீட்டு வாசலில் பயந்து பயந்து வந்து நின்றிருக்கிறாள். அன்று அவன் வீட்டு நாய் முன்னால் குரைத்துக்கொண்டு வர, பின்னால் நடந்துவந்தான் அவன்.
அவளைக் கிண்டல் செய்து, கேலி செய்து, கோபப்பட வைத்து, அதைப் பார்த்து ரசித்துச் சிரித்து என்று எத்தனை நிகழ்வுகள்.
அந்த ஒற்றை நாளில் தந்தையின் அற்புதமான தனயனாக, மனைவியின் அருமையான கணவனாக, மாமியாரைப் பிள்ளையாகத் தாங்கும் மகனாக என்று எத்தனை விதமான காண்டீபனைக் கண்டாள்? அவள் சிந்தனையின் போக்கை, வாழ்க்கைப் பாதையை எல்லாம் அன்றுதானே மாற்றியும் தந்தான்.
அவர்கள் நடந்துவிட்டு வந்த பாதையைத் திரும்பிப் பார்த்தாள். பெரிய மாற்றங்கள் எதுவுமற்று அப்படியேதான் இருந்தது. வெகு தூரத்தில் நின்று காற்சட்டை பொக்கெட்டுகளுக்குள் கைகளை விட்டுக்கொண்டு நின்று அவன் சிரித்துக்கொண்டிருந்தான்.
‘அண்ணா!’ சட்டென்று உடைந்து முகத்தை மூடிக்கொண்டு அழுதாள். அவள் பார்த்த வழக்குகள், அவை கற்றுத் தந்த வாழ்வின் கசப்பான நிதர்சனங்கள், இத்தனை வருட காலத்துப் பக்குவம், அவள் இரண்டு குழந்தைகளின் அன்னை என்பது எல்லாம் மறந்துபோயிற்று. அந்த நொடியில் முற்று முழுதாகக் காண்டீபனின் தங்கையாகவே மாறிப்போனாள்.
அதே ஊர், அதே வீடு, அதே வீதி. அவன் மட்டும் இல்லையாம் என்றால் எப்படி? தேம்பி தேம்பி அழுதாள்.
விடயம் தெரியும் என்றாலும் பிள்ளைகள் பயந்துபோனார்கள். கண்ணீர் என்பது அவளுக்கு வரவே வராதே. அம்மா என்று அவளைக் கட்டிக்கொண்டு முகத்தை அவர்களும் சுருக்கினார்கள்.
எல்லாளனையும் பெரும் இறுக்கம் கவ்விப்பிடித்தது. நெஞ்சினுள் ஒரு வலி. இறக்கும் நொடியில் என்ன நினைத்திருப்பான்? நண்பா, ஓடி வாடா என்று மனத்தளவில் கதறியிருப்பானோ? யாராவது வந்து காப்பாற்றிவிடமாட்டார்களா என்று துடித்திருப்பானோ? சட்டென்று தலையை உதறிக்கொண்டு, “ஆதினி!” என்றான் சற்றே குரலை உயர்த்தி அதட்டலாக.
“இப்பிடி அழுறேல்ல எண்டு சொல்லி எல்லா கூட்டிக்கொண்டு வந்தனான். அவேக்கு முன்னால வச்சு அழுதியோ தெரியும்!” என்று எச்சரித்துவிட்டு மூவரையும் அழைத்துக்கொண்டு கேட்டை திறந்து உள்ளே நடந்தான்.
அதிரன் சம்மந்தன் ஐயாவின் சக்கர நாற்காலியை உருட்டிக்கொண்டு வர, மிதிலா வாசலுக்கே வந்து வரவேற்றாள். இரு தரப்புக்கும் மற்றவர்களைப் பார்த்துச் சந்தோசம் உண்டானாலும் நெஞ்சு வெடிக்கும் துக்கமும் பெருகிற்று.
வீட்டுக்கு வந்தவர்கள் முன்னால் அழுதுவிடக் கூடாது என்று அவர்களும், நாம் அழுது ஓரளவுக்குத் தேறியிருக்கும் அவர்களின் வலியைக் கிளறிவிடக் கூடாது என்று இவர்களும் பெரும் கவனமாக இருந்தாலும், உள்ளத்தின் துடிப்பையும் அதன் அழுகையையும் இரு தரப்பினாலும் மறைக்கவே முடியாமல் போயிற்று.
அதுவும் சம்மந்தன் ஐயா, வாட்ட சாட்டமாய் இன்னும் கம்பீரமும் களையும் பெருகித் தெரிந்த எல்லாளனைக் கண்டு அவன் கையிலேயே முகம் புதைத்து அழுதார். உயிருடன் இருந்திருந்தால் அவர் மகனும் இப்படித்தானே நின்றிருப்பான்.
ஆதினியை அணைத்து வரவேற்ற மிதிலா, அரும்பிய கண்ணீரும் புன்னகையுமாகப் பிள்ளைகளை அள்ளியணைத்து முத்தமிட்டாள். காண்டீபனின் பெயரைக் கொண்டே ஆதினி பிள்ளைகளுக்கு தீபன், தீபனா என்று வைத்தது அவளுக்குத் தெரியும். அதனாலோ என்னவோ அவர்களைத் தன் அருமைக் கணவனின் இன்னொரு வடிவமாகவே பார்த்தாள் மிதிலா.
அப்படித்தான் ஆதினி எல்லாளனுக்கும். காண்டீபனின் சாயலை அப்படியே கொண்டு, அவனுடைய அதே சிரிப்பை முகத்தில் தாங்கி, மெல்லிய உடல்வாகும் உயரமுமாக நின்ற அதிரன் மிகவுமே பாதித்தான்.
ஒற்றைக் கையால் அவனைத் தன்னோடு அணைத்துக்கொண்ட எல்லாளனுக்கு அவனிடம் என்ன பேசுவது என்றே தெரியவில்லை. நீ இன்று தந்தை இல்லாமல் நிற்க நானும் ஒரு காரணம் என்பானா? உன் அப்பா என்னை மலைபோல் நம்பினான், அவன் நம்பிக்கையைக் காப்பாற்றாமல் விட்டுவிட்டேன் என்பானா?
உள்ளத்தில் பொங்கிய உணர்வுகளையும், தன் நெஞ்சின் பாசத்தையும் ஒன்றாக்கி அவன் நெற்றியில் முத்தமிட்டு நிமிர்ந்தவனின் விழிகளில் மெல்லிய கோடாய்க் கண்ணீரின் பளபளப்பு. “நல்லாருக்கிறீங்களா அதிக்குட்டி?” என்றான் கரகரத்த குரலில்.
“ஓம் மாமா. நீங்க?” சின்ன முறுவல் ஒன்றுடன் அமைதியான குரலில் வினவினான் அதிரன்.
தோற்றம் அப்படியே காண்டீபன் என்றாலும் இயல்பு மிதிலா போன்று மென்மை. நெற்றியில் திருநீற்றுக் கீற்றும் சாந்தமான முகமுமாக இருந்தான். அந்த அமைதி, தகப்பன் இல்லாக் குழந்தை என்பதால் உண்டானதோ என்று எப்போதுமே நினைப்பான் எல்லாளன்.
இன்றும் அதேதான் தோன்றிற்று. ஆனாலும் காட்டிக்கொள்ளாமல் அவன் கேசத்தைத் தன் இரு கைகளாலும் கோதிவிட்டபடி அவன் படிப்பு, பள்ளிக்கூடம், பிடித்தது, பிடிக்காதது, நண்பர்கள் என்று விசாரித்துக்கொண்டான்.
வயோதிகம், இடுப்புக்குக் கீழே இயங்கா நிலை, மகனைப் பறிகொடுத்தது என்று நன்றாகவே உடைந்திருந்தார் சம்மந்தன். “என்ன மாமா இப்பிடி உடஞ்சிட்டீங்க?” என்றான் தன்னை மீறி.
“வயசு போயிற்றுதே தம்பி. இனி அப்பிடித்தான். மருமகள் ஒரு நல்ல முடிவா சொன்னா எண்டாலாவது சந்தோசப்படலாம்.” என்றுவிட்டு எதிர்பார்ப்புடன் மிதிலாவைப் பார்த்தார்.
மற்ற இருவர் பார்வையும் அவளிடம் திரும்பிற்று.
தடுமாறிப்போன மிதிலா, “இருங்கோ, தேத்தண்ணி கொண்டுவாறன்.” என்றுவிட்டு உள்ளே சென்றுவிட்டாள்.
காண்டீபன் இறந்து மூன்றாவது வருடத்திலிருந்து மிதிலாவை இன்னொரு திருமணத்திற்குச் சம்மந்தன் வற்புறுத்திக்கொண்டே இருக்கிறார். அதுவும் அந்த நாள்களில் அதிரனுக்கு விவரம் தெரிய வர முதல் அதை நடத்திவிடப் பெரும் பாடுபட்டார்.
அவள் செவி சாய்க்கவே இல்லை. மிக மிக மென்மையான அவளுக்குள் இந்தளவில் பிடிவாதம் உண்டா என்று எல்லாளன் முதற்கொண்டு அத்தனை பேரும் வியந்திருக்கிறார்கள்.
இளந்திரையன் கூட வந்து பேசிப்பார்த்தார். காண்டீபனின் நினைவில் முகத்தை மூடிக்கொண்டு அழுதாளே தவிர்த்துத் திருமணத்திற்கு மட்டும் சம்மதிக்கவில்லை.
சின்னவர்கள் மூவரும் விளையாட ஆரம்பித்துவிட எல்லாளன் ஆதினி இருவருக்கும் என்ன சொல்வது என்று தெரியவில்லை.
உண்மையில் இன்று வரையிலும் அவர்களாலும் காண்டீபனின் இடத்தில் இன்னொருவனை வைத்துப் பார்க்க முடிந்ததே இல்லை. அதே நேரத்தில் அவளை இப்படித் தனியாக விடுவதில் உடன்பாடும் இல்லை.

