காண்டீபன் பக்கமோ அவள் பக்கமோ பெற்றவர்கள் என்று யாராவது நல்ல நிலையில் இருந்தால் கூட பரவாயில்லை. உண்மையில் பெரும் சிரம வாழ்க்கைதான் அவள் வாழ்ந்துகொண்டிருப்பது.
அவளும் சம்மந்தனும் எவ்வளவோ தடுத்தும் கேளாமல் 60 வயதிற்கும் மேற்பட்டவர் என்கிறதன் அடிப்படையில் சம்மந்தனின் பெயரில் சில லட்சங்களை நிலையான வைப்புச் செய்து, அதன் வட்டியை அவர்களின் கைச் செலவுக்குத் திருப்பிவிட்டான் எல்லாளன்.
கூடவே இன்னுமே லொட்டோ டிக்கட்டுகள் விற்கிறார் சம்மந்தன். மிதிலா வெளியில் வேலைக்குப் போவதில்லை. அவள் அன்னை இருக்கிற வரை போக முடிந்ததில்லை. அதற்குள் அவளின் தோட்டம் அவளுக்குப் பயன் கொடுக்க ஆரம்பித்திருந்தது.
வசதியான வாழ்க்கை இல்லாதுபோனாலும் வரவுக்கேற்ற செலவு, செலவுக்கேற்ற வரவு என்று இருக்கிறார்கள்.
“ஒருக்கா கதைங்கோ தம்பி. எப்பிடியாவது ஒரு கலியாணத்தைச் செய்து வைங்கோ. வாழ்க்கைல பெருசா எந்தச் சந்தோசத்தையும் அவா அனுபவிச்சதே இல்லை. சின்ன வயசில அப்பா இல்ல. பிறகு போதைப் பழக்கம். தாய்க்கு உடம்பு சரியில்லாம போய், அவாவும் கஷ்ட்டப்பட்டு எண்டு நிறையப் பட்டுட்டா. தம்பியக் கட்டிக் கொஞ்சக் காலம் சந்தோசமா வாழ்ந்தா. அவ்வளவுதான். இப்ப திரும்ப தனியாவே நிக்கிறா. நாளைக்கு நானும் இல்லை எண்டு வந்திட்டா எப்பிடியப்பு? யோசிச்சுப் பாருங்க.”
நியாயமான பயம். ஆனாலும் காட்டிக்கொள்ளாமல், “அப்பிடியெல்லாம் ஒண்டும் நடக்காது மாமா.” என்று உடனேயே மறுத்தாலும் அவனையும் அந்தப் பயம் கவ்வாமல் இல்லை.
தங்களோடு வந்து இருக்கச் சொல்லி ஆரம்ப காலத்தில் கேட்டிருக்கிறான். அவள் உடன்படவே இல்லை. கணவன் வாழ்ந்த வீட்டில் அவன் நினைவுகளோடு வாழப் பழகிக்கொண்டிருந்தாள். இவனுக்கும் தான் ஊர் ஊராக மாறிக்கொண்டிருக்க அவர்களும் தன்னுடன் இழுபட முடியுமா என்று தோன்றியதில் விட்டுவிட்டான்.
இன்னொரு பக்கம் வெளிப்படையாக அவர்கள் தனக்கு முக்கியமானவர்கள் என்று காட்டிக்கொள்ளவும் பயந்தான். அவனைச் சுற்றி எதிரிகள் மட்டுமே குவிந்திருக்க, அதில் யார் இவர்கள் புறம் திரும்புவார்கள் என்று சொல்ல முடியாதே.
எல்லோருக்கும் சிற்றுண்டியும் தேநீரும் கொண்டுவந்த மிதிலா அழுத்திருக்கிறாள் என்று அவள் முகமே சொல்லிற்று. தெரிந்தாலும் காட்டிக்கொள்ளாமல் அவள் கரத்தைப் பற்றித் தன்னருகில் அமர்த்திக்கொண்டாள் ஆதினி.
“இல்ல, உங்களுக்குச் சாப்பாடு எடுத்து வைக்கோணும் ஆதினி.” என்று நழுவ முயன்றாள் மிதிலா.
“அதெல்லாம் ஆறுதலா செய்யலாம் அக்கா. அதவிட நாங்க என்ன விருந்தாளிகளா இப்பிடி எல்லாம் கவனிக்க? சாப்பாட்டு நேரம் நானும் வாறன், சேந்து செய்யலாம். இப்ப எங்களோட இருங்க.” என்று பிடிவாதமாக அமர்த்திக்கொண்டாள்.
“எப்பிடி இருக்கிறீங்க அக்கா?” தேநீர் பருகியபடி விசாரித்தாள்.
“எனக்கென்ன?” என்று முறுவலிக்க முயலும்போதே விழிகள் கலங்கி உதடுகள் நடுங்கின அவளுக்கு. பார்வை தன் பாட்டுக்கு அங்கே சுவரில் தொங்கியபடி முறுவலித்துக்கொண்டிருந்தவனிடம் போய் வந்தது.
தம் வரவு காண்டீபனைத் திரும்பவும் நினைவூட்டி, அவனுக்கு நடந்தவற்றையும் நினைவூட்டியிருக்கும் என்று அவர்களால் புரிந்துகொள்ள முடிந்தது.
அதிரனின் நலன், படிப்பு போன்றவற்றைத் தாண்டி வேறு என்ன பேசுவது என்று இரு தரப்புக்கும் தெரியவில்லை. ஒரு இயல்பற்ற நிலை. எதைப் பேசினாலும் மற்றவர் காயப்பட்டுவிடுவாரோ என்கிற பயம்.
மிதிலாவின் திருமணம் குறித்துப் பேச எண்ணினாலும் இலகுவாய் அந்தப் பேச்சை எடுக்க முடியவில்லை. விளங்கியும் விளங்கா பருவத்தில் அதிரனும் இருக்கிறானே.
அதில் பொதுவாகவே ஊர், இங்கு சமீபத்தில் நடந்த அசம்பாவிதங்கள் என்று பேச்சை நகர்த்த முயன்றார்கள். அப்போதுதான் தயாநிதி பற்றிய பேச்சும் வந்தது.
“நீங்க யாழ்ப்பாணத்தில இருந்த காலம் மாதிரி இல்லை தம்பி. போதை தலை விரிச்சு ஆடுதப்பு. கொலை, கொள்ளை, வாள் வெட்டு எண்டு திரும்புற பக்கமெல்லாம் இதேதான் நியூஸ். தங்கட எதிர்காலச் சந்ததி சுதந்திரமா, நிம்மதியா வாழோணும் எண்டு ஒரு தலைமுறையே உயிரைக் குடுத்த தேசம் இது. ஆனா இண்டைக்கு இப்பிடி ஒரு அவல நிலைல இருக்கு. அதுக்கு அந்தத் தயாநிதியும் பெரும் காரணம். அவன் செத்தது எனக்குச் சந்தோசம்தான்.” என்று சொன்னார் சம்மந்தன்.
உணவு வேளை நல்லபடியாக முடிந்தது. அதன் பிறகும் கொஞ்ச நேரம் பேசிக்கொண்டிருந்துவிட்டுப் புறப்பட்டார்கள். அப்போதும் அவன் கையைப் பிடித்துக்கொண்டு கலங்கினார் சம்மந்தன்.
“ஐயா, இந்த மாமாக்கு, உன்ர நண்பனுக்கு ஏதாவது செய்ய நினைச்சா மருமகளை இன்னொரு கலியாணத்துக்கு ஓம் எண்டு சொல்லச் சொல்லுங்கோப்பு. என்ர பேரன் என்னப்பு பாவம் செய்தவன்? அவனைப் பெத்தவனுக்குத்தான் அவச் சாவு எண்டா, அவன் பெத்தவனும் தகப்பன் இல்லாம வாழோணுமா சொல்லு? எனக்கு மட்டும் ஏன் அப்பா இல்ல எண்டு சின்ன வயசில கேட்டவன் ஐயா. இப்ப கேக்கிறதே இல்ல. மறந்திட்டான் எண்டு நினைக்கிறீங்களா? இல்ல. கேட்டா அம்மாவும் அப்பப்பாவும் கவலைப்படுவினம், கேக்கக் கூடாது எண்டு நினைச்சு, தனக்குள்ளேயே வச்சிருக்கிறான். இந்தளவுக்கு என்ர குருத்து என்ன பாவம் செய்தது?” என்றவரின் கேள்விக்குப் பதில் சொல்ல முடியாமல் மிதிலாவைப் பார்த்தான் எல்லாளன்.
முகம் திருப்பி நின்று கண்ணீர் உகுத்தாளே தவிர்த்து அது குறித்து ஒரு வார்த்தை உதிர்த்தாள் இல்லை அவள். அதிரன் தன் உள்ளங்கையை ஆராய்ந்துகொண்டிருந்தான். அவனை இழுத்துத் தன்னுடன் அணைத்துக்கொண்ட எல்லாளனுக்கு நெஞ்சு வெடித்துவிடுமோ என்று பயமாயிற்று.
“பாப்பம் மாமா, இனி நான் இஞ்சதானே. கட்டாயம் ஏதாவது செய்வம்.” என்று உறுதியோடு சொன்னவனை மெல்லிய திகைப்புடன் நோக்கினாள் மிதிலா.
அவர்கள் புறப்பட்டு வாசலுக்கு வர, ஒரு பைக் வந்து நின்றது. அதிலிருந்து இறங்கிய மாதவனைக் கண்டு எல்லாளன் முகத்தில் விரிந்த புன்னகை.
மாதவனும், “எப்பிடி இருக்கிறீங்க சேர்?” இன்முகமாக விசாரித்தபடி விரைந்து வந்து கைகொடுத்தான்.
“நல்லாருக்கிறன். நீங்க?” வலுவாக அவன் கரம் பற்றிக் குலுக்கி விசாரித்தான் எல்லாளன்.
முன்னர் பிள்ளைகளுக்கு வகுப்பு எடுக்க என்று கொட்டகை போன்று காண்டீபன் அமைத்திருந்த இடத்தில்தான் பிறகு சின்ன வீடாகப் போட்டு, ஒரு குடும்பத்தை வாடகைக்கு இருத்தியிருந்தார்கள். ஆறு மாதங்களுக்கு முதல் யார் என்று தெரியாமல்தான் மாதவன் இந்த வீட்டை வந்து விசாரித்தான்.
அவன் பற்றிய தகவலைச் சம்மந்தன் ஐயா எல்லாளனுக்குச் சொன்னார். உடனேயே யார் என்று கண்டுபிடித்திருந்தான் எல்லாளன். மாதவனோடும் பேசி, அவன் தந்தை இறந்துவிட்டதால், அந்த இழப்பிலிருந்து மீளாமல் இருக்கும் அன்னையை அதே வீட்டில் வைத்திருக்க முடியாமல்தான் வேறு வீடு பார்க்கிறான் என்று தெரியவந்தது. அப்படி இவன் சம்மதத்தின் பெயரில்தான் இங்கே மாதவன் குடி வந்திருந்தான்.
“அஞ்சலி எப்பிடி இருக்கிறா?”
“அவா லண்டன் சேர். ஒரு மகளும் இருக்கிறா.”
“ஓ சந்தோசம்.” உண்மையில் அவள் வாழ்க்கை நல்லபடியாக, அதுவும் வெளிநாட்டில் அமைந்ததில் எல்லாளனுக்கு மிகுந்த மகிழ்ச்சி.
ஆதினிக்கு மாதவனைப் பெரிய அறிமுகம் இல்லை என்பதில் சின்ன முறுவலோடு பிள்ளைகளைக் கவனித்துக்கொண்டாள்.
இதற்குள் நிறைமாத வயிற்றுடன் ஒரு பெண் மாதவன் வீட்டிலிருந்து வெளியே வந்தாள். “வைஃப் சேர்.” என்று அந்தப் பெண்ணை அறிமுகம் செய்துவைத்தான் மாதவன்.
அவளோடும் இரண்டு வார்த்தைகள் பேசிவிட்டு, “இனி இஞ்சதான் இருப்பன் மாதவன். என்ன சின்ன பிரச்சினை எண்டாலும் கூப்பிட மறக்காதீங்கோ. அப்பிடியே மாமா குடும்பத்தையும் கொஞ்சம் கவனிச்சுக்கொள்ளுங்கோ என்ன.” என்று சொல்லிவிட்டுத் தன் குடும்பத்துடன் புறப்பட்டான் எல்லாளன்.

