எட்டு யுகங்களாகக் கடந்துபோன எட்டு வருடங்கள். இந்த எட்டு வருடங்களும் கணவன் இல்லை என்கிற உண்மையை அவளுக்கு உணர்த்தியிருக்கிறதே தவிர்த்து, அவனைத் தாண்டி இன்னொரு வாழ்க்கை என்று அவளை யோசிக்க விட்டதே இல்லை.
அவன் இந்த உலகத்தை விட்டுப் போவதற்கு அவளும் ஒரு காரணமோ என்கிற எண்ணம்தான் இன்னுமே அவளைப் போட்டுக் கொஞ்சம் கொஞ்சமாகக் கொன்றுகொண்டே இருந்தது.
எல்லாளனைப் பற்றி அறிய என்று அன்று ஊருக்கு வந்தவன் அப்படியே போயிருக்கலாம். போதைக்கு அடிமையாகி, அன்னையை அடித்து அவரைப் புத்தி சுவாதீனமானவராக மாற்றி, தானும் சுயநினைவில்லாமல் இருந்தவளை அப்படியே விட்டுவிட்டுப் போயிருக்கலாம்.
அதையெல்லாம் செய்யாமல் அவர்களைத் தன்னுடனேயே அழைத்து வந்து, சுகமாக்கி, மணந்து என்று அவளுக்காக அவன் செய்தவைகள் நிறைய. அவனுக்கு எல்லாளன்தான் எல்லாமே. அந்த நண்பனிடம் ஓடிவிட மனத்தளவில் எந்தளவில் துடித்தான் என்று அவளுக்குத் தெரியும்.
அப்படி இருந்தும் போகாமல் அவன் தள்ளி நின்றது அவளுக்காக. அப்படிப் போனால் அவள் மன நிம்மதி கெட்டுவிடும், அவளால் அவனோடு முழு மனதாக வாழமுடியாமல் போய்விடும் என்றுதான் போகவில்லை.
ஒருவேளை போயிருந்தால் நிச்சயம் இப்படியான காரியங்களைச் செய்வதற்குக் காண்டீபனை எல்லாளன் விட்டே இருக்க மாட்டான். அப்படி ஒன்று நடக்காது போயிருந்தால் அவன் கைதானதோ, சிறை சென்றதோ, அங்கே கொடூரமான முறையில் கொல்லப்பட்டதோ நடந்திருக்குமா என்ன?
அவள் உயிர் ஆவியாய்த் துடித்துக்கொண்டே இருந்தது. இன்னுமே அந்த வீட்டில் அவன் நடமாடிக்கொண்டுதான் இருக்கிறான். சில நேரங்களில் அவளைப் பின்னிருந்து அணைத்திருக்கிறான். பல நேரங்களில் அவள் கண்ணீரைத் துடைத்திருக்கிறான்.
அவளுக்கும் எதிர்காலம் குறித்த பயம் இல்லாமல் இல்லை. தப்பித்தவறி மாமாவும் இல்லை என்று வந்தால் இந்தச் சமுதாயத்தில் எந்தத் துணையும் இல்லாமல் ஒரு மகனை வைத்துக்கொண்டு வாழ முடியுமா, தன்னால் தனித்தியங்க முடியுமா என்கிற கேள்விகளும் பயங்களும் உண்டுதான்.
பல பெண்கள் அப்படித் தைரியமாக எதிர்நீச்சல் போடுகிறார்கள்தான் என்றாலும் அவர்களின் நெஞ்சுரமெல்லாம் அவளுக்கு இல்லை. எப்போதுமே இன்னொருவரின் நிழலிலேயே வாழ்ந்துவிட்டவள். இன்னும் சொல்லப்போனால் இன்று யாருமற்று இந்த உலகை அவள் எதிர்கொள்வதே அவள் இயல்புக்கு இமாலயச் சாதனைதான்.
மனம் கணவனுக்காகவும் அவன் அரவணைப்புக்காகவும் ஏங்கிற்று. எல்லாளன் குடும்பம் வந்துவிட்டுப் போனதில் அவனோடு வாழ்ந்த வாழ்க்கை முழுவதும் கிளறுபட்டுப் போயிற்று. ஒரு முறை அவன் கைகளுக்குள் அடங்க முடிந்தால், அவன் தரும் பாதுகாப்பையும் பலத்தையும் அனுபவிக்க முடிந்தால்? கண்ணீருடனேயே கண்மூடிக் கிடந்தாள் மிதிலா.
நள்ளிரவைத் தாண்டியும் சம்மந்தனால் உறங்க முடியவில்லை. மகன் நினைவாகவே இருந்தது. யாரிடமும் சொன்னது இல்லையே தவிர ஒரு ஆண் துணை இல்லாது அவர் அனுபவிக்கிற சிரமங்கள் நிறைய. மாதவன் உதவுவான்தான். அதையெல்லாம் பேசித்தான் அந்த வீட்டுக்கு குடி வருகிறவர்களை எல்லாளன் இருத்துவான்.
என்றாலும் மகன் போல் யார் தாங்குவார்கள்? இப்போது கொஞ்சம் கொஞ்சமாய் மகன் இடத்தைப் பேரன் பிடிக்க ஆரம்பித்திருந்தான். அதுவும் அவருக்கு வேதனையே. ஓடியாடி விளையாட வேண்டிய வயதில் இருக்கும் பிஞ்சுக் குழந்தை பார்க்க வேண்டிய வேலைகளா அவை?
எல்லாளனிடம் சிறிதாகக் கோடு காட்டினாலே போதுமானது. அவனும் இவர் சொல்கிறவரை காத்திருக்க மாட்டான். அனைத்தையும் அவனே செய்துவிடுவான். ஆனாலும் அவனுக்கு நிரந்தரப் பாரமாகவே போய்விட்டோமே என்று ஒரு சங்கடம்.
இதையெல்லாம் தாண்டி வயதுபோன காலத்தில் அவருக்கும் சாய ஒரு தோள் வேண்டியிருந்தது. கவலைப்படாதீர்கள் நான் இருக்கிறேன் என்று சொல்ல யார் இருக்கிறார்கள்? மருமகளுக்கு கணவனாக வருகிறவன் இன்னொரு மகனாக மாறிவிட மாட்டானா என்கிற அவர் ஏக்கம் அவளுக்குப் புரிவதாக இல்லை. கண்ணோரம் கசிந்த கண்ணீரைத் துடைத்துவிட்டுக்கொண்டார்.
*****
அடுத்த நாள் காலையிலேயே, “அம்மா! கடிடவன் மாமா வண்டிருக்கிறார்.” என்று கூவிக்கொண்டு மாடியேறி ஓடி வந்து தகவல் சொன்னாள் தீபனா.
“அது சரி. உங்கட அப்பாக்கு நான் மனுசியோ இல்லையோ உங்கட கடிடவன் மாமாதான் காதலி. எப்ப பாத்தாலும் சோடி போட்டுக்கொண்டு வெளிக்கிட்டுடுவினம்.” மகளின் மழலைப் பேச்சில் முறுவல் அரும்பினாலும் வேண்டுமென்றே சொன்னாள் ஆதினி.
“ஆதினி!” என்று உள்ளே வேலைக்குத் தயாராகிக்கொண்டிருந்த எல்லாளன் அதட்டினான்.
“நீங்க போய் கட்டிடவன் மாமாவோட கதைச்சுக்கொண்டு இருங்கோ. அம்மா வாறன்.” என்று மகளை அனுப்பிவிட்டு அவனிடம் வந்தாள் ஆதினி.
“நான் என்ன பொய்யா சொல்லுறன்? அவர்தான் வேணும் எண்டு கேட்டு நீங்க அவரை உங்களுக்கு கீழ கொண்டு வரேல்ல? அதென்ன யாழ்ப்பாணம் வந்தா மட்டும் அவர் வேணும். ஊருக்கு நான் உள்ளுக்கு அவரா?”
காக்கி உடை அணிந்து, இடுப்பில் பெல்ட்டை மாட்டிக்கொண்டிருந்தவன் கள்ளச் சிரிப்புடன் அவளைப் பார்த்தன்.
“என்ன சிரிப்பு?”
“இல்ல. எத்தின கவர்ச்சி நடிகைகள் வந்தாலும் இண்டு வரைக்கும் சிலுக்குக்கு இணையான ஒருத்தர் இல்லை. தெரியுமா உனக்கு?” என்றதும் அவள் முகம் கோபத்தில் சிவந்துபோயிற்று.
“கள்ள ராஸ்கல்! உங்களுக்கு என்னை பாக்க எப்பிடி இருக்கு?” என்று அடிக்க வந்தவளிடம் சில பல அடிகளை வாங்கிக்கொண்டு, அதற்குப் பதிலாய் முத்தங்களைக் கொடுத்து மோட்சம் பெற்றுக்கொண்டான் அவளின் காவல்காரன்.
அவனிடமிருந்து தப்பித்து வெளியே வந்து ஆழ்ந்த மூச்சை இழுத்துவிட்டுத் தன்னைச் சமாளித்தவளுக்கு அவன் பேச்சை எண்ணிச் சிரிப்புத்தான். கீழே இறங்கி வந்து கதிரவனை வரவேற்றாள்.
இவளைக் கண்டதும் சட்டென்று எழுந்து நின்று, “ஹாய் மேம், எப்பிடி இருக்கிறீங்க?” என்று மிகுந்த மரியாதையுடன் அவள் நலன் விசாரித்தான் கதிரவன்.
“நல்லாருக்கிறான் கதிரவன். என்ன மாதிரி இனியாவது கலியாணம் ஏதும் செய்ற ஐடியா இருக்கா? இல்லை இவரோடயே சுத்தப்போறீங்களா?” என்று அவள் கேட்டுக்கொண்டு இருக்கையிலேயே காக்கிச் சட்டையில் கம்பீரமாக இறங்கி வந்தான் எல்லாளன்.
கதிரவனின் உடல்மொழி அப்படியே மாறிப்போயிற்று. விறைப்பாக நின்று எல்லாளனுக்குச் சல்யூட் வைத்தான்.
“அப்பா நானும் நானும்!” என்று அவன் முன்னே வந்து நின்று தன் பிஞ்சுக் கைகளால் கதிரவனைப் போன்று சல்யூட் வைத்தாள் தீபனா. முறுவல் அரும்ப அவளைத் தூக்கிக் கொஞ்சினான் எல்லாளன். நேரமானதால் அவளை அப்படியே ஆதினியிடம் கொடுத்துவிட்டு பார்வையாலேயே அவளிடமும் விடைபெற்றுக்கொண்டு புறப்பட்டான்.
ஜீப் புறப்பட்டது. இருவர் முகத்திலும் சின்ன முறுவல். எட்டு வருடங்களின் பின் மறுபடியும் இணைந்து பணியாற்றப்போகிறார்களே. இதற்கு நடுவில் ஒரு நான்கு வருடங்கள் மலைநாட்டில் பணி புரிந்திருந்தான் கதிரவன்.
தயாநிதி குடும்பத்தின் கோப்புத்தான் எல்லாளனின் கையில் இருந்தது. அத்தனையும் முதல் நாளே மூளைக்கு எடுத்திருந்தான். என்றாலும், “நீங்க என்ன நினைக்கிறீங்க கதிரவன்?” என்று கதிரவனை விசாரித்தான்.
“அவன் ஒண்டும் நல்லவன் இல்லை சேர். போதை மருந்து கைமாத்துறதுதான் மெயின் வேலையே. வெளில மட்டும் ரெண்டு தியேட்டர், ஒரு கலியாண மண்டபம் வச்சு நடத்திறான் எண்டு பெயர். அதால எந்தப் பக்கம் திரும்பினாலும் ஆராவது ஒருத்தன் முதுகில குத்த ரெடியாத்தான் இருந்திருப்பான்.”

