ஆட்டநாயகன் 6.2

“அதுக்கு மொத்தக் குடும்பத்தையும் எரிக்கிற வெறி ஏன்?” 

 

“அதுதான் சேர் எனக்கும் விளங்கேல்ல.”

 

“சிவநாதசுப்ரமணியன யோசிச்சீங்களா?” என்றவனை ஆச்சரியத்துடன் வேகமாகத் திரும்பிப் பார்த்தான் கதிரவன். 

 

“அங்க செத்ததில ரெண்டு பேர் அவரின்ர தங்கச்சி பிள்ளைகள். ஏற்கனவே அவரின்ர மூண்டையும் நாங்க ஒண்டுமில்லாம ஆக்கிப்போட்டம். அப்பிடி இருக்க தங்கச்சி பிள்ளைகளையும் கொல்ல ஏற்பாடு செய்வார் எண்டு நினைக்கேல்ல சேர். ஒரு வழில செத்த பிள்ளைகள் எல்லாம் அவருக்கு பேரப்பிள்ளைகள் முறை.”

 

அது எல்லாளனுக்கும் தெரியும். என்றாலும் அவன் சந்தேகம் சிவநாதசுப்ரமணியனிலேயே நின்றது. 

 

“அவருக்கு எல்லாத்தையும் கைமாத்திக் குடுக்கிறது தயாநிதிதான். அதால ஏதும் பிரச்சினை எண்டாலும் மொத்தக் குடும்பத்தையும் ஏன் எரிக்கோணும்? இது ஒண்டும் எதிர்பாராமலோ, தெரியாமையோ நடந்த மாதிரியும் இல்லை.”

 

ஆம் என்று தலையாட்டிக் கேட்டுக்கொண்டான் எல்லாளன். தயாநிதி மகளுக்கு பதினெட்டாவது பிறந்தநாள் என்று தெரிந்து, அதை அவர் தன் வீட்டில் கொண்டாடுகிறார் என்று அறிந்த ஒருவன், சப்ரைஸ் கிஃப்ட் குடுக்க வந்திருக்கிறோம் என்று சொன்னால் சந்தேக்கப்பட மாட்டார்கள் என்று சரியாகத் திட்டமிட்டிருக்கிறான். 

 

அவர்கள் மிக்கி, மினி உடைகளை அணிந்து வருவதைக் கண்டு வீதியில் யாரும் கேட்டாழும் சொல்வதற்கு இது தகுந்த காரணமாயிற்றே. ஆக, எல்லாமே முதலே திட்டமிடப்பட்டுக்  கச்சிதமாக நிகழ்த்தப்பட்டிருக்கிறது. 

 

“கேதகி எண்டுறது?”

 

“அவாதான் தயாநிதின்ர ஒரிஜினல் மனுசிக்கும் அவருக்கும் பிறந்த மகள்.”

 

“வேற ஆம்பிளைச் சகோதரம்?” 

 

“இல்ல சேர். அவா ஒரேயொரு பொம்பிளைப் பிள்ளைதான். ஆனா தயாநிதி சின்ன வீடு வச்சிருக்கிறார் எண்டு தெரிஞ்ச காலத்தில இருந்தே பிரிஞ்சிட்டினமாம். 15, 16 வருசத்துக்கு முதலே. இவர்தான் அப்பப்ப அங்க போய்ப் பாத்துக்கொண்டு வந்திருக்கிறார். அவே இஞ்ச வந்த மாதிரி எந்த நியுஸும் இல்ல. தயாநிதி இருக்கிற ஏரியால சோபனா அவரின்ர சின்ன வீடு எண்டு ஒருத்தருக்கும் தெரியாது. அந்தளவில கேதகியும் அவான்ர அம்மாவும் இந்தப் பக்கம் வரவே இல்லை.”

 

“பிறகு ஏன் அண்டைக்கு மட்டும் வந்தவா?”

 

“அதுதான் சேர் தெரியேல்ல.” 

 

“அவாவா இருக்க சான்ஸ் இருக்கா?”

 

“நான் நினைக்கேல்ல சேர். ஆனா அவான்ர ஃபோன் லொகேஷன் கடைசியா தயாநிதி வீட்டைத்தான் காட்டி இருக்கு. சோ அவா அங்க வந்தது உறுதி. ஆனா ஒரு பொருள் கூட அவான்ர கிடைக்கேல்ல. எங்க போனா, என்ன ஆனா எண்டுறதுதான் கேள்வி.”

 

“நாளைக்கு இரவே வெளிக்கிட்டு வந்திடுவன் எண்டு கொழும்பில சொல்லிப்போட்டு வந்திருக்கிறா எண்டா பெருசா எதுவும் கொண்டுவந்திருக்க மாட்டாதானே கதிரவன். மிஞ்சி மிஞ்சிப் போனா அந்த பெர்த்டேக்கு போடுற உடுப்பு ஏதும் கொண்டு வந்திருப்பா. அது எரிஞ்சிருக்கும்.”

 

அப்படித்தான் கதிரவனும் யோசித்தான் என்பதில் மறுத்து எதுவும் சொல்லவில்லை அவன். 

 

“வேற ஆராவது சந்தேக லிஸ்ட்ல இருக்கினமா?” 

 

“இல்ல சேர்.”

 

“அப்ப சிவநாதசுப்ரமணியன் வீட்டுக்கு விடுங்க.”

 

இலேசாக வியப்புற்றாலும் அவன் சொன்னதைச் செய்தான் கதிரவன். 

 

ஏற்கனவே தகவல் கொடுக்கவில்லை. ஆனாலும் அவர்களின் நல்ல காலத்துக்கா, இல்லை எல்லாளனின் விசாரணை எப்படி இருக்கும் என்று அறிந்தவர் என்பதாலா அவரும் வீட்டில்தான் இருந்தார். இவன் வந்திருக்கிறான் என்று வாயில் காவலாளி தகவல் சொன்னதும் உள்ளே அழைக்கப்பட்டான். 

 

என்னதான் அரசியலில் பலம் தின்று கொட்டை போட்ட மனிதர் என்றாலும் எல்லாளனைக் கண்டதும் அவர் உள்ளத்தில் எரிமலைகள் வெடித்தன. கண் முன்னே மூன்று மகன்களும் வந்து போனார்கள். மொத்தமாக அறுத்து எறிந்துவிட்டானே. அவனை ஏதாவது செய்ய முடிந்தால்? 

 

உள்ளத்தின் கொந்தளிப்பை வெளியே காட்டாமல் அவனை வரவேற்று உபசரித்துவிட்டு, “சொல்லுங்க எல்லாளன். எப்பிடி இருக்கிறீங்க? திரும்ப யாழ்ப்பாணத்துக்கே நீங்க வந்ததில சந்தோசம். என்னட்ட என்ன விசாரிக்கோணும்?” என்று அவரே ஆரம்பித்து வைத்தார். 

 

“தயாநிதி குடும்பக் கொலை பற்றி.” என்றான் எல்லாளன் சுருக்கமாக. 

 

“என்ன கேக்கோணும்? கேளுங்க.”

 

“உங்களுக்கு ஆர்லயாவது சந்தேகம் இருக்கா?” 

 

ஒரு கணம் யோசித்துவிட்டு இல்லை என்று மறுத்துத் தலை அசைத்தார். 

 

“உங்களுக்கும் அவருக்கும் ஏதும் பிரச்சினை?” 

 

உதட்டோரம் சின்னதாய் வளைய, “என்ன, நான் அவரைப் போட்டுத் தள்ளிட்டானா எண்டு கேக்கிறீங்களா?” என்று உடைத்துக் கேட்டார். 

 

“நான் அப்பிடிச் சொல்லவே இல்லையே. உங்களுக்க பிரச்சினை இருந்து, உங்கட விசுவாசி ஆரும் அந்தக் கோவத்துல இதச் செய்திட்டாங்களா எண்டுதான் கேட்டனான்.”

 

“இல்ல. அப்பிடி ஒண்டும் நடக்கேல்ல.”

“அந்தப் பிறந்தநாள் பார்ட்டி என்னமாதிரி, எல்லாருக்கும் சொல்லிப் பெருசா செய்ய நினைச்சவரா?” 

 

“இல்ல. எங்கட குடும்பமே பெரிய குடும்பம்தான். அதால நெருங்கின உறவுக்க மட்டும்தான் சொல்ல நினைச்சவர்.”

 

“கேதகி எண்டுறது.”

 

அங்குவரை போயிருக்கிறான் என்று நொடியிலேயே புரிந்துகொண்டு, “அந்தப் பிள்ளையும் அவருக்கு மகள்தான்.” என்றார் சுருக்கமாக.  

 

“விளங்கேல்ல.” 

 

“முதல் மனுசின்ர மகள்.” 

 

“முதல் மனுசின்ர மகளா இல்ல சட்டப்படியான மனுசின்ர மகளா?”

 

ஒன்றுமே சொல்லாமல் அவனையே பார்த்தார் சிவநாதசுப்ரமணியன். வார்த்தையை அடக்கிப் பேசு என்று அவர் சொல்வதுபோல் இருந்தது. 

 

அப்போது அங்கே வந்தான் சத்தியவேந்தன். அவனைக் கண்டு இலேசாய் வியப்புற்றான் எல்லாளன். அந்தளவில் சத்தியநாதனின் முக ஒற்றுமை அப்படியே இருந்தது. திரும்பி சிவநாதசுப்ரமணியனைப் பார்த்தான் எல்லாளன். 

 

அது, ‘குடும்ப மொத்தமும் ஆளுக்கு ஒரு சின்ன வீடு வச்சிருப்பீங்களாடா?’ என்று கேட்பது போலவே இருக்க பல்லைக் கடித்தார் மனிதர். 

 

“ஹல்லோ சேர்!” என்று வந்து எல்லாளனுக்குக் கை கொடுத்தான் வேந்தன். தயாநிதி குடும்பத்திற்கு நடந்த அசம்பாவிதம் குறித்து யார் மீதாவது சந்தேகம் இருக்கிறதா என்று அவனையும் விசாரித்தான் எல்லாளன். 

 

அப்படி யார் மீதும் இல்லை என்று மறுத்தான் வேந்தன். 

 

“கேதகியப் பற்றி ஏதும் தெரியுமா?” 

 

“ஆர் கேதகி?” என்றான் அவன் உடனேயே. 

 

“உங்கட மகனுக்கு அவாவைத் தெரியாதோ?” ஒருவிதமாக உதடு வளையச் சிவநாதசுப்ரமணியனிடம் கேட்டான் எல்லாளன். 

 

மனிதருக்கு வேந்தன் மீது பற்றிக்கொண்டு வந்தது. ஆனாலும் காட்டிக்கொள்ளாமல் நின்றார். 

 

“அப்ப உங்களுக்கு அவாவைத் தெரியாது.” வேந்தனிடம் திரும்பவும் கேட்டான். 

 

“இல்ல தெரியாது.”

 

“அந்த வீட்டில அவாவும்தான் அண்டைக்கு இருந்திருக்கிறா. ஆனா பொடியும் கிடைக்கேல்ல, ஆளும் கிடைக்கேல்ல.” என்றதும் அப்பா மகன் இருவர் முகங்களிலும் அதிர்ச்சிக் கோடு ஒன்று திடீர் என்று வெட்டிப்போகும் மின்னல் போன்று வந்து போயிற்று. 

 

அதுவும் சிவநாதசுப்ரமணியனைச் சொல்லவே வேண்டாம். வேந்தனை வெட்டிக் கூறு போட்டால் என்ன என்று நினைத்தார். 

 

“அவான்ர பொடி கிடைச்சிருந்தாலோ, இல்ல அவா உயிரோட இருந்திருந்தாலோ அது வேற. அவா காணாமப் போனதுதான் டவுட்டா இருக்கு. சரி பாப்பம், எப்பிடியும் இந்த கேஸ முடிக்காம நானும் விடப்போறேல்லத்தானே.” என்று அப்பா மகன் இருவரிடத்திலும் பீதியைக் கிளப்பிவிட்டுப் புறப்பட்டான் எல்லாளன். 

 

error: Alert: Content selection is disabled!!