எல்லாளனின் ஜீப் அங்கிருந்து புறப்படும் வரையில் அப்பாவும் மகனும் அசையக்கூட இல்லை. புறப்பட்டதும் திரும்பி வேந்தனைப் பார்த்தார் சிவநாதசுப்ரமணியன்.
வேந்தன் முகத்தில் பதற்றம். இப்படித் திடீரென்று கேதகி பற்றி எல்லாளன் கேட்பான் என்று எதிர்பார்க்கவில்லை. அதில் உளறிவிட்டான்.
அவன் முகமே காட்டிக்கொடுத்துவிட, “இன்னும் என்னடா எனக்குத் தெரியாம செய்து வச்சிருக்கிறாய்?” என்று பற்களுக்குள் வார்த்தைகளைக் கடித்துத் துப்பினார் சிவநாதசுப்ரமணியன்.
“அப்பா”
“சீ! என்னை அப்பிடிக் கூப்பிடாத! சொல்லு, அந்தக் கேதகி எங்க?”
“என்னட்டத்தான் இருக்கிறாள்.” இனியும் மறைக்க முடியாது என்பதில் சொன்னான்.
“அறிவுகெட்ட முண்டம்! என்னத்துக்கடா அவளை நீ வச்சிருக்கிறாய்?”
“அப்பா”
“அப்பா சுப்பா எண்டாம சொல்லித் துலை!”
“அவள் எங்களைப் பாத்திட்டாள்.”
“அப்ப செய்த காரியத்தையும் ஒழுங்கா செய்யேல்ல நீ. இதுல கப்பல்ல இருக்கிற பொருளைக் கொண்டுவரப் போறியா?”
“அப்பா!” என்னவோ அவன் எதற்குமே பொருத்தமற்றவன் போன்ற அவர் பேச்சு அவனைச் சீண்டியதில் சீறினான்.
“என்னடா அப்பா? அவள் உங்களப் பாத்திட்டாள் எண்டா எரிஞ்சுகொண்டிருந்த வீட்டுக்க தூக்கி அவளையும் போட்டிருக்க வேண்டியதுதானே. என்னத்துக்கு அவளைக் கொண்டுவந்து வச்சிருக்கிறாய்?”
இறுக்கமாய் நின்றிருந்தான் அவன்.
“வாயத் திறந்து சொல்லடா!”
“அவளை எனக்குப் பிடிக்கும். அதான்…”
“என்னடா பெரிய பிடிக்கும்? இந்த உலகத்தில பொம்பிளைகளுக்கா பஞ்சம்? இவள் இல்லாட்டி இன்னொருத்தி. அத விட்டுப்போட்டு பிடிக்குமாம், கொண்டு வந்து வச்சிருக்கிறானாம். இனி அவன் மோப்பம் பிடிச்சுக்கொண்டு வருவான். அப்பிடியே உனக்கும் நெற்றிப் பொட்டில பொட்டெண்டு போடுவான். போய்ச் சேரு!” என்றவருக்கு ஆத்திரம் அடங்குவதாக இல்லை.
வேந்தனைப் போட்டுத் திட்டுவார்தான். தான் நினைக்கும் வேகமும் விவேகமும் அவனுக்கு வரவில்லையே என்கிற கோபம் எப்போதுமே இருக்கும். இதுவே மற்ற மகன்களாக இருந்தால் என்று அவர்களோடு இவனை ஒப்பிட்டுப் பார்க்காமல் இருக்க முடிந்ததில்லை.
அதுவே அவனுக்கும் ஏதும் ஆகிவிடுமோ என்று யோசித்ததும் கதிகலங்கிப்போனார். அவனை வாய்க்குள் போட்டு வறுத்தபடி அடிபட்ட சிங்கம் போல் குறுக்கும் நெடுக்குமாக நடந்தார்.
வேந்தனும் கொஞ்சம் தடுமாறித்தான் போனான்.
எல்லாளன் முன்னே வராதே என்று சிவநாதர் முதலே எச்சரித்திருந்தார். அவனுக்குத்தான் இருப்புக்கொள்ளவில்லை. சத்தியநாதனையே போட்டுத் தள்ளியவனைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறான். புகைப்படங்களில், தொலைக்காட்சிகளில் பார்த்திருக்கிறான். இதுவரையில் நேரில் பார்த்ததில்லை. அந்தளவில் அவன் என்ன பெரிய இவன் என்று பார்க்கத்தான் வேண்டுமென்றே வந்தான்.
ஆனால், கேதகி பற்றி எல்லாளன் கேட்பான் என்று எதிர்பார்க்கவில்லை. சமயோசித்தமாகச் சமாளிக்க வராமல் தெரியாது என்று உளறியிருந்தான். இப்போது தேடிக்கொண்டு தன்னிடம் வந்துவிடுவானோ என்று நினைக்கையில் கைகால்கள் எல்லாம் உதறின.
தந்தை அந்தளவில் விட்டுவிட மாட்டார் என்று நம்பிக்கை உண்டுதான். என்றாலும் அடுத்து என்ன செய்யலாம் என்று அவரைப் பார்த்தான்.
அவன் அன்னையின் சொந்த இடம் திருகோணமலை. மூன்று வருடங்களுக்கு முதல் ஒரு முறை அன்னையைப் பார்க்கப் போனபோது கோணேஸ்வரர் கோயிலுக்கு அழைத்துச்சென்றிருந்தார் அவர்.
அங்கு வைத்துத்தான் கேதகியைப் பார்த்தான். பார்த்த கணமே பிடித்துப்போயிற்று. இளமையும் வாளிப்பும் நிறைந்த அவள் அழகு அவனை ஈர்த்தது.
கிட்டத்தட்டப் பத்துப் பேர் கொண்ட கும்பலாக எல்லா இடத்தையும் சுற்றி சுற்றிப் பார்த்ததும், பார்க்கிற இடமெல்லாம் நின்று புகைப்படங்கள் எடுத்துக்கொண்டதையும் வைத்து அவர்கள் இந்த ஊர் இல்லை என்று கண்டுகொண்டான்.
அவர்கள் கவனிக்காத வகையில் பின்தொடர்ந்து, அவர்கள் வந்த வாகனச் சாரதியோடு அந்த ஊர்க்காரன் என்று சொல்லி அறிமுகமாகி, அடுத்த மூன்று நாள்களும் அவர்கள் போகிற இடத்துக்கெல்லாம் அவனும் போயிருக்கிறான். கடைசி நாள் எப்படியாவது அவளோடு பேசிவிட அவன் முயன்றபோது அது நடக்கவில்லை. அவன் அவளைத் தனியாகப் பிடிப்பதற்குள் வாகனத்தினுள் ஏறி அமர்ந்திருந்தாள் அவள்.
அன்றைக்குப் பிறகு அவளைக் காணக் கிடைக்கவில்லை. அவர்கள் பயணித்து வந்த வாகன இலக்கத்தை வைத்துக் கொழும்பிலிருந்து வந்திருக்கிறார்கள் என்று மட்டுமே அவனால் கண்டுபிடிக்க முடிந்திருந்தது.
மனத்தளவில் அவளைத் தேடிக்கொண்டேதான் இருந்தான். அப்படி இருக்கையில் அன்று தயாநிதியின் வீட்டை எரித்துவிட்டு வீட்டை விட்டு ஓடி வருகையில் அவர்களுக்கு முன்னே யாரோ ஒரு பெண் ஓடுவதைக் கண்டதும் பயந்துபோனார்கள்.
பாய்ந்து பிடித்து, சிவநாதர் சொன்னது போன்று அவளையும் தூக்கி அந்த வீட்டுக்குள் போட முயன்றபோதுதான் அவள் முகம் பார்த்தான். பார்த்தவன் ஆனந்தமாய் அதிர்ந்துபோனான். இதற்குள் அவள் மயங்கியிருந்தாள்.
இவர்கள் முகமூடி போட்டிருந்ததால் பெரிய பாதிப்பில்லாதபோதும் ஒயிலும் பெட்ரோலும் சேர்ந்து எரிந்ததில் கிளம்பிய புகையும், நடந்த கொடூரத்தினைக் கண்முன்னே கண்ட அதிர்ச்சியும், தனக்கும் ஏதும் நடந்துவிடுமோ என்கிற பயமும் அவளை மூர்ச்சையடைய வைத்திருந்தன.
அப்படியே தூக்கிக்கொண்டு வந்துவிட்டான். யாழ்ப்பாணம் கொக்குவில் பகுதியில் அவனுக்கு என்று ஒரு இடம் இருக்கிறது. சிவநாதரோடு நிரந்தரமாக வந்துவிட்ட பிறகு அவருக்கே தெரியாமல் அவன் வாங்கிய வீடு அது. அவன் ராஜாங்கம் அங்குதான். அங்கேதான் கேதகியை வைத்திருக்கிறான்.
அங்கு வைத்து அவளை விசாரித்தபோதுதான் அவள் தயாநிதியின் மகள் என்கிற விடயம் அவனுக்கும் தெரியவந்திருந்தது.
“அவள் வந்தது உனக்கு முதலே தெரியுமா?” சந்தேகத்துடன் விசாரித்தார் சிவநாதர்.

