ஆட்டநாயகன் 8.1

 

கேதகிக்குத் தன் வாழ்வில் என்ன நடந்துகொண்டிருக்கிறது என்று விளங்கவேயில்லை. மனப்பிறழ்ச்சி உண்டாகிப் பைத்தியமாகிவிடுவோமோ என்று பயந்தாள். அந்தளவில் இரண்டு வாரங்களாக ஒரு வீட்டினுள் சிறை வைக்கப்பட்டிருக்கிறாள். 

 

ஏன், எதற்கு என்று ஒன்றும் புரியவில்லை. அவசரத்  தேவைகளுக்கு வீட்டுக்குள்ளேயே இருக்கும் குளியலறையைப் பயன்படுத்தலாம். நேரா நேரத்திற்கு உணவுப் பார்சல் வந்துவிடும். போட்டிருந்த உடையுடனேயே கொண்டுவரப்பட்டவளுக்கு மாற்றுடைகள் இரண்டு தரப்பட்டிருந்தன.

 

முதலில் கத்தி, கூச்சல் போட்டு, தப்பியோட முயன்று, அடிவாங்கி அடங்கிப்போய் இருக்கிறாள். அழுது, பயந்து, கெஞ்சி எதுவும் வேலைக்காகவில்லை. காட்டு மிருகங்களைப் போன்று அங்கு நடமாடுகிறவர்களிடமிருந்து தன்னால் தப்பிக்க முடியும் என்கிற நம்பிக்கை இப்போது அவளுக்கு மருந்துக்கும் இல்லை. 

 

அவளுக்கு நினைவு தெரிய ஆரம்பித்த காலத்தில் இருந்தே ஒரு சோகம் அவள் வாழ்வில் அப்பியே இருந்திருக்கிறது. கூடவே அவமானத்தின் சாயலும். 

 

அவள் அன்னை அருந்ததியின் சொந்த இடம் வவுனியா. தயாநிதியைப் பேசி முடித்துவைத்தார்கள். வவுனியா தியேட்டர் ஒன்றின் பொறுப்பாளராக வேலை பார்த்தவர் தயாநிதி. ஆரம்ப வாழ்க்கை நன்றாகத்தான் இருந்தது. 

 

இவளுக்கு மூன்று நான்கு வயதாக இருந்த காலத்தில் தயாநிதியிடம் சடுதியான மாற்றம். அவர்கள் வீட்டு நிலையும் பார்த்துக்கொண்டிருக்க உயர்ந்துபோயிற்று. 

 

எப்படி என்று அருந்ததி கேட்டபோது வியாபாரத்த்தில் ஈடுபட்டிருப்பதாகச் சொன்னார் தயாநிதி. பொருள்களைக்  கைமாற்றி விடவேண்டும், அதற்குத் தரகர் கூலி போன்று ஒரு தொகை தருவார்கள், முதல் எதுவும் போடாமல் பணம் ஈட்டுகிட்டேன் என்று சொன்னபோது தன் கணவரின் கெட்டித்தனத்தை எண்ணிப் பூரித்துப்போனார் அருந்ததி. 

 

அது ஆரம்பத்திற்குத்தான். கணவரின் போக்கு, பேச்சு, அவ்வப்போது அவர் யாருடனோ உரையாடுகையில் காதில் விழும் சில செய்திகள், மாதக்கணக்கில் வீட்டுக்கு வராமல் இருப்பது, இன்னுமின்னும் பெருகிக்கொண்டு போகும் பணம், அவரைத் தேடி வரும் புதிய புதிய மனிதர்கள் என்று ஒரு பயம் பிடித்துக்கொண்டது அவரை. 

 

இப்படி இருக்கையில்தான் தயாநிதி யாழ்ப்பாணச் சிறையில் இருக்கிறாராம், ஏதோ கள்ளக் கடத்தல் வேலை பார்த்தாராம் என்கிற செய்தி அவர் தலையில் இடியாக இறங்கிற்று. 

 

அப்போது ஏழு வயதான மகளையும் கூட்டிக்கொண்டு யாழ்ப்பாணம் ஓடினார். அங்கு வைத்துத்தான் தயாநிதிக்கும் சோபனாவுக்கும் இருக்கும் கள்ள உறவு தெரிய வந்திருந்தது. 

 

மொத்தமாய் நொறுங்கிப்போனார். திக்குத் தெரியாத காட்டில் தொலைந்துபோன நிலை. பணத்துக்கு ஆசைப்பட்டுத் தவறான வழியில் போகிறார் என்று நினைத்தாரே தவிர்த்து இப்படித் தன்னை முற்றிலுமாக ஏமாற்றுவார் என்று நினைக்கவே இல்லை. 

 

அடுத்து என்ன செய்வது என்று தெரியா நிலை. யாரிடமும் சொல்ல முடியவில்லை. அவமானமாக உணர்ந்தார். உள்ளே வைத்து அழுத்தவும் முடியாமல், இதைக் கடந்து வரவும் முடியாமல் நரகத்தையே அனுபவித்தார். சிவநாதசுப்ரமணியனின் உதவியில் தயாநிதி சிறையிலிருந்து வெளியே வந்தபோது வவுனியா வீட்டில் இல்லை. 

 

திருமணத்தின்போது அவர் வீட்டினர் அவருக்குப் போட்ட சீதன நகைகளை மட்டும் எடுத்துக்கொண்டு மகளோடு கொழும்பு வந்திருந்தார். தன் வீட்டினரிடம் கூடச் சொல்லவில்லை. 

 

எப்படியோ தேடிப்பிடித்துக்கொண்டு வந்த தயாநிதி எத்தனையோ முறை மன்னிப்புக் கேட்டும் அவர் அசையவில்லை. முறையாக விவாகரத்துப் பெற்றுக்கொண்டது இல்லையே தவிர்த்து மனத்தளவில் மொத்தமாய்ப் பிரிந்திருந்தார். 

 

மெல்ல மெல்ல விடயம் எல்லோருக்கும் தெரியவந்தது. அருந்ததி வீட்டினர் உட்பட அனைவரும் அவர் அப்படி வெளியே வந்ததைத்தான் தவறு என்றார்கள். அனுசரித்துப்போயிருக்க வேண்டும், பெண் பிள்ளையை வைத்துக்கொண்டு தனியே வந்தது மகா தவறு என்று சொன்ன எல்லோரிடமிருந்தும் ஒதுங்கி, அருந்ததி தன் உலகத்தைச் சுருக்கிக்கொண்டார். 

 

கேதகிக்கு ஆரம்பத்தில் ஒன்றும் புரியவில்லை. பாசமான அப்பாவை விட்டுவிட்டு இப்படித் தனியாக அழைத்து வந்து வைத்திருக்கிறார் என்று அன்னை மீதுதான் கோபம். 

 

தன்னைப் பார்ப்பதற்காகத் தின்பண்டங்கள், விளையாட்டுப் பொருள்கள், நல்ல நல்ல உடைகள் எல்லாம் வாங்கிக்கொண்டு வரும் அப்பாவை வீட்டுக்குள்ளும் எடுக்காமல், அந்தப்  பொருள்களையும் அவர் முன்னேயே தூக்கி எறிந்து, விரட்டி அடிக்கும் அம்மா வில்லியாகவே தெரிந்தார். 

 

ஆனால், விவரம் தெரிய ஆரம்பிக்கையில் அதிர்ந்துபோனாள். அவளைக் கண்டதும் கனிந்து கரையும் அந்த முகத்துக்கு இன்னொரு முகம் உண்டா? அது தன் அன்னைக்குத் துரோகம் செய்த முகமா என்று ஜீரணிக்க முடியவில்லை. உண்மை அதுதான் என்று தெரிந்துமே நம்ப முடியாமல் தனக்குள் வைத்து அழுது கரைந்திருக்கிறாள். 

 

அதன் பிறகு அவளும் ஒதுங்கிக்கொண்டாள். அப்பாவுக்காக ஏங்கி ஏங்கியே வளர்ந்ததால் கோபத்தோடு சேர்த்து வலியும் நிரந்தரமாய்த் தங்கிப்போயிற்று. 

 

அருந்ததி படித்த பெண். முதலில் நேர்சரி ஆசிரியையாக சேர்ந்து, பின் தன் தகுதியை வளர்த்துக்கொண்டு, பாடசாலை ஆசிரியையாகப் பணியாற்றினார். கடைசியில் மார்பகப் புற்று நோய்க்குத் தன் உயிரைக் கொடுத்திருந்தார். 

 

அவர் இருந்தவரையில் பரவாயில்லை. அவரும் போன பிறகு மனம் விட்டுப்போன நிலை அவளுக்கு. தயாநிதி தன்னுடனேயே வந்திருக்கும்படி கூப்பிட்டார். அவள் மறுத்துவிட்டாள். நாளாக நாளாகத் தனிமை ஒருவிதமாக அவளை மாற்றியது. ஒரு வெறுமை. யாரையும் ஒரு அளவு தாண்டித் தன்னை நெருங்க விடப் பயம். தனக்கு யாரும் வேண்டாம் என்று ஒரு வைராக்கியம். 

 

அருந்ததிக்கு ஒரு வருடம் முடிந்ததில் இருந்தே தயாநிதி அவள் திருமணம் பற்றிக் கேட்க ஆரம்பித்திருந்தார். அவளுக்கு ஆர்வமில்லை. எந்த ஆணையும் நம்பத் தயாராகவும் இல்லை. நாளைக்குத் தன் நிலையில் தன் பிள்ளையும் வந்து நின்றுவிடுமோ என்கிற அச்சம் வேறு. 

 

இப்படி இருக்கையில்தான் பிறந்தநாள் விழாவுக்குத் தயாநிதி அழைத்தார். அவள் இறுக்கமான குரலில் மறுத்துவிட்டு அழைப்பைப் பட்டென்று துண்டித்துவிட்டால் அதன் பிறகு அதைப் பற்றிப் பேச மாட்டார். இந்த முறை அவர் விடவில்லை. 

 

பிடிவாதமாக அவளை வரவழைத்துவிடுவதில் குறியாக இருந்தார். அதில்தான் இதுதான் கடைசியும் முதலுமாக இருக்க வேண்டும் என்று சொல்லிவிட்டுப் புறப்பட்டு வந்தாள்.

 

அவருக்கு இன்னொரு குடும்பம் உண்டு, பிள்ளைகளும் உண்டு என்று தெரிந்தாலும் யாரையும் அதுவரையில் நேரில் பார்த்தது இல்லை. வந்து பார்த்தபோது அந்த சோபனா, அவள் மூலம் பெற்ற மூன்று பிள்ளைகள், அவர்கள் ஐவருக்குள்ளும் இருக்கும் பிணைப்பு, அப்பா அப்பா என்று அந்தப் பிள்ளைகள் அவரிடம் செல்லம் கொஞ்சுவது என்று அவர் முழுமையான ஒரு வாழ்க்கையை வாழ்வதாகவே பட்டது அவளுக்கு.

error: Alert: Content selection is disabled!!