மீண்டும் மீண்டும் இன்று வேலைக்கு வராது இருந்திருக்கலாம் என்று எண்ணும் வகையில் எதிலுமே கவனம் செலுத்த முடியாது திண்டாடிப்போனாள், கவினி. மனம் அவள் வசமின்றிக் கலைந்து கிடந்தது. அதன் மூலைமுடுக்கெல்லாம் ஒருவனின் இருப்பு. கரமிரண்டையும் விரித்துக்கொண்டு ஆழ் பார்வை பார்த்தான். அப்பார்வையில் தேங்கி நின்ற எதிர்பார்ப்பும் அன்பும் உன்னிடம் பிரதிபலிப்பு இல்லையோ என்று மனம் சுணங்கிப் போயின.
எதில் வந்தாய் என்று, வாணன் சாதாரணமாகக் கேட்டது கூட மிகையாகத் தடுமாற வைத்திட்டு. அவனோ, ஒரு சாதியாகப் பார்த்தான்.
“என்னவோ வந்து சேர்ந்திட்டாய்பா, எனக்கு மத்தியானச் சாப்பாடும் வந்திட்டு.” என்றுவிட்டுச் சென்றவன், நமுட்டுச் சிரிப்போடு போனானோ என்ற குழப்பம் வேறு.
சேந்தனோடு வந்திறங்கியதைக் கண்டிருப்பானோ! தவித்துப் போனாள். தேநீர் இடைவேளையில் சேந்தனையும் தகப்பனையும் சந்தித்தத்தைச் சொல்லி விட்டாள். சேந்தன் வேலை செய்யும் வங்கியும் இதே கட்டிடத்தில் தான் என்றபோது, அதுதான் தினமும் சந்தித்துக் கொள்கிறோமே என்று சொல்லவா முடியும். புதுத் தகவலாகக் கேட்டுக் கொண்டான், வாணன். உள்ளே எழுந்த நகைப்பை மறைக்கும் பொருட்டு, “இன்னொரு கோப்பி எடுத்துக்கொண்டு வாறன்.” என்றுபடி எழுந்தோடிவிட்டான்.
பனிப்பொழிவு ஒருவழி பண்ணிக்கொண்டிருந்தது. வெளியே எங்கு பார்த்தாலும் வெள்ளை வெளேரென்று இருந்தது. அதுவே மாலைப்பொழுதின் ஆரம்பத்திலேயே எல்லோரும் வீடுகளுக்குச் செல்ல ஆயத்தமானார்கள்.
ஊபருக்கு சொல்ல வேண்டும் என்றதும் , அவளுக்கும் சேர்த்து புக் பண்ணுவதாகச் சொன்னான், வாணன். கைப்பேசியை எடுத்த வேகத்தில் குறுஞ்செய்தி ஒன்றை அனுப்பிவிட்டே தனக்கு ஊபர் பதிவு செய்தான்.
“இனி வெளிக்கிடச் சரியா இருக்கும்.” என்ற வாணனோடு புறப்பட்டாள், கவினி.
மின்தூக்கிக்குள் நுழையும் போதே சேந்தன் தான் மனக்கண்ணில் வந்தான். மின்தூக்கி நான்காவது மாடியில் நின்று வாய்திறக்கையில் அவன் உள்ளிடுவான் என்ற எதிர்பார்ப்பு கேட்டுக் கேள்வியில்லாது வந்திருந்தது. ஏமாற்றம் தான். இது எல்லாம் என்ன வேலை கவினி என்று, தன்னைத்தானே அதட்டிக்கொண்டு கீழ்த்தளத்தில் மின்தூக்கியில் இருந்து வெளிப்பட்டவளை ஓடிவந்து கட்டிப் பிடித்திருந்தாள், இயல்.
“சொல்லாமல் கொள்ளாமல் வந்தா எங்களுக்குத் தெரியவராதாக்கும்.” என்று, கலகலவென்று கதைத்தவள், வாணனோடும் அளவளாவினாள்.
“வாங்க, அங்க இருந்து கதைப்பம்.” சற்றே தள்ளிப் போடப்பட்டிருந்த இருக்கைகள் நோக்கி நகர்ந்தாள். அவள் பிடிக்குள்ளிருந்த கையை விடுவிக்கப் பார்த்தபடி, “எங்களுக்கு ஊபர் வந்திரும் இயல். இன்னொரு நாளைக்குக் கதைப்பமே!” மணியைப் பார்த்தபடி சொன்ன கவினி, கழன்று கொள்ள முயன்றாள். சேந்தனின் தங்கை பிடியைத் தளர்த்தவில்லை.
கவினியைப் பார்த்து வடிவானதொரு முறுவலைக் கசியவிட்டாள்.
“பிடிச்சா இலேசில விடுற பழக்கம் எங்கட குடும்பத்திலயே இல்ல கவினி. ஏனெண்டா ஒண்டுக்கு நூறு தடவை யோசிச்சுப்போட்டுத்தான் பிடிப்பம்.” சொல்லிவிட்டுக் கண்ணடித்தாள். பார்வை வாணனின் விழிகளையும் உரசி நகர்ந்தது.
இருபொருள் படக் கதைக்கிறாளோ! கவினிக்கு மட்டுமில்லை, வாணனுக்கும் அப்படித்தான் இருந்தது.
யோசனையில் நின்றவளை அழைத்துச் சென்று அங்கிருந்த மென்னிருக்கையில் இருத்திவிட்டு இடித்துக்கொண்டே அமர்ந்தாள், இயல்.
“ஊபர் வந்திட்டு, கவினி. உம்மட கேன்சல் செய்திட்டன். நான் போயிட்டு வாறன்.” என்று வெளிக்கிட்டான், வாணன்.
“ஏன் வாணன், நான் இப்ப எப்பிடிப் போ …” சொல்லிக்கொண்டிருந்தவள் பார்வை மின்தூக்கியிலிருந்து வெளிப்பட்ட சேந்தனில் பட்டது.
“அண்ணாவோட போமன்” கண்ணடித்துவிட்டு, “ வாறன் அண்ணா” ஓடினான், சேந்தன்.
‘இவன …கூட இருந்து எட்டப்பன் வேல செய்யிறியாடா …வா நாளைக்கு’ மனத்தில் வாணனின் முதுகைப் பிளந்தாலும் “போவமா?” என்றவன் பின்னால் இயலின் பிடியில் இழுப்பட்டாள்.
பிரதான சாலைகள் மாத்திரம் உப்பு அடித்து வழித்து விட்டிருந்தார்கள். கரையோரமாக வழித்துவிட்டிருந்த பனிக்குவியல் சேறாக இருந்தது . மற்றும்படி, வெள்ளை வெளேரென்று உருண்டு புரளும் ஆசை கொடுத்தாலும் அந்த விசப்பரீட்சை வேண்டாமே என்றது ஊசியாகக் குத்திய குளிர்.