“ஆள இந்த ஸ்னோக்குள்ள உருட்டி எடுப்பமா இயல்?” காருக்குள்ளிருந்த மவுனத்தைக் கலைத்தான், சேந்தன்.
கவினி முறைத்தாள். திரும்பிப் பார்த்துக் கண்ணடித்தான். இயலுக்கு சிரிப்பை அடக்க முடியவில்லை. பட்டென்று மறுபுறம் திரும்பிச் சிரித்தவளுக்கு, கவினியை நினைத்தால் பயமாகவும் இருந்தது. பட்டென்று முறித்துவிட்டுப் போய்விட்டால் எல்லாம் சரி!
அவள் தமையனுக்கு அந்தப் பயமிருக்கவில்லையோ!
தம்மிருவருக்கும் இடையிலான முடிச்சு எஃகுவின் உறுதியில் இருப்பதைத் தெள்ளென உணர்ந்திருந்தான், அவன். அந்த உணர்வின் நம்பகத்தன்மையை கடுகளவேனும் சந்தேகிக்க முடியவில்லை. அவளுள் அவ்வுணர்வை வலுவாக ஏற்படுத்த, பார்த்து பார்த்து ஒன்று ஒன்றையும் செய்கிறான். அதற்காகத் தானே தந்தையோடு சென்று அவளைச் சந்திக்க வேண்டுமென்று காத்திருந்தான்.
தகப்பன் வாயால் உச்சரித்த ‘மருமகளே’ என்பதை அவனுள்ளம் எவ்வளவு இரசித்தது என்பது இவளுக்குத் தெரிந்திருக்குமா? ‘நீயும் ரசிச்சியாடி?’ உள்ளத்தின் கேள்வியோடு கவினியைப் பார்த்தான்.
“என்ன சத்தமே இல்லை?” என்றான். நான் கூட்டிக்கொண்டு போய்விடுகிறேன் என்ற பிறகும் ஊபர் புக் பண்ணினாயா என்றெல்லாம் விசாரிக்காது அப்படியொரு விசயமே நடவாத பாவனையில் கதைத்தான்.
“பயப்படாதீங்க கவினி , நான் உங்கட பக்கம். ரெண்டு பேரும் சேர்ந்து ஆள உருட்டி விடுவம் சரியா?” விழிகளால் சிரித்தபடி சொன்னாள், இயல்.
“அப்பிடியும் ஆசை இருக்கோ!”
அவன் தங்கை சொன்னதிற்கு இவளிடம் முறைப்போடு விசாரித்தவனை என்ன செய்வது? அண்ணனும் தங்கையும் சேர்ந்து தன்னைக் கதைக்க வைக்க முயல்கிறார்கள் என்று விளங்காதா என்ன? வாயை அழுத்தமாக மூடிக்கொண்டிருந்தாள், கவினி.
மனமோ, பல மாதங்கள் பின்னோக்கிப் பயணித்தது. முதல் முதல் இவர்களைக் கண்டதில் இருந்து நடந்த ஒன்று ஒன்றையும் புதிதாக உணரச் செய்தது. மனம் சுருள முகம் கன்றிற்று. தாய் முகமும் நிவேதா முகமும் மனக்கண்ணில் முறைப்போடு உலாப் போனது.
எதை வைத்து அவள் இப்படித்தான் என்று கணிக்கிறார்கள்? முதல் யார் இவர்கள்? எல்லாவற்றுக்கும் மேலாக இவன் சேந்தனை எந்த வகையில் சேர்ப்பது? அவள் மறுப்பைச் சொன்ன பின்னரும் வீட்டினரிடம் மட்டுமா? வேலையிடத்தில் கூட பியான்ஸே என்று அறிமுகம் செய்யும் உரிமையை அவனே எடுத்துக் கொள்வானா?
பட்டென்று பார்வை அவன் முகத்தில் படிந்தது. பக்கவாட்டில் மட்டுமே தெரிந்தது. எட்டி நங் நங் நங் நங் என்று குட்ட வேண்டும் போலிருந்தது.
தன்பாட்டில் ரியர் வியூ சென்றிருந்தது, பார்வை.
அவன் அவளைத்தானே பார்த்துக் கொண்டிருக்கிறான். என்ன என்பதாகப் புருவம் உயர்த்தி விசாரித்த பாவனையில் அத்தனை உரிமையும் நெருக்கமும். அதுவும் விழிகளோடு கைகோர்த்த அந்த முறுவல் அவள் இதயத்தின் ஆழம் சென்று சுரண்டிப் பார்த்திட்டு. சரக்கென்று பார்வையை விலத்திக்கொண்டாள்.
அந்தக் கணம், உள்ளத்தில் எழுந்த உணர்வை வரையறை செய்யவே இயலவில்லை. அப்பம்மா, தகப்பன், பரமேஸ்வரி குடும்பம் அதைக் கடந்தால் வாணன்…இவர்கள்தான் அவளுக்குக் கனிவை, கரிசனையை பாதுகாப்புணர்வைக் கொடுப்பவர்கள். அவர்களிடமே அவள் தன் தளர்வை, வருத்தத்தை அவ்வளவு இலகுவில் காட்டிக்கொள்வதில்லை. இப்போது, அவர்களைக் கடந்து, பார்வையாலேயே நானிருக்கிறேன் என்று ஒருவனால் உணர்த்த முடியுமா?
தலை விண்ணென்று வலித்தது. ‘ மருமகளே’ என்ற பாசமான விளிப்புக் காதோரம் கேட்பது போலிருந்தது. அன்பும் பரிவும் காட்டும் இவன் தந்தை ஒருபுறம், தோழமையோடு நெருங்கும் இயல் மறுபுறம் என்றால், எப்பக்கம் திரும்பினாலும் ‘இனிமேல் அப்பிடிச் சொல்லாதே’ என்று, வேதனை கலந்த குரலில் சொன்னவன் வியாபித்து நின்றால் அவள் என்னதான் செய்வாள்?
தனியாக, துணிச்சலாக உலகை எதிர்கொள்பவளை கணத்தில் சிறு குழந்தையாக்கி அவன் கைவளைக்குள் அடக்கிக்கொள்ள அழைத்தானே! அவளறிய தகப்பன் கூட அவளுக்கு அப்படியொரு பாசக் கதகதப்பைக் கொடுத்ததில்லை. இதோ இப்போதும் வா வா என்று அழைக்கும் பிரேமை! உள்ளமோ, அந்தக் கைகளில் அடங்கிவிடத் திமிறியது. யாருக்குத்தான் பிடிக்காது போகும்? நெற்றி பொட்டை அழுத்தினாள், கவினி.
அன்று மட்டுமில்லை, இன்று காலையில் கூட இது சரிவராது என்றவளால் இவனை, இவன் நினைவுகளுடனான உறவை ஒன்றுமேயில்லை என்று தட்டிக் கழித்துவிட முடியுமா?
தளர்ந்து அவன் நேசத்தின்பால் சாயும் மனம் கடைசியில் வலி வேதனையைப் பரிசாகப் பெறப் போகிறதா? இல்லை …
விழிகள் நிறைந்தன. தன் தளர்வைப் பிறருக்குக் காட்டப் பிரியப்படாதவள் உள்ளிழுக்க எவ்வளவோ முயன்றாள்.தோல்விதான். முத்தாக வழிந்த கண்ணீரை பட்டென்று துடைத்துவிட்டு வெளிப்புறம் பார்த்தாள்,கவினி.
“என்ன தலையிடிக்குதா கவினி?” தோளில் தட்டி வினவிய இயலைப் பார்க்க முடியவில்லை.
“இல்ல இல்ல சும்மா …” அவள் பார்வையைத் தவிர்த்தவளையே பார்த்தபடி பிரதான பாதையிலிருந்து வளைத்துத் திருப்பினான், சேந்தன்.
“எங்க அண்ணா இதால போறீங்கள்?” இயல் கேட்டதற்குப் பதில் சொல்லவில்லை.
ஸ்னோ குவிந்த பாதையால் மெல்லச் சென்றது, கார். பனிபோர்வை மூடியும் மூடாதும் பெரிய குளமொன்று இருந்தது. சற்றே தள்ளிக் காரை நிறுத்திவிட்டு “இறங்குங்க, கொஞ்சத் தூரம் நடந்திட்டு வருவம்.” என்றபடி இறங்கி அவள் புறமாக வந்தான்.
“தொப்பி, கிளவுஸ், சோல் எல்லாம் வடிவா போட்டுக்கொண்டு இறங்கும்!” கதவைத் திறந்தான்.
அவளின் செவ்வரியோடிய விழிகளில் கூர்மையாகப் பார்வை படிந்தது.
“இல்ல நான் வரேல்ல. போவம். இல்லையோ நீங்க ரெண்டு பேரும் நடந்திட்டு வாங்க.” என்றவளுக்குப் பல்லுக் கிட்டியது.
“ஆங்! புது வெள்ளை மழை பொழிகிறது ஷோர்ட் எடுத்து போடலாம். சும்மா வாரும்” கையைப் பிடித்து இழுத்து இறக்கிவிட்டு காரை லொக் செய்தான்.
“வாங்கோ கவினி, ஷோர்ட் எடுக்கப் போறிங்களா ? சூப்பர் வியூ! எடுங்கோ. இல்லாட்டி ஃபோட்டோஸ் எடுப்பம். அண்ணா எங்கள் ரெண்டு பேரையும் எடுத்து விடுங்கோ!” அவளைக் கட்டிப்பிடித்துக்கொண்டு போஸ் கொடுத்தாள் , இயல்.
“அடுத்தது எங்களை வச்சு எடுத்து விடோணும்.” என்றபடி தட்டினான்.
“உங்கட அண்ணாவை இந்தக் குளத்துக்கத் தள்ளி விடப்போறன். அலட்ட வேணாம் எண்டு சொல்லுங்க இயல்.” நடுங்க நடுங்கச் சொன்னவளைப் பார்த்து வாய்விட்டே சிரித்தவன், “குளமென்ன குளம்!கடலுக்க தள்ளினாலும் இழுத்துக்கொண்டேதான் விழுவன். எப்பவும் நினைவில வச்சிருக்கோணும் சரியா?” என்றபடி, தங்கையிடம் கைப்பேசியைக் கொடுத்த வேகத்தில், அவளை இரு கரத்தாலும் வளைத்துத் தன்னுள் அடக்கிக்கொண்டு போஸ் கொடுத்தான்.
அவன் செய்கை, அவளைச் சற்றும் சுதாகரிக்க விடவில்லை. சுர்ரென்று ஏறிய கோபத்தோடு அண்ணாந்து அவனைப் பார்த்தவள் விலகிட முனைந்தாள். அதிலும் தோல்விதான். “என்ன வேல இது சேந்தன், விடுங்க முதல்!” திமிறியவள், “இயலையும் வச்சுக்கொண்டு இதெல்லாம் என்ன?”என்றதையும் சேர்த்திருந்தாளா!