கரையுடைக்கும் கணமொன்றில் – 28 (1)

பனிப்பொழிவு  இன்னுமே அதிகரிந்திருந்தது. கவினியின் மனத்துள் இருந்த வெம்மைக்கு அது இதமாய் இருந்தது.  

நினைவு தெரிந்ததிலிருந்து பழகிப் போனதொன்றாச்சே, பனித்தூவலால் சேந்தன் மனச்சினத்துக்கு மருந்தளிக்க இயலவில்லை. அவள் கரம் பற்றியபடியே வந்து காரின் முன்பக்கக் கதவைத் திறந்துவிட்டான். அவள் ஏறியதும் மூடிவிட்டுத் திரும்பியவன் பார்வை வீட்டு வாயிலில் தரித்திட்டு.  சகோதரியும் தகப்பனும் இவர்களையே பார்த்தபடி நின்றிருந்தார்கள். 

கை காட்டிவிட்டு  வந்து ஏறியமர்ந்தான். காரைக் கிளப்பவில்லை. ஒற்றை வார்த்தை கதைத்துக்கொள்ளவும் இல்லை. இன்றைய உதயத்தில் இப்படியெல்லாம் நடக்கும் என்று இருவருமே நினைத்திருக்கவில்லை. மனம் கொள்ளா நேசம் இருந்தும் எட்டி நின்று ரசித்தவன். மிகவுமே பொறுமை காத்திருக்கிறான். காக்க வைத்தது, அவளின் தனக்கான  தேவை.

இன்று காலை,  தந்தையோடு கதைக்கச் செல்கையில் அவள் இவ்வளவு அருகில் வருவாள் என்று எதிர்பார்க்கவேயில்லை. அதேபோல், ஆரம்பத்திலிருந்து விருப்பமின்யைக் காட்டியிருந்தாலும் தாயின் இன்றைய சினத்தையும் கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை. 

அவனுக்குப் பிடித்த இரு பெண்கள் ஒரே நேரத்தில் வெவ்வேறு விதமாக அவனைத் தாக்கிவிட்டிருந்தார்கள். 

தாயின்  சினமும் தாரம் இவள்தான் என்று முடிவு செய்திருந்தவளின் இதமும் கட்டிப்பிடித்துச் சண்டையிட்டு  நடுவில் நின்றிருந்தவனை ஒரு வழிபண்ணிக் கொண்டிருந்தன.

கவினியும் தான் பதுமையாக அமர்ந்திருந்தாள். மடைதிறந்த வெள்ளம் போல் அடுத்தடுத்து ஒன்றன்பின் ஒன்றாக நிகழ்ந்தவை மௌனியாக்கிவிட்டிருந்தது.

 முதலில் தன்னை மீட்டுக்கொண்டது, சேந்தன்தான். அவனை மீறி வெளியேறிய பெருமூச்சோடு அவளைப்  பார்த்தான். பாதையோர விளக்கொளி அவள் விழிகளின் மினுக்கத்தைக் காட்டிக் கொடுத்தது. அவள் கரத்தைப் பற்றிப்  பொத்திப் பிடித்துக்கொண்டான். 

“அம்மா அப்பிடிக் கதைச்சதுக்கு உண்மையாவே சொறி கவினி!” உணர்ந்து சொன்னான். 

“பச், விடுங்க!” ஒருபோதும் கேளாத சின்னக்குரலில் சொன்னாள்.

“அம்மா கதைச்சதைத் தானே?” என்றவனது ஆழ்ந்தொலித்த குரலில் ஒட்டி நின்ற ஏக்கம் தீண்டியதில்  விசுக்கென்று திரும்பி அவன் முகம் பார்த்தாள்,கவினி. 

“இல்ல இப்ப நீர் என்னையோ, எங்கட நேசத்தையோ விடச் சொல்லேல்ல எல்லா? அம்மாட்ட சொன்னது எல்லாம் உண்மையா உணர்ந்து தானே சொன்னீர்?” கேட்டவனுக்குப் பதில் சொல்லவில்லை, செய்கையில் காட்டினாள், அவள்.

 தாமதியாது நகர்ந்த அவள் தலை அவன் தோளில் அழுந்தச் சாய்ந்து கொண்டது. கரமிரண்டும் அவன் கரத்தைக் கெட்டியாகப் பொத்திப் பிடித்துக்கொண்டன.  

வெளியில் இயற்கையின் பூஞ்சிதறல் வேகமெடுத்திருந்தது. காருக்குள் பனிக்குளிரோடு கலந்த வெம்மை. அக்கணத்தை, நேசம் கொண்ட இதயங்களின் அருகாமையை இருவருமே ஆழ்ந்து அனுபவித்தார்கள். 

“இண்டைக்கே அம்மாட்டக்  கதைக்க நினைச்சிருக்கேல்ல கவினி. நீர் அப்பிடிக் கேட்டதும் கூட்டிக்கொண்டு வந்திட்டன். என்னதான் எண்டாலும்  எல்லாம் நன்மைக்குத்தான். அம்மா நிச்சயம் நம்மட கல்யாணத்துக்குச் சம்மதிப்பா எண்ட நம்பிக்கை எனக்கு இருக்கு. அதுவரைக்கும்  நீர் காத்திருப்பீரா?” 

அவள் உச்சியில் நாடி பதித்து ஆழ்ந்து கேட்டவனை விழியுயர்த்திப் பார்த்தாள், கவினி. அவள் அனுமதிக்குக் காத்திராத தலை ஆமென்று அசைந்துமிருந்தது. 

தளும்பி நின்ற விழிகளோடு பார்த்தவள், “உண்மையாவே இது கனவா எண்டிருக்குச் சேந்தன்!” மெல்லச் சொன்னாள்.

 மெதுவாகக் குனிந்து அவள் நெற்றியில் உதடு பதித்தவன், “எனக்கும் தான்!”என்றான். அப்போதுதான் தந்தையும் சகோதரியும் இன்னமும் வாயில் நிற்பதைக் கண்டான்.

“மிச்சத்த வீட்டில போயிருந்தது கதைப்பமா கவினி பூங்குன்றன்?” சிரிப்போடு கேட்டுக்கொண்டே காரை இயக்க, காருக்குள் கீக் கீக் ஒலி. “சீற்  பெல்ட் போடேல்ல.” பெல்ட்டை இழுத்து மாட்டிக்கொண்டு, விருப்பமேயில்லாது நேராக அமர்ந்து கொண்டாள், அவள்.

இரு தெருக்கள் தள்ளி வந்து அடுத்த வளைவில் காரைத் திருப்பினான்.

 

error: Alert: Content selection is disabled!!