கரையுடைக்கும் கணமொன்றில் – 28 (2)

 “இவ்வளவு நாளும் இப்பிடிக் கிட்ட இருந்திருக்கிறம். ஒவ்வொரு நாளும் தூர இருந்து பாத்திட்டுப் போறனான். கதைக்க அவ்வளவு ஆசையா இருக்கிறது தெரியுமா? திடுமெண்டு வீட்டுக்கு வந்து நிண்டா எப்பிடி இருக்கும் எண்டு யோசிச்சு, எத்தனையோ தடவைகள்  கேட்டடிக்கு வந்திட்டுத் திரும்பியிருக்கிறன்.” என்றுகொண்டே அவள் கரத்தைப்  பற்றி அழுத்தினான்,சேந்தன்.  

என்ன பதில் சொல்வது? அவன் அன்பு அவளை மிகவுமே பலவீனப்படுத்தியது. மனம் அதையுணர்ந்து கொண்டது. இதழ்கள் முறுவலில் மலர்ந்திருந்தன. தன்னை ஒருவன் கலைத்து கலைத்து நேசித்திருக்கிறான், நேசிக்கிறான், நேசிப்பான் என்ற உணர்வும் நம்பிக்கையும் இவ்வளவு இதம் தருமென்று தெரியாது இருந்து விட்டாளே! 

இவ்வளவு நாளும் சாய்ந்து ஆறுதல் மூச்சுவிட ஒரு தோள் வேண்டும் என்ற உணர்வெழாது வீராப்போடு நடந்துகொள்வாள்.  இப்போதோ, அவன் அருகாமையை விட்டு விலக  மனம் வரவில்லை. ஏனோ, நிவேதாவின் சினமும்  வெறுப்பும் கருத்தில் பதியவில்லை. அவர்கள் உறவு திருமணம் வரை செல்லுமா என்ற கேள்வியும் எழவில்லை. 

அவனை விலத்தி நிறுத்தியதற்கெல்லாம் சேர்த்து வைத்து நேசிக்க வேண்டும் என்ற பேராவல் எழுந்தது. 

“நான் கண்டிருந்தா ஓடி வந்து கதைச்சிருப்பன். கூப்பிட்டிருக்கலாமே!” சீண்டலாகச் சொல்ல, நங்கென்று குட்டிவிட்டே காரை நிறுத்தியிருந்தான், சேந்தன்.

“ஆஆஆ…”. நொந்துவிட்ட பாவனையில் தலையைத் தேய்த்துக் கொண்டு சிரித்தாள்,கவினி.

“சந்திச்ச நாளில இருந்து நாயா பேயா அலைய வச்சிப்போட்டு!” மூக்கைப் பிடித்து வலிக்க வலிக்க ஆட்டிவிட்டு இறங்கினான். 

 “இந்தோங்கோ கோட்.”  கீ  டேக்கை எட்டிக்  கொடுக்க, “ ஓ!” வாங்கிச்சென்று திறந்துவிட்டு, காரை உள்ளே செலுத்தினான்.

“முந்தநாள் வீச்சு ரொட்டி சுட்டனான். கொஞ்சத்த ஃப்ரீசருக்க வெட்டிப் போட்டனான். மரக்கறிகள் கிடக்கு. சிக்கனும் இருக்கு. இரண்டு பேருக்கும் கொத்துச் செய்வம் என்ன?”தன்னை இயல்பாக்க முனைந்தாள், அவள்.

 உயிர் நேசம் ஆழ் பதிந்து நீண்ட ஆயுள் கொள்ள முதன்மையானதே நட்புத்தானே! இருவருள்ளும்  ஏற்கனவே இருந்த அறிமுகமும் நேசமும் அழகாக, சுமுகமாக நட்பை வளர்த்தெடுக்கத் தொடங்கிருந்தது. 

தன் விருப்பு, ஆசை என்பதையெல்லாம்  ஒதுக்கி வைத்துவிட்டு  அவளுக்காக  யோசித்தான், சேந்தன். அவன் மனம், இத்தனை நாட்களும் முறுக்கிக்கொண்டு நின்றவள் தன்னையும் தன் நேசத்தையும் முழுமையாக உணர்ந்துக்கொள்ள வேண்டும் என்று விரும்பியது. அவளை இழுத்துக் கை வளைக்குள் வைத்துகொள்ளச் சொன்ன மனத்துக்குக் கடிவாளம் போட்டுக்கொள்வது இலேசானதாக இருக்கவில்லை. இருந்தும் தன்னைக் கட்டுக்குள் வைத்துக்கொண்டான். 

“வாவ் வடிவான அளவான வீடு!” சுற்றிப்பார்த்துப் பாராட்டினான். கொத்துரொட்டி செய்ய உதவினான். இடையில் இயலுக்கு அழைத்துச் சாப்பிட்டிங்களா என்றும் கேட்டிருந்தான்.  

“கவினியும் நானும் சேர்ந்து கொத்து ரொட்டி செய்து சாப்பிடுறம் எண்டு அம்மாட்டச்  சொல்லு இயல்.” சிரிப்புக் குரலில் சொன்னான்.

“அம்மா பே கோவத்தில் இருக்கிறா அண்ணா. என்னையும் அப்பாவையும் பாக்கிற பார்வையே பயமா இருக்கு. இதுக்க உங்களுக்குக்  கிளுகிளுப்பு என்ன?” கடித்தாள், அவன் சகோதரி.

வாய்விட்டுச் சிரித்தவனைக் கடைக்கண்ணால் பார்த்தாள், கவினி. எட்டிக் கிள்ளிப் பார்க்க வேண்டும் போலிருந்தது. அந்தளவுக்கு, ஒற்றை நாளில் தன் வாழ்வில் உருவான மாற்றம் உண்மையா என்றதையே நம்ப முடியாதிருந்தது.

அவன் அருகில் இடித்துக்கொண்டு அமர்ந்து உண்ண வேண்டும் போலிருந்தது.

 ‘என்ன மாதிரி புறியம் காட்டி அலைய வச்சனி? இப்ப என்ன?’ என்ற, மனத்தின் நக்கல், முகத்தைச் செம்மையுறச் செய்ய, அவளையே பார்த்திருந்தவன், என்னவென்று கேட்டான். 

சொல்லவில்லை. சற்றே நெருங்கி அவனோடு ஒட்டிக்கொண்டிருந்து சாப்பிட்டு அவனைச் சோதித்தாள். அதுவே, சாப்பிட்ட கையோடு, “போயிட்டு வாறன் கவினி, நாளைக்கு வேலைக்கு வெளிக்கிட்டு நில்லும்,  பிக்கப் பண்ணுறன்.” என்று, அவனை ஓட வைத்திருந்தது.

 அதன் பின்னர், ஒவ்வொருநாள் மாலையும் அவளுடன் என்றானது. இடையிடை வாணன் இயலும் சேர்ந்துகொள்ள, அதுவரை, தனிமையில் கழிந்த அவ்வீட்டில் அவள் பொழுதுகள் கலகலவென்றானது. 

இலண்டன் வந்து இத்தனை நாட்களும் வெளியில் என்று சுற்றச் செல்லாதவள் அவன் கைபிடித்து இலண்டன் நகரைச் சுற்றி வந்தாள்.

அவளின் யூ டூப் சேனலில், இதயம் கொள்ளை கொள்ளும் காதல் பாட்டுக்களின்  சரணங்கள், பல்லவிகள்  இருவர் கரம் பற்றுதலோடு ‘ஷோட்ஸ்’ ஆனது. அதில் ஒன்றில்,  பின்னால் நடந்தபடி  விரல் நீட்டியபடி பாடினாள்,  கவினி ,

கண்ணாடி என்றும் உடைந்தாலும் கூட

பிம்பங்கள் காட்டும் பார்க்கின்றேன்

புயல் போன பின்னும் புது பூக்கள் பூக்கும்

இளவேனில் வரை நான் இருக்கின்றேன்

முகமூடி அணிகின்ற உலகிது

உன் முகம் என்று ஒன்றிங்கு என்னது

நதி நீரிலே அட விழுந்தாலுமே

அந்த நிலவென்றும் நனையாது வா நண்பா

அவள் முடிக்கும் தருணத்தில்  அவள் விரலோடு பிணைந்துகொண்டன, சேந்தன் விரல்கள். 

இது போதாதா? அவளைத் தொடர்பவர்கள் என்ன தூங்கிக் கொண்டா இருக்கிறார்கள். 

‘ஆர் அக்கா அது’? என்று தொடங்கி’, ‘ இங்கனேக்க ஒரு கொசு வழிஞ்சு கொண்டு திரியுமேக்கா, இப்ப எல்லாம் சத்தமே இல்லை’ என்று, கமெண்ட்ஸ் செய்யும் சேந்தனையும்  வம்பிழுத்தார்கள். 

‘கொசு உங்கட ‘சிஸ்’ச சுத்துறது ஷோட்ஸ்ல தெரியேல்லையோ?’ கருத்திட்டான், இவன். அதுவும் அவள் அருகில் இருக்கவே. கழுதைப் பிடித்து நெரித்துவிட்டாள்,கவினி.

“இனி கமெண்ட்ஸ் போட்டிங்களோ என்ன செய்வேன் எண்டு எனக்கே தெரியாது” வெருட்டியிருந்தாள். 

மாதங்கள் சில உருண்டிருந்தன. சேந்தன், கவினி உறவு மட்டுமின்றி ரவிக்குமார் இயலுடனான அவள் ஒட்டுதலும் அதிகரித்துச் சென்றது. மாறாக,  தாயோடு இயல்பாக கதைக்க முனைந்து தோற்றிருந்தான், சேந்தன். 

குடும்பத்தினர் தன்னை ஒரு பொருட்டாக  மதிக்கவில்லையே என்றளவில் மனத்துள் நொந்து போனார்,நிவேதா. அதுவே, மகனை நிமிர்ந்தே பாராது தன் எதிர்ப்பைத் தெரிவிக்க வைத்திருந்தது. 

ரவிக்குமார் ஏற்கனவே பூங்குன்றனோடு கதைத்துவிட்டார். மீண்டும் மகனோடு சேர்ந்து எடுத்துக் கதைத்திருந்தார். பூங்குன்றனுக்கு அவ்வளவு மகிழ்வு.  அதை மகளிடம் வெளிப்படுத்தியிருந்தார்.அதுபோலவே பரமேஸ்வரி, இனிதன், ஆதவன், சூரியன் என்று எல்லோரோடும் கவினியை வைத்துக்கொண்டே எடுத்துக் கதைத்திருந்தான் சேந்தன்.

சகோதரியின் மகிழ்வை அவதானித்த சாரலுக்கும் சந்தோசம் தான்.

 “பிள்ளை பிறந்த பிறகு கலியாணத்த வைக்கலாம், ப்ளீஸ்! ” என்றிருந்தாள். மற்றவர்கள் தாய்க்குச் சொல்லவில்லை என்று தெரிந்தும் தானும் சொல்லப் போகவில்லை. பிறகு, தாய் நீட்டுக்கு இழுத்துப் பேசுவதை இப்போவெல்லாம் கேட்கும் மனநிலையே அவளுக்கு அற்றுப் போயிருந்தது.

error: Alert: Content selection is disabled!!