சில நாட்கள் கடந்திருந்தன. மகன் மகள் முகம் பாராது, கணவரோடு கதைக்காது வீட்டினுள் நடமாடிய நிவேதாவால் அதற்குமேல் முடியவில்லை. அந்தளவுக்கு மன அழுத்தமாக இருந்தது. இதுவரை காலமும் என்னதான் வெளியில் பணிச்சுமை இருந்தாலும் வீடு வந்துவிட்டால் மனம் இலவம் பஞ்சுபோல் ஆகிவிடும். தன் குடும்பத்தை நினைத்து அவ்வளவு பெருமை வேறு! இப்போது?
உற்ற நண்பிகளிடம் கூட மனம் விட்டுக் கதைக்க முடியவில்லை. எல்லோரும் பின்னால் கதைப்பது போலவே இருந்தது.
ஊராருக்குப் புத்தி சொல்லும் நீ , உனக்கு என்று வரும் போது இப்படியெல்லாம் நடக்கிறாயே என்று, கணவர் குத்திக் காட்டியதில் மிகவுமே தரமிறங்கிய உணர்வு வேறு. அதுவே, கவினி சார்பாக ஆழ்ந்து யோசிக்க முயற்சி செய்ய வைத்தது. உண்மையில், தன்னைத்தானே சாடிக்கொண்டே நியாயமாக யோசித்துப் பார்த்தார்.
அதுவரை, அவள் சார்பில் பெரிதாகத் தெரிந்த குறைகள் எல்லாம் இன்னொருவர் பார்வையிலானவை. அதாவது, அவள் தாயின் மதிப்பீடுகள். இது விளங்கினாலும் ஒரு விடயத்தில் மட்டும் அவளை மன்னிக்க இயலவில்லை. அவள் மீதான கோபம் கரையும் வழியே தெரியவில்லை. ஒரு பானைச் சோற்றுக்கு ஒரு சோறு பதமாச்சே! நிவேதாவிற்கு அவள் பற்றித் தீர்மானிக்க அந்த ஒரு விடயமே போதும்.
சேந்தனுக்கு, ஆதினியைப் பார்த்து முற்றாக்கியது கவினிக்கு நன்றாகவே தெரியும். சோடிப்பொருத்தம் அருமை என்று இயலிடம் சொன்னதாகச் சொல்லியிருந்தாள். அதன் பின்னும் அவனை விரும்பினாளாமே! அதை, நேருக்கு நேராகப் பார்த்து அதட்டலாக அவரிடமே சொல்கிறாள். அதைத்தான் நிவேதாவால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை.
ஆனால், நீ சகித்துத்தான் ஆக வேண்டும் நிவேதா. அவள் இல்லையோ வாழ்வே இல்லை என்கிறான், உன் மகன். வாழட்டும். நன்றாக வாழ்ந்தால் சரிதான். வேறு வழியின்றி இந்த முடிவுக்கு வந்தார்.
ஆனாலும் கவினியின் முகம் பார்த்து நறுக்கென்று கேட்டுவிட்டே தன் சம்மதம் சொல்ல வேண்டும் என்று முடிவெடுத்தார்.
அன்று, சேந்தன் வேலைக்குச் சென்ற பின், அவன் வீட்டின் மாற்றுச் சாவிக்கொத்தை எடுத்துக்கொண்டு வெளியில் இறங்கினார்.
வேலையிடத்திற்கு அழைத்துச் சுகயீனம் என்றவர், சென்று நின்ற இடம் கவினி தங்கியிருக்கும் வீடு.
அந்த வீட்டின் குடிபூரல் செய்து, வாங்க வேண்டிய அனைத்தும் வாங்கிப் போடுகையில் இவரோடு சேர்ந்தே செய்திருந்தான், சேந்தன். வாடகைக்கு விடப்போவதாகத்தான் சொல்லியிருந்தான். அது, அவன் விரும்பியவளுக்காக என்று இப்போதுதானே தெரியும்.
என்னதான் என்றாலும் இது என் மகன் வீடு. அதன் பிறகுதான் மற்றவர்களுக்கு. வீட்டைத் திறக்கையில் அவர் மனத்துள் இந்த எண்ணம் தான்.
கதவைத் திறந்து பார்வையை உள்ளே விட்டபடி கால் வைத்தவர் அப்படியே நின்று விட்டார். எதிரே தெரிந்த வரவேற்பறைச் சுவரில் ஆளுயர கான்வாசில் சேந்தனும் அவன் கைவளைக்குள் கவினியும்.
அக்கணம், அவர் மனத்துள் எப்படியெல்லாம் உணர்ந்தார்? வரையறுக்க முடியவில்லை. நிச்சயம் அதில் எரிச்சலும் கோபமும் இயலாமையும் கலந்திருந்தன.
‘என் மகன் வீடு’ என்று திறந்தால், ‘இல்லை இது என் வீடு’ என்கிறாள் கவினி. இப்படித்தான் அவருள் எண்ணமோடியது.
கதவைப் பூட்டிவிட்டு உள்ளே நடந்தார். பார்வை மட்டும் புகைப்படத்தில் தான்.
சுற்றிலும் பனி…பனி தூவிக்கொண்டும் இருந்ததாக்கும். கவினியின் கழுத்தோடு வளைத்துத் தன் நெஞ்சில் அவளைச் சாய்த்து நின்றான், சேந்தன். பார்வை அவள் முகம் நோக்கியிருந்தது. அதில், எக்கச்ச நேசம்! வெளிப்படையாகவே தெரிந்தது. அவனை நிமிர்ந்து பார்த்திருந்தவள் விழிகளில் இலேசான நீர்ப்படலம். என்றாலும் முகபாவனை, மகன் கை வளைக்குள் பொருந்தி நின்ற விதம் எல்லாமே அவள் மனத்தையும் தெளிவுறச் சொல்லி நின்றது.
உற்றுப் பார்த்தார், நிவேதா. முதல் பார்வையிலும் சரி, இப்படி, நின்று நிதானமாக ஆராய்ந்து பார்த்தாலுமே இருவருக்குமான நெருக்கம் அப்பட்டமாகத் தெரிந்தது.
அவரையும் அறியாது பெருமூச்செறிந்தார். இதுதான் என்றிருந்தால் அவரால் என்ன செய்யவியலும். இயலாக் கட்டத்தில், வேறு வழியே இல்லையெனும் பட்சத்தில் பொதுவாக எல்லோருக்கும் எழும் எண்ணம் தான் அவருக்கும்.
வீட்டைச் சுற்றிப் பார்த்தார். ஒரு குறை கண்டு பிடித்தால் அவளுக்கு நறுக்கென்று சொல்லலாமே என்றுதான். அது எங்கே? வலு சுத்தமாக இருந்தது.
குளிர்சாதனப் பெட்டிக்குள் கோழி இறைச்சி மரினேட் செய்து வைத்திருந்தாள்.
சமையல் மேடையில் மூடியிருந்த கண்ணாடிப்பாத்திரத்தினுள் வீச்சு ரொட்டிக்குக் குழைத்து வைத்திருந்தாள்.
சென்றமர்ந்தவர் கணவருக்கு அழைத்தார். கவினியின் கைப்பேசி எண்ணைக் கேட்டார். என்ன ஏதென்ற கேள்வியின்றி அனுப்பி வைத்தார், ரவி.
“எனக்கு ஒரு பிரச்சினையும் இல்ல. கலியாணம் எப்ப வைக்கிறது எண்டு அவே ரெண்டு பேருக்கும் வசதியான திகதியைக் கேட்டுட்டு ஆயத்தம் செய்யலாம்.” என்றுவிட்டு வைத்துவிட்டார்.