கரையுடைக்கும் கணமொன்றில் – 30 (2)

 

இந்தப் பதிலை எதிர்பார்த்திருந்தவர்தான். என்றாலுமே, ரவிக்கு அப்பாடா என்ற நிம்மதி. மனைவிக்கு அழைத்தார். அவர் எடுக்கவில்லை. 

கவினியின் கைப்பேசி எண்ணையே பார்த்திருந்துவிட்டு, ஒரு பெருமூச்சோடு அவளுக்கு அழைத்தார், நிவேதா.

‘ஹலோ’ என்றவளுக்கு, ‘ஹலோ’ சொல்லியெல்லாம் மினக்கடவில்லை.  “கொஞ்சம் கதைக்கோணும், வீட்டுக்கு வர வசதிப்படுமா?” இறுக்கமாகவேதான் கேட்டார். 

“நிவி அன்ரி …” என்றவளுக்கு, ஓம் நான் தான் என்றும் சொல்லவில்லை. அப்படி என்னை அழையாதே என்றவராச்சே. நினைவு வந்தாலும் அமைதியாக இருந்தார். 

கவினியால் சட்டென்று பதில் சொல்ல இயலவில்லை. முதல், அவர் அழைத்ததையே நம்ப இயலவில்லை. ரவி குறுஞ்செய்தி போட்டிருந்தார். இல்லையோ, தெரியாத இலக்கத்தில் வந்த அழைப்பை ஏற்றேயிராள்.

“என்ன கேக்கேல்லையா? ஏலுமா ஏலாதா எண்டு சொல்ல இவ்வளவு நேரமா?” சிடுசிடுப்புத்தான். 

“இல்ல அன்ரி வாறன். வீட்டயா நிக்கிறீங்க?”

“ பின்ன ரோட்டில நிண்டுகொண்டா கதைக்கக் கூப்பிடுறன். எங்கட புது வீட்டில நிக்கிறன்.” என்றவர், விலாசம் சொன்னார்.

கேட்டவளுக்கு அடுத்த அதிர்ச்சி. அதிலும் ‘எங்கட’ என்றதில் அவர் கொடுத்த அழுத்தத்தில் பதில் வராது திகைத்து நின்றாள். மீண்டும்  இடக்கு மடக்காகக்  கதைக்கப்போறாரோ என்றுதான் எண்ண வைத்தார். திருமணத்திற்குச் சம்மதம் சொன்னதை ரவி சொல்லவில்லையே!

“ஹலோ! லைனில இருக்கிறீரா?”

“ஓம் அன்ரி, இன்னும் அரை மணித்தியாலத்தில வந்திருவன். வைக்கிறன்.” என்றவள் அவரின் ‘ம்’  ஒலியைச் செவிமடுத்துவிட்டு அழைப்பைத் துண்டித்தாள்.

அடுத்த ஐந்தாவது நிமிடம் ஊபரில் வீடு நோக்கிச் சென்று கொண்டிருந்தாள்,கவினி. சேந்தனுக்குச் சொல்வோமா என்ற எண்ணம் வந்து போனாலும் அதற்கான முயற்சியை எடுக்கவில்லை. 

வேக வேகமாக வந்து கதவைத் திறந்தவள் பார்வையில் படும்படி அமர்ந்திருந்தார், நிவேதா.

“வாங்கோ அன்ரி!” தன்னைக் கட்டுக்குள் வைத்துக்கொண்டே இயல்பாக வரவேற்றபடி உள்ளிட்டாள்.

“திரும்ப வேலைக்குப் போகோணுமா?” தாமதியாது பேச்சை ஆரம்பித்தார், நிவேதா.

“போகாட்டியும் ஓகே தான் அன்ரி.” என்றவளுக்கு, என்னதான் நிமிர்வாக நிற்க முயன்றாலும் இயலாது  பதற்றமாக இருந்தது.

 அவளையே நிதானமாகப் பார்த்தார் நிவேதா. “என்னத்துக்கு நிக்கிறீர், இப்பிடி இருமன்.” தன் முன்னாலிருந்த இருக்கையைக் காட்டினார்.

அமர்ந்தவள் , “சொல்லியிருக்க வீட்ட வந்திருப்பனே அன்ரி.” வேறு என்னதான்  கதைப்பது என்று வாயை விட்டாள்.

“ஏன், நான் இங்க வரக்கூடாதோ? இதும் எங்கட வீடுதான் எண்டு தெரியும் தானே?” நெற்றிச் சுருக்கத்தோடு கேட்ட விதத்தில் கவினிக்கு மிகவுமே அந்தரமாக  இருந்தது. 

“ஓம் ஓம் தெரியும். அதுக்கில்ல, அலைச்சல் எண்டு…” நிமிர்வாகக் கதைக்க முயன்றாள். அவர் தோரணை தடுமாற வைத்தது. 

“நல்ல பகிடிதான் போம். கொஞ்சக் காலமா  எவ்வளவு மனவேதனைய அனுபவிக்கிறன். நாலு எட்டு நடந்து வாறது என்ன பெரிய அலைச்சல!” நக்கலாகச் சொன்னவர், “சுத்தி வளைச்சுக் கதைக்கிறது எனக்குச் சரிவராது. உம்மட்ட ஒண்டு கேக்கோணும்.” அவள் விழிகளையே பார்த்தபடி கதைத்தார்.

“நீரும் எது எண்டாலும் முகத்துக்கு நேர கதைக்கிற ஆள் எல்லா?”

கவினியின் முகம் சுண்டிப் போயிற்று. இருந்தபோதும்  அமைதியாக இருந்தாள்.

“இல்ல, ஆதினியத்  தம்பிக்குப் பாத்து முற்றாக்கினது  உமக்குத் தெரியும் எல்லா? பிறகு எப்பிடித் தம்பிய விரும்பினீர்? அது, அந்தப் பிள்ளைக்குச் செய்யிற துரோகமாத் தெரியேல்லையா உமக்கு? ஒருநாள் கூட மனசுக்கக் குற்றவுணர்வா இருக்கேல்லையா? ” என்று கேட்டவர் வார்த்தைகள் மட்டுமில்லாது,  அவர் பார்வையும் கூர்மையாக இருந்தது.  போயும் போயும் நீ இவ்வளவுதானா என்று கேவலமாகக் கேட்பதாகவே எடுத்துக்கொண்டாள், கவினி. 

அவள் முகம் சிவந்து சிறுத்திட்டு. இருந்தாலும் எப்பாடுபட்டேனும் அவருக்குத் தகுந்த பதிலைச் சொல்லிவிட வேண்டும். தன்னைத் திடப்படுத்தியவாறு நிவேதாவைப் பார்த்தாள். 

கலியாணத்துக்குச் சம்மதித்தாயிற்று. ஆனாலும் உன்னை எப்படியும் காயப்படுத்தினால்தான் எனக்கு மனம் ஆறும் என்ற மனநிலையில் இருந்தாரோ என்னவோ! பதில் சொல் பார்ப்போம் என்றவகையில் நக்கல் சிரிப்புச் சிரித்தார். 

“அன்ரி! சேந்தன் அவவக் கலியாணம் செய்ய விருப்பம் இல்லை எண்டவர் எல்லா? அண்டைக்கு நீங்க டூர் போயிருந்த நேரம் உங்களிட்டச் சொன்னவர் தானே? அப்ப எனக்கு கோல் பண்ணி இருந்தவர். நான் லைனிலதான் இருந்தனான். அவருக்கு ஆதினில அப்பிடி ஒரு எண்ணம் இல்ல எண்டு எனக்கு நல்லாவே தெரியும்.” என்றவள், இடையிட முனைந்த நிவேதாவை அனுமதிக்கவில்லை. 

“பொறுங்கோ அன்ரி , நான் சொல்லி முடிச்சிருறன்.  அப்பயும்  அவர் விருப்பம் எண்டு என்னட்டச் சொல்லேல்ல. ட்ரிப்புக்கு ஏன் வரேல்ல , வா எண்டுகொண்டுதான் நிண்டவர்.  ராவணா ஃபால்சில நீங்க நிண்டீங்க எண்டு  நினைக்கிறன், அப்பத்தான் உங்களிட்ட , எங்கட அப்பாட்ட எல்லாம் சொல்லிட்டார் எண்டு மேசேஜ் போட்டவர். அப்பவும் நான் அவரோட கதைகேல்ல. அக்காட ரிசப்சனில வச்சுத்தான் முதன் முதலாக் கதைச்சனான்.  என்ன கதைச்சனாங்க எண்டு நீங்களே கேட்டீங்க தானே? இங்க வந்த பிறகுதான் அதும் அண்டைக்கு உங்களோட கதைக்கேக்கத் தான் என்ர விருப்பத்தச் சொன்னனான் அன்ரி. இதில எந்த இடத்திலும் நான் ஆதினிக்குத் துரோகம் செய்யேல்ல. சேந்தனும் தான்!” அவள் முடிக்க, விசுக்கென்று எழுந்து கொண்டார், நிவேதா.

“மொத்தத்தில என்ர மகன் தான் உமக்குப் பின்னால வந்தான் எண்டுறீர்! ஏதோ சந்தோசமா இருந்தாச் சரிதான்.” என்றுவிட்டு வாயிலை நோக்கி நடக்க, ‘நான் எப்ப அப்பிடிச் சொன்னன்?’ மனத்துள் கேட்டபடி அசையாமல் அமர்ந்திருந்தாள், கவினி. 

*****

மனைவியிடம் கவினியின் கைப்பேசி எண்ணைக் கொடுத்த ரவிக்கு வேலையே ஓடவில்லை. நிவேதா கல்யாணத்துக்குச் சம்மதம் என்றதை மகனிடம் சொல்லவும் வேண்டுமே! முதலில், மாலை  வீடு போய்ச் சொல்லலாம் என்றுதான் நினைத்தார். பிறகு மனம் கேட்கவில்லை. மகனுக்கு அழைத்திருந்தார்.

திருமணத்திற்குத் தாய் சம்மதித்துவிட்டார் என்றதைக் கேட்டவனுக்கோ அவ்வளவு மகிழ்ச்சி.

 “பூங்குன்றனோட எடுத்துக்  கதைக்கிறன் தம்பி.  எல்லாரும் வர நிப்பினம் . விசா அலுவல்கள் பாக்கோணும். ஆறு மாதங்களில கலியாணம்  செய்யிறது போலத்  திட்டமிடலாம்.” என்றவருக்குச்  சரியென்றவன்,  கவினியின் கைப்பேசி எண் வாங்கியதைச் சொல்ல முதல், “கவினிக்குச் சொல்லிட்டு வாறன் அப்பா!” என்று வைத்துவிட்டான்.

அதே வேகத்தில் அவளின் அலுவலகம் வந்தான்.

 “அவா வீட்ட போய்ட்டா அண்ணா. உங்கட அம்மா அங்க வந்து நிண்டுகொண்டு கோல் பண்ணினவா. ஏதோ கதைக்கோணும் எண்டு வரச் சொன்னாவாம். லீவு சொல்லிட்டுப் போனவள். இப்பத்தான், கால் மணித்தியாலம் இருக்கும்.” என்றான், வாணன்.

 தாமதிக்காது தானும் புறப்பட்டு விட்டான். ‘அம்மா அப்பிடி என்ன கதைக்கப் போறார்? திரும்பவும் மனம் நோக ஏதாவது சொல்லிருவாவோ! கவினியும் கேட்டுக்கொண்டிரா! மாறி மாறிக் கதவளிபடப் போக்கினம்.’ அவன் மனத்துள் பெரும் பதற்றம். ‘ச்சே ச்சே  கலியாணத்துக்கு ஓமெண்ட அம்மா  அப்பிடியெல்லாம் கதைக்க மாட்டா’ என்றொரு ஆறுதல் எழாமலும் இல்லை.

வேகமாக வந்தவன் கவினி தங்கியிருக்கும் வீட்டுக்குத் திரும்ப முனைகையில் தாய் அங்கிருந்து நடந்து செல்வதைக் கண்டான். அவரைத் தாண்டிச் சென்று காரை நிறுத்திவிட்டு இறங்கியவனை, நிவேதாவின் முகபாவனையே சற்றும் எதிர்பார்க்கவில்லை என்றது.

கணவர் தகவல் சொல்லிவிட்டார் என்பதை விளங்கிக்கொள்ள  மினக்கடுதல் தேவையா என்ன? 

‘அவவப்  பிடிச்சுக் கடிச்சுத் திண்டிருவன் எண்ட கணக்கில பாஞ்சு கொண்டு வாறான்.’  மனத்துள் எரிச்சலானது. 

அதுவும் மலர்வோடு “அம்மா!” என்றுகொண்டு வந்தவன் கோபப்படுத்தினான். 

இவ்வளவு நாளும் முறைத்துக்கொண்டு திரிந்தவனாச்சே! ‘இப்போ என்ன இளிப்பு  வேண்டிக்கிடக்கு?’ மனம் சீற,  அவனைப் பாராத பாவனையில் கடந்து செல்ல முயன்றார்.

 

error: Alert: Content selection is disabled!!