ஆட்டநாயகன் 10.1

எல்லாளன் சொன்னதை விசாரித்து அடுத்த நாள் காலையிலேயே ரிப்போர்ட் அனுப்பியிருந்தார்கள் கொழும்பு காவல்துறையினர். அதில், அவன் நினைத்தது போன்று அவளோடு தொடர்பில் இருந்தவர்கள் அவளின் நண்பர்களும், வேலைத்தளத்தில் பழகியவர்களும் மட்டுமே. 

 

கூடுதலாக விசாரித்த வரையில் அவளிடம் ஒரேயொரு கைப்பேசி மட்டுமே இருந்திருக்கிறது என்பதும், அது அவள் அன்னை கடைசியாக வாங்கிக் கொடுத்தது என்று மிகவும்  பக்குவமாக வைத்துக்கொள்வாளாம் என்றும் சொன்னார்கள். 

 

எதற்கும் இருக்கட்டும் என்று அவளின் பிளாட் வீட்டினைத் திறந்து ஆராயச் சொன்னான். அங்கு அவள் அன்னையின் கைப்பேசியைக் கைப்பற்றினர். அது இன்னும் நல்ல நிலையில் இருந்தாலும் மூன்று வருடங்களுக்கு முதல்தான் கடைசியாகப் பயன்படுத்தப்பட்டிருந்தது. சந்தேகத்திற்கு இடமாக வேறு எதுவும் இல்லை. 

 

இந்தப் பக்கம் தயாநிதி வீட்டு வீதியில் மிச்சம் மீதியாக இருந்த எந்த சிசிடிவியை செக் பண்ணியும் அவர்கள் வந்துபோன வாகனத்தைக் கண்டுபிடிக்க முடியவில்லை. எல்லா பக்கமும் தோல்வி. ஆனால், அந்தச் செவிகள் இரண்டும் அவனைத்  தொந்தரவு செய்துகொண்டிருந்தன.

 

திரும்பவும் அந்த கிளிப்புகளை போட்டுப் பார்த்தான். கும்மிருட்டில் ஊசியைத் தேடுவது போன்ற வேலைதான். ஆனால் கொலையாளிகளைப் பிடிப்பதற்கு அவனிடம் இருக்கும் ஒரேயொரு சாவி அது ஒன்றுதானே. 

 

தயாநிதி ஒன்றும் முட்டாள் இல்லை. அவர்தான் போதைப்  பொருள்களை யாழ்ப்பாணத்திற்குள் கொண்டுவருகிறவர் என்று காவல்துறைக்கே தெரியும். அவரின் கடந்தகால வரலாறு அப்படியானது. பலமுறை சிறை சென்றாலும் குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படாமல் வெளியில் வந்தவர். 

 

அவர் தூக்கிப்போடும் எலும்புத்துண்டுக்கு வாலாட்டும் காவல்துறையின் சில கறுப்பாடுகளும், சிவநாதரின் செல்வாக்கும் காரணங்கள் என்றாலும் குறுக்குப்புத்தியும், குள்ளநரித்தனமும் இல்லாமல் இதெல்லாம் சாத்தியமில்லை. 

 

அப்படியான தயாநிதி நடுச்சாமத்தில் வந்த, யார் என்று தெரியாத முகமூடிக் கும்பலைக் கண்டுவிட்டுச் சும்மா கேட்டைத் திறந்துவிடப்போவதில்லை. 

 

அவர் திறப்பதற்கு வலுவான காரணம் ஒன்று நிச்சயமாக இருந்திருக்க வேண்டும். அந்தக் காரணமும், அவர்கள் அணிந்திருந்த செவிகள் கொண்ட உடையும் பொருந்திப்போக வேண்டும். பதினெட்டாவது பிறந்தநாளினைக் கோலாகலமாகக் கொண்டாடக் காத்திருந்த பெண், தன் பிறந்தநாளின்போதே நெருப்பில் கருகி இறந்துபோனாள் என்கிற விடயம் பெரும் பரவலாகப் பேசப்பட்ட விடயம். அது நினைவில் வந்ததும் சட்டென்று நிமிர்ந்து அமர்ந்தான் எல்லாளன். 

 

பிறந்தநாள், இந்தச் சம்பவம் நடந்ததும் கிட்டத்தட்ட பன்னிரண்டு மணிபோல், வந்தவர்களின் கைகளிலும் ஏதோ இருந்தது, தயாநிதி எந்தக் கேள்வியும் இல்லாமல் கேட்டை திறந்திருக்கிறார். 

 

அத்தனை புள்ளிகளையும் ஒன்றிணைத்தபோது பிறந்தநாள் பெண்ணுக்குப் பரிசு கொடுக்க மாறுவேடத்தில் வந்திருக்க வேண்டும். ‘சப்ரைஸ் கிஃப்ட்’ இன்று பரவலாக நடக்கும் ஒன்று. அதுவும் யாழ்ப்பாணத்தில் வீட்டுக்கு ஒருவர் வெளிநாடுகளில் இருப்பதில் இது ஒரு ட்ரெண்டாகவே மாறிப்போனதாயிற்றே. 

 

உடனேயே கதிரவனுக்கு அழைத்தான். “எத்தினை பேரை எண்டாலும் கூட்டிக்கொண்டு போங்க கதிரவன். ரெண்டு செவி பெருசா வச்ச மாதிரியான ஃபான்சி உடுப்பு என்ன எண்டு கடைகளில பாருங்க. அப்பிடியே கிட்டத்தட்ட பதினோரு உடுப்பு. ஒரே கடை பதினோரு உடுப்பு வச்சிருந்திருக்கப் போறேல்ல. அந்தளவு உடுப்பு அங்க இல்லை எண்டு கடைக்காரர் சொல்லியிருந்தா எத்தினை இருக்கோ அத்தனையையும் தாங்கோ எண்டு கேட்டு வாங்கியிருப்பினம், அப்பிடியே வேற எங்க அதே மாதிரி வாங்கலாம் எண்டு கேட்டுக்கொண்டு போயிருப்பினம். அதையெல்லாம் விசாரிங்க. விட்டுடாதீங்க. இதுதான் எங்களிட்ட இருக்கிற ஒரேயொரு துப்பு.” என்று உத்தரவிட்டுவிட்டு வைத்தான்.  

 

எதற்கும் இருக்கட்டும் என்று தேவனுக்கு அழைத்து அவர்கள் முதன் முதலில் தயாநிதி வீட்டுக்குப் போகையில் கேட் எப்படி இருந்தது என்று விசாரித்தான். 

 

“எப்பிடி இருந்தது எண்டா விளங்கேல்ல?” எரிச்சல் பரவியிருந்தது அவன் குரலில். 

 

“கேட் பூட்டி இருந்ததா, இல்ல அந்தரத்தில நிக்கிற மாதிரி பாதி திறந்தபடி இருந்ததா, உடச்ச அடையாளம், இல்ல ஆராவது ஏறிப் பாஞ்சு போன அடையாளம் ஏதும் இருந்ததா?” 

 

இது ஒரு சாதாரணக் கேள்வி. காவல்துறையில் அதுவும் இவன் வகிக்கின்ற அதே பதவியில் இருக்கிற ஒருவனுக்குத் தானாக அந்தக் கேள்வி உண்டாகி, அதற்கான பதிலை அவன் எப்போதோ ஆராய்ந்து கண்டுபிடித்திருக்க வேண்டும். அப்படியிருக்க இவன் கேட்டும் விளங்கவில்லை என்று கேட்கிறான் என்றால் இவன் எல்லாம் என்ன அதிகாரி என்கிற எரிச்சலுடன் வினவினான் எல்லாளன். 

 

“அது எலக்ட்ரிக் கேட் எல்லாளன். சைட்ல இருந்து வந்து தானா பூட்டும். நாங்க போகேக்க திறந்துதான் இருந்தது. கேட் மதிலோட போய் நிண்டிருந்தது.”

 

“பிங்கர் பிரிண்ட் ஏதும் இருந்ததா எண்டு செக் பண்ணினீங்களா?” 

 

“இல்லையே.” என்று அவன் சொல்லி முடிக்க முதலே அழைப்பைத்  துண்டித்திருந்தான் எல்லாளன். அடுத்த நிமிடமே குற்றப் புலனாய்வுத் துறையில் உள்ள தடயவியல் நிபுணர்களை (Forensic Experts) வரச் சொல்லிவிட்டுத் தயாநிதி வீட்டுக்குத் திரும்பவும் சென்றான். 

 

அங்கே கேட்டில் எந்த விரல் அடையாளங்களும் இல்லை. ஆக யாரும் அதைத் தொடக்கூட இல்லை. அப்படியானால் வந்தவர்கள் யாரும் தாமாகத் திறந்துகொண்டோ பாய்ந்தோ போகவில்லை. தயாநிதிதான் திறந்துவிட்டிருக்க வேண்டும். 

 

ஆக அவன் போகும் திசை சரிதான். 

 

சோபனா, மாலினியின் அன்னை உயிரோடு இல்லை. மாலினியின் கணவன் வீட்டினர், அவன் தங்கையின் கணவர் வீட்டினரை அழைத்து, அவர்களுக்கு சப்ரைஸ் கிஃப்ட் ஏதும் கொடுக்கிற எண்ணம் இருந்ததா விசாரித்தான். 

 

அவர்கள் இல்லை எண்டு சொன்னார்கள். ஆனால், வெளிநாட்டில் இருக்கிற யாரோ ஒரு உறவு திட்டம் போட்டிருந்திருக்கிறார்கள். சரியாக கேக் வெட்டும் நேரத்திற்கு அவர்கள் வருவதாகத்தான் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்திருக்கிறது. 

 

உடனேயே யாழ்ப்பாணத்தில் இப்படியான சப்ரைஸ் நிகழ்வுகளை ஏற்பாடு செய்து நடத்திக்கொடுக்கும் நிறுவனங்களின் தொலைபேசி இலக்கங்களை இணையத்தில் தேடி எடுத்து, இப்படிக் குழுவாக உடைகள் வாங்குவதாயின் எங்கிருந்து எடுப்பார்கள் என்று விசாரித்தான். 

 

உள்ளூரில் ஒன்று இரண்டுதான் கிடைக்கும் என்பதால் மொத்தமாக வாங்குவதாயின் கொழும்பில் சென்று வாங்குவதாக அவர்கள் சொன்னதைக் கேட்டுக்கொண்டு, அப்படிக் கொழும்பில் கிடைக்கும் நிறுவனங்களின் பெயர்களை வாங்கிக்கொண்டான். 

 

அப்படியே பெரிதாக வட்ட செவிகள் கொண்ட உருவம் அல்லது உடை என்னவாக இருக்கும் என்று விசாரித்தான். முயலின் செவி நீளமாக இருக்கும், பூனை, நாயின் செவிகள் ஓரளவில் இலை வடிவத்தில் இருக்கும், இல்லாவிட்டாலும் அளவில் சின்னதாக இருக்கும். பெரிய வட்டச் செவிகள் என்றால் மிக்கி மவுஸ் அல்லது மினி மவுஸாக இருக்கும் என்றதும் எல்லாளனை ஒரு உற்சாகம் தொற்றிக்கொண்டது. 

 

மிக்கி மவுசை மனத்தில் வைத்துக்கொண்டு அந்த கிளிப்புகளை திரும்பவும் போட்டுப் பார்த்தான். அவை அப்படியே ஒத்துப்போயின. 

 

உடனேயே மொத்தமாக வாங்கக்கூடிய கடைகள் என்று அவர்கள் சொன்ன கொழும்புக் கடைகளுக்கு அழைத்து விசாரித்தான். பெரியளவில் அவன் எதிர்பார்க்கும் பதில் கிடைக்கவில்லை. பெரும்பாலும் மொத்த விற்பனை என்பதில் அவர்களால் நினைவு கூர்ந்து சொல்லவும் முடியவில்லை. 

 

ஆனால் நல்ல பதிலோடு கதிரவன் அழைத்தான். “சேர், ஒரு நாலு பேர். ரெண்டு ரெண்டு பேரா பிரிஞ்சு எல்லா கடைலயும் நாங்க எதிர்பாக்கிற மாதிரியான டேட்ல மிக்கி மவுஸ், மினி மவுஸ் உடுப்பு எது இருந்தாலும் தாங்க எண்டு கேட்டு வாங்கி இருக்கினம். சில கடைல அந்த முகமூடிய மட்டும் வாங்கி இருக்கினம்.”

 

“சூப்பர் கதிரவன்! மறக்காம சிசிடிவி புட்டேஜுகளை எடுத்துக்கொண்டு வாங்க பாப்பம்.”

 

error: Alert: Content selection is disabled!!