“அதுக்கு ஏற்பாடு செய்தாச்சு சேர். ஆனா, ஒண்டுலயும் முகங்கள் தெரியேல்ல. தலைல ஹெல்மெட்டோடதான் வந்து வாங்கியிருக்கினம்.”
“ஓ!” என்று ஒரு கணம் சோர்ந்தாலும், “பரவாயில்ல. எடுத்துக்கொண்டு வாங்க. ஒண்டுமே தெரியாத கும்மிருட்டுக் கிளிப்பை வச்சே இவ்வளவு தூரம் வந்த நாங்க, பட்டப்பகல்ல எடுத்த புட்டேஜை வச்சு மிச்சத்தைப் பிடிக்கமாட்டமா? ஒரு சின்ன துண்டக் கூட விடாம எடுத்துக்கொண்டு வாங்க. அப்பிடியே ரோடு தெரியிற மாதிரி ஏதாவது கமெரா இருக்கா எண்டு பாத்து, பைக், அல்லது கார் நம்பர் ஏதும் தெரியுதா எண்டும் பாருங்க.” என்று உற்சாகம் குன்றாமல் சொல்லிவிட்டு வைத்தான்.
*****
மாலினியின் கணவன் மகேந்திரன் வீட்டினரை எல்லாளன் அழைத்து விசாரித்த விடயம் சிவநாதரை வந்து சேர்ந்தது. அதுவும் யாராவது ‘சப்ரைஸ் கிஃப்ட்’ ஏதும் கொடுக்கத் திட்டம் போட்டிருந்தார்களா என்று கேட்டிருக்கிறான் என்றதும் பதறிப்போனார் மனிதர்.
இத்தனை வேகமாகத் தம்மை நெருங்குவான் என்று அவர் நினைக்கவே இல்லை. தடமே தெரியாமல் காரியம் செய்ததாகச் சொன்ன வேந்தனையும், யாராலும் இந்த வழக்கை முடிக்கவே முடியாது என்று சொன்ன தேவனையும் அழைத்து நல்ல நல்ல வார்த்தைகளாகக் கேட்டுவிட்டு வைத்தார்.
இன்னும் இரண்டு நாள்களில் இலங்கை ஜனாதிபதி யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொள்ள இருந்தார். பத்து வருடங்களுக்கும் மேலாகச் சிறையில் கழித்துவிட்ட இரண்டாவது மகனின் மரண தண்டனையைக் குறைத்து, ஆயுள் தண்டனையாக்கும்படி கேட்டு மனைவியைக் கொண்டு மனுக் கொடுப்பதற்கு காத்திருக்கிறார்.
தூக்குத் தண்டனைக் கைதிகளுக்கு பிணை(பெயில்) என்பது இல்லவே இல்லை. ஆயுள் தண்டனைக் கைதிகளுக்கும் கிடைக்காது. ஆனால், அளவுக்கதிகமான காலம் சிறையில் கழித்ததை, உடல்நலக்குறைவை என்று சில பல காரணங்களைக் காட்டிக் கேட்க முடியும். கிடைக்கும் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை என்றாலும் கேட்க முடியும்.
அதன் பிறகு தன் அரசியல் பலத்தைப் பயன்படுத்தி ஏதாவது செய்யலாம் என்று இருக்கிறார். அப்படி இருக்கையில் வேந்தன்தான் இத்தனைக்கும் காரணம் என்று தெரியவந்தால் வேந்தனையும் எல்லாளன் ஏதாவது செய்துவிடுவான். போதாக்குறைக்கு இரண்டாவது மகனின் மனு பரிசீலிக்கப்படாமலேயே தூக்கிப்போடப்பட்டுவிடும்.
அதற்குமுதல் எல்லாளனின் திசையை மாற்றியே ஆகவேண்டும். அவனுக்கு அடித்தால் கூட அவனுக்கு வலிக்காது. அவனைச் சேர்ந்தவர்களுக்கு அடித்தால்? அவரின் குரூரப் புத்தி குறுக்குத்தனமாக வேலை செய்ய, வாசுசேனனுக்கு அழைத்தார்.
*****
நெற்றியில் உண்டான புடைப்பினாலா, இல்லை அளவுக்கதிமான பயம், பதற்றம், கண்ணீர் என்று இருந்ததாலா தெரியவில்லை. கேதகிக்குத் தலைவலியில் உயிர் போயிற்று.
சாதாரணமாக ஒரு பனடோல் போடுவதற்கு வழியில்லை. தலை வலிக்கிறதே என்று வெளியில் வந்து காற்றுப்பட அமரக்கூட முடியாது. இந்தளவு கொடுமையான நிலை ஏன் என்று நினைக்கையில் திரும்பவும் கண்ணீர் பெருகிற்று.
அப்படி இருக்கையில்தான் மாலைப்பொழுதில் அவள் அறையின் கதவு திறக்கப்பட்டது. அவன்தான். ஒரு பையைக் கொண்டுவந்து வைத்துவிட்டுப் போனான். என்ன, ஏது என்கிற ஒரு தகவலும் இல்லை.
அவன் போய்ச் சற்று நேரமானதும் மெல்லத் திறந்து பார்த்தாள். இரண்டு செட் உடைகள், உள்ளாடைகள், பேட்ஸ், துவாய், பல்லுத் தீட்ட பிரஷ், பேஸ்ட், சோப், பனடோல், நெற்றி புடைப்புக்குத் தேய்க்கத் தைலம் என்று தற்போதைக்கு அவளுக்குத் தேவையான எல்லாம் இருந்தன.
யார் என்று தெரியாத அந்நியன் ஒருவன் உள்ளாடை முதற்கொண்டு வாங்கி வந்திருக்கிறான் என்கிற அசூசையோடு சேர்த்து மெல்லிய ஆறுதல் உண்டாவதையும் தடுக்க முடியவில்லை. இவை அத்தியாவசியத் தேவைகளாயிற்றே.
கேதகி இந்த வீட்டுக்கு வந்து இரண்டு நாள்களாகியிருந்தன. அந்த வீட்டில் போன்று இங்கே தேவையற்ற பேச்சுகள் இல்லை. வெறித்த பார்வைகள் இல்லை. காதல் என்று சொல்லிக்கொண்டு எவனும் வந்து உளறவில்லை. நேரா நேரத்திற்கு உணவு வந்தது.
மூன்று ஆண்களோடு தங்கியிருக்கிறோமே என்கிற பயம் கொஞ்சமாய் அகன்றிருந்தது. இன்று கொஞ்சம் தளர்ந்திருந்தாள். மூன்று தடிமாடுகளும் காலையும் மாலையும் ஒருவரோடு மற்றவர் மிருகத்தனமாக முட்டிக்கொள்வது கூட பழக்கப்பட்டுப் போயிற்று. உடற்பயிற்சியோடு சேர்த்து ஏதோ ஒன்றின் வடிகாலாக அதனைச் செய்கிறார்கள் என்கிற வரை புரிந்துகொண்டாள்.
இப்போது இப்படி அறைக்குள்ளேயே அடைந்துகிடந்து பைத்தியமாகிவிடுவோமோ என்று பயந்தாள்.
யாரும் வெளியில் வரக்கூடாது என்று சொன்னதில்லை. அந்த அவன் ஒரு பெரிய நாய் வைத்திருந்தான். அவள் குளியலறை நோக்கி நடந்தாலே போதும். அதைத் தாண்டி ஒரு காலை வைத்துப் பார், அந்தக் காலின் மொத்தத் தசையையும் உருவி எடுக்கிறேன் என்று சொல்வதுபோல் அவளையே பார்த்திருக்கும்.
இப்போதும் எழுந்து வெளியில் வந்து நோட்டம் விட்டுக்கொண்டே குளியலறை சென்றாள். இருவர் சமையற்கட்டில் நிற்க அந்த அவனைக் காணவில்லை. திரும்பி வந்து அறைக்குள் போகாமல் குசினி வாசலில் தேங்கி நின்றாள்.
சமையல் செய்துகொண்டிருந்த இருவரும் ஒன்றாகத் திரும்பிப் பார்த்தனர்.
“அது… இல்ல… தண்ணி…” அவர்கள் பார்வை பயமுறுத்தினாலும் மெல்லச் சொன்னாள்
அதில் ஒருவன் உன் அறையில் இல்லையா என்பதுபோல் பார்த்துவிட்டு அங்கிருந்த தண்ணீரை எடுத்து நீட்டினான். தாகமே இல்லை. கேட்டதற்காக வாங்கிப் பருகினாள். கப்பை திருப்பிக் கொடுத்துவிட்டும் அங்கேயே நின்றாள்.
இப்போது என்ன என்று பார்த்தான் தண்ணீர் தந்தவன்.
“இல்ல… ஏதாவது ஹெல்ப் பண்ணவா?”
தமக்குள் வேகப்பார்வை ஒன்றைப் பரிமாறிவிட்டு, “தேவை இல்லை!” என்றான் மற்றவன் முகத்தில் அடித்தாற்போல்.
அதற்குமேல் அங்கு நிற்கத் தைரியம் வரவில்லை. கொஞ்சமும் இளகிக் கொடுக்காத அவர்கள் முகங்கள் அவள் வாயை அடைத்தன. மெதுவாக அறையை நோக்கி நடக்க எதிரில் வந்தான் அவன்.
ஒரு முறை திக்கென்றிருந்தது அவளுக்கு. அதுவும் தலையில் ஒரு துண்டு கட்டி, வாயில் சிகார் ஒரு பக்கமாக புகை விட்டபடி இருக்க, ஆர்ம் கட் கறுப்பு பெனியன் அணிந்து, ஷர்ட்டை ஒரு பக்கத் தோளில் தொங்கவிட்டிருந்தான். இதற்கு எதற்கு இவன் அந்த ஷர்ட்டை கொண்டு திரிய என்று உள்ளே ஓடிற்று.
பார்வையைத் தழைத்துக்கொண்டு உள்ளே ஓடிவிட்டாள்.
அப்போதுதான் வாசுசேனனுக்கு அழைத்தார் சிவநாதர். அவன் அழைப்பை ஏற்றதும், “ஒரு போட்டோ அனுப்பியிருக்கிறன் பார்.” என்றார்.
அவரை அழைப்பில் வைத்துக்கொண்டே எடுத்துப் பார்த்தான்.
“என்ன செய்யோணும்?” நான்கு சக்கர நாற்காலியில் அமர்ந்திருந்த அந்த வயதான மனிதரைப் பார்த்தபடி வினவினான்.
“மொத்தமா போட்டுவிடு! ஆள் எந்த நேரத்தில எங்க இருப்பார், எங்க போவார் எண்டுற டீடெயில்ஸ் பின்னால வரும்.” என்றுவிட்டு அழைப்பைத் துண்டித்தார்.

