ஆட்டநாயகன் 11.2

வாசுசேனன் அசையவேயில்லை. நிதானமாக சிகாரில் தீயை மூட்டி, வாயில் பொருத்தி, நன்றாக இழுத்துவிட்டுக்கொண்டு நடப்பதை வேடிக்கை பார்த்தான். உருண்டு பிரண்டு என்ன செய்தும் வேந்தனால் முடியவில்லை. தன்னை விட்டுவிடும்படி நாயிடம் சொல்லச் சொல்லி வாசுவிடம் கத்தினான். அவன் அதைச் செய்வதாக இல்லை நின்றதும் வேகமாக வீட்டை விட்டு வெளியே ஓடிப்போனான். அப்போதும் கேட் வரை குரைத்துக்கொண்டு வந்தது டைகர். 

 

இதையெல்லாம் பார்த்திருந்த கேதகிக்குத் தேகம் மொத்தமும் கிடுகிடு என்று நடுங்கிற்று. சற்று முன்னர் வாசுசேனனைப் பெரும் துணையாக எண்ணி அவன் பின்னால் மறைந்தவள் இப்போது அவன் கண் முன்னே நிற்கக்கூடப் பயந்தாள். 

 

அவன் பொல்லாதவன், ஈவிரக்கமற்றவன் என்று அவளுக்குத் தெரியாமல் இல்லை. கொலை, கொள்ளை என்று எத்தனை மோசமான வேலைகளைப் பார்த்தானோ என்றெல்லாம் யோசித்திருக்கிறாள். அவனிடமிருந்து இப்படியான செய்கைகளைத்தான் அவள் எதிர்பார்த்திருக்கவும் வேண்டும். 

 

ஆனாலும் கண் முன்னேயே ஒரு உயிர் அப்படித் துடிப்பதை ஒருவனால் வேடிக்கை பார்க்க முடியும் என்பதை நம்ப முடியவில்லை. இவன் மனிதனே இல்லை என்று மனம் அடித்துச் சொன்னது. அறைக்குள் ஓடி வந்து கதவை அடைத்தாள். அப்போதும் பயமும் பதற்றமும் போவதாக இல்லை. இந்த நாயிடமிருந்தெல்லாம் அவளால் தப்பிக்க முடியுமா என்ன? நினைக்கையிலேயே பயத்தில் உடல் சிலிர்த்து, வெட்டி அடங்கியது.  

 

தினமும் பலமுறை வெளியே வந்து நோட்டம் விடுகிறவள் அன்றைக்கு அதற்குப் பிறகு வரவேயில்லை. 

 

*****

 

அன்று அதிகாலையிலேயே கடற்படையினரால் அதிவிரைவுப் படகு ஒன்று பிடிக்கப்பட்டது. அதில் இருந்த இருவர் தாம் மீன் பிடிக்க வந்ததாகவும், படகு கவிழ்ந்தால் முடியாமல் போய், பெரும்பாடுபட்டுத் தப்பித்துக்கொண்டதாகவும் சொன்னார்கள். 

 

கடற்படையினரால் அதை நம்ப முடியவில்லை. அதே நேரத்தில் படகைச் சோதனையிட்டபோது சந்தேகத்திற்கு இடமாக எதையும் கைப்பற்றவும் இல்லை. அவர்களை பற்றி விசாரித்தபோது உண்மையில் அவர்கள் மீனவர்கள் என்று உறுதியானது. 

 

ஆனால், அந்தப் படகிலிருந்து யாரோ குதித்ததுபோல், அல்லது ஏதோ கடலினுள் தூக்கிப்போடப்பட்டது போல் தாம் தூரத்திலிருந்து கவனித்தது உண்மையிலேயே நடந்ததா இல்லையா என்கிற குழப்பம் கடற்படைக்கு உண்டாயிற்று. அந்தளவில் அந்தச் சுற்றுவட்டாரத்தையே சுற்றி வளைத்துத்  தேடியும் யாரையும் அவர்களால் பிடிக்க முடியவில்லை. 

 

இந்த விடயத்தைக் காலையிலேயே வீடு தேடிவந்து சொன்னான் கதிரவன். 

 

இப்படியான நிகழ்வுகள் அடிக்கடி நடப்பதுதான் என்பதில் புதிதாக என்ன என்று விசாரித்தான் எல்லாளன். 

 

“இல்ல சேர், ஆரோ தப்பிப்போனதா கடற்படை சந்தேகப்படுது. இதுவும் போதைப்பொருள் கடத்தலா இருக்க சான்ஸ் இருக்கு.” 

 

அந்தப் படகு கரையிலிருந்து வெகு தூரத்தில் பிடிபட்டிருக்கிறது. கடலில் குதித்தவன் கரையை எட்டுவதாயின் குறைந்தது இரண்டு தொடக்கம் மூன்று மணி நேரங்கள் பிடிக்கும். அந்தளவில் நீந்திக் கரையேறுகிவது என்பது எல்லோராலும் முடியாது. அசாத்தியமானவர்களாக இருக்க வேண்டும். 

 

“எனக்கு என்னவோ இது சிவநாதரின்ர ஏற்பாடு மாதிரி இருக்கு சேர்.”

 

இருக்கலாம். தயாநிதி இல்லை என்றதும் நிச்சயமாகச் சிவநாதர் பேசாமல் இருக்கப் போவதில்லை. ஆனால் இது சாத்தியமா என்று யோசித்தான் எல்லாளன். 

 

“சேர் அது மட்டுமில்ல. தயாநிதி செத்த கொஞ்ச நாளில கடத்தல் ஒண்டு நடந்திருக்கு. ஒரு கப்பலை ஆர் எண்டு தெரியாத கும்பல் சுத்தி வளைச்சிருக்கு. ஆனா, கடற்படை போறதுக்கிடையில கப்பல விட்டுப் பாஞ்சு போயிட்டினம். எதையும் கொள்ளையடிக்கவோ களவெடுக்கவோ இல்லை. இது எங்கயோ இடிக்கிற மாதிரி இல்லையா சேர்.”

 

அந்தக் காலத்தில் போன்று இன்று கடல் கொள்ளையர்கள் இல்லை. அப்படியிருக்க அது நிச்சயமாக வேறு எதற்கோ செய்யப்பட்ட திசைதிருப்பல்தான். அதோடு இன்று நாட்டில் யுத்தமும் இல்லை. அதனால் கடற்கரையோரப் பாதுகாப்புகள் இருந்தாலும் உண்ணிப்பாகக் கவனிப்பார்களா என்றால் சந்தேகம்தான். 

 

எப்படியும் ஒரு அசட்டைத்தனம் இருக்கும். அதைப் பயன்படுத்தி அந்தப் பக்கம் கடற்படையின் கவனத்தைத் திசை திருப்பிவிட்டு இந்தப் பக்கம் ஏதோ செய்திருக்கிறார்கள். 

 

காவல் நிலையம் நோக்கி அவர்களின் ஜீப் பயணித்துக்கொண்டிருந்தது. எல்லாளனுக்கு இது எல்லாமே ஏதோ ஒரு உறுத்தலைத் தந்துகொண்டே இருந்தது. அவனைச் சுற்றி நடக்கிற அத்தனை சம்பவங்களும் அவனிடம் என்னவோ சொல்ல முயன்றுகொண்டிருப்பதாகப் பட்டது. அது என்ன?

 

“என்னை ஏன் சிவநாதர் இஞ்ச கூப்பிட்டவர் கதிரவன்?” என்றான் திடீரென்று. 

 

“என்ர கைல ஏன் தயாநிதின்ர கேஸ தந்தவர். எனக்கு சத்தியநாதன் நினைவில வந்துகொண்டே இருக்கிறான். இந்த முறையும் நான் எதையோ தவற விடுறன் எண்டு மனம் சொல்லிக்கொண்டே இருக்கு.” என்றவன் வேகமாகப் பார்வையை எதிர்ப்புறம் திருப்பிக்கொண்டான். 

 

மனம் பதறியது. என்னவோ அசம்பாவிதம் நடக்கப்போவதாக உள்ளம் அடித்துச் சொல்லிக்கொண்டேயிருந்தது. என்ன என்ன என்று அவனும் தன்னால் முடிந்தவரையில் தேடுகிறான்தான். எதுவும் பிடிபட மறுக்கிறது. 

 

கண்ணுக்குத் தெரியாமல் அவன் வீட்டுக்கும், காண்டீபன் வீட்டுக்கும் தனியார் நிறுவனத்தில் இருந்து பாதுகாவலர்களை நிறுத்தி வைத்திருக்கிறான்தான் என்றாலும் எல்லா நேரத்திலும் எல்லா இடத்திலும் எல்லோருக்கும் அவனால் பாதுகாப்புக் கொடுக்க முடியுமா என்ன? 

 

எல்லோரிடமும் தன் பயத்தைச் சொல்லி அவர்களையும் சேர்த்துப் பயமுறுத்தவும் முடியவில்லை. 

 

சிவநாதர் பெரிதாக ஏதோ ஒரு திட்டம் போடுகிறார் என்று மட்டும் மிக நன்றாகப் புரிந்தது. அது என்ன? 

 

error: Alert: Content selection is disabled!!