அத்தியாயம் 3-2

“இதில என்ன கரைச்சல்? வீட்டுக்குஃ பிரெண்ட்ஸ், சொந்த பந்தம் எண்டு வாறது தங்கிறது எண்டா எனக்குப் பே சந்தோசமா இருக்கும் கயல். உண்மையாவே ஒரு கரைச்சலும் இல்ல. வடிவாக் குளிச்சிட்டு வாங்க சாப்பிடுவம்.”  

தோள் பற்றி அன்போடு சொல்லிவிட்டுச் செல்ல, குளிக்கத் தோன்றவில்லை, இவளுக்கு. அருகில் கிடந்த ஒற்றைச் சொகுது இருக்கையில்  அமர்ந்துவிட்டாள்.

சிறுவயதிலிருந்து, குறிப்பாக அன்னையின் மறைவின் பின்னர் அம்மம்மா தாத்தாவினால் கரிசனையோடு அரவணைக்கப்பட்டு இருந்தாலும், “உன்ர  வேலைகளை நீ தான் பிள்ள பார்க்க வேணும். எப்ப எண்டாலும் உனக்கு உன்ர கைதான், வேற ஆரையும் ஒருநாளும் எதிர்பார்க்காத!” என்று, பழக்கப்படுத்தியும் இருந்தார்கள்.

அப்படிப் பழக்கப்பட்டவள், புது இடத்தில்  கால் வைத்த கணத்திலிருந்து அவளுக்காக யாரோ முடிவெடுக்கிறார்கள் என்பதில் மிகவுமே எரிச்சலடைந்தாள். எல்லாமே காயுவைக் காணும் வரை தான். காயுவின் அன்பும் கரிசனையும், இதுவரை அறிமுகமே இல்லாத ஒருத்தியைக் கவனிக்கும் முறையும் அவளையும் அறியாது அவளுக்குப் பிடித்திருந்தது. எல்லாவற்றுக்கும் மேலாக, இதுவரை இப்படி இவளை யாருமே பிரத்தியேகக் கவனிப்போடு வரவேற்றதில்லையே! அக்கணத்தை ஆழமாகச் சுவாசித்து அனுபவிக்க முனைந்த உள்ளம், அவள் உதடுகளில் முறுவலைப் பூசிச் சென்றது.

முறுவல் அகலாதே தங்கைக்கு அழைத்தாள். வந்து சேர்ந்துவிட்ட செய்தியைச் சொல்லிவிட்டு, “அம்மம்மா ஆக்களுக்குச் சொல்லி விடடி, நான் அவைக்குக் கொஞ்சத்தில எடுக்கிறன்.” என்றுவிட்டு, தங்கை கேட்ட கேள்விகளுக்குப் பொறுமையாகப் பதிலிறுத்துவிட்டு விரைவாகக் குளித்து உடைமாற்றிக்கொண்டு வெளியில் வர எத்தனித்தவள், குளியலறை வாயிலிலேயே நிதானித்தாள்.

அறையில் கிடந்த கட்டிலில் காயு அமர்ந்திருக்க, அவள் மடியில் தலை வைத்து நித்திரைச் சோம்பல் விலகாது சுருண்டிருந்தாள், அவர்களின் மகள்.

மகளின் தலையைக் கோதியவாறே எதையோ சொல்லிக் கொண்டிருந்த காயு, குளியலறைக் கதவு திறந்த அரவத்தில் நிமிர்ந்தாள். பட்டென்று எழுந்தமர்ந்தாள், சிறுமி. அவள் பார்வையில் சற்றே வெட்கம் கலந்து சிரிப்பதா விடுவதா என்ற யோசனை பளிச்சிட்டது.  

“களைப்புப்  போக வடிவாக் குளிச்சாச்சா?” என்ற காயு, கயலின் பார்வையைத் தொடர்ந்து மகளைப்  பார்த்தவள், “ஆன்ட்டிக்கு  ஹாய் சொல்லுங்க குட்டிம்மா!” மகள் நெற்றியில் கற்றையாக  புரண்ட  சிகையை ஒதுக்கிக்கொண்டே சொன்னாள்.

அதே வேகத்தில், “ஆன்ட்டி எண்டு சொல்லலாமா இல்ல அக்காவா?” விழிகளில் கிண்டலோடு கேட்கவும் செய்தாள்.

 “ஆன்ட்டி எண்டே சொல்லாம்.” நெருங்கி வந்து, ” ஹலோ லாதி…லாதி தானே? எப்பிடி இருக்கிறீங்க?” அவள் கன்னத்தை வருடியபடி கேட்டவள், “நான் கய…” ஆரம்பிக்கவே குதூகலமாகக் குறுக்கிட்டது, சிறுமியின் குரல்.

“தெரியுமே! கயல்விழி ஆன்ட்டி! அப்பம்மா வீட்டுக்குப் பக்கத்தில இருக்கிற ஆன்ட்டி!” பற்கள் தெரியச் சிரித்தாள் சிறுமி. சட்டென்று சிறுமியின் உயரத்துக்கு முழங்காலில் அமர்ந்து கொண்டாள், கயல்.

வியப்பில் விழிகள் விரிய, “பாருங்கோவன் ஆன்ட்டிட பேரெல்லாம் தெரிஞ்சிருக்கே!” சிறுமியை கட்டிக்கொள்ள முனைய, விலகித்  தாயோடு நெருங்கி நின்று கொண்டாள், அவள். பார்வை மட்டும் கயலில்!

“அம்மா நீங்க வாறிங்க எண்டு சொன்னவா!”  மெல்லிய வெட்கத்தோடு சொல்லவும் செய்தாள்.

“சரி ஆன்டிக்கு ஒரு ஹக் குடுங்கோவன்.” மகளைக் கயல்விழியருகில் நகர்த்திவிட்டாள், காயு.

பட்டும் படாமலும் கட்டிப் பிடித்து விலகினாள், பெரியவள் போல்.

அவள் தலையில் அன்பாகத் தடவிவிட்டெழுந்தாள்,  கயல்.

“அப்ப நீங்க ரெடியாகிட்டு வாங்க.” காயு மகளோடு நகர, “நான் ரெடி ஆகிட்டன், வாங்க.” சேர்ந்து நடந்தாள், கயல்விழி.

சமையலறையோடு இருந்த பெரிய மேசையில் அமர்ந்திருந்தான் பூபாலன். இவர்களைக் கண்டதும் கைபேசியை வைத்துவிட்டுக்  கயல்விழியைப் பார்த்தவன், “நான் சொன்னதுபோல என்ர  மனிசி பிள்ளையப்  பிடிச்சிருக்கா?” கேட்டவன் பாவனையில் பெருமிதம் மட்டுமல்ல, மனைவி குழந்தையைப் பார்த்தவன் பார்வையில் அத்தனை நேசம்! 

கணத்தில் அதை அவதானித்துவிட்டாள், கயல். அவளுக்கு உண்மையில் வெகுவான ஆச்சரியம். ‘வயதும் பக்குவமும் மனிதரை இப்பிடியும் மாற்றலாம்’ மனதுள் எண்ணிக்கொண்டே முறுவலோடு அமர்ந்து கொண்டாள்.

“அதேன்  அப்பிடிக் கேக்குறீங்க?” கேட்டபடி, “தேத்தண்ணி, கோப்பி எல்லாம் இருக்கு; தேவையானதை எடுக்கலாம் கயல்.” மேசையின் நடுவிலிருந்த தட்டை இவள் புறம் நகர்த்திவிட்டு மகளோடு அமர்ந்தாள், காயு.

“ஏனா?  அப்பிடிச் சொல்லித்தான் வீட்ட கூட்டிக்கொண்டு வந்தனான். இல்லையோ ஏர் போட்டில இருந்தே டக்சி பிடிச்சு அறைக்கே போயிருக்கும் ஆள்.” கடித்தான்.

“ஹா…ஹா…” சிரிப்பும் கலகலப்புமாகக் கழிந்தது, காலையுணவு நேரம்.

மிகக் குறுகிய நேரம் தான், நெடுநாள் பழகியது போன்றதொரு இதமான உணர்வு தந்தது, அவ்வீடு! கயலுக்கு அக்குடும்பத்தை மிகவும் பிடித்துப் போயிற்று! அதுவும் லாதியை மிக மிகப் பிடித்திட்டு!

“வாங்க என்ர ரூம் காட்டுறன்.” கையோடு மாடிக்கு இழுத்துச் சென்ற சிறுமி அலுக்காது கதைத்துக்கொண்டிருந்தாள். பாடசாலை, நண்பர்கள், தன் பொழுது போக்கு என்று, சொல்வதற்கு அவளிடம் நிறையவே இருந்தது. முறுவலோடு கேட்டிருந்த கயல்விழியின் பார்வை சிறுமியின் முகத்தில். வாய் மட்டும் பேசாது விழிகளும் சேர்ந்து பேச அவ்வளவு வடிவாக இருந்தாள், லாதி. பெரும்பாலும் ஆங்கிலத்தில் தான் கதைத்தாள். இருந்தாலும் தமிழில் பதில் சொல்கையிலும் கதைக்கையிலும் புரிந்து பதிலும் சொன்னாள்.

“நான் கீறின படங்களக் காட்டுறன் ஆன்ட்டி. நிறைய…பெரிய ஆர்ட் புக்ல கீறி வச்சிருக்கிறன்.” சிறு அலுமாரிக்குள்ளிருந்த பெரிய புத்தகம் ஒன்று இவள் முன்னால் வந்திருந்தது. இவளோடு ஒட்டிக்கொண்டமர்ந்த லாதியின் குட்டி விரல்கள் அதன் பக்கங்களைப் புரட்ட ஆயத்தமாகின.

“லாதி மா, இதெல்லாம் பிறகு காட்டலாம்; ஆன்ட்டி களைச்சுப் போய் வந்திருக்கிறா கொஞ்ச நேரம் தூங்கட்டும், விடுங்க!” உள்ளிட்டாள், காயு.

 

முகத்திலிருந்த பரவசம் பட்டென்று வழிந்திட பெரியவர்களைப் பார்த்தாள், லாதி. மறுகணமே கொப்பியை எடுத்துக்கொண்டு இறங்க ஆயத்தமானாள்.

“இல்ல இல்ல, இப்பயே பாப்பம்.” அவளைப் பிடித்து அணைத்து இருத்திக்கொண்டாள், கயல்விழி. சிறுமியின் முகம் சூம்பிய வேகத்தில் மலர்ந்து ஒளிர்ந்தது. அவள் விழிகளையே பார்த்திருக்கலாம் போலிருந்தது.

ஒரு குழந்தையால் இந்தளவுக்கு வசீகரிக்க முடியுமா? ஆச்சர்யப்பட்டுப்போனாள், கயல்விழி.  

“உங்களோட ஒரே ஒட்டோ ஒட்டென்று ஒட்டிப்போட்டா! ஆன்ட்டிய நல்லா பிடிச்சுப் போட்டுது போல!” தாய் சொல்ல அப்படியே கயல்விழியின் நெஞ்சில் சாய்ந்தபடி அவளைப் பார்த்த சிறுமி, தாய் சொல்வது உண்மை என்றாள், பார்வையால்.

கயல்விழியின் கண்கள் கலங்கிப் போயின. இந்தளவு எல்லாம் அவளிடம் யாருமே ஒட்டிக்கொண்டதில்லை. தங்கை மிகுந்த பாசமாக இருப்பாள் தான், ஆனாலும் இது வேறு! 

சிறுமியைக் கட்டிப்பிடித்து உச்சியில் முத்தமிட்டதைப் பார்த்தபடி வந்த பூபாலன், “ஆஹா! லாதிக்கு புது ஃபிரெண்ட் கிடைச்சிருக்கிறா எண்டு சொல்லுங்க.” தன் வரவை வெளிப்படுத்தினான்.

 

“அதான் பா!” 

“ம்மா, நீங்க போங்க நான் ஆன்டிக்கு இதெல்லாம் காட்ட வேணும்; அப்பா நீங்களும் போங்கோ!” 

“காட்டலாம், இப்ப இல்ல பிறகு. இப்பயே எல்லாம் காட்டிட்டா உங்கட  ஆன்ட்டி வெளிக்கிட்டுப் போயிருவா!” போட்டுக் கொடுத்தான் பூபாலன்.

 

“அதுதான் லாதிம்மா, பிறகு காட்டம்மா ஆன்ட்டிய இங்க பிடிச்சு வைக்கலாம்.” காயுவும் சேர்ந்துகொண்டாள்.

“நோ! ஆன்ட்டி எங்கயும் போக மாட்டா. இதுதான் நம்மட அறை ஆன்ட்டி. பெரிய கட்டில்…நாம இரண்டு பேரும் தூங்கலாம்.” திட்டமே தீட்டத் தொடங்கிவிட்டாள், லாதி.

“நிப்பாட்டுங்க நிப்பாட்டுங்க. சின்னப் பிள்ளைக்கு இப்பிடி எல்லாமா ஆசை காட்டுறது?” கயல் கடிந்துகொண்டாள்.

 “இனி என்னால முடியாதப்பா! நீங்களாச்சு உங்கட ஃப்ரெண்ட் ஆச்சு!” பூபாலன் சென்றுவிட்டான்.

“அம்மா போங்கோ!” தாயைத் தள்ளிவந்து வெளியில் விட்டுவிட்டு ஓடிப்போய் கயலோடு அணைந்திருந்து கொண்டாள், லாதி. 

“இப்ப இந்தப் படமெல்லாம் பார்த்திட்டு, ஆன்ட்டிட ரூமுக்குப் போய்ட்டு வாற ஞாயிறு லாதிட்ட வருவனாம். டீல் ஒகே?” தன் மூக்கு நுனியைச் செல்லமாக ஆட்டியபடி அவள் கேட்க, மறுக்கத் தோன்றவில்லை, சிறுமிக்கு. சம்மதமாகத் தலையாட்டியவளுக்கு தான் வரைந்தவற்றைக் காட்டும் அவசரம் வேற. 

அடுத்து நகர்ந்த ஒரு மணிநேரத்துக்கும் மேலாக கயல்விழியின் பொழுது வலு  கொண்டாட்டமாகக் கடந்திருந்தது. தன் வயதுக்குச் சமனாக அவளை வளைத்தெடுத்துவிட்டாள், சிறுமி. சிறுமியோடு அவளுக்குத் தகுந்த மாதிரித் தன்னால் பழக முடிந்ததில் கயலுக்குதான் அவ்வளவு ஆச்சரியம்! இதுவரை இறுகிப் போயிருந்த அவள்  மனதில் உறைந்து போயிருந்த துடிதுடிப்பை, குதூகலத்தைத் அச்சிறுபொழுதில் தட்டியெழும்பி விட்டிருந்தாள், சிறுமி.

 

“லாதி மா இனிக் காணும், ஆன்ட்டி கொஞ்சநேரம் ரெஸ்ட் எடுக்கட்டும்.” அன்பும் கண்டிப்புமாகச் சொல்லிக்கொண்டு வந்தாள்  காயு. 

சமையலறையில் வேலையாக இருந்தாள் போலும். தலையில் வெள்ளைப்பொலித்தின் தொப்பி, அவள் சிகையை வாகாகத் தன்னுள் அடக்கியிருந்தது. வெள்ளையில் பெரிய ரோசாக்களும் மொட்டுகளும் பரந்து கிடந்த ஏப்பரனில், நட்சத்திர உணவு விடுதியில் சமையல் வேலை செய்பவள் போன்று வந்து நின்றாளவள்.

 முறுவலித்தாள் கயல். 

“வெளில போக வேணும் கயல், இதெல்லாம் போடாமல் சமைச்சன் எண்டு வையுங்க, சாப்பாட்டு மணம் எனக்கே விசர் வரும். அதும் இந்த வின்டரில எப்பிடித்தான் எண்டாலும் தலையெல்லாம் சாப்பாட்டு வாசமடிக்கும்.” அவள் சொல்லி முடிக்கவில்லை, “அப்பா எல்லாம்மா சமைக்கிறது?!” போட்டுக்கொடுத்தாள் அவர்களின் செல்ல மகள்.

வெளியில், பூபாலன் பெரிதாகச் சிரித்தான்.

“மனுசனுக்குக் காது  இங்கதான்!” வாயைச் சுழித்தாள், காயு.

“உங்கட அப்பா தனிய சமைச்சிட்டாலும்! எல்லாம் செய்து குடுக்க நான் பக்கத்திலேயே நிக்க வேணும். இதுக்க பெருமை வேற!” சொல்லிக்கொண்டே, மகளை அப்படியே தூக்க முனைய, பிடிபடாது வாகாக நலுவிவிட்டாலும், “அம்மா பொய் சொல்லுறா, புரியாணி எண்டா அப்பாதான் செய்வார்.” கிளுக்கிச் சிரித்தபடி வெளியில் ஓடிவிட்டாள், சிறுமி.

“பெரிய புரியாணி, எனக்கு பிடிக்கிறதே இல்ல. பிடிக்கிற மனுசர் தனக்கும் மகளுக்கும் எண்டு செய்யிறவர்.” கண்ணடித்தபடியே சொன்னவள், “அதும்  இப்பிடி வீட்டில நிக்கிற நேரம் மட்டும் தான்.” தானும் நகர, சேர்ந்து வந்தாள், கயல்விழி.

இறைச்சி வெட்டிக்கொண்டிருந்த பூபாலன் கைவேலையை விட்டுவிட்டுத் திரும்பினான். 

 

“நான் ஒண்ணுமே சொல்லேல்ல, என்ர ஐஞ்சு வயசு மகளுக்கு வீட்டில நடக்கிறதெல்லாம் தெரியாதா என்ன?” கண்ணடித்து மனைவியோடு வம்பிழுத்தான்.

“அதோட, என்ர மனிசி புரியாணிய ருசி பாக்கக் கூட வாயில வையா கயல்விழி. இண்டைக்கு அவாக்கு பிரவுண் பிரெட் தான்!” கேலியாகச் சொல்லிக்கொண்டே, “எப்பிடி எப்பிடியெல்லாம் இருந்த நான் இப்பிடிக் கத்தியும் கரண்டியுமா நிக்கிறனே எண்டு கயல்விழிக்கு ஒரே ஆச்சரியமா இருக்குப் பார்!” தம்மிருவரையும் முறுவலோடு பார்த்து நின்றவளையும் சீண்டினான்.

மிகவுமே அந்தரப்பட்டுப் போனாள், கயல். விமானத்திலிருக்கும் போதும் அவன் பற்றி என்னவெல்லாம் எண்ணிக்கொண்டாள். அதையறிந்து கொண்டு கதைப்பவன் போலிருக்க, சமாளிப்பாகச் சிரிக்க முயன்றாள்.

“தான் ஒருகாலத்தில பெரிய ரோமியோக் கணக்கில திரிஞ்சத ஒரு மகளும் இருக்கேக்கையும் பெருமையாச் சொல்லுறது எண்டா அது இவர் மட்டும் தான்!” சொல்லிக்கொண்டு போன வேகத்தில் அவன் முதுகில் படீரென்று ஒன்று போட்டாள், காயு.

“ஹா…ஹா…” தன்னைமறந்து வாய்விட்டே சிரித்துவிட்டாள், கயல்விழி. அன்றிருந்த பூபாலன் நினைவில் வந்தான். வெறுப்பும் முகச் சுழிப்பும் மட்டுமே உருவாக்கிச் சென்றான். இன்றிருப்பவனோ, மனைவியின் அடிக்கு முன்னால் குனிந்துவிட்டு, “ஏன்டி இந்தக்கொலை வெறி! நான் தானே அந்தக்கால கதையெல்லாம் சொன்னன். ஆரோ சொல்லிக் கேட்டது கணக்கில அடிக்கிற!” பரிதாபமாகப் பார்த்தான். 

அதன் பின்னாலிருந்த அவர்களிடையேயான நேசமும், பிணைப்பும்  இரசனை கலந்த வியப்பேற்படுத்தியது, கயல்விழிக்கு.

“லாதி எங்க?” என்று பார்த்தபடி நகரத் தொடங்கியவளை, “நீங்க கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுங்கோ கயல்!”   காயு, விரைந்து வந்து அவள் கரம் பற்றி அறைக்குள் விட்டுவிட்டுக் கதவைச் சாத்தவும் செய்வதறியாது நின்றாள். ஒரு கணம் தான், கட்டிலில் சென்றமர்ந்து கொண்டாள்.

அறைக்குப் போகலாம் என்று சொல்லவே ஒரு மாதிரியாகவிருந்தது. திரும்ப திரும்ப அவள் சொல்வதும் அவர்கள் மறுப்பதுவும் வடிவாவா  இருக்கு! 

‘சரி சாப்பிட்டுட்டுப் போவம்.’ முடிவோடு மடிக்கணனியை எடுத்துக்கொண்டு கால்கள் நீட்டிச் சாய்ந்தமர்ந்து கொண்டாள். அப்படியே  வேலை விடயமாக சில விபரங்களைப் பார்த்திருந்தவள் எப்போது கண்ணயர்ந்தாள் என்றே தெரியாது; அப்படியே சாய்ந்து ஆழ்ந்து உறங்கி விட்டிருந்தாள்.

error: Alert: Content selection is disabled!!