கண்கள் கலங்கியபடி கராஜ் உரிமையாளருக்கு நன்றி தெரிவித்தார்.
வீட்டில் இருந்துகொண்டே உணவுப் பதார்த்தங்கள் செய்து கொடுத்தே வருமானம் ஈட்டிக் கொண்டிருக்கிறார். அதில் எத்தனையைப் பார்ப்பதாம்!
அருகில்தான் அந்தப் பெட்டையும்(பெண் பிள்ளை) அந்தம்மாவின் இரு மகன்களும் நின்றிருந்தார்கள்.
“நானும் இதை யோசிக்கேல்லத் தங்கச்சி, சூர்யா தான் இப்பிடி அடைச்சி விடுவம் எண்டு வந்து சொன்னவன். அக்கா தங்கச்சிகளோடு பிறந்தவன் எல்லோ…” என்னைக் காட்டிவிட்டு, பாசத்தோடு பார்த்தார் பெரியவர்.
அவருக்கு என்னில் தனியன்பு. “கண் பார்க்கச் கை செய்யும் கெட்டிக்காரன் நீ, நல்லா வருவ!” என்று அடிக்கடிச் சொல்லுவார்.
என்னைப் பார்த்துச் சிநேகிதமாக முறுவலித்த அந்த ஆன்ட்டிக்குச் சின்னப் புன்னகையைக் கொடுத்த என் பார்வை அந்தப் பிள்ளைகளில் படிந்தது. பெடியன்கள் இருவரும் சிநேகமாக முறுவலிக்க, அவளோ, விழிகளை வெட்டித் திருப்பினாள். சிரிப்புத்தான் வந்திச்சு.
‘சின்னப்பிள்ளை …’ மனதில் சொல்லிக் கொண்டேன்.
“எல்லாரும் வழமையை விட நேரத்துக்கே வந்தாச்சே! காலச் சாப்பாடு …” என்று ஆரம்பித்தார், அந்த ஆன்ட்டி.
“அதெல்லாம் நாங்க பார்த்துக் கொள்ளுறம்.” சட்டென்று மறுத்தார் பெரியவர்.
“இல்ல, நான் பாண் வாங்கிச் சம்பலோடு…” விடாது ஆரம்பித்தவருக்கு கையமர்த்தி மறுத்தும் விட்டார்.
“அதெல்லாம் ஒண்டும் வேணாம் தங்கச்சி; நீங்க போய் உங்கட வேலைகளைப் பாருங்க; நாங்க இதைக் கடகடவென்று முடிச்சிட்டு எங்கட வேலைகளைப் பார்க்கிறம்.” என்று, அவர் மறுத்த பின்னரும், சுடச் சுடப் பால் தேத்தண்ணி போட்டுக் கொடுத்து விட்டிருந்தார் அவர்.
தேநீரைக் கொண்டு வந்து நீட்டியவள் அந்தப் பெண்பிள்ளை தான்.
முகத்தைப் பார்க்கவேணுமே… ஒரே முறைப்பு!
அதுவும் அவர்களின் வீட்டை எட்டிப் பார்த்துக் காணும் போதெல்லாம் பகிடி பண்ணிய இரு பெடியன்களையும் அவள் பார்த்த பார்வையில் அவ்வளவு உக்கிரம்.
கையில் ஏந்தியிருந்த தட்டிலுள்ள சுடு தேநீரை அப்படியே அவர்களின் தலையில் கவிழ்த்து விடுவாள் போன்றிந்தது, அவள் நின்ற நிலை.
வந்த சிரிப்பை அடக்கிக் கொண்டேன்.
“மிச்சக் கிடுகில கிணற்றடிக்கும் அடைக்கலாம் போல இருக்கு ஐயா! கையோட அடைச்சி விடுவமா?” என்றேன், பெரியவரிடம்.
இதுபற்றி முதலே அவரிடம் கதைத்திருந்தேன். கேட்டதும், “வேலியோட சேர்த்துக் கிணற்றடியையும் அடச்சி விடலாம் தான் சூர்யா. ஆனால்…” என்று யோசித்தார்.
“இல்ல…ஆம்பளத் துணையில்லாத வீடு நமக்கும் பெரிசாப் பழக்கமும் இல்ல, அதுதான் யோசிக்கிறன்.” மிகவும் தயங்கினார்.
“அப்படிப் பார்த்தா இங்க வேலை செய்யிற ஆட்களால அவேக்கு எத்தின பிரச்சினைகள் வரலாம்?” விசயத்தைச் சொல்லிவிட்டேன்.
ஆரம்பத்தில், “காரஜுக்கு எந்த நேரமும் ஆக்கள் வந்து போக இருப்பதால வேலி இல்லாத அந்த வீட்டிலிருக்கிறவைக்கு அந்தரமா(தொல்லை) இருக்கும் தானே? அடைப்பு இருந்தா உதவியாக இருக்குமே!” அப்படி இப்படிச் சொன்னேனே தவிர உண்மையைச் சொல்லவில்லை. கேட்டால், சும்மா பகிடி விட்டார்கள் என்று சொன்னாலே நிச்சயம் கோபம் கொள்வார் ஐயா. அப்படியிருக்க, சிறு சிறு விசயங்களை நாமே பெரிதுபடுத்துவானேன் என்று அதைச் சொல்லவில்லை.
இப்போதோ வேறு வழி இருக்கவில்லை. கேட்டதும் பதறிப் போனார் அவர்.
“என்ன? என்ன நடந்திச்சு? ஏன் என்னட்ட முதலே சொல்லேல்ல?” மிகையாகக் கோபம் கொண்டவரைச் சமாதானம் செய்து, பெரிது படுத்தாது விட்டு விட வைக்க நான் பட்ட பாடு!
அதன் பிறகு மறுபேச்சிருக்கவில்லை.
“கிணற்றடியையும் நல்ல இறுக்கமா உயரமாவே அடைச்சு விடுவம்!” என்று சொல்லிவிட்டார்.
இரு இடத்துக்கும் இடைப்பட்ட வேலி அடைப்பது வேறு விசயம். ஆனால், அவர்கள் வீட்டுக் கிணற்றடி அப்படியில்லையே!
அதனால், “மிச்சக் கிடுகு கொஞ்சம் கிடக்கு; அநியாயமாப் போயிரும், இதில அடைச்சு விடுறமே!” என்று சொல்வோம் என்று கதைத்து வைத்திருந்தோம்.
அதன்படி, அங்கு நின்றவளைப் பார்த்து, “உம்மட அம்மாவ வரச் சொல்லும்.” என்று சொல்லிவிட்டேன். சட்டென்று என்னை நோக்கிய அவள் விழிகள் நிறைந்து விட்டன .
“ச்சே!” நான் என்னையும் அறியாது இயல்பாகச் சொல்லிவிட்டேன்; அவளின் இழப்பைக் கிளறி விட்டுவிட்டேன். விசுக்கென்று உள்ளே ஓடி விட்டாள். சிறு பொழுதில் வந்தார் அந்த ஆன்ட்டி.
நாங்கள் சொன்னதைக் கேட்டதும் கண்கலங்கியபடி நன்றிகளை கணக்கின்றிச் சொல்லித் தீர்த்தார். பிறகு என்ன? தீர்மானித்தபடி நல்ல இறுக்கமாக உயரமாகவே சுற்றி மறைப்பு ஏற்படுத்திய பின்னரே என் மனம் ஆறியது.
அதன்பிறகு உருண்ட நாட்களில் வீடு, வேலை, பொறுப்புகளோடு ஒன்றிப் போனேன். எப்பவாவது அந்த வீட்டு நபர்களைக் காண்பேன் தான். அந்த வேளைகளில் சின்னத் தலையாட்டலும் முறுவலும் பரிமாறிக்கொள்வோம்.
அந்த ஆன்ட்டி என்றால் நின்று நிதானமாகக் கதைத்துவிட்டுச் செல்வார். சிலவேளைகளில் கடைசி மகனிடம் வடை, முறுக்கு அப்படி இப்படிப் பதார்த்தங்களும் வரும்.
ஐந்து வருடங்கள் உருண்டோடியிருந்தன.
கராஜை விற்றுவிட்டு மகனோடு வெளிநாடு சென்றிருக்கப் போவதாக ஐயா சொல்ல, நானே அதை வாங்கினால் என்ன என்ற கேள்வியின் விடையாகக் கராஜின் உரிமையாளர் ஆனேன்.
“சூர்யாண்ணே…” தோளில் தட்டி உலுப்பினான் அந்த மதுக்கடையில் வேலை செய்யும் பெடியனொருவன்.
அதுவரை இதமாகத் தாலாட்டிய நினைவலைகள் சடாரென்று அறுபட்டுத் தெறித்துப் போயின.
அவனை நிமிர்ந்து பார்க்க முயன்றேன்; முடியவில்லை. தலை மேசையில் சாய்ந்தது.
“அண்ணே! இங்க பாருங்கண்ணே!” மீண்டும் மீண்டும் உலுக்கினான் அவன்.
“இப்ப மணி என்ன தெரியுமா? வீட்ட போகேல்லையா? நான் வீட்ட தான் போறன், உங்கள அப்பிடியே கொண்டு போய் விட்டுட்டுப் போறனே.” என்னைப் பிடித்திழுத்து எழுப்பி நிறுத்தினான்.
“டேய் மச்சான்! அந்த வாசல் வரைக்கும் ஒருக்கா இவரப் பிடிடா!”
இன்னொருவனை உதவிக்கு அழைத்தது எங்கோ ஆழ் கிணற்றுக்குள் ஒலிப்பது போல் கேட்டது.
“டேய்! மோட்டார் சைக்கிளில எப்பிடிடா? வேணாம். அது இங்க இருக்கட்டும்; நாளைக்கு அவர் வந்து எடுக்கட்டும்; இல்லையோ, கராஜில விட்டிருவம். நீ அப்புவின்ட ஆட்டோவில கூட்டிக்கொண்டு போ!”
மற்றவன் சொன்னதை ஆமோதித்து, ஆட்டோவை வரவைத்து அதனுள் என்னைத் திணித்தார்கள்.
ஆட்டோ வீட்டை நோக்கிப் பாய்ந்தது.
இனி அம்மாவின் அழுகை…அப்படியே என் தலை சாய்ந்தது.