என் சோலைப் பூவே 2 – 1

அத்தியாயம்-2

 

முகத்தில் எந்த உணர்வுகளையும் காட்டாது அவர்களை நெருங்கியவனிடம், ஒரு செருப்பை நீட்டிக் காட்டி, “இதில் சைஸ் முப்பத்தியெட்டு இங்கே இல்லை. உள்ளே இருக்கிறதா என்று பார்த்துச் சொல்லுங்கள்.” என்றாள் சித்ரா.

 

அவள் நீட்டியதைக் கையில் வாங்காது பார்த்துவிட்டு, “இருக்கிறது.” என்று சுருக்கமாகச் சொன்னவன், திரும்பி உள்ளே நடந்தான்.

 

அவன் போவதையே பார்த்தபடி, “என்னடி, முதலாளியின் மகள் நீ. உன்னைப் பார்த்து ஒரு சிரிப்பில்லை. ஒரு பணிவில்லை. இருக்கிறது என்று மட்டும் திமிராகச் சொல்லிவிட்டுப் போகிறான். செருப்பைக் கொண்டுவருவானா அல்லது அதற்கு இன்னொருவனைக் கூப்பிட வேண்டுமா?” என்று கேட்டாள் அவள் தோழி ராகினி.

 

“அவன் அப்படித்தான். யாரிடமும் அதிகமாகக் கதைக்க மாட்டான். ஆனால் பார் செருப்பைக் கொண்டுவந்து தருவான். வேலையில் கெட்டிக்காரன்.” என்று உறுதியாகச் சொன்னவளிடம்,

 

“என்னடி சித்து, அவனை நன்றாகத் தெரிந்து வைத்திருக்கிறாயே, என்ன விசேசம்?” என்று குறுகுறுப்போடு கேட்டாள் ராகினி.

 

“அதுதானே?” என்று கோரஸ் பாடின மீதிக் குரல்கள்.

 

அவர்களின் ஆர்வத்தையும் குறுகுறுப்பையும் பார்த்தவள், கலீரெனச் சிரித்தாள். அவள் சிரிக்கையில் மின்னிய முத்துப் பற்களுக்குப் போட்டியாக, உதட்டின் மேலேயும் மூக்கு நுனியிலும் பூத்திருந்த வியர்வைத் துளிகள் மினுமினுத்தன.

 

“சிரித்து மழுப்புவதை விட்டுவிட்டுச் சேதியைச் சொல்லடி என் தோழி.” என்று ராகமிழுத்தாள் ராகினி.

 

அப்போதும் குறையாத புன்னகையோடு, “சிரிக்காமல் வேறு என்ன செய்யச் சொல்கிறாய்? மூன்று வருடங்களாக எங்கள் கடையில் வேலை செய்கிறவனைப் பற்றி எனக்குத் தெரியாமல் இருக்குமா? அதற்கு நீங்களாக ஏதேதோ கற்பனை செய்தால் எனக்குச் சிரிப்பு வராமல் வேறு என்னதான் வரும்?” என்றவளின் மெல்லிய நீண்ட விரல்கள், காற்றில் மோதி அவள் கண்ணோடு விளையாடிய முடியை நளினமாகக் காதோரம் ஒதுக்கி விட்டது.

 

“அதுதானே பார்த்தேன். இந்தத் திருகோணமலையில் இருக்கும் பணக்காரர்களின் பிள்ளைகள் எல்லாம் உன் பின்னால் சுற்ற, நீ போயும் போயும் உன் கடையில் வேலை செய்பவனையா சைட் அடிக்கப் போகிறாய்?” என்ற தோழிகளிடம், “அது புரிந்தால் சரி!” என்றாள் அவள்.

 

இப்படியே எதையெதையோ வளவளத்தவர்களின் கண்கள், ஷெல்ப் போன்று அமைக்கப்பட்ட தட்டுக்களில் அடுக்கப்பட்டிருந்த அழகழகான செருப்புகளை ஆராய்ந்து கொண்டிருந்ததன.

 

அந்தக் கடையின் நடுவில், வாடிக்கையாளர்கள் சுற்றிப் பார்த்து வாங்குவதற்கு வசதியாக இரண்டிரண்டு ‘ஷெல்ப்’ களை ஒன்றாகப் போட்டு, இரண்டு பக்கமும் உள்ள தட்டுக்களில் செருப்புகள் அடுக்கப் பட்டிருந்தது. மேலதிகமாக இருந்த செருப்புகள் பெரிய அட்டைப் பெட்டிகளில் அடைக்கப்பட்டு அந்த ‘ஷெல்ப்’ களுக்கு மேலே வைக்கப்பட்டிருந்தது.

 

அங்கிருந்த ஒரு ‘ஷெல்ப்’ இன் மேல்தட்டில் வைக்கப்பட்டிருந்த ஒரு செருப்பைக் கண்டுவிட்டு, “ராக்கி, அங்கே பார். அந்தக் கறுப்பில் வெள்ளை முத்துக்கள் பதித்திருக்கும் செருப்பு நன்றாக இருக்கிறது..” என்று காட்டினாள் சித்ரா.

 

“ஆமாம்டி. என்னுடைய வெள்ளைச் சுடிக்கு பொருத்தமாக இருக்கும்..” என்ற ராகினி, அதை எட்டி எடுக்கப் பார்த்தாள்.

 

முடியாமல் போகவே, ”நீதானேடி எங்களுக்குள் உயரமானவள். எட்டி அதை எடு பார்ப்போம்.” என்று சித்ராவை ஏவினாள்.

 

“எனக்கும் எட்டாதுடி..” என்றபடி எட்டியெட்டிப் பார்த்தவளுக்கு அதை எடுக்கவே முடியவில்லை.

 

“மகி, நீபோய் அதோ அங்கிருக்கும் ஏணியை எடுத்துவா..” என்று ஒரு தோழியை அனுப்பினாள் சித்ரா.

 

அவள் வரும்வரை சும்மா இருக்க முடியாமல், குதிக்காலில் நின்றபடி கீழ்த்தட்டில் இருந்த இன்னொரு செருப்பை எடுத்து மேலே இருந்த செருப்பைத் தட்டிக் கீழே விழுத்த முயன்றாள்.

 

“கொஞ்சம் கொஞ்சமாக வருகிறது. இன்னும் கொஞ்சம் பலமாகத் தட்டுடி..” என்றாள் ராகினி.

 

அவளின் பேச்சைக் கேட்டு, அந்தத் ‘ஷெல்ப்’பை ஒரு கையால் இறுக்கிப் பிடித்தபடி, இன்னும் எம்பித் தட்டியவள் தடுமாறி விழப் பார்த்தாள். அப்படி விழுந்துவிடாமல் இருக்க, சட்டென்று இரண்டு கைகளாலும் அந்த ‘ஷெல்ப்’ஐ இறுகப் பற்றிக்கொண்டு அதன்மேலேயே சாய்ந்தாள் சித்ரா. எந்தப் பிடிமானமும் இல்லாமல் கடையின் நடுவில் வைக்கப்பட்டிருந்த ஸெல்ப் அவள் சாய்ந்ததில் ஆட்டம் கண்டது.

 

இப்போது அது விழுந்துவிடப் போகிறதே என்று பதறி, அதை இறுகப் பற்றி விழாமல் தடுத்தவள், “அப்பாடி! விழவிடாமல் பிடித்துவிட்டேன்..” என்றாள் மூச்சு வாங்கியபடி.

 

ஆனால், ‘ஷெல்ப்’ இன் மேலே இருந்த அட்டைப் பெட்டி ஒன்று ஆட்டம் கண்டு மெல்ல மெல்லக் கீழே நழுவிக் கொண்டிருந்தது.

 

அதைக் கவனியாமல், “போடி! உன் கதையைக் கேட்டு செருப்பைத் தட்டப் போய்க் கீழே விழுந்திருப்பேன். நல்லகாலம் தப்பிவிட்டேன்.” என்றாள் ராகினியிடம்.

 

“அதுதான் விழவில்லையே விடு. அதோ மகி ஏணி கொண்டுவருகிறாள்.” என்ற ராகினியும் அதைக் கவனிக்கவில்லை.

 

ஆனால், சித்ரா சொன்ன செருப்பை எடுத்துக்கொண்டு அவர்களை நோக்கி வந்து கொண்டிருந்த ரஞ்சன் அதைக் கண்டுவிட்டான்.

 

அந்தப் பெரிய பெட்டி அவள் தலையில் விழுந்துவிடப் போகிறதே என்று பதறி, “ஏய் தள்ளு…” என்று கத்தியபடி அவளை நோக்கி ஓடிவந்தான் அவன்.

 

அந்த ‘ஏய்’யில் அதிர்ந்து, அப்பாவின் கடையில் வேலை செய்யும் ஒருவன் அவளை மரியாதை இல்லாமல் அழைப்பதா என்கிற ஆத்திரத்தோடு, திரும்பிப் பார்த்தவளின் விழிகள் அவனை முறைத்தது. ‘நீ சொல்லி நான் கேட்பதா..’ என்கிற வீம்புடன் நின்ற இடத்திலேயே நின்றாள்.

 

வேகமாக ஓடிவந்து, “கண் என்ன குருடா உனக்கு? அந்தப் பெட்டி உன் மேல் விழப்போகிறது.” என்று இரைந்தவன், அவளின் கையைப் பிடித்து வேகமாக இழுத்தான்.

 

அதைச் சற்றும் எதிர்பார்க்கவில்லை அவள். அவன் அவள் கையைப் பிடித்ததே அதிர்ச்சி என்றால், வேகமாக அவன் இழுத்ததில் அவள் முன்பக்க மேனி அவனோடு சென்று மோதியது பேரதிர்ச்சியாக இருந்தது.

 

அதில் ‘பெட்டி உன் மேல் விழப்போகிறது’ என்று அவன் சொன்னதோ அல்லது சத்தத்துடன் விழுந்த பெட்டியோ அவள் மூளையில் உறைக்கவே இல்லை.

error: Alert: Content selection is disabled!!