என் சோலைப் பூவே 2 – 2

அவன் சொன்ன ‘ஏய்’ உம் ‘கண் என்ன குருடா’ என்று கேட்டதும், கையைப் பிடித்து இழுத்ததும், அவள் சென்று அவனோடு மோதிக்கொண்டதும் என்று நடந்த அனைத்தும் அதிக ஆத்திரத்தைக் கிளப்ப, அந்த ஆத்திரம் அனைத்தையும் ஒன்றாகத் திரட்டிப் ‘பளார்’ என்று அவன் கன்னத்தில் அறைந்தாள் சித்ரா.

 

விழுந்த அறையில் நொடியில் திக்பிரமை பிடித்து நின்றுவிட்டான் ரஞ்சன். ஒருகணம் கடையே நிசப்தமாகியது. எல்லோர் பார்வையும் ரஞ்சன் மேலேயே குவிய, அவமானத்தில் கன்றிச் சிவந்தது அவன் முகம். வெறுப்பும் ஆத்திரமுமாக அவளை முறைத்தவன், பிடித்திருந்த அவளது கையை உதறிவிட்டு அந்த இடத்தை விட்டு வேகமாக நகர்ந்தான்.

 

“ஏன்டி அவனை அடித்தாய் லூசு. அந்தப் பெட்டி உன் தலையில் விழுந்திருக்க என்ன ஆகியிருக்கும்?” என்று கடிந்தாள் ராகினி.

 

“அதற்காக என் கையைப் பிடித்து இழுக்களாமாடி? திமிர் பிடித்தவன்! நான் அவன்.. அவன் மீது.. ச்சே!” என்று அவமானமும் ஆத்திரமுமாகக் குமுறினாள் சித்ரா. அவளுக்கு அவனோடு மோதியதை ஜீரணிக்கவே முடியவில்லை.

 

அவர்கள் பேசிக்கொண்டது அத்தனையும் காதில் விழ, அந்தப் பக்கம் சென்றவனின் முகம் ஆத்திரத்திலும் அவமானத்திலும் கன்றிச் சிவந்திருந்தது.

 

நடந்ததை எல்லாம் பாத்திருந்த அங்கு வேலை செய்யும் கண்ணன், “விடு ரஞ்சன். ஏதோ தெரியாமல் கோபத்தில் செய்துவிட்டாள். இந்தா நீ கொஞ்சம் தண்ணீரைக் குடி..” என்று அவனை ஆசுவாசப் படுத்த முயன்றார்.

 

ஆத்திரத்தோடு வேண்டாம் என்பதாகக் கையை காற்றில் விசுக்கிவிட்டுத் தனிமையில் சென்று நின்று கொண்டவனுக்கு உள்ளம் கொதித்தது. அத்தனை பேர் முன்னாலும் அவமானப் படுத்திவிட்டாளே! அவளை இழுத்து வைத்துக் கன்னம் கன்னமாக அறைய வேண்டும்போல் வெறி வந்தது.

 

அப்படி அறைந்தால் வேலை போய்விடுமே என்று நினைத்த மாத்திரத்தில் எழுந்த இயலாமையும் சுயபச்சாதாபமும் மிகுந்த வெறுப்பைக் கொடுக்க, சுவற்றில் ஓங்கிக் குத்தியவனுக்குக் கை வலிக்கவே இல்லை. அந்தளவுக்குக் கொதித்துக் கொண்டிருந்தான்.

 

அந்த மனக் கொதிப்பு அடங்க முதலே அவனை நோக்கி மிகக் கோபமாக வந்தார் சந்தானம், சித்ராவின் அப்பா.

 

“அங்கிள்..” என்றவனை மேலே பேச விடாது கையை நீட்டித் தடுத்தவர், கடைக்கு வெளியே கையை நீட்டி, “வெளியே போ. இனிமேல் என் கடையில் உனக்கு வேலை இல்லை.” என்று, அவன் கழுத்தைப் பிடித்துத் தள்ளாத குறையாகச் சீறினார்.

 

திகைத்துப்போனான் ரஞ்சன். அவள் மேல் எழுந்த ஆத்திரத்தை அடக்கி, அவளைத் திருப்பி அடிக்காமல் வந்ததற்குக் காரணமே இந்த வேலை பறி போய்விடக் கூடாது என்பதால் மட்டுமே!

 

அப்படியிருக்க, சந்தானம் இப்படிச் சொன்னால்?

 

நியாயம் இல்லாது நடக்கும் மனிதர் அல்ல அவர். நான்தான் இந்தக் கடையின் முதலாளி என்கிற பெருமை இல்லாது, அவரை யாரும் ‘பாஸ்’ என்று அழைப்பதைக் கூட விரும்பாதவர். எல்லோரும் அவரவரது வயதுக்கு ஏற்ப அங்கிள் அல்லது அண்ணா என்றுதான் அழைப்பார்கள்.

 

அப்படியான ஒருவர் நடந்தது என்ன என்று அவனிடம் கேட்காது வேலையை விட்டுத் தூக்கியது வேதனையைக் கொடுத்தது என்றால், ஒருவித கர்வத்தோடும் ஏளனத்தோடும் அவனைப் பார்த்துக்கொண்டு நின்ற சித்ராவைப் பார்த்து அவனுக்குள் வன்மம் சூழ்ந்தது.

 

இதற்கெல்லாம் காரணம் அவனது ஏழ்மை தானே. அந்த ஏழ்மையையும், அதனால் உண்டான இயலாமையையும் எண்ணி மனதுக்குள் நொந்தபடி, “நடந்தது என்ன என்று தெரியாமல் முடிவு எதையும் எடுக்காதீர்கள் அங்கிள்.” என்றான் ரஞ்சன்.

 

“எல்லாம் எனக்குத் தெரியும். நீ ஒன்றும் சொல்லத் தேவை இல்லை. முதலில் வெளியே போ. என் கண் முன்னால் நிற்காதே. நல்லவன் என்று நம்பி வேலைக்குச் சேர்த்ததற்கு நல்ல வேலை பார்த்தாய். இருக்கிற கோபத்தில் அடித்தாலும் அடித்து விடுவேன். என்னிடம் வேலை செய்த ஒருவனுக்கு அடிக்கக் கூடாதே என்று பார்க்கிறேன். உன் சம்பளத்தைக் கணக்குப் பார்த்து கண்ணனிடம் கொடுத்துவிடுகிறேன். வாங்கிக் கொள். இப்போது போ வெளியே!” என்றவர், அவன் முகம் பார்க்கவும் பிடிக்காதவராய் வெறுப்போடு முகத்தைத் திருப்பிக் கொண்டு சென்றார்.

 

அந்தக் கடையில் வேலை செய்யும் அத்தனை பேரின் முன்பும், அதைவிட சித்ரா, அவளின் தோழிகள் எல்லோரும் வேடிக்கை பார்க்க, அவர் செய்த அவமதிப்பில், அனைவர் முன்னாலும் கூனிக் குறுகி நின்றான் ரஞ்சன்.

 

எல்லோரும் அவனைக் கீழ்த்தரமானவனாகப் பார்ப்பது போல் இருந்தது. யார் முகத்தையும் நிமிர்ந்து பார்க்க முடியவில்லை. இப்படியே மண்ணுக்குள் புதைந்துபோனால் என்ன என்று கூடத் தோன்றியது. அந்தளவுக்கு அவமானமாக உணர்ந்தான்.

 

குனிந்த தலை நிமிராது, அவமானத்தில் கன்றிவிட்ட முகத்தோடு கடையை விட்டு வெளியேறப் போனவனை ஓடிவந்து மறித்தார் கண்ணன். “ரஞ்சன், கொஞ்சம் பொறு. அவருக்கு நடந்தது முழுவதும் தெரிந்திருக்காது. சித்து தவறாகச் சொல்லியிருப்பாள். நீ கொஞ்சம் பொறுடா. நான் அவரிடம் போய் நடந்ததைச் சொல்லிவிட்டு வருகிறேன்..” என்றார், அவன் கையைப் பிடித்துக் கெஞ்சலாக.

 

அவர் பிடித்த கையை, “விடுங்கண்ணா!” என்று உதறி விடுவித்தவன், கோபத்தோடு விறுவிறுவென்று வெளியேறினான்.

 

அவன் குடும்ப நிலையைக் கண்ணன் அறிவார். கோபத்தில் வெளியேறும் அவன், அது தணிந்ததும் வேலைக்குப் படப்போகும் கஷ்டத்தை நினைத்துப் பார்த்தவர் ஒரு வேகத்துடன் சந்தானத்தைத் தேடிச் சென்றார்.

 

அங்கே, தன்னை அவமதித்த ரஞ்சனை வேலையை விட்டே தூக்கிவிட்ட மகிழ்ச்சியோடு, தோழிகளோடு சேர்ந்து குளிர்பானம் அருந்திக் கொண்டிருந்தாள் சித்ரயாழி.

 

உள்ளே கோபத்தோடு வந்த கண்ணனைப் புருவம் சுருக்கிக் கேள்வியாகப் பார்த்தார் சந்தானம். அவரைத் தொடர்ந்து அங்கிருந்த எல்லோரும் கண்ணனைப் பார்க்க, “என்னம்மா சித்ரா இப்படிச் செய்துவிட்டாய்? உனக்கு அவன் நல்லதுதானே செய்தான். நீயானால் வேலையைப் பறித்து அவன் வயிற்றில் அடித்துவிட்டாயே.” என்றார் கண்டனக் குரலில்.

 

நெடுங்காலமாக அங்கே வேலை செய்பவர் என்பதாலும், சிறு வயதிலிருந்தே சித்ராவை அறிந்தவர் என்பதாலும் உரிமையோடு கோபப்பட்டார் கண்ணன்.

 

பிறகு சந்தானத்தின் பக்கம் திரும்பி, “நீங்களும் என்ன நடந்தது என்று முழுமையாக விசாரிக்காமல் அவனை வேலையில் இருந்து தூக்கி விட்டீர்களே அண்ணா. இனி அவன் வேலைக்கு என்ன செய்வான் என்று யோசித்தீர்களா?” என்றார் மனத்தாங்கலுடன்.

error: Alert: Content selection is disabled!!